Published:Updated:

காற்று மாசில்லாத சென்னை... கழிவில்லாத நொய்யல்... சூழலியல் மாற்றத்தை தக்க வைக்குமா தமிழகம்?

சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல்

ஐம்பதாவது உலக பூமி தினம், கடந்த 22-ம் தேதி, உலகம் முழுவதும் அணுசரிக்கப்பட்டது. இந்த பூமி தினம், சூழலியலாளர்கள் அனைவருக்குமே ஒரு மைல்கல்லாக அமைந்திருக்க வேண்டும். ஆனால், லாக்டெளன் அனைத்தையும் சிதைத்துவிட்டது.

உலக நாடுகள் அனைத்துமே கொரோனாவின் பிடியிலிருந்து தப்பிக்க போராடிக்கொண்டிருக்கின்றன. அந்தப் போராட்டத்திற்காக அனைத்து நாடுகளுமே எடுத்துள்ள ஓர் ஆயுதம்தான், லாக்டெளன். அதன் விளைவாக, சர்வதேச அளவில் சூழலியல் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருப்பதாகச் செய்திகள் வந்தவண்ணம் இருக்கின்றன. சுற்றுச்சூழலின் நிலை முன்னேறிக் கொண்டிருக்கிறது. மோசமான காற்று மாசுபாட்டில் சிக்கித் தவித்துக்கொண்டிருந்த நகரங்கள், தற்போது தூய்மையான காற்றை சுவாசிக்கத் தொடங்கியுள்ளன.

இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி, கொல்கத்தா, மும்பை, சென்னை ஆகிய நகரங்களின் காற்றுத் தரம் உயர்ந்துகொண்டிருக்கிறது.

பூமி
பூமி

ஐம்பதாவது உலக பூமி தினம், கடந்த 22-ம் தேதி, உலகம் முழுவதும் அணுசரிக்கப்பட்டது. இந்த 'பூமி தினம்' சூழலியலாளர்கள் அனைவருக்குமே ஒரு மைல்கல்லாக அமைந்திருக்க வேண்டும். ஆனால், கொரோனா தொற்று பரவல் காரணமாக, அனைத்துத் திட்டங்களையும் நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு, ஊரடங்கைக் கடைபிடிக்கவேண்டிய நிலை ஏற்பட்டுவிட்டது. இருப்பினும் இந்தப் பூமி தினம், நமக்கொரு நல்ல பாடத்தைக் கற்றுக்கொடுத்துள்ளது.

அதோடு, இத்தனை ஆண்டுகளாகச் சூழலியல் ஆர்வலர்கள் முன்வைத்துக்கொண்டிருந்த குற்றச்சாட்டை இந்த தொற்றுப் பரவல் நிரூபித்துள்ளது. ஆம், மனிதர்களால்தான் பூமியின் சூழலியல் சமநிலை குலைந்துகொண்டிருப்பதாகவும், அதனால் சுற்றுச்சூழல் சீரழிந்துகொண்டிருப்பதாகவும் அவர்கள் குற்றம் சாட்டிக்கொண்டிருந்தார்கள். அதற்கு, பல விமர்சனங்களையும் கடுமையான எதிர்வினைகளையுமே அரசுகள் பரிசளித்துக் கொண்டிருந்தன. இந்நிலையில், தற்போது வலுக்கட்டாயமாக வீட்டிற்குள்ளேயே இருந்தாகவேண்டிய சூழல் ஏற்பட்டுவிட்ட பிறகு, பூமி புத்துயிர் பெற்றுக்கொண்டிருக்கிறது. மனிதத் தலையீடுகளின்றி, சூழலியல் சமநிலை, காட்டுயிர்களின் வாழ்விடம் மீண்டுள்ளன. காற்று மற்றும் நீர் மாசுபாடு குறைந்துள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், காற்றிலிருந்த மாசுபாட்டு அளவு 500-ஐத் தாண்டியது. அதற்கு அடுத்த மாதமே, காற்று மாசுபாட்டு அளவு 672-ஆக உயர்ந்தது.

லாக்டெளன், மனிதர்களுக்கு சொல்லொண்ணாத் துயர்களைத் தருகிறது என்பது மறக்க முடியாது. ஆனால், இது பூமி கொடுத்த ஐம்பதாவது பூமி தினத்திற்கான பரிசாக, பாசிட்டிவாகக்கூட கருதலாமென்று சில சூழலியலாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். நாம், இயற்கையின் இயல்பைக் குலைக்காமல் இருந்தாலே போதும், அதுவே தன்னைச் சீர்செய்துகொள்ளும் என்பதற்கு, கொரோனா லாக்டெளன் ஒரு சிறந்த உதாரணம். தமிழகமும் அதற்கு விதிவிலக்கல்ல.

2019-ம் ஆண்டு முழுக்க, தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அதிகரித்துக்கொண்டிருந்த காற்று மாசுபாடு, மிகப்பெரிய சர்ச்சையையும் மக்களின் மனத்தில் பேரச்சத்தையும் ஏற்படுத்தியது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், காற்றிலிருந்த மாசுபாட்டு அளவு 500-ஐத் தாண்டியது. அதற்கு அடுத்த மாதமே, காற்று மாசுபாட்டு அளவு 672-ஆக உயர்ந்தது. காற்றிலுள்ள நுண்துகள்களின் அளவு 50-க்கும் கீழேயே இருந்தால்தான் அது, மக்கள் சுவாசிக்கத் தகுந்த தூய்மையான காற்றாக இருக்கும். ஆனால், பிப்ரவரி முதலே அதிகரித்துக்கொண்டிருந்த மாசுபாடு சென்னைவாசிகளை நவம்பர் மாதத்திலிருந்து நேரடியாகப் பாதிக்கத் தொடங்கியது. மக்கள் சுவாசக் கோளாறுகளால் சிரமப்படத் தொடங்கினார்கள். சாலை முழுக்க புகை மூடிக் கிடந்தது. போக்குவரத்து சிக்னல்களில் நிற்கையில், தொண்டையை அடைத்துக்கொண்ட மாசுபாடுகளால் மூச்சுத்திணறல் ஏற்படும் அளவுக்கு நிலைமை மோசமானது.

மணலியில், கடந்த டிசம்பர் மாதம், காற்றிலுள்ள மாசுபாட்டின் அளவு 172-ஆகப் பதிவாகியிருந்தது. ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் 200-ஐத் தாண்டிய மாசுபாட்டு அளவு, மார்ச் மாதத்தில் தொடங்கிய ஊரடங்கு காரணமாக சிறிது சிறிதாகக் குறைந்து ஏப்ரல் மாதத்தில் தற்போதைய நிலவரப்படி காற்றிலுள்ள மாசுபாட்டு அளவு 90-ஆகக் குறைந்துள்ளது. அதேபோல், ஆலந்தூரில் டிசம்பர் மாதம் 145-ஆக இருந்த மாசுபாட்டு அளவு, 80-க்கும் கீழே குறைந்துள்ளது. வேளச்சேரியில், டிசம்பர் மாதத்தில் 148-ஆக இருந்த மாசுபாட்டு அளவு, இந்த மாதத்தில் 56-ஆகக் குறைந்துள்ளது. சென்னை மட்டுமின்றி, கோயம்புத்தூரிலும் டிசம்பர் மாதத்தில் இருந்ததைவிட ஏப்ரல் மாதத்தில் காற்றிலிருந்த மாசுபாட்டின் அளவு கணிசமாகக் குறைந்துள்ளது.

காற்று மாசுபாடு
காற்று மாசுபாடு

சென்னையின் சுற்றுச்சூழலில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் குறித்து சூழலியலாளர் நித்தியானந்த் ஜெயராமனிடம் கேட்டபோது, "நகரத்தின் சுற்றுச்சூழல் கெடுவதில் முக்கியப் பங்கு வகிப்பது காற்று மாசு. காற்று மாசுபாட்டிற்கு, வாகனங்கள், தொழிற்சாலைகள், கட்டுமான வேலைகள் போன்றவை முக்கியக் காரணங்களாக உள்ளன. இவை மூன்றின் இயக்கமும் இப்போது குறைந்துள்ளதால், மாசுபாடும் குறைந்துள்ளது. மணலி பகுதியில் பெருமளவில் குறைந்திருக்க வாய்ப்பில்லை. அங்குதான் அத்தியாவசிய தேவைகளான பெட்ரோலியம், மின்சாரம் போன்றவற்றுக்கான தொழிற்சாலைகள் இயங்குகின்றன.

லாக்டவுன் நாள்களைப் பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள அசத்தலான 10 யோசனைகள்! #MyVikatan

மற்ற பகுதிகளில் காற்று மாசுபாடு கணிசமாகக் குறைந்துள்ளது. நீர் மாசுபாடு குறித்துப் பார்த்தோமானால், வீடுகளிலிருந்து வெளியாகக்கூடிய கழிவுகள், அதேபோலத்தான் வந்துகொண்டிருக்கின்றன. தொழிற்சாலைகளிலிருந்து, நிறுவனங்களிலிருந்து வரக்கூடிய கழிவுகள் இல்லாததால், ஓரளவு முன்னேற்றம் தெரிகிறது. இவற்றால், கடலில் சென்று கலக்கும் கழிவுகளின் அளவும் குறைந்துள்ளது" என்று கூறினார்.

கோவை வனப்பகுதியில், சமீபத்தில் 2 புலிகள், 2 சிறுத்தைகள், 2 யானைகள் இறந்துள்ளன.
மேக் மோகன், சூழலியலாளர்

மேலும், இந்த முன்னேற்றத்தை லாக்டெளனுக்குப் பிறகும் நாம் தொடர்ந்து கொண்டுசெல்ல முடியுமா என்று அவரிடம் கேட்டபோது, "இப்போது ஏற்பட்டிருப்பது ஓர் அதிர்ச்சி. இது திட்டமிடல் இன்றி நடப்பது. இருப்பினும் காலநிலை மாற்றத்திற்கான தீர்வு எதுவென்று கேட்டால், இப்போதுள்ள நிலையைத்தான் நாம் உதாரணமாகச் சொல்ல வேண்டும். உலகளாவிய மற்றும் உள்ளூர் போக்குவரத்தில் பெரிய சரிவு, அதன் விளைவாகப் புதைபடிம எரிபொருள் பயன்பாடு குறைந்துள்ளது. இந்தச் சூழல் நீடித்திருந்தாலே, காலநிலை மாற்றத்தின் மோசமான விளைவுகளை நாம் தவிர்த்துவிடமுடியும். ஆனால், இப்போது பொருளாதாரத்தில் மூன்று டிரில்லியன் டாலர் இழப்பு ஏற்பட்டுள்ளது. இப்படிப்பட்ட திட்டமிடாத லாக்டௌனால் நிகழ்ந்த இழப்புகளைச் சரிக்கட்ட வழி கண்டுபிடித்து, இத்தகைய முயற்சிகளை எடுத்தோமானால் அது சாத்தியப்படும். பொருளாதாரத்தில் தற்போது ஏற்படும் வலிகள் இல்லாமல் இந்த மாற்றங்களை எதிர்காலத்தில் நிகழ்த்த, திட்டமிடல் வேண்டும்" என்று கூறினார்.

கோயம்புத்தூரிலிருந்து பேசிய சூழலியலாளர் மேக் மோகன், "என் வீட்டிலேயே சின்னான், தவிட்டுக் குருவி, தேன் சிட்டு ஆகிய மூன்று பறவைகள் கூடு கட்டிக் குஞ்சு பொரித்துள்ளன. ஒலி மாசுபாடு முற்றிலும் இல்லாமலிருப்பதால், பறவைகளின் வரத்து அதிகமாகியுள்ளது. மனிதர்கள் நடமாட்டம் அதிகமில்லாததால், மற்ற உயிரினங்கள் தற்போது அதிகம் தென்படுகின்றன. நகரத்திற்குள் காற்று மாசு பெரிய அளவில் குறைந்துள்ளது. வாகனங்கள் இயங்காததால் புகை மாசு குறைந்திருப்பதோடு, ஒலி மாசுபாடும் பெரிய அளவில் தற்போது இல்லை. கோயம்புத்தூர் முழுக்க அமைதியான சூழல் நிலவுகிறது.

மாசுபாடு
மாசுபாடு

இவ்வளவு நன்மைகள் இருந்தாலும், கோவை வனப்பகுதியில் சமீபத்தில் 2 புலிகள், 2 சிறுத்தைகள், 2 யானைகள் இறந்துள்ளன. வேட்டையாடியவர்கள், முயல் வேட்டைக்குப் பொறி வைத்தவர்கள் என்று பலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்த லாக்டௌன் காலகட்டத்தில் நன்மைகள் இருப்பினும், இழப்புகளும் நிகழ்ந்துள்ளன என்பதை வருத்தத்தோடு பதிவு செய்ய விரும்புகிறேன்" என்று கூறினார்.

அதிகம் மாசடைந்திருந்த நதிகளும்கூட தற்போது ஓரளவுக்குத் தூய்மையடைந்துள்ளன என்றும் செய்திகள் வந்துகொண்டிருக்கின்றன. அடையாற்றில் மட்டுமே நாளொன்றுக்கு 55 மில்லியன் லிட்டர் தொழிற்சாலைக் கழிவுகள் கலந்துகொண்டிருந்தது. அந்தத் தொழிற்சாலைகள் தற்போது இயங்காமல் இருப்பதால், அடையாற்றில் கலக்கும் கழிவு நீரின் விகிதம் குறைந்துள்ளது. இது நன்மை செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நொய்யல் ஆற்றின் ஓரத்திலும் அதைச் சுற்றியும் சுமார் 700-க்கும் மேற்பட்ட சிறு பனியன் மற்றும் சாயத் தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. இவற்றிலிருந்து நொய்யலில் நாளொன்றுக்கு கலக்கும் கழிவுநீர், சுமார் 75 முதல் 100 மில்லியன் லிட்டர். இவை எதுவுமே தற்போது நொய்யலில் கலப்பதில்லை. இதேபோல் எதிர்காலத்திலும் நீடித்தால், திருப்பூரைச் சேர்ந்த இன்றைய தலைமுறையினர் கதைகளில் கேட்ட தூய்மையான நொய்யல் நதியைக் கண்களால் பார்க்கும் வாய்ப்புகூட ஏற்படலாம் என்றும் சிலர் கூறுகின்றனர்.

நீர் மாசுபாடு
நீர் மாசுபாடு

ஈரோடு பகுதியில் மட்டுமே காவிரியோரத்தில் 498 சாயப்பட்டறைத் தொழிற்சாலைகளும் 37 தோல் தொழிற்சாலைகளும் இயங்குகின்றன. அனைத்துமே லாக்டௌன் காரணமாக மூடியிருப்பதால், அங்கிருந்து காவிரியில் கலக்கும் கழிவுநீர் கடந்த ஒரு மாதமாகக் கலப்பதில்லை. பாலாற்றைச் சுற்றி சுமார் 6,000 சிறு, குறு மற்றும் பெரிய தோல் தொழிற்சாலைகள் இருக்கின்றன. அவையனைத்துமே தற்போது முடங்கியிருப்பதால், அதிலும் கழிவுகள் ஏதும் கலக்காமல் இருக்கிறது. இப்படி, தொழிற்சாலைக் கழிவுகளால் சீரழிந்துபோன தமிழகத்தின் முக்கிய நதிகள், கடந்த ஒரு மாத காலமாகக் கழிவுகளின்றி ஆசுவாசப்படுத்திக்கொள்ள நேரம் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் சுற்றுச்சூழல், லாக்டெளனுக்கு முன்னால் இருந்ததைவிட, லாக்டெளன் முடியும்போது நிச்சயம் மேம்பட்டிருக்கும். ஆனால், இந்த நிலையை இப்படியே தக்க வைக்க நாம் மிகவும் பிரயத்தனப்பட வேண்டும். அதற்கு, அரசுகள் மட்டுமின்றி நாமும் தயாராக இருக்கிறோமா என்பதுதான் கேள்வி.

சுவீடனைச் சேர்ந்த இளம் சூழலியல் போராளி கிரெட்டா துன்பெர்க், "கொரோனா வைரஸ் நமக்கு ஒன்றைப் புரியவைத்துள்ளது என்றால், அது நம் சமுதாயம் நீடித்த நிலையான வளர்ச்சிக்குரியதாக இல்லை என்பதுதான். ஒரேயொரு வைரஸ் உலகப் பொருளாதாரத்தை இரண்டே வாரங்களில் சிதைத்துவிட முடிகிறது என்றால், பேரிடர்களைக் கருத்தில்கொண்டு நீண்டகாலத்திற்கு ஏற்ப நாம் திட்டமிடுவதில்லை என்பதே காரணம்" என்று கூறினார்.

காற்று மாசுபாடு
காற்று மாசுபாடு

ஏற்றுக்கொள்கிறோமோ இல்லையோ, உலகம் முன்பைப் போல் இல்லை. சில மாதங்களுக்கு முன் இருந்ததைவிட வித்தியாசமாகத்தான் பூமி இருக்கிறது. அனைத்தும் பழைய மாதிரியே இல்லாமலிருக்கலாம், அதற்காக ஸ்தம்பித்து நின்றுவிட முடியாது. நாம் மேற்கொண்டு நகர்வதற்குரிய புதியதொரு பாதையைத் தேர்ந்தெடுத்தாக வேண்டும். அந்தப் பாதை, லாக்டௌன் காரணமாக மேம்பட்டுள்ள சூழலியலைத் தக்க வைக்கும் வகையில் அமைய வேண்டும். மக்கள் அதற்குரிய வாய்ப்புகளைப் பயன்படுத்திக்கொள்ள முனைவார்கள் என்ற நம்பிக்கை உதயமாகிக்கொண்டிருக்கிறது. தமிழகத்திலும் அதே நம்பிக்கையோடு பொறுத்திருப்போம்.

தொடரும் லாக்டவுன்...`ஹெலிகாப்டர் மணி'யை கையிலெடுக்குமா இந்தியா?
அடுத்த கட்டுரைக்கு