Published:Updated:

`ஊரை விட்டே காலி செய்ய வச்சிடாதீங்க!’ - கலெக்டரிடம் குமுறிய பொதுமக்கள்

எங்கள் பகுதியில் இயங்கும் சாயப்பட்டறைகள் வெளியேற்றும் கழிவுநீரால் பொதுமக்கள் புற்றுநோய், ஆஸ்துமா போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

சாயக்கழிவு நீர்
சாயக்கழிவு நீர் ( ரமேஷ் கந்தசாமி )

ஈரோட்டில் சாய தொழிற்சாலைகள் மற்றும் தோல் தொழிற்சாலைகளால் நீராதாரங்கள் மற்றும் நிலத்தடி நீர் ஆகியவை கடுமையாக மாசடைந்திருக்கின்றன. தோல் மற்றும் சாய தொழிற்சாலைகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர் நேரடியாக நீர் நிலைகளில் கலப்பதுதான் இந்தப் பிரச்னைக்கு முக்கியக் காரணம். இதற்கு ஒரு தீர்வாக, இந்தக் கழிவுநீரை சுத்திரிகரிக்கும் வகையில் `ஒருங்கிணைந்த பொது சுத்திரிகரிப்பு நிலையம்’ அமைக்கப்பட வேண்டுமென்ற கோரிக்கை நீண்ட காலமாக இருந்து வருகிறது. இதற்கான பணிகள் ஈரோடு பவானி பகுதியில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையே, மக்கள் வாழும் பகுதிக்கு அருகே இந்த பொது சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்கக் கூடாது என பொதுமக்கள் ஈரோடு கலெக்டரிடம் மனு அளித்திருக்கின்றனர்.

மனு அளிக்க வந்த பொதுமக்கள்
மனு அளிக்க வந்த பொதுமக்கள்

இதுகுறித்து மனு அளிக்க வந்த ஊர்ப் பொதுமக்களிடம் பேசினோம்.``ஈரோடு மாவட்டம், பவானி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட காடையம்பட்டி, செங்காடு குளத்து தோட்டம், புதுக்காடையம்பட்டி, அரிஜன காலனி பகுதியில் சுமார் 750 குடும்பங்கள் வசித்து வருகிறோம். மேலும், எங்கள் பகுதியிலுள்ள காடையம்பட்டி ஏரிப் பாசனத்தை நம்பி சுமார் 60 ஏக்கரில் பொதுமக்கள் விவசாயம் செய்துவருகின்றனர். எங்கள் பகுதியில் இயங்கும் சாயப்பட்டறைகள் வெளியேற்றும் கழிவுநீரால் பொதுமக்கள் புற்றுநோய், ஆஸ்துமா போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். பொது சுத்திகரிப்பு நிலையம் அமைத்தால், இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என நம்பியிருந்தோம். ஆனால், இப்போது அந்த பொது சுத்திரிகரிப்பு நிலையமே பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது.

சாயப்பட்டறைகள் வெளியேற்றும் கழிவுநீரால் பொதுமக்கள் புற்றுநோய், ஆஸ்துமா போன்ற பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

காடையம்பட்டி - செங்காடு இடையே சில ஏக்கர் விவசாய நிலத்தை வாங்கி இந்த பொது சுத்திரிகரிப்பு நிலையத்தை அமைக்கவிருக்கின்றனர். இந்த இடமானது ஆற்றிலிருந்து 3/4 கி.மீக்குள்ளும், காடையம்பட்டி ஏரியிலிருந்து 200 அடி தூரத்திலும் இருக்கிறது. இந்த பொது சுத்திரிகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டால், எங்கள் பகுதி மேலும் பாதிப்பிற்குள்ளாகும். மக்கள் இந்தப் பகுதியில் வாழும் தன்மையை இழந்து, ஊரை விட்டே காலி செய்து வேறு பகுதிக்குச் செல்ல வேண்டிய சூழல் ஏற்படும். எனவே, பொதுமக்களுக்கு பாதிப்பில்லாமல், ஆற்றிலிருந்து 5 கி.மீ தள்ளி இந்தப் பொது சுத்திகரிப்பு நிலையத்தை அமைக்க வேண்டும்” என்றனர்.