Published:Updated:

ஹைட்ரோகார்பன் திட்டம்: தமிழக அரசு எதிர்த்தும் அரியலூரில் ஓ.என்.ஜி.சி அனுமதி கேட்பது ஏன்?

ஓ.என்.ஜி.சி குழாய்
ஓ.என்.ஜி.சி குழாய்

தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓ.என்.ஜி.சி நிறுவனம், நேற்று தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது.

அரியலூர் மாவட்டத்தில் ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகளை அமைப்பதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரியுள்ளது ஓ.என்.ஜி.சி நிறுவனம். ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கான `கண்டுபிடிக்கப்பட்ட சிறிய எண்ணெய் வயல்கள் (Discovered Small fields)' என்ற கொள்கையின் கீழ், மூன்றாம் கட்ட ஏலத்தில் தமிழ்நாட்டின் புதுக்கோட்டை, ராமநாதபுரம் பகுதிகள் சேர்க்கப்பட்டன. அந்த ஏலத்தை நிறுத்த வேண்டுமென்றும் தமிழ்நாட்டில் எந்தப் பகுதியையும் ஹைட்ரோகார்பன் ஆய்வுக்காக ஏலத்தில் கொண்டு வரக் கூடாது என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இரண்டு நாள்களுக்கு முன்னர் கடிதம் எழுதியிருந்தார்.

ஓ.என்.ஜி.சி குழாய்
ஓ.என்.ஜி.சி குழாய்
'தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்ட அனுமதியை தமிழக அரசு வழங்காது!'- முதல்வர் ஸ்டாலின்.#NowAtVikatan

இந்நிலையில், தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தில் 10 ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்காக சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓ.என்.ஜி.சி நிறுவனம், ஜூன் மாதம் 15-ம் தேதி தமிழ்நாடு மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்துக்கு கடிதம் எழுதியுள்ளது. இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தங்கள் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து பூவுலகின் நண்பர்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ``L-1 PML என்னும் 948.16 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட அரியலூர் மற்றும் கடலூர் மாவட்டத்தின் சில பகுதிகளை உள்ளடக்கிய மண்டலத்தில் ஹைட்ரோகார்பன் வளங்களை எடுப்பதற்காக 2004-ம் ஆண்டு ஓ.என்.ஜி.சி நிறுவனம் உரிமம் பெற்றது. இந்தப் பகுதியில் அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டாம் என்ற ஊரின் சுற்றுவட்டாரப் பகுதியில் 10 ஆய்வுக் கிணறுகளையும் கடலூர் மாவட்டத்தின் நெய்வேலி சுற்று வட்டாரப் பகுதியில் 5 ஆய்வுக் கிணறுகளையும் அமைப்பதற்கு ஓ.என்.ஜி.சி நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதில் முதல் கட்டமாக அரியலூர் மாவட்டத்தில் 10 ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்கான சுற்றுச்சூழல் அனுமதி கோரி ஓ.என்.ஜி.சி நிறுவனம் தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு ஆணையத்திடம் விண்ணப்பித்துள்ளது. கடந்த ஜூன் 13-ம் தேதி ஹைட்ரோகார்பன் திட்டங்கள் குறித்து தமிழ்நாடு முதல்வர் இந்திய பிரதமருக்கு எழுதிய கடிதம் மூலம், தமிழ்நாட்டில் ஹைட்ரோகார்பன் ஆய்வு மற்றும் உற்பத்தி செய்யத் தேவைப்படும் அனுமதிகளை தமிழ்நாடு அரசு ஒருபோதும் வழங்காது எனத் தெரிவித்துள்ளபோது அதைக் கொஞ்சம் கூட மதிக்காமல் இரண்டே நாளில் ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகளுக்கு இந்த நிறுவனம் சுற்றுச்சூழல் அனுமதி கோரியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

ஓ.என்.ஜி.சி பணிகள்
ஓ.என்.ஜி.சி பணிகள்

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறையின் கீழ் இயங்கும் மாநில சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையம் உடனடியாக ஓ.என்.ஜி.சி அளித்துள்ள இந்த விண்ணப்பத்தை நிராகரிக்குமாறு உத்தரவிட வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சரை பூவுலகின் நண்பர்கள் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்" என்று கூறியுள்ளனர்.

