Published:Updated:

சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு 2020 - சூழலியாளர்களின் குரலுக்கு செவி கொடுக்குமா மத்திய அரசு?

நம் நாட்டின் நீர்வளம், நிலம், காடுகள் மற்றும் இதர சூழலியல் வளங்கள், சுரங்கம், தொழிற்சாலைகள், அணை போன்ற தொழில் வளர்ச்சிகளுக்குப் பலியாகிவிடக் கூடாது. ஆனால், புதிய சூழலியல் தாக்க மதிப்பீடு வரைவு அதற்கு வழிவகுக்கும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

இந்தியாவின் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் முக்கியப் பங்கு வகிப்பது சூழலியல் தாக்க மதிப்பீடு. எந்தவொரு தொழிற்சாலை வருவதாக இருந்தாலும் சரி, அது வரவுள்ள பகுதியிலும் அங்கு வாழும் மக்களின் வாழ்வாதாரத்திலும் அது என்ன மாதிரியான மாற்றங்களை ஏற்படுத்தும், அந்த மாற்றங்களின் தாக்கமும் இயற்கையின் எதிர்வினையும் அங்கு எப்படியிருக்கும் என்பதை ஆராய வேண்டும். ஒருவேளை கணிக்கப்படும் விளைவுகளைச் சமாளிக்க முடியுமென்றால் அதற்குரிய வகையில் திட்டமிட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்த பின்னர் தொழிற்சாலையைத் தொடங்கவேண்டும். அல்லது எந்தவிதத் திட்டத்தாலும் மீட்டெடுக்க முடியாத எதிர்வினைகள் இருக்குமாயின் அந்தத் திட்டத்தையே தடை செய்ய வழி வகுக்கவேண்டும். அதுதான், சூழலியல் தாக்க மதிப்பீடு.

புவி வெப்பமயமாதல்
புவி வெப்பமயமாதல்
Pixabay

நம் நாட்டின் நீர்வளம், நிலம், காடுகள் மற்றும் இதர சூழலியல் வளங்கள் சுரங்கம், தொழிற்சாலைகள், அணை போன்ற தொழில் வளர்ச்சிகளுக்குப் பலியாகிவிடக்கூடாது என்ற நோக்கத்தில் சட்டப்பூர்வமாகக் கடைப்பிடிக்கப்படும் இந்தப் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, 1994-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருக்கின்றது.

இந்நிலையில் கடந்த மார்ச் 12-ம் தேதியன்று, உலகமே கொரோனா தொற்றுப் பேரிடருக்குள் சிக்கிக் கொண்டிருந்த சூழலில், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தச் சூழலியல் தாக்க மதிப்பீடு விதிகளுக்கான புதிய வரைவை வெளியிட்டது. பொதுமக்கள், வல்லுநர்கள், சமூக மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் போன்றோர், அந்தப் புதிய வரைவு குறித்தும் அதில் செய்யப்பட்டுள்ள திருத்தங்கள் குறித்தும் கருத்து தெரிவிப்பதற்காகப் பொதுவெளியில் பகிரப்பட்டிருந்தது. இந்த வரைவு என்ன மாதிரியான மாற்றங்களைக் கொண்டு வரவுள்ளது, அதனால் விளையப்போகும் ஆபத்து என்ன என்று ஏற்கெனவே விகடனில் விரிவாகப் பேசியிருந்தோம். அந்தக் கட்டுரையைக் கீழே உள்ள லிங்கை கிளிக் செய்து வாசிக்கலாம்.

ஹுபலி-அங்கோலா திட்டம்... சூழலியல் தாக்க மதிப்பீட்டுச் சட்டம்... சூழலியல் சுரண்டலுக்கு வித்திடுகிறதா மத்திய அரசு!

இந்த வரைவு குறித்து கருத்து தெரிவிப்பதற்கான கால அவகாசம் வருகின்ற 30-ம் தேதியோடு முடிகின்றது. அதற்கும் முன்பாக, சூழலியல் தாக்க மதிப்பீடு குறித்த நம்முடைய வரலாற்றைத் திரும்பிப் பார்ப்போம்.

இந்தத் திட்டம் வரலாற்றுப் பொருளாதாரப் பார்வையோடும் சூழலியல், எளிய மக்களின் வாழ்வாதாரம் போன்றவற்றை அடிப்படையாக வைத்தும் உருவாக்கப்பட்டது. அத்தகைய சட்டத்தில் தற்போது கொண்டுவரப்படும் மாற்றம், தற்போதைய அரசியல், பொருளாதார, சூழலியல் பேரிழப்புகளுக்கு வழிவகுக்கும் வகையில் உள்ளது. இந்த வரைவு, இத்திட்டத்தின் அடிப்படையையே குலைக்கும் விதத்தில் அமைந்துள்ளது. 1970-களில் அமெரிக்கா இந்த முறையைக் கையாளத் தொடங்கியது. அவர்களிடமிருந்து பல்வேறு சர்வதேசச் சூழலியல் மாநாடுகள் வழியாகப் பல்வேறு உலக நாடுகளும் இதை அமல்படுத்தத் தொடங்கின.

இந்தியப் பிரதமர் தனது அரசை, தொடர்ந்து சுற்றுச்சூழல் மீது அக்கறையுடைய ஒரு பொறுப்பான அரசாங்கமாகவே காட்டிக் கொள்கின்றார். ஆனால், உண்மையில் அனைத்துச் சட்டங்களும் மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன.
ஜெய்ராம் ரமேஷ், முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர்
`இயற்கையான காடுகளை அழித்துவிட்டு செயற்கையான காட்டை உருவாக்குவது ஏமாற்றுவேலை!’ - ஜெய்ராம் ரமேஷ்

1980-களின் இறுதியிலிருந்து 1990-களின் தொடக்கத்திற்குள்ளாக, இந்தியா உட்படப் பல வளரும் நாடுகள் அந்நிய மூதலீடுகளுக்காகத் தங்கள் உள்நாட்டுச் சந்தையைத் திறந்துவிட்டுக்கொண்டிருந்தன. அதேநேரத்தில், அதோடு சேர்த்துப் பல முக்கியத் துறைகளைத் தனியார் கைவசம் ஒப்படைத்துக் கொண்டிருந்தனர். இந்நிலையில், நம்முடைய நிலத்தைப் பற்றியோ இயற்கை வளக் கையிருப்பு பற்றியோ சிறிதும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லாத அந்நிய முதலீடுகளை, சுரண்டுவதிலிருந்து தடுக்க, தனியார் பொருளாதார வளர்ச்சி நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்த தேசிய அளவில் சூழலியல் தாக்க மதிப்பீட்டின் வழியாக வளரும் நாடுகளின் அரசுகள் ஓர் அரணை உருவாக்கின. நிதியுதவி பெறுவதிலிருந்து உரிமம் பெற்றுச் செயல்படுவது வரை அனைத்திற்கும் முன்பாக இந்த மதிப்பீட்டைச் செய்து ஆய்வறிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும் என்பது, அவற்றை ஒருவிதத்தில் அரசினுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தன. அதன்மூலம் உள்நாட்டு மக்களுடைய நலன் பாதிக்கப்படாமல் கவனித்துக்கொள்ள முடிந்தது. இந்த முயற்சியைக் கையில் எடுக்காத நாடுகள் அந்நிய முதலீடுகளின் ஆதிக்கத்தில் முற்றிலுமாகச் சிக்கி மூச்சுத் திணறத் தொடங்கின. மக்களுடைய நலனை மட்டுமே உள்நோக்கமாகக் கொண்ட சட்டவிதிகளில் இதுவும் ஒன்று.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

1994-ம் ஆண்டு இந்தியா இந்த மதிப்பீட்டு முறையை அமல்படுத்திய நாள் முதல், இது தொழிற்சாலை உரிமையாளர்கள் மட்டுமன்றி சூழலியல் ஆர்வலர்களுக்குமே தொண்டையில் சிக்கிய முள்ளைப் போலத்தான் இருந்து வருகின்றது. தொழில் வளர்ச்சிக்கு இது மிகப்பெரிய தடங்கலாக இருக்கிறதென்று குற்றம் சாட்டும் பெருமுதலாளிகள், இயற்கை வளங்களை அவர்கள் தம் வசமாக்கிக்கொள்ள இது தடையாக இருப்பதைப் பெரிதும் வெறுக்கின்றனர். இந்தச் சட்டத்தையும் தங்களுக்கு எப்படியெல்லாம் சாதகமாக்கிக் கொள்ளலாம் என்று அவர்கள் சிந்தித்துக் குறுக்குவழிகளில் போலி சூழலியல் தாக்க மதிப்பீடு சமர்ப்பித்து, திட்டங்களைச் சாதித்துக் கொள்வதால் சுற்றுச்சூழலைக் காப்பாற்றப் போராடும் சூழலியலாளர்களுக்கும் இது பெரும் போராட்டத்தையே பரிசாக வழங்கிக்கொண்டிருக்கிறது. சூழலியல் தாக்க மதிப்பீட்டில் சில குறைகள் இருந்தாலும்கூட, மக்கள் சமூகங்களின் வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் கவனம் செலுத்தும் விதத்தில் அது இருந்து வந்தது.

சூழலியல் தாக்க மதிப்பீடு / மேற்குத்தொடர்ச்சி மலை
சூழலியல் தாக்க மதிப்பீடு / மேற்குத்தொடர்ச்சி மலை
Pixabay

இப்போது அந்தப் பாதுகாப்பு அரண் உடைந்துகொண்டிருக்கின்றது. மத்திய அரசு வெளியிட்டுள்ள புதிய வரைவு, முழு வீச்சில் சுற்றுச்சூழல் குறித்த அக்கறையின்றி முதலீட்டிற்கு வித்திடக்கூடிய வகையிலேயே வடிவமைக்கப்பட்டுள்ளதாகச் சூழலியலாளர்கள், ஆய்வாளர்கள் அனைவருமே கடுமையாக விமர்சிக்கின்றனர்.

பூவுலகின் நண்பர்கள் அமைப்பு ஒருங்கிணைத்த நிகழ்ச்சியில் நேற்று பேசிய முன்னாள் சுற்றுச்சூழல் அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ், "இந்தியப் பிரதமர் மற்றும் அவருடைய அரசு தொடர்ந்து சுற்றுச்சூழல் மீது அக்கறையுடைய ஒரு பொறுப்பான அரசாங்கமாகவே காட்டிக்கொள்கின்றார்கள். ஆனால், உண்மையில் அனைத்துச் சட்டங்களும் மழுங்கடிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதற்கு ஓர் உதாரணம்தான் சூழலியல் தாக்க மதிப்பீடு 2020 வரைவு. ஏற்கெனவே நிலவும் அதன் விதிமுறைகளே பெரும்பாலும் பலவீனமாகத்தான் இருக்கின்றன. அதை மேலும் பலவீனப்படுத்துகின்றார்கள்" என்று இதுகுறித்து விமர்சித்தார்.

இந்தப் புதிய வரைவு குறித்து விமர்சித்துப் பேசிய சூழலியல் ஆர்வலர் நித்தியானந்த் ஜெயராமன், "இதை ஓர் அறிவிப்பாக இன்றி, சட்டமாக இயற்றவேண்டும். ஓர் அறிவிப்பின் மூலமே இதை மாற்றிக்கொள்ளலாம் என்றால், அமைச்சகத்தில் உள்ளவர்களே மாற்றிவிட முடியும். பொதுமக்களுக்கு ஓர் அங்கீகாரத்தை வழங்கி, ஜனநாயக வழியில் செயல்படுவது இந்த ஒரு சட்டம்தான். இதை அறிவிப்பாக இன்றி சட்டத்தின் வழியேதான் மாற்ற முடியுமென்ற நிலை இருக்கவேண்டும்.

நீர் மாசுபாடு
நீர் மாசுபாடு
Pixabay

இப்போதுள்ள 2006-ம் ஆண்டின் சூழலியல் தாக்க மதிப்பீடு கூட பெரியளவில் கட்டுப்பாடுகளை விதிப்பதில்லை. அதன் மூலமாகவே இதற்கு முந்தைய ஆட்சியில் 84 சதவிகிதம் திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டன. அது தற்போதைய அரசாங்கத்தின்கீழ் 99 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. இப்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் அதைவிட மோசமாக இருக்கின்றன. மக்கள் கருத்துகளைச் சொல்வதற்கான கால அவகாசத்தைக் குறைத்துள்ளார்கள்.

மக்கள் கருத்தைக் கேட்டபிறகே அனுமதி கொடுப்பது குறித்து சிந்திக்கலாம் என்ற வகைப்பாட்டின் கீழ் இருந்த திட்டங்களின் எண்ணிக்கையைக் குறைத்துள்ளார்கள். இதைவிடக் கொடுமை, சட்டத்தை மீறினால் அதையே எப்படிச் சட்டத்துக்கு உட்பட்டதாக மாற்றுவது என்பதுகூட இதில் கூறப்பட்டுள்ளன. சட்டம் மீறும் தொழிற்சாலைகளைத் தண்டிப்பதை விட்டுவிட்டு, அவற்றின் விதிமீறலைச் சரிக்கட்டுவதற்கான வழியைச் சொல்வது எந்தவிதத்தில் நியாயம்?" என்று விமர்சித்துள்ளார்.

இத்தனை ஆண்டுகளாக, இயற்கைப் பாதுகாப்பின் அடிப்படை அரணாக விளங்கிய ஒன்றே, இயற்கை வளச் சுரண்டலுக்குரிய வாய்ப்பாக மாற்றப்பட்டுள்ளது. 2020-ம் ஆண்டுக்கான புதிய சூழலியல் தாக்க மதிப்பீட்டு வரைவு அதற்கான அடித்தளமாக அமைந்துள்ளது.

அப்படி என்னதான் உள்ளது இந்தப் புதிய வரைவில்?

