Published:Updated:

`கால்நடை மருத்துவர் இல்லை; 3 நாள்களாகக் கிடந்த யானை சடலம்!' - நீலகிரி அவலம்

யானை
யானை

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன கால்நடை மருத்துவர்கள் இல்லாத நிலையில் காயமடையும் வன விலங்குகளுக்கு சிகிச்சை அளிப்பதிலும் இறந்தவற்றை பிரேதப் பரிசோதனை செய்ய முடியாத அவலமும் நீடிக்கிறது.

சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரியில் முக்குருத்தி தேசியப் பூங்கா, முதுமலை புலிகள் காப்பகம் , நீலகிரி வனக்கோட்டம் என வனங்கள் நிறைந்த பகுதியாக உள்ளது.

மூன்று மாநில எல்லையோரப் பகுதியில் அமைந்துள்ள முதுமலை புலிகள் காப்பகம் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்டு 688 சதுர கி.மீ. பரப்பளவில் பரந்துவிரிந்துள்ளது. இந்தக் காப்பகத்தில் ஒரு கள இயக்குநர், 3 இணை இயக்குநர், 10-க்கும் அதிகமான வனச்சரகர்கள், வேட்டை தடுப்புக் காவலர்கள், தீ தடுப்புக் காவலர்கள் என நூற்றுக்கும் அதிகமான வனத்துறை ஊழியர்கள் பணியில் உள்ளனர். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக வன கால்நடை மருத்துவர் பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது.

முதுமலை புலிகள் காப்பகம்
முதுமலை புலிகள் காப்பகம்

இங்கு புலி, யானை, சிறுத்தை, காட்டுமாடு, கரடி, மான்கள் உள்ளிட்ட பல்வேறு வன விலங்குகள் உள்ளன. இந்த வனவிலங்குகளுக்குக் காயம் ஏற்பட்டால் அவற்றுக்கு சிகிச்சை அளிக்கவும், வனங்களில் இறக்கும் புலி, யானை உள்ளிட்ட வன விலங்குகளைப் பிரேதப் பரிசோதனை செய்யவும் மற்றும் பல வனவிலங்கு சிகிச்சைகள் வன கால்நடை மருத்துவரின் பணியாக உள்ளது.

70 வனத்துறை ஊழியர்கள், 2 கும்கிகள்... அரிசி ராஜா யானை பிடிக்கப்பட்ட திக்திக் நிமிடங்கள்! #PhotoAlbum

இந்த நிலையில் முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்த வன கால்நடை மருத்துவர் கடந்த இரு ஆண்டுகளுக்கு முன்பு துறை மாறுதலாகிச் சென்றார். அது முதல் தற்போதுவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக முதுமலையில் வன கால்நடை மருத்துவர் பணியிடம் காலியாக உள்ளது.

நிரந்தர மருத்துவர் இல்லாத நிலையில் அவ்வப்போது காயமடைந்த விலங்குகளுக்கு சிகிச்சை அளிக்க, இறந்த விலங்குகளைப் பிரேதப் பரிசோதனை செய்ய கூடலூர் அல்லது ஊட்டி கால்நடைத்துறையில் பணியாற்றக் கூடிய மருத்துவர்கள் வந்து செல்கின்றனர்.

யானை
யானை

இந்த நிலையில், கடந்த 25-ம் தேதியன்று மாலை முதுமலை, தெப்பக்காடு வனச்சரகத்துக்கு உட்பட்ட கர்நாடகா எல்லையை ஒட்டி அமைந்துள்ள தொட்டகட்டி பிரிவு வனப்பகுதியில் வனத்துறை ஊழியர்கள் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுமார் 18 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று, இறந்து கிடப்பதைப் பார்த்து அதிகாரிகளிடம் தெரிவித்தனர். நேற்று முன்தினமே பிரேதப் பரிசோதனை நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கால்நடை மருத்துவர்கள் இல்லாததால் மூன்று நாள்கள் தாமதத்துக்குப் பின் இன்று கால்நடை மருத்துவர்கள் வரவழைக்கப்பட்டு பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது.

மருத்துவர்கள் நியமிக்கப்படாதது குறித்து வனத்துறையினரிடம் கேட்டபோது, ``முதுமலைக்குத் தனியாக வன கால்நடை மருத்துவரை நியமிக்க அரசிடம் பரிந்துரை செய்துள்ளோம். விரைவில் கால்நடை மருத்துவர் நியமிக்கப்படும்" என்றனர்.

Mudumalai Tiger reserve
Mudumalai Tiger reserve

இது குறித்து காட்டுயிர் ஆர்வலர்கள், ``இந்த ஆண் யானை இறந்து 10 நாள்களுக்கும் மேல் ஆகியிருக்கும். கால்நடை மருத்துவர்கள் இல்லாததால் மூன்று நாள் தாமதத்துக்குப்பிறகு இன்று பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முதுமலை புலிகள் காப்பகத்திற்கென நிரந்தரமாக வன கால்நடை மருத்துவர்கள் நியமிக்கப்படாத நிலை நீடித்தால் வன விலங்கு சிகிச்சை, மீட்பு, பிரேதப் பரிசோதனை போன்றவை பாதிக்கும்" என்றனர்.

அடுத்த கட்டுரைக்கு