இப்போது அரியலூரில் ஹைட்ரோகார்பன் ஆய்வுக் கிணறுகள் அமைப்பதற்காக அனுமதி கேட்டிருக்கும் பகுதி, பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் கீழ் வரவில்லை. 2020-ம் ஆண்டு பிப்ரவரி மாதம், தமிழக அரசு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் 8 மாவட்டங்களை உள்ளடக்கியதாக இருக்குமென்று கூறியது. ஆனால், அது நடக்கவில்லை. இந்நிலையில், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, கரூர், அரியலூர் ஆகிய 8 மாவட்டங்களையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்குள் கொண்டு வர வேண்டுமென்று மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பு மாநில அரசிடம் கோரிக்கை வைத்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்துப் பேசிய மீத்தேன் எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் செயராமன், ``அரியலூர் மாவட்டத்தில் 10 ஆய்வுக் கிணறுகளை அமைப்பதற்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் மதிப்பீட்டு ஆணையத்திடம் ஓ.என்.ஜி.சி அனுமதி கேட்டுள்ளது. இது மொத்தம் 15 கிணறுகளுக்கான திட்டம். பாதிப்புகளை முன்னமே உணர்ந்ததால்தான் மக்கள் இதை எதிர்க்கிறார்கள். கடந்த 10-ம் தேதியன்று கண்டுபிடிக்கப்பட்ட சிறிய எண்ணெய் வயல்கள் என்ற பெயரில், புதுக்கோட்டையில் வடதெரு என்ற கிராமப் பகுதியை உள்ளடக்கி, 463 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் ஹைட்ரோகார்பன் கிணறுகள் அமைப்பதற்கான சர்வதேச ஏலத்துக்கு அழைப்பு விடுத்தது பெட்ரோலிய துறையின் ஹைட்ரோகார்பன் இயக்குநரகம்.

வயல்
வயல்

அதை எதிர்த்து கண்டனம் தெரிவித்தபோது, இதையெல்லாம் அனுமதிக்க மாட்டோம் என்று தமிழ்நாடு முதலமைச்சர் தெளிவாகச் சொன்னதோடு, ஒன்றிய அரசுக்கு இதுகுறித்து கடிதமும் எழுதினார். இந்திய அரசே அனுமதித்தாலும், தமிழ்நாடு அரசு இந்தத் திட்டத்துக்கு அனுமதி வழங்காது என்று தெளிவாகச் சொல்லியிருந்தார்கள். இது நடந்து முழுதாக மூன்று நாள்கள் கூட ஆகவில்லை. அதற்குள் அனுமதி கேட்டு விண்ணப்பிக்கிறார்கள். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டம் 2020-ம் ஆண்டு வந்தபோது, நாகை, திருவாரூர், தஞ்சை, கடலூரில் 5 வட்டங்கள் மற்றும் புதுக்கோட்டையில் 5 வட்டங்கள் அதன் கீழ் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் கீழ் வந்தன. அதில், வடதெரு பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தினுள் வருகிறது.

ஆனால், இப்போது அரியலூரில் அனுமதி கேட்டிருக்கும் பகுதி பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தின் கீழ் வரவில்லை. முன்னரே கோரப்பட்டிருப்பதைப்போல், 8 மாவட்டங்களை பாதுகாக்க வேளாண் மண்டலம் என்ற வரம்புக்குள் கொண்டு வர வேண்டும். மேலும், தமிழ்நாடு முழுவதும் எண்ணெய் கிணறுகளுக்கு அனுமதி தர மாட்டோம் என்ற மாநில அரசின் நிலைப்பாட்டில் உறுதியாக இருக்க வேண்டும். இவைபோக, பழைய எண்ணெய்க் கிணறுகளை காவிரிப் படுகை பகுதியிலிருந்து நீக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு தெரிந்துமேகூட, ஓ.என்.ஜி.சி இத்தகைய விண்ணப்பங்களைக் கொடுப்பது, சீண்டிப் பார்ப்பது போலவே உள்ளது. மாநில அரசு, அமைச்சரவையைக் கூட்டி, எண்ணெய் எரிவாயுத் திட்டங்களை தமிழகத்தில் அனுமதிப்பதில்லை என்று கொள்கை முடிவு எடுத்து அறிவிக்க வேண்டும். அதுதான் நிரந்தரப் பாதுகாப்பு" என்று கூறினார்.

Farmer (Representational Image)
Farmer (Representational Image)
AP Photo / Rajesh Kumar Singh

தமிழ்நாட்டு மக்கள் எண்ணெய் எரிவாயு கிணறுகள் அமைக்கப்படுவதைக் கண்டித்து பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார்கள். முந்தைய ஆட்சியின்போது, தி.மு.க ஆட்சிக்கு வந்தால் ஹைட்ரோகார்பன் திட்டங்களை தமிழ்நாட்டுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளிக்கப்பட்டது. அந்த வாக்குறுதியை மேலும் உறுதிப்படுத்தும் வகையில், மாநில அரசு காவிரிப் படுகையில் இருக்கும் தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, கடலூர், திருச்சி, கரூர், அரியலூர் ஆகிய 8 மாவட்டங்களையும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்துக்குள் கொண்டுவந்து, காவிரிப் படுகையைச் சார்ந்திருக்கும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு