Published:Updated:

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி; இந்தியாவுக்கே வழிகாட்டுமா தமிழகம்?

தற்போது, தமிழ்நாட்டின் மொத்த மின் கட்டமைப்பில், 16 சதவிகிதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பங்கு வகிக்கிறது. மாநில முழுக்கவுள்ள அரசு மற்றும் தனியார் அனைத்தும் சேர்த்துள்ள மொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கட்டமைப்பின் அளவு 42 சதவிகிதம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

15 ஜிகாவாட் அளவுக்கு, புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை தமிழ்நாடு மேற்கொண்டு வருவதம் மூலம், தன்னிடம் 100 சதவிகிதம் நிலைத்தன்மை வாய்ந்த ஆற்றல் மாற்றத்துக்குரிய வாய்ப்பு இருப்பதை தமிழ்நாடு உறுதி செய்துள்ளது. அந்த வாய்ப்புகள் என்னென்ன, செய்ய வேண்டியது என்ன என்பவை குறித்து, க்ளைமேட் டிரெண்ட்ஸ், பூவுலகின் நண்பர்கள் ஆகிய அமைப்புகள் இணைந்து நேற்று (04.10.2021) ஒரு கலந்துரையாடல் கூட்டத்தை நடத்தினர். துறைவாரியாக, காலநிலை மாற்ற அடிப்படையிலான அரசியல் பார்வையோடு கூடிய, ஆற்றல் மாற்றத்துக்கான வழிகள் இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டன.

இதில், மாநில ஆற்றல் தலைமைச் செயலாளர் டி.பி.யாதவ் ஐ.ஏ.எஸ், மாநில திட்டக்குழு உறுப்பினரும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜா, ஆற்றல் பொருளாதாரம் மற்றும் நிதிப் பகுப்பாய்வு நிறுவனத்தைச் (IEEFA) சேர்ந்த, ஆற்றல் பொருளாதார நிபுணர், காஷிஷ் ஷா ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினர்.

Solar Energy
Solar Energy
Pixabay

கூட்டத்தின்போது பேசிய மாநில ஆற்றல் தலைமைச் செயலாளார் டி.பி.யாதவ் ஐ.ஏ.எஸ், நிலக்கரி சார்ந்த ஆற்றல் உற்பத்தியை முற்றிலுமாகக் குறைத்துவிட்டு, புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாற வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்தார். மேலும், ``பசுமை ஆற்றல் மாற்றத்தை நோக்கிய தமிழகத்தின் பாதையில், பழைய அனல்மின் நிலையங்களை மூடுவது அவசியம். அதோடு, புதுப்பிக்கத்தக்க ஆற்றலை உற்பத்தி செய்தல், வாங்குதல் ஆகியவற்றுக்கான செயல்முறைகளை நாம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று கூறினார்.

தமிழ்நாட்டின் இப்போதைய மின் உற்பத்தி நிலை மற்றும் அதன் எதிர்காலம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. தற்போது, தமிழ்நாட்டின் மொத்த மின் கட்டமைப்பில், 16 சதவிகிதம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பங்கு வகிக்கிறது. மாநில முழுக்கவுள்ள அரசு மற்றும் தனியார் அனைத்தும் சேர்த்துள்ள மொத்த புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கட்டமைப்பின் அளவு 42 சதவிகிதம்.

இன்றளவும் மாநிலத்தின் மொத்த ஆற்றல் உற்பத்தியில் நிலக்கரி ஆதாரத்தில் உற்பத்தி செய்யப்படுவது 53 சதவிகிதம் பங்கு வகிக்கிறது. நிலக்கரியே இன்றும் நமக்கான முதன்மையான மின் உற்பத்தி ஆதாரமாகச் செயல்படுகிறது. ஆற்றல் பொருளாதாரம் மற்றும் நிதிப் பகுப்பாய்வு நிறுவனத்தின்படி, தமிழ்நாட்டில் இப்போது இருப்பதோடு கூடுதலாக, 32 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக் கட்டமைப்பை உருவாக்க முடியும். மேலும், அடுத்து வரும் பத்தாண்டுகளில் அதிகரிக்கும் தேவைக்கு ஏற்ப அதிகரிக்கலாம். ஆற்றல் நிறுவனத்தின் (IEEFA) ஆற்றல் பொருளாதார நிபுணர், காஷிஷ் ஷா பேசியபோது, 25 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையான 4.2 ஜிகாவாட் அளவிலான நிலக்கரி சார் மின் உற்பத்தி நிலையங்களை மூட மாநில அரசு திட்டமிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

காற்றாலை 
மின் உற்பத்தி
காற்றாலை மின் உற்பத்தி
Pixabay

அதோடு, தமிழ்நாடு மின் வாரியம், மின்சாரத்தை வாங்குவதற்கு ஆகும் அதிகப்படியான செலவுகளால் நஷ்டத்தை எதிர்கொண்டு வருகிறது. அந்த நஷ்டத்தைச் சரிகட்ட, 3.1 ஜிகாவாட் பழைய அனல்மின் நிலையங்களை மூடுவதோடு, ஆரம்பக்கட்டத்திலுள்ள 3.5 ஜிகாவாட் அளவிலான புதிய அனல்மின் நிலையக் கட்டுமானங்களுக்குச் செய்யும் செலவுகளை நிறுத்துவிட்டு, எதிர்காலத் தேவையைப் பூர்த்தி செய்ய மலிவான புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறுவதன் மூலம் 35,000 கோடி ரூபாயை மிச்சப்படுத்தி, அந்த நஷ்டத்தைச் சரி செய்யலாம் என்றும் இந்தக் கூட்டத்தில் பேசிய வல்லுநர்கள் தெரிவித்தனர்.

பசுமை ஆற்றல் மாற்றத்தில் தமிழகத்தின் தலைமை குறித்துப் பேசிய காஷிஷ் ஷா, ``காற்றாலை மின் உற்பத்தியில் தமிழ்நாடு நீண்டகாலமாக முன்னணியில் இருந்து வருகிறது. அதோடு, அவற்றை மேலும் நவீனமயப்படுத்த ஏதுவான திறனும் தமிழகத்திற்கு இருக்கிறது. அதையுணர்ந்து முன்வருவதன் மூலம், குஜராத், கர்நாடகா, மகாராஷ்டிரா, ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு தமிழ்நாடு வழிகாட்ட வேண்டும்" என்றும் கூறினார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாநிலங்களுக்கு இடையிலான நிகர பூஜ்ஜிய உமிழ்வுக்கான வியூகத்தை வகுத்துக் கொடுப்பதில் பங்கு வகிக்கும், டி.பி.யாதவ் ஐ.ஏ.எஸ், ``புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியில் தமிழ்நாட்டுக்குள்ள உள்ளாற்றல், ஆற்றல் உற்பத்தியிலுள்ள உபரியை சத்தீஸ்கர், ஜார்க்கண்ட் போன்ற மாநிலங்களின் அன்றாட ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில் நம்முடைய உபரி புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை விநியோகிக்கவும் வழிவகுக்கும். இது தமிழகத்தை நிகர பூஜ்ஜிய இலக்கை அடைவதை நோக்கிய பாதையிலும் கொண்டுசெல்லும்" என்று கூறினார்.

அனல்மின் நிலையம்
அனல்மின் நிலையம்
AP Photo/Martin Meissner, File
``சூரிய மின் உற்பத்தியில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கே முன்னோடி ஆக முடியும்!" - விளக்கும் நிபுணர்

நிலக்கரி மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு இடையிலான செலவு குறித்துப் பகுப்பாய்வு செய்த டி.பி.யாதவ், ஆற்றல் சேமிப்பிலும் அதிகமாக மாற்று ஆற்றலின் மூலம் மிச்சப்படுத்தலாம் என்று கூறுகிறார். அவர், ``புதைபடிம எரிபொருள் பயன்பாட்டில் உற்பத்தி செய்யப்படும் ஆற்றல் மூலம் ஏற்படும் உடல்நல பாதிப்புகள், சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஆகியவற்றுக்கு ஆகும் செலவு போன்றவற்றையும் கணக்கிட்டுப் பார்க்கையில், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி மற்றும் சேமிப்பு இரண்டுக்குமான செலவு மலிவாகவே தெரிகிறது" என்று கூறுகிறார்.

இவற்றோடு, தமிழ்நாட்டின் சூரிய மின்சாரம் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வாய்ப்புகளை இன்னும் வலுப்படுத்த வேண்டிய தேவை உள்ளது குறித்தும் இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது. சூரிய மின்சாரம் மற்றும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கொள்கைகள் குறித்துப் பேசிய மாநில திட்டக்குழு உறுப்பினரும் தி.மு.க சட்டமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பி.ராஜா, ``கடந்த சில மாதங்களில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. உற்பத்தி, சூரிய மின்சாரத்தின் மூலம் சார்ஜ் செய்துகொள்வதற்கான வசதிகள் ஆகியவற்றின் தேவையை, அதிகரித்து வரும் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி அதிகப்படுத்தியுள்ளது" என்றவர் கூடுதலாக, ``காலநிலை மாற்றம் குறித்தும் நிலைத்தன்மை வாய்ந்த ஆற்றல் மீதான உலகக் கவனம் குறித்தும் அரசு மிகவும் கவனமாக உள்ளது. எதிர்காலத்தில் மிகப்பெரிய ஆற்றல் நுகர்வாளராக எலெக்ட்ரிக் வாகனங்கள் இருக்கும். அந்த ஆற்றல் சூரிய மின்சாரமாக இருக்க வேண்டியது அவசியம். ஆகவே, சூரிய மின் உற்பத்தியை 4,000 மெகாவாட்டாக உயர்த்துவதோடு, அடுத்த 10 ஆண்டுகளில் 20,000 மெகாவாட்டாகவும் அரசு உயர்த்தும்" என்று கூறினார்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்
மேற்கூரை சூரிய மின் உற்பத்தி: இலக்கு 40GW, அடைந்தது வெறும் 4.4GW; ஏன் திணறுகிறது இந்தியா?

மேலும், ``இந்தியா நிகர பூஜ்ஜிய அறிவிப்பை வெளியிடுகிறதோ இல்லையோ, இந்திய மாநிலங்கள் நிகர பூஜ்ஜிய உமிழ்வை அடைவதற்கான காலநிலை இலக்குகளை நோக்கிச் செயல்படத் தொடங்கியுள்ளன. குஜராத், மகாராஷ்டிரா, பீகார், லடாக் போன்ற பகுதிகளில், துறைவாரியான நிகர பூஜ்ஜிய அணுகுமுறையைக் காணமுடிகிறது. மாநிலங்களின் செயல்பாடுகளே இந்தியாவின் தூய ஆற்றல் திட்டத்தில் 2030-ம் ஆண்டுக்கு 450 ஜிகாவாட் இலக்கை அடைய வழிவகுக்கும். அதற்கான தொடக்கமாக, புதிய நிலக்கரி அனல்மின் நிலையங்களை அனுமதிக்க மாட்டோம் என்று குஜராத், மகாராஷ்டிரா, சத்தீஸ்கர், கர்நாடகா ஆகிய மாநிலங்கள் அறிவித்துவிட்டன. தங்கள் ஆற்றல் தேவையைப் பூர்த்தி செய்ய புதுப்பிக்கத்தக்க ஆற்றலை நோக்கிச் செல்லத் தொடங்கிவிட்டன" என்று வல்லுநர்கள் கூறினார்கள்.

இறுதியாக, ``நம்முடைய போட்டி, தரம் அனைத்தும் ஐரோப்பிய யூனியனுக்கு நிகரானதாக இயன்ற அளவுக்கு இருக்க வேண்டும். ஆகவே, மற்ற இந்திய மாநிலங்களைவிட தமிழ்நாடு தனித்த போட்டியில் இருக்கிறது. அதற்கேற்ப, மக்கள் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு எளிதில் மாறும் வகையிலான வசதிகளைச் செய்யத் திட்டமிட்டு வருகிறோம்" என்றும் கூறினர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு