Published:Updated:

ஆதாரத்துடன் அம்பலம்... மெட்ரோ வாட்டரின் தண்ணீர் கொள்ளை..! #VikatanExclusive

மெட்ரோ வாட்டரின் தண்ணீர் கொள்ளை
மெட்ரோ வாட்டரின் தண்ணீர் கொள்ளை

காலி குடங்களுடன், தண்ணீர் லாரி வரும் என்ற கனவுடன் இரவில்கூட கண்விழித்துக் காத்திருப்போர் பலர் இருக்க, அவர்களுக்குச் செல்லவேண்டிய தண்ணீர், தனியாருக்குச் சென்றுகொண்டிருக்கின்றது என்றால் இந்த அரசு யாருக்கானது..?

'சென்னையும், தண்ணீர்ப் பஞ்சமும்' ஒட்டிப்பிறந்த இரட்டைக் குழந்தைகள் போல. வெள்ளமும், வறட்சியும் சென்னைக்குப் புதிதல்ல. எனினும் இதுவரை கண்டிராத அளவிற்கு இந்த வருடம் சென்னை, மிகக் கடுமையான தண்ணீர்த் தட்டுப்பாட்டைச் சந்தித்துக் கொண்டிருக்கிறது. சென்னையின் ஒருநாள் குடிநீர்த் தேவை 85 கோடி லிட்டர். ஆனால், தற்போது அரசின் சார்பில் வழங்கப்பட்டு வருவது 50 - 55 கோடி லிட்டர் குடிநீர் மட்டுமே.

சென்னையின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்யும் பூண்டி, சோழவரம், செம்பரம்பாக்கம், புழல் ஆகிய நான்கு ஏரிகளுமே வறண்டு போய் பல நாள்களாகி விட