சூழலியல் தாக்க மதிப்பீட்டிற்கான புதிய சட்டவரைவு, இந்தியச் சுற்றுச்சூழல் மேற்பார்வையின் முக்கியமான அஸ்திவாரத்தைத் தலைகீழாகத் திருப்பிப் போடுவதைப்போல் அமைந்துள்ளது. அது உருவாக்கியுள்ள செயல் வடிவம் பல்வேறு தொழிற்சாலைகளை, அவை தொடங்கப்படுவதற்கு முன் முன்னெச்சரிக்கையாகச் செய்யும் சுற்றுச்சூழல் அனுமதி, பொதுமக்கள் கருத்துக்கேட்பு ஆகியவற்றிலிருந்து தப்பிக்க வைக்கும் வகையில் அமைந்துள்ளது. இனி, இரண்டு விதமான சுற்றுச்சூழல் அனுமதிகள் வழங்கப்படும். ஒன்று, வல்லுநர் குழு அமைக்கபட்டு குறிப்பிட்ட திட்டம் குறித்த ஆய்வுகளை நடத்திய பின்னர் சூழலியல் அனுமதி வழங்குவது. இரண்டாவது, எந்தவித வல்லுநர் குழு ஆய்வுமின்றி அனுமதி கொடுத்துவிடுவது.

சதுப்புநிலக் காடுகள் ஏற்கெனவே சட்டவிரோத மண் நிரப்புதல்களால் அழிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அவற்றை மணல் போட்டு சமன்படுத்துவதற்கு அனுமதியோ சூழலியல் தாக்க மதிப்பீடோ செய்ய வேண்டியதில்லை என்று கூறும் பிரிவுகளும் இணைக்கப்பட்டுள்ளன.
சதுப்பு நிலங்களை அழிக்கும் திட்டங்கள்
சதுப்பு நிலங்களை அழிக்கும் திட்டங்கள்

ஆறு மாதங்களுக்கு ஒருமுறை, தன்னுடைய செயல்பாடுகள் குறித்த அறிக்கையை ஒவ்வொரு நிறுவனமும் சமர்ப்பிக்க வேண்டும் என்றிருந்த விதிமுறையை, ஆண்டுக்கு ஒருமுறை சமர்ப்பித்தால் போதுமென்று இந்தப் புதிய சட்டவரைவு மாற்றியுள்ளது. இந்த நீண்ட அவகாசம், திட்டத்திலுள்ள சூழலியல் மற்றும் சமூக விளைவுகளை மறைக்கப் போதுமானது என்றும் அஞ்சுகின்றனர்.

இதுபோக குஜராத், ராஜஸ்தான் பகுதிகளிலுள்ள வறண்ட புல்வெளிக் காடுகள், அழியும் நிலையிலுள்ள, மிகவும் அருகி வருகின்ற கான மயில் போன்ற பறவையினங்களின் முக்கிய வாழ்விடங்களாக உள்ளன. அவை, நாடோடி மேய்ப்பர் சமூகங்களின் வாழ்வாதாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இந்நிலையில், இந்தப் புதிய சட்டவரைவினால் அத்தகைய நிலப்பகுதிகள் தரிசு நிலங்களாகக் கணக்குக் காட்டப்பட்டு கார்ப்பரேட் தொழில் துறைகளுக்குத் திறந்துவிடப்படும்.

சதுப்புநிலக் காடுகள் ஏற்கெனவே சட்டவிரோத மண் நிரப்புதல்களால் அழிக்கப்பட்டு வருகின்றன. மணல் கொட்டி சமன்படுத்தப்படுவதால் அவற்றின் இருப்பு ஆபத்தில் உள்ளன. இந்நிலையில், அவற்றை மணல் போட்டு சமன்படுத்துவதற்கு அனுமதியோ சூழலியல் தாக்க மதிப்பீடோ செய்ய வேண்டியதில்லை என்று கூறும் பிரிவுகளும் இணைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவுகள் மோசமாக இருக்கும். விளிம்புநிலைச் சமூகங்களில் பலவும் சதுப்புநிலங்களையே நம்பியுள்ளன. அவர்களின் வாழ்வாதாரமே அழிந்துவிடும்.

தொழிற்சாலைகள்
தொழிற்சாலைகள்
Pixabay

இப்படிப் பல மாற்றங்கள், இந்தியாவின் சூழலியலைப் பேரழிவுக்கு உள்ளாக்கும் வண்ணம் அமைந்துள்ளன. இந்த விமர்சனங்களை முன்வைத்து நாடு முழுவதும் பல்வேறு சூழலியலாளர்களும் ஆய்வாளர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர். வருகின்ற 30-ம் தேதியோடு இந்தப் புதிய சட்ட வரைவு குறித்துக் கருத்துகளைத் தெரிவிப்பதற்கான கால அவகாசம் முடிவடைகின்றது. மக்களுடைய எதிர்ப்புகளைக் கருத்தில் கொண்டு மத்திய அரசு, இந்த வரைவைத் திரும்பப் பெறவேண்டும். இயற்கை வளங்களுடைய பாதுகாவலனாக அரசு திகழவேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு