Published:Updated:

'பிரச்னை இருப்பது உண்மைதான், ஆனால்..!' அதானி துறைமுகத்துக்கு அரசின் 'அடடே' ஆதரவு

பத்திரிகையாளர் சந்திப்பு
பத்திரிகையாளர் சந்திப்பு

வங்கக் கடலையும் பழவேற்காட்டையும் பிரித்து நிறுத்தும் மிகச் சிறிய மணல் பரப்பைத் துறைமுகத்தின் அலைத்தடுப்புச் சுவர்கள் அரித்து எடுத்துவிடும். பழவேற்காடு ஏரி வங்கக் கடலின் ஒரு பகுதியாகவே மாறிவிடும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

சென்னையை அடுத்துள்ள திருவள்ளூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது காட்டுப்பள்ளி கிராமம். அங்குதான் அதானிக்குச் சொந்தமான துறைமுகமும் இருக்கிறது. 330 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள அந்தத் துறைமுகத்தை விரிவாக்கம் செய்வதற்காக அவர்கள் திட்டமிட்டிருப்பதையும் அந்தத் திட்டம் கொண்டுவரப்போகும் சூழலியல் பேரழிவு குறித்தும் விகடன் இணையத்திலும் ஜூனியர் விகடனிலும் ஏற்கெனவே கட்டுரைகள் வெளியாகியுள்ளன.

Vikatan
பழவேற்காடு
பழவேற்காடு
க.சுபகுணம்

இந்தத் துறைமுக விரிவாக்கத் திட்டத்துக்குச் சூழலியல் அனுமதி பெற முதல்கட்டமாகச் சூழலியல் தாக்க மதிப்பீடு செய்ய வேண்டும். அதற்குக் குறிப்பாணை கேட்டு அவர்கள் விண்ணப்பித்திருந்தனர். சூழலியல் ஆர்வலர்கள், ஆராய்ச்சியாளர்கள், பொதுமக்கள் என்று பல்வேறு தரப்பினரின் எதிர்ப்புகளுக்குப் பிறகு இந்தத் திட்டத்துக்குச் சூழலியல் தாக்க மதிப்பீடு செய்ய குறிப்பாணை வழங்கலாமா கூடாதா என்று ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உத்தரவிட்டது. அதன்படி, மத்திய வல்லுநர் துணைக்குழு அந்தப் பகுதியை ஆய்வு செய்து அறிக்கையும் சமர்ப்பித்தது. அந்த அறிக்கையில் மேற்கூறிய ஆய்வாளர்களும் பொதுமக்களும் என்னென்ன பிரச்னைகளால் அந்தத் திட்டத்தை எதிர்த்தார்களோ அத்தனையும் இருக்கிறது என்றே கூறியுள்ளனர்.

அதானி துறைமுகம் ஆக்கிரமிக்கப்போகும் ஏரிகள், குளங்கள், கொற்றலை ஆறு, உப்பளங்கள் என்று எதையுமே அவர்கள் மறுக்கவில்லை. ஆனால், இறுதியில் இந்தத் திட்டத்துக்குக் குறிப்பாணை வழங்கலாமா கூடாதா என்ற கேள்விக்குக் கொடுக்கலாம் என்று பரிந்துரை செய்துள்ளார்கள்.
காட்டுப்பள்ளி துறைமுகம்
காட்டுப்பள்ளி துறைமுகம்
க.சுபகுணம்

காட்டுப்பள்ளியில் அமைக்கத் திட்டமிடப்பட்டிருக்கும் இந்தப் பெருந்துறைமுகம் உள்ளூர் மக்களுக்கும் சென்னை மாநகரத்துக்கும் வாழ்வா, சாவா என்ற பிரச்னையாக இருக்கும். இந்தப் பேராபத்தை எதிர்த்துப் பழவேற்காடு-எண்ணூர் மீனவர்களும் விவசாயிகளும் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் இந்தத் திட்டத்தை ரத்து செய்யவில்லையெனில், இதை எதிர்த்துக் கடுமையாகப் போராடுவோம் என்று தெரிவித்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அந்தப் பகுதியில் வாழும் 50,000 மீனவர்களின் வாழ்வாதாரத்தை அதானியின் இந்தத் திட்டம் அழித்துவிடும். அதுமட்டுமல்லாமல், சென்னையின் குடிநீர்ப் பிரச்னையை மேலும் தீவிரமாக்குவதுடன், சென்னை-திருவள்ளூர் மாவட்டங்களில் வாழும் 10 லட்சம் மக்களுக்கு வெள்ள அபாயத்தையும் புயல் தாக்குதலின் தீவிரத்தையும் அதிகப்படுத்தும் என்று அந்த மக்கள் அஞ்சுகின்றனர். ஏற்கெனவே பருவநிலை மாற்றத்தின் காரணமாகத் தண்ணீர் நெருக்கடியும் கடல் மட்ட உயர்வும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்தத் திட்டம் அதன் தீவிரத்தை மேலும் அதிகப்படுத்தும்.

திட்டத்தில் குறிப்பிடும் வளர்ச்சிக்கான பகுதிகள் கடலரிப்பு ஏற்படக்கூடிய பகுதிகளில் வருகின்றன. கொற்றலை ஆறு முகத்துவாரத்தையொட்டியுள்ள பகுதிகளின் நீர்நிலைகளை மூடுவதற்கு அதானி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. பழவேற்காடு ஏரியின் சுற்றுச்சூழல் கட்டமைப்பும் பக்கிங்ஹாம் கால்வாயும் எண்ணூர் கழிவெளிப் பகுதியும் சூழலியல்ரீதியாக நுண் தன்மையுடைய (Ecologically sensitive areas) பகுதிகளாக அறிவிக்கப்பட்டவை. அத்துடன் கடலோர பாதுகாப்பு மண்டலம் ஒன்றின் (CRZ-1) கீழ் அவை வருகின்றன
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வல்லுநர் துணைக்குழு அறிக்கை

மேலே அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும் இந்தத் தன்மையுள்ள நிலப்பகுதிகளில் வளர்ச்சிக் கட்டுமானங்கள் சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளன. அந்த நிலப்பகுதியின் இத்தகைய தன்மையைக் குறிப்பிட்டுள்ள இதே வல்லுநர் குழு, அதைப் புறக்கணித்துவிட்டுத் துறைமுகம் அமையவுள்ள இடத்தை ஏற்றுக்கொண்டதோடு சூழலியல் தாக்க மதிப்பீடு செய்வதற்கான நிபந்தனைகளையும் நிறுவனத்துக்கு வழங்கியுள்ளது.

வங்கக் கடலையும் பழவேற்காட்டையும் பிரித்து நிறுத்தும் மிகச் சிறிய மணல் பரப்பைத் துறைமுகத்தின் அலைத்தடுப்புச் சுவர்கள் அரித்து எடுத்துவிடும். பழவேற்காடு ஏரி வங்கக் கடலின் ஒரு பகுதியாகவே மாறிவிடும். இது நடந்தால் பொன்னேரி, கும்மிடிப்பூண்டி தாலுக்காக்களின் உள்நாட்டுப் பகுதிகளும் ஆந்திராவின் உள்நாட்டுப் பகுதிகளும் புயல்களின் தீவிரத் தாக்குதலுக்கு ஆளாக வேண்டிய நிலை உருவாகும். கடல்நீர் உட்புகும் பிரச்னையும் இருப்பதால், நிலத்தடி நீரில் கடல்நீர் புகுந்து குடிக்கத் தகுதியற்றதாக மாற்றிவிடும்.

ஊர்ணம்பேடு விவசாய நிலம்
ஊர்ணம்பேடு விவசாய நிலம்
Concerned youth for people

Concerned youth for people என்ற அமைப்பு துறைமுகம் வரவுள்ள பகுதிகளிலுள்ள மக்களின் வாழ்வாதாரத்தை வரைபடமாக்கினர். அந்த அமைப்பைச் சேர்ந்தவரும் கட்டுமானக் கலை பேராசியருமான சுதிர், "சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில் நீர்நிலைகளை மூடுவது தடை செய்யப்பட்டுள்ளது. இந்தச் சட்டவிரோதத் திட்ட முன்மொழிவை ஏற்றுக்கொள்ளும் அதிகாரம் வல்லுநர் குழுவுக்கு இல்லை. அங்கிருக்கும் 50,000 மக்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.

இந்த விரிவாக்கத் திட்டத்துக்குக் கரைக்கடலை அழித்துச் சுமார் 2,000 ஏக்கர்கள் நிலமீட்பு செய்யப்படும். எண்ணூர்-பழவேற்காடு சதுப்பு நிலங்களையும் நீர்நிலைகளையும் அழித்துச் சிறப்புப் பொருளாதார மண்டலம் உருவாக்கப்படும். உப்பளங்கள், சதுப்பு நிலங்கள், அலையாத்திக் காடுகள், ஆழம் குறைவான மற்றும் ஆழமான நீர்நிலைகள் ஆகிய அனைத்துமே இதனால் அழியும். இந்த இயற்கையான அமைப்பு ஆரணி-கொற்றலை ஆற்றின் நன்னீர் பகுதிகளில் உப்பு நீர் புகாமல் தடுக்கின்றன. இதைச் செயற்கையாக மாற்றுவது மிகப்பெரிய பேரழிவுக்கு வழிவகுக்கும். சென்னைக்கு நாளொன்றுக்குச் சுமார் 10 கோடி லிட்டர் தண்ணீர் அந்தப் பகுதியிலிருந்து கிடைக்கிறது. இந்த நன்மைகளையெல்லாம் அழிக்கும் வல்லமையுள்ளது அதானியின் இந்தத் துறைமுக விரிவாக்கத் திட்டம்.

அதானி துறைமுக விரிவாக்கப் பிரச்னை
அதானி துறைமுக விரிவாக்கப் பிரச்னை

"இந்தத் திட்டத்தை முன்மொழிந்து தொடக்கத்தில் அதானி நிறுவனத் தரப்பிலிருந்து போடப்பட்ட மனுவில் இது வரவிருக்கும் நிலம் முழுவதும் பொட்டல் காடுகள் என்றும் இவை யாருக்கும் பயனில்லாத நிலமென்றும் கூறியுள்ளார்கள். அங்கிருக்கும் ஆறு, ஏரி போன்ற நீர்நிலைகளையும் அதைச் சார்ந்திருக்கும் மீனவர்களையும் அங்கிருக்கும் விவசாய நிலங்களையும் அவற்றைச் சார்ந்திருக்கும் கால்நடைகளையும் விவசாயிகளையும் மறைத்து இப்படிப் பொய்யான தகவல் கொடுத்து அனுமதி வாங்க முயன்ற நிறுவனத்துக்குச் சாதகமாக வல்லுநர் குழு பரிந்துரைத்துள்ளது. அதானி பேரழிவுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இந்தத் திட்டத்தை அரசு முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும். அப்படிச் செய்யவில்லை என்றால், வரவிருக்கும் ஆண்டுகளில் நிகழவிருக்கும் பேரழிவுக்கு அரசே பொறுப்பேற்க வேண்டியிருக்கும்" என்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அரிபரந்தாமன் கூறினார்.

காட்டுப்பள்ளியில் எல்&டி துறைமுகம் 2008-ம் ஆண்டு வந்த பிறகு நேரடியாகப் பாதிக்கப்பட்டது காட்டுப்பள்ளி கிராமம். அங்கிருந்து வந்திருந்த மீனவக் குடும்பத்தைச் சேர்ந்த கோபி இந்தத் திட்டம் குறித்துப் பேசியபோது, "எல்&டி துறைமுகத்தால் நாங்கள் நேரடியாகவே பாதிக்கப்பட்டோம். அது வருவதற்குமுன் நாங்கள் அங்கு மீன் பிடித்தல், சிப்பி, நண்டு, இறால் சேகரித்தல், மரங்களை வளர்த்து அவற்றை வெட்டி அதன்மூலம் பயனடைதல் என்று பல வழிகளில் எங்கள் வாழ்வாதாரத்தை அமைத்துக் கொண்டிருந்தோம். இவை அனைத்துமே பாதிக்கப்பட்டது. 2007-ம் ஆண்டு மக்கள் குறைதீர்ப்புக் கூட்டத்தில் அவர்கள் 10,000 பேருக்கு நேரடியாக நிரந்தர வேலையும் 10,000 பேருக்கு மறைமுகவாகவும் வேலைவாய்ப்பு தருவதாக உறுதியளித்தார்கள். இன்றுவரை ஒருவருக்குக்கூட நிரந்தரமான வேலையை அவர்கள் கொடுக்கவில்லை. இப்போது மீண்டும் அதை விரிவாக்குகிறோம் என்ற பெயரில் எங்களுக்கு இருக்கும் கொஞ்ச நஞ்ச வாழ்வாதாரத்தையும் அழிக்கப் பார்க்கிறார்கள்" என்றார்.

மீனவர்கள்
மீனவர்கள்
க.சுபகுணம்

அதானி அநீதியாகக் கொண்டுவரவிருக்கும் இந்தப் பேரழிவுத் திட்டத்தைத் தடுத்து நிறுத்த மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து போராடவும் தயாராக இருப்பதாகப் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட பழவேற்காடு லைட் ஹவுஸ் மீனவர்கள் சங்கம், பழவை பெண்கள் மீன் தொழிலாளர் சங்கம், ஊர்ணம்பேடு, செங்கனிமேடு, காட்டூர்-காட்டுப்பள்ளி காலனி குடியிருப்பாளர்கள் அனைவரும் தெரிவித்தனர்.

மக்கள் நலனே பிரதானம் என்று செயல்பட வேண்டிய அரசு அதைச் செய்யுமா, அதானி என்ற பெருமுதலையின் சாம்ராஜ்யத்தை விஸ்தரிப்பதில் கவனம் செலுத்துமா என்பது இந்தத் திட்டத்துக்கு அரசு ஆற்றப்போகும் எதிர்வினையிலிருந்தே தெரியும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு