Published:Updated:

மேற்குத் தொடர்ச்சி மலையை சிதைக்கும் ஹூபலி - அங்கோலா ரயில் திட்டம்... தொடரும் காடழிப்பு!

ரயில்வே பாதை / Representational Image
ரயில்வே பாதை / Representational Image ( Pixabay )

இந்தத் திட்டம் தாவர வளம் மற்றும் காட்டுயிர் வளத்தை அழிப்பதோடு நிற்காது. காட்டுயிர்களின் வழித்தடங்களையும் துண்டாக்குகிறது.

164.44 கிலோமீட்டர் நீளமான ரயில்வே பாதை, 80 சதவிகிதம் அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் ஊடுருவிச் செல்கின்றது. 2,20,000 மரங்களை அழிக்கவல்ல இந்தத் திட்டத்துக்கு கர்நாடகா மாநில வனவிலங்கு வாரியம் அனுமதி கொடுத்துள்ளது. இந்த அனுமதியின் மூலம், நூற்றுக்கணக்கான ஹெக்டேர் வனப்பகுதி மேற்கு மலைத்தொடரில் அழியப் போகிறது. மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை அமைச்சகத்தின் ஆய்வில் ஹூபலி முதல் அங்கோலா வரையிலான ரயில் பாதை 80 சதவிகிதம் அடர்ந்த மேற்கு மலைக் காடுகளை ஊடுருவிச் செல்வது உறுதியாகியுள்ளது.

சுமார் 595.64 ஹெக்டேர் வனப்பகுதி இதன்மூலம் அழியப் போகின்றது. அதுமட்டுமன்றி, 184.6 ஹெக்டேர் சதுப்புநிலம் மற்றும் 190 ஹெக்டேர் வறண்ட காடுகளும் அழியப் போகிறது. கர்நாடக மாநில வனவிலங்கு வாரியத்தைச் சேர்ந்த சிலர் இந்தத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தும்கூட இதற்குரிய அனுமதி கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தத் திட்டம் குறித்து மங்காபே என்ற சூழலியல் இதழுக்குப் பேட்டியளித்துள்ள கர்நாடக வனத்துறையின் தலைமை வன அதிகாரி சஞ்சய் மோகன், ``வட கர்நாடக மக்களுக்கு அவர்களுடைய பகுதியில் வளர்ச்சியும் வேலைவாய்ப்பும் அதிகமாக வேண்டுமென்கிறார்கள். இந்தத் திட்டம் இரண்டையுமே அவர்களுக்கு அதிகப்படுத்தும்" என்று கூறியுள்ளார். ஒரு மாநில வனத்துறையின் தலைமை அதிகாரி, அந்த மாநில எல்லைக்குட்பட்ட வனப்பகுதிகள் அழியாமல் பாதுகாக்க வேண்டும். ஆனால், அதற்கு மாறாக நூற்றுக்கணக்கான ஹெக்டேர் காட்டுப்பகுதி அழிவது நன்மை பயக்குமென்று காரணங்களை அடுக்கிக்கொண்டிருப்பது அவருடைய பணிக்கு விரோதமானது என்று கர்நாடக மாநில சூழலியல் ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர்.

மேற்குக் கடற்கரையோடு, மாநிலத்தின் மத்திய நிலப்பகுதியை இந்த ரயில்வே பாதை இணைக்கிறது. வடக்குக் கர்நாடகாவுக்கும் ஹைதராபாத் பகுதிக்குமான சமூகப் பொருளாதார முன்னேற்றத்துக்கு இது துணைபுரியும் என்று கூறப்படுகிறது. ஆனால், திட்ட வரைவுப்படி பார்த்தால் பெல்லாரி மற்றும் ஹாஸ்பேட் பகுதிகளிலிருக்கும் இரும்பு மற்றும் மாங்கனீசு தாதுக்களை வெட்டியெடுத்து அங்கோலாவுக்கு அருகிலும் மேற்குக் கர்நாடகாவுக்கு அருகிலுள்ள கார்வாருக்கும் புதிதாக வரவுள்ள துறைமுகங்களுக்குக் கொண்டு செல்லவே இந்த ரயில்வே பாதை திட்டமிடப்பட்டுள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலை
மேற்குத்தொடர்ச்சி மலை
Pixabay

இந்திய நிலப்பரப்பில் மேற்குத்தொடர்ச்சி மலையின் பரப்பளவு 1.8 லட்சம் சதுர கிலோமீட்டர். ஆனால், நாட்டிலுள்ள மொத்த தாவர வகைகள், மீன், பறவை, பாலூட்டி வகைகளில் 30 சதவிகிதத்தைத் தன்னுள் கொண்டுள்ளது. வெப்பமண்டலப் பல்லுயிரிய வளத்தின் ஸ்டோர் ரூமாகச் செயல்படுவதையும் தாண்டி, அது கிழக்கு நோக்கிப் பாயும் 38 நதிகளுக்கும், மேற்கு நோக்கிப் பாயும் 27 நதிகளுக்கும் பிறப்பிடமாக விளங்குகிறது. கோதாவரி, கிருஷ்ணா, மண்டோவி, காவிரி, ஸுவாரி ஆகிய சில முக்கிய நதிகளுக்கு அதுதான் பிறப்பிடம். சுமார் 24.5 கோடி மக்கள் மேற்குத்தொடர்ச்சி மலையைத்தான் தங்கள் நீராதாரத்துக்குச் சார்ந்துள்ளனர்.

உலகளவிலான மிக முக்கியப் பல்லுயிரிய வளப் பகுதிகளில் மேற்கு மலைத்தொடரும் ஒன்று. இங்கு 2,500 வகையான ஓரிடவாழ் தாவரங்கள், பூச்சிகள், விலங்குகள், நீர்நில வாழ்விகள் உள்ளன. இத்தகைய சூழலியல் பெருமை வாய்ந்த மலைத்தொடரின் ஒரு பகுதி வளர்ச்சி என்ற பெயரில் அழிக்கப்பட்டால் அந்தப் பகுதியில் வாழ்கின்ற ஓரிட வாழ் உயிரினங்கள் அழியும் ஆபத்து ஏற்படும்.

இந்தத் திட்டம் தாவர வளம் மற்றும் காட்டுயிர் வளத்தை அழிப்பதோடு நிற்காது. காட்டுயிர்களின் வழித்தடங்களையும் துண்டாக்குகிறது. பெயர் குறிப்பிட விரும்பாத வனத்துறையின் ஓய்வுபெற்ற அதிகாரி ஒருவர், முழுக்க முழுக்க ஏமாற்று வேலை என்றும் துறைரீதியிலான மோசடி என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். மேற்கொண்டு பேசிய அவர், ``காடுகள் மழை மேகங்களை உற்பத்தி செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதுவும் மலை முகடுகளில் நடக்கும் சூழலியல் செயற்பாடுகள் உற்பத்தி செய்யும் மேகங்களால் மட்டுமே சுமார் 4,000 முதல் 6,000 மில்லிமீட்டர் மழைப்பொழிவு கிடைக்கிறது. ஆரோக்கியமான தாவர வளத்துக்கும் பசுமைப் போர்வைக்கும் தரமான மண் வளம் அவசியம். அது நிலத்தடியில் நடக்கின்ற நீர் சுழற்சிக்குத் துணைபுரிகின்றது. மலை முகடுகளில் மழை நின்ற பிறகும்கூட, நீரோடைகளாகப் பல மாதங்களுக்கு நீர் வழிந்தோடும். அதன்மூலம் வறண்ட காலங்களில் கூட நீர் ஓரளவுக்கு இருந்துகொண்டேயிருக்கும்.

சுமார் 2.5 லட்சம் டன் கரிம வாயு இதற்காக நடக்கப்போகும் காடழிப்பினால் வெளியாகும்.
டி.வி.ராமச்சந்திரா, சூழலியல் ஆய்வாளர், இந்திய அறிவியல் மையம்

இப்படிப்பட்ட நில அமைப்பு, இந்தத் திட்டத்தின் மூலம் சீரழியும். அதனால், மழை பெய்தால் நீர் மொத்தமாகக் கீழ் நிலையிலுள்ள பகுதியை நோக்கி வேகமாகப் பாயும். அது நிலத்தடியில் நீர் தேங்குவதைத் தடுப்பதோடு, நீர் கீழிறங்கும் வேகத்தை அதிகரித்து மண் சரிவையும் ஏற்படுத்தும்" என்று குறிப்பிட்டார்.

அவர் சொல்வதுபோல் நடந்தால், மேற்குத்தொடர்ச்சி மலை அழிகின்ற வேகம் வேகப்படும். மண் சரிவினால், அனைத்துப் படிமங்களும் கீழ்நிலையிலுள்ள ஏரிகள், நதிகளில் படியும். அதனால், ஏரி, நதி போன்ற நீர்நிலைகளின் நீர்ப்பிடிப்புத் திறன் குறையும். இதனால், ஒன்று அதிக மழை பெய்யும்போது வெள்ளப்பெருக்கு ஆபத்துக்கு வழி வகுக்கும். இன்னொன்று, நீர்பிடிப்புத் திறன் இல்லாததால், நீர் தேங்கி நிற்கவோ, நீர் ஓடவோ வழியில்லாமல் போய், கோடைக்காலங்களில் வறட்சி ஏற்படும். இவையிரண்டையுமே 2018 மற்றும் 2019 ஆண்டுகளில் நாம் அனுபவித்துள்ளோம் என்பது குறிப்பிடத்தக்கது. இவையனைத்துமே, மலைத்தொடரின் நதிகளைச் சார்ந்துள்ள விவசாய நிலங்களில் பயிர் உற்பத்தியைக் குறைக்கும். அது உணவு உற்பத்தியில் பாதிப்பை ஏற்படுத்தும்.

மலைத்தொடரில் முற்றிலுமாக அழிந்துவிட்டதாகக் குறிப்பிடப்பட்ட ஒரு வகைத் தவளை இனம், சமீபத்தில்தான் கண்டுபிடிக்கப்பட்டது. மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ள அந்தத் தவளையினத்தின் வாழிடம் இந்த ரயில்வே பாதைக்காகத் திட்டமிடப்பட்ட பகுதிக்குள் அமைந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. இருந்தும் இந்தத் திட்டத்துக்கு இந்திய அறிவியல் ஆய்வு நிறுவனம் பச்சைக்கொடி காட்டியுள்ளது. அந்தப் புதிய தவளையினம் எண்ணிக்கையில் மிகவும் குறைவாக இருப்பதாகவும் இந்தத் திட்டம் வெற்றியடைந்தால், அதன் அழிவு இந்த முறை உறுதி செய்யப்படும் என்றும் காட்டுயிர் ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

பல்லுயிரிய வளம்
பல்லுயிரிய வளம்
Pixabay

மலைத்தொடரிலுள்ள பல தாவரங்களுக்கு மருத்துவம், உணவு என்று பலவழிகளில் பொருளாதாரப் பயன்கள் உள்ளன. சூழலியல் ரீதியாகப் பல உதவிகளைச் செய்வதோடு அவை பொருளாதாரப் பலன்களையும் நல்குவதால் அப்பகுதி மக்கள் இந்தத் திட்டத்தை எதிர்க்கின்றனர். பெங்களூரில் அமைந்துள்ள இந்திய அறிவியல் மையத்தில் சூழலியல் ஆய்வாளராகச் செயல்படும் டி.வி.ராமச்சந்திரா, ``மனித நடமாட்டம், ஊடுருவல் ஆகியவை ஏற்கெனவே 1973-ம் ஆண்டில் 98.78 சதவிகிதமாக இருந்த வனப்பரப்பை, 2010-ம் ஆண்டில் 83.14 சதவிகிதமாகக் குறைத்துவிட்டது. இந்த நிலப்பகுதி மீண்டும் 168 கிலோமீட்டர் நீளத்துக்கு ரயில்வே பாதை அமைக்கத் திசைதிருப்பப்பட்டால், மேலும் 16.23 சதவிகிதம் வனப்பரப்பு அழியும்" என்று பதிவு செய்துள்ளார். அதாவது, கடந்த 37 ஆண்டுகளில் 15.64 சதவிகித வனப்பரப்பு அழிந்தது. ஆனால், இந்த ஒரே திட்டத்தில் 16.23 சதவிகித வனப்பரப்பு அழியும். இது எவ்வளவு ஆபத்தான திட்டம் என்பதற்கு இதைவிடச் சரியான விவரம் அவசியமில்லை.

இந்தத் திட்டம் வரவுள்ள குறிப்பிட்ட நிலப்பகுதியில் மட்டுமே, 29 வகையான பாலூட்டிகள், 256 வகையான பறவைகள், 8 வகை ஊர்வனங்கள், 50 வகையான வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்விடம் அமைந்துள்ளது. இவையனைத்துமே சர்வதேச இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் பல்லுயிரிய வளப் பட்டியலின்படி, பாதுகாக்கப்படுகின்றன. அதிலும் பெரும்பான்மை உயிரினங்கள், 1972-ம் ஆண்டின் காட்டுயிர் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்துக்கான வேலைகள் தொடங்கினால், வடக்குக் கர்நாடகாவில் ஏற்படும் நிலச்சரிவுகளின் எண்ணிக்கை அதிகரிக்கும், அதோடு சேர்த்துச் சேதங்களும் அதிகரிக்கும். சூழலியல் ஆய்வாளர் டி.வி.ராமச்சந்திராவினுடைய பதிவுகளின்படி, இதற்காக நடக்கப்போகும் காடழிப்பினால் சுமார் 2.5 லட்சம் டன் கரிம வாயு வெளியாகும் என்கிறது.

நாட்டிலுள்ள 50 புலிகள் காப்பகங்களில், திட்டம் வரவுள்ள பகுதியில் இருக்கும் காளி புலிகள் காப்பகத்தில் புலிகள் மற்றும் யானைகளின் எண்ணிக்கை அதிகமிருப்பதாகக் கடந்த 2017-ம் ஆண்டு ஆகஸ்ட் 12-ம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் சுற்றுச்சூழல் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது. இந்தத் திட்டம், அங்கு வாழும் பேருயிர்களின் வாழ்விடத்தைச் சுருக்கிவிடும். அவற்றின் இல்லங்களைக் கபளீகரம் செய்துவிடும். யானைகள் மற்றும் புலிகளின் நடமாட்டத்தைச் சீர்குலைத்து அவற்றின் வழித்தடங்களைத் துண்டாக்கிவிடும். இதனால், அந்தப் பகுதியைச் சுற்றியுள்ள கிராமங்களில் காட்டுயிர்-மனித எதிர்கொள்ளல் பிரச்னை அதிரிக்கும்.

ஹூபலி-அங்கோலா திட்டத்துக்கான முன்மொழிதலை 1997-98 ரயில்வே பட்ஜெட்டிலேயே ரயில்வே அமைச்சகம் முன்வைத்தது. இதற்கான எதிர்ப்பு அப்போதிருந்தே சூழலியலாளர்களால் வைக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது கொரோனா காலகட்டத்தில் கர்நாடக வனவிலங்கு வாரியம் அமைதியாக இந்தத் திட்டத்துக்கு அனுமதி கொடுத்துவிட்டது. இது மிகப்பெரிய அச்சுறுத்தலை அந்த வனப்பகுதிக்கும் அங்கு வாழும் உயிரினங்களும் அந்த வனத்தைச் சார்ந்துள்ள எளிய மக்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் உடனடியாக இந்தத் திட்டத்தை ரத்து செய்து, நேரவிருக்கும் பேராபத்தைத் தடுக்க வேண்டும். இல்லையேல், இத்தகைய சூழலியல் அக்கறையற்ற திட்டங்கள் அதிகரிக்க இதுவோர் ஆரம்பமாக அமைந்துவிடும்.

காட்டுயிர் வளம்/ ஆசிய யானை
காட்டுயிர் வளம்/ ஆசிய யானை
Pixabay

ஆபத்தான இந்தத் திட்டத்தைத் தடுத்து நிறுத்துவதில், தன்னால் எதுவும் செய்யமுடியாமல் போனதால், மாநில வனவிலங்கு வாரியத்திலிருந்து தன்னுடைய உறுப்பினர் பதவியை ஜெயநகர் சட்டமன்ற உறுப்பினர் சௌமியா ரெட்டி ராஜினாமா செய்தார். அதுகுறித்து அவர் பதிவிட்டிருந்த ஃபேஸ்புக் பதிவில்,

``நான் வளர்ச்சிக்கு எதிரானவர் அல்ல. அதேநேரம், சுற்றுச்சூழலைச் சிதைக்கும் ஒரு திட்டத்துக்கு என்னால் ஆதரவளிக்க முடியாது. என்னுடைய மனசாட்சி அதற்கு அனுமதிக்காது" என்று கூறியுள்ளார்.

ஆம், அவருக்கு இருக்கின்ற மனசாட்சி வனவிலங்கு வாரியத்திலிருந்த அனைவருக்கும் இருந்திருந்தால் இப்படியோர் ஆபத்தான திட்டத்துக்கு அனுமதி கிடைத்திருக்காது.

அடுத்த கட்டுரைக்கு