Published:Updated:

வேடந்தாங்கல் எல்லைக் குறைப்பு விவகாரம்... அரசு சொல்வது சரிதானா?

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் ( Photo: Prasannavathani.D )

1936-ம் ஆண்டு பறவை சரணாலயமாக அறிவிக்கப்பட்ட வேடந்தாங்கல்தான் இந்தியாவிலேயே பறவைகளுக்கென தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்பட்ட முதல் சரணாலயமாகும்.

சில நாள்களுக்கு முன்னர், தமிழகத்தின் புகழ்பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் மொத்தப் பரப்பளவைச் சுருக்கப் போவதாகச் சர்ச்சைகள் கிளம்பின. ஆயிரக்கணக்கான பறவையினங்களின் புகலிடமாக விளங்கும் வேடந்தாங்கல், வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வலசை வருகின்ற பறவைகளின் சொர்க்கபூமியாகத் திகழ்ந்துகொண்டிருக்கிறது. அத்தகைய சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பகுதி, கடந்த நூற்றாண்டில் பறவைகள் சரணாலயமாக அங்கீகாரம் பெற்றது. இன்னும் சொல்லப்போனால் 1936-ம் ஆண்டு பறவை சரணாலயமாக அறிவிக்கப்பட்ட வேடந்தாங்கல்தான் இந்தியாவிலேயே பறவைகளுக்கென தனிப்பட்ட முறையில் அறிவிக்கப்பட்ட முதல் சரணாலயமாகும்.

இத்தகைய சூழலியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஏரியின் மொத்தப் பரப்பளவு 5 கிலோமீட்டருக்கு உள்ளது. இதை 3 கிலோமீட்டராகச் சுருக்குவதற்குத் தமிழக அரசு திட்டமிட்டது. அதைத் தொடர்ந்து தமிழக மக்களும் சூழலியல் ஆர்வலர்களும் கொந்தளித்தனர். அவர்களுடைய கொந்தளிப்பைத் தணிக்க, தமிழக அரசு அந்த முடிவைக் கைவிட்டுவிட்டதாகச் சொன்னாலும் இன்னும் அந்த முடிவு கைவிடப்படவில்லை என்றும் அதற்கான வேலைகள் மறைமுகமாக நடப்பதாகவும் தமிழகச் சூழலியல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். இதுகுறித்து நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் சூழலியல் ஆர்வலர் நித்தியானந்த ஜெயராமன் அதுகுறித்து விரிவாக விளக்கினார்.

``வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் எல்லைகள் மாற்றப்படாது என்று வனத்துறை கூறியிருக்கிறது. ஆனால், தமிழக அரசாங்கம் தேசிய வனவிலங்கு வாரியத்திடம் இதற்காக அளித்திருந்த விண்ணப்பம் இப்போது வரை நிலுவையில்தான் உள்ளது. இதற்கு அனுமதி கொடுத்தால், இப்போது 5 கிலோமீட்டராக உள்ள வேடந்தாங்கல் ஏரியின் எல்லை 3 கிலோமீட்டராகச் சுருங்கிவிடும். இந்தச் செயல், அந்தப் பறவைகள் சரணாலயத்தின் 50 சதுர கிலோமீட்டர் பாதுகாப்பு அரணை அகற்றிவிடும். ஆகவே தமிழக அரசு கோரிய விண்ணப்பத்தைத் திரும்பப் பெறவோ அல்லது தேசிய வனவிலங்கு வாரியம் விண்ணப்பத்தை நிராகரிக்கவோ வேண்டும்" என்றார் அவர்.

வேடந்தாங்கல் ஏரி உட்பட அந்தச் சுற்றுவட்டாரத்தில் மொத்தமாக 80 ஏரிகள் உள்ளன. இந்தப் பகுதியிலுள்ள மரங்கள் கிட்டத்தட்ட ஓராண்டுக்குச் சுமார் 30,000 பறவைகளுக்கு வாழிடம் வழங்குகின்றன. அந்தப் பறவைகள் இனப்பெருக்கம் செய்ய ஏற்ற பாதுகாப்பான இடத்தை அந்த மரங்கள் வழங்குகின்றன. இந்த நீர்நிலைகளும் உத்திரமேரூர், மதுராந்தகம் சுற்றுவட்டாரங்களில் அமைந்துள்ள விவசாய நிலங்களும் இங்கு வருகை தருகின்ற பறவை இனங்களுக்கு உணவு அளிக்கும் நிலப்பரப்பாக உள்ளன. பறவைகளுக்கு வாழ்விடமாக உள்ள இந்த ஒருங்கிணைந்த வேடந்தாங்கல் ஏரி, ஆரோக்கியமான விவசாய நிலப்பரப்பையும் ஈர நிலப்பரப்பையும் ஒருங்கிணைக்கின்றன.

வேடந்தாங்கலில் தன் குஞ்சுகளுக்கு உணவு கொடுக்கும் மஞ்சள் மூக்கு நாரை
வேடந்தாங்கலில் தன் குஞ்சுகளுக்கு உணவு கொடுக்கும் மஞ்சள் மூக்கு நாரை
Photo: Saravanakumar

``இப்போது முன்மொழியப்பட்டுள்ள விலக்கு, வேண்டுமென்றோ அல்லது தற்செயலாகவோ, வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு உட்பட்ட பகுதியில் சட்டத்திற்குப் புறம்பாகச் செயல்படும் சிவப்புப் பட்டியலில் வருகின்ற ஆபத்தான தொழிற்சாலைகளுக்குச் சாதகமான வேலைகளைச் செய்யும். வனவிலங்கு சட்டத்தை மீறிச் செயல்படும் தொழில் நிறுவனங்களை அனுமதித்தமைக்குத் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமும் தமிழ்நாடு வனவிலங்கு வாரியமும் குற்ற உணர்ச்சியில் உள்ளன. இந்த நிலையில், தமிழக மாசுக்கட்டுப்பாடு வாரியம் பெயரிடப்படாத ஒரு மருத்துவத் தொழிற்சாலைக்கு இப்போது அனுமதி அளித்துள்ளது" என்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நித்தியானந்த ஜெயராமன் கூறினார்.

இந்த மருந்து நிறுவனம், அங்குள்ள நீர்நிலைகளையும் நிலத்தடி நீரையும் நாசமாக்குவதாக உள்ளூர் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இதனால், அந்த நீர்நிலைகளைச் சார்ந்துள்ள அவர்கள் பாதிக்கப்படுவது மட்டுமன்றி, ஒவ்வோர் ஆண்டும் பல்லாயிரம் மைல்களைக் கடந்து இந்த நீர்நிலையைத் தேடி வருகின்ற பறவைகளுக்குரிய இயற்கையான உணவு உற்பத்தியும் பெருமளவில் பாதிக்கப்படுகின்றது. இந்தத் தொழிற்சாலை அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றுவதாகக் கூறுகிறது தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம். ஆனால், இந்தத் தொழிற்சாலை உரிய உரிமம் இன்றி ஜூன் 2018 முதல் ஜனவரி 2020 வரையிலான தேதி வரை செயல்பட்டிருப்பதாவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சரணாலயத்தின் எல்லையைக் குறைக்க வேண்டுமென்று முன்மொழியப்பட்ட இந்த விலக்கு, ஐந்து கிலோமீட்டர் சுற்றளவுக்குள் அமைந்துள்ள 80 சதுர கிலோமீட்டர் நிலப்பகுதியில் 50 சதுர கிலோமீட்டர் நிலப்பகுதியை வணிகத்திற்கும் தொழிற்சாலை கட்டுமானங்களுக்காகவும் பயன்படுத்துவதற்காக மாற்றிவிடும் அபாயமுள்ளது. இது அந்நிலத்தில் இயல் சூழலியல் சமநிலையைப் பெரியளவில் சீரழிக்கும் என்று சந்திப்பில் கலந்துகொண்ட பறவை ஆய்வாளர் ஆசாத் ரஹ்மானி, மெட்ராஸ் இயற்கைச் சங்கத்தின் உறுப்பினரான எம்.யுவன் போன்ற நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

``பறவைகள் காப்பிடம் என்பது, பறவையினங்கள் வந்து போகவோ இனப்பெருக்கம் செய்யவோ மட்டுமான இடம் கிடையாது. அது மனிதர்களுடைய வாழ்வியலில் பெரும் பங்கு வகிக்கும் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி. பறவைகள் காப்பிடத்திற்கு அடிப்படையாக இருக்கக்கூடியது நீர்நிலைகளும் அவற்றின் நீர்வளமும். அதற்கு அடுத்தடியாக, அந்த நீர்நிலைகளைச் சார்ந்திருக்கும் பூச்சி, புழு உட்பட்ட பல்வேறு வகையான உயிரினங்கள். அதோடு அப்பகுதியிலுள்ள தாவர வளம், விளை நிலம், பயிர்கள் என்று பல்வகை வளங்களின் கூட்டுதான் பறவைகள் காப்பிடம். இதுபோக பூச்சி வகைகள், வண்ணத்துப்பூச்சிகள், தட்டான் வகைகள் என்று பல்வேறு வகைச் சிற்றுயிர்கள் அங்கு வாழ்கின்றன. பறவைகள் சரணாலயம் என்பது பல உயிரினங்களின் வாழ்வியலுக்குப் பயனளிக்கக்கூடிய பல்லுயிரிய மையம்.

மாங்குயில்
மாங்குயில்
Photo: Saravanakumar

பொருளாதார வளர்ச்சி என்பது அவசியமானதுதான். ஆனால், அப்படிக் கொண்டுவரப்படுகின்ற பொருளாதார வளர்ச்சி யாருக்கானது என்ற கேள்வியும் எழுகின்றது. ஒரு நீர்நிலையை அழித்து வளர்ச்சியை மேற்கொள்ளும்போது, அந்த வளர்ச்சியில் கிடைக்கின்ற பலன்களைவிட, நீர்நிலையைப் பேணுவதன் மூலம் கிடைக்கின்ற வளர்ச்சிதான் நீண்டகாலத்திற்கு உரியதாக இருக்கும். வேடந்தாங்கல் பறவைகள் காப்பிடத்தைச் சுற்றியுள்ள பகுதிகள் ஏற்கெனவே, வீட்டு மனைகளாகவும் தொழில்மயமாக்கலுக்குச் சாதகமாகவும் மாறிக் கொண்டிருக்கின்றன. இது காப்பிட எல்லைக்குள்ளும் நிகழ்ந்தால் அது அப்பகுதியின் இயற்கையான சூழலியல் சமநிலையையே குலைத்துவிடும்" என்று கூறினார் `தமிழகத்தின் பறவைகள் காப்பிடங்கள்' நூலின் ஆசிரியரும் சூழலியல் ஆர்வலருமான ஏ.சண்முகானந்தம்.

பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய மூத்த பறவைகள் ஆய்வாளரும் பாம்பே இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் முன்னாள் இயக்குநருமான முனைவர். ஆசாத் ரஹ்மானி பேசியபோது, ``ஒரு பறவைகள் சரணாலயம் என்றால், அதற்குரிய ஏரியை மட்டுமே பாதுகாக்கக் கூடாது. நீர்நிலைகள் பறவைகளை ஈர்ப்பதற்கான ஓர் அடையாளம் மட்டுமே. அவற்றுக்குரிய வாழிடத்தை அந்த ஏரியைச் சுற்றியுள்ள தாவர வளம், விவசாய நிலங்கள் என்று அனைத்துமே நல்குகின்றன. ஆகவே, பறவைகள் காப்பிடத்தின் நீர்நிலைகள் மட்டுமன்றி, தாவர வளம், ஈரநிலங்கள், விவசாய நிலம் என்று இதர இயற்கை அமைப்புகளையும் இயல்பு மாறாமல் பாதுகாக்க வேண்டியது அவசியம்" என்று கூறினார்.

பறவைகள் சரணாலயம்
பறவைகள் சரணாலயம்
Photo: Ashwin Kumar

கடந்த 17-ம் தேதியன்று, தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியமும் தமிழக வனத்துறையும் இணைந்து வெளியிட்ட செய்திக் குறிப்பில், ``செய்தித்தாள்களில் வரும் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயத்தின் எல்லையைக் குறைக்கும் அறிவிப்பு தவறானது. இப்போது நடந்துகொண்டிருக்கும் பணிகளில் எல்லை நிர்ணயம் செய்ய மாநில அரசுகளுக்கு இந்திய அரசின் வழிகாட்டுதலின்படி, அனைத்துப் பாதுகாக்கப்பட்ட நிலப்பரப்புகளை Core, Buffer, Eco Sensitive Zones என்று வகைப்படுத்தும் செயல்தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது" என்று அறிவித்தது.

சரணாலயங்களுக்கு உட்பட்ட நிலப்பகுதியை மையப்பகுதி (Core), எல்லையோரப் பகுதி (Buffer), சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதி (Eco Sensitive Zones) என்று குறிக்கும்படி, மாநில அரசுகளுக்கு இந்திய அரசு வழிகாட்டுதல் எதுவும் இல்லையென்று பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தனர். 2011-ல் வெளியிடப்பட்ட ஆவணம், சூழல்சார் பகுதிகளை அறிவிக்க வழிகாட்டுதல்களை வகுத்துள்ளது. ஆனால், இத்தகைய சூழல்சார் பகுதிகளைப் பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே குறிக்க வேண்டுமே தவிர உள்ளே அல்ல.

இணைய வழியில் கலந்துகொண்ட சர்வதேச தெற்கு ஆசிய சதுப்பு நில அமைப்பின் (Wetlands International South Asia) இயக்குநர் முனைவர் ரித்தீஷ் குமார், ஈரநிலங்கள் பாதுகாப்பு மற்றும் மேலாண்மை விதிகள் 2017-ன்படி, மாநில அரசின் ஈரநிலங்களைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பை முன்னிலைப்படுத்தியுள்ளார். அவர் மேலும், ``ஈர நிலங்களில் ஏற்படுத்தப்படும் பாதகமான மாற்றங்களால் அந்தப் பகுதி முழுவதற்குமான சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும்" என்று எச்சரித்தார்.

பல்லுயிரிய வளம்
பல்லுயிரிய வளம்
Photo: Vinoth Chandar

சென்னை காலநிலை நடவடிக்கைக் குழு, தேசிய வனவிலங்கு வாரியத்திடம் தமிழ்நாடு அரசு முன்மொழிந்த வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தின் எல்லையைக் குறைக்கும் விண்ணப்பத்தை நிராகரிக்க வேண்டுமென்று கோரிக்கை வைத்துள்ளது. மேலும் தமிழ்நாடு அரசிடம், சட்டவிரோதமாகச் சரணாலய எல்லைக்குள் வளர்ந்து வருகின்ற தொழில்மயமாக்கல் குறித்து விசாரணை மேற்கொள்ள வேண்டுமென்றும் கோரிக்கை வைத்துள்ளது. தமிழக அரசு இந்தக் கோரிக்கைகளைக் கருத்தில் கொண்டு விண்ணப்பத்தைத் திரும்பப் பெறுவதோடு, சூழலியல் வரலாற்றில் அதிமுக்கியத்துவம் வாய்ந்த, பழைமையான பறவைகள் காப்பிடமாகக் கருதப்படும் வேடந்தாங்கலைப் பாதுகாக்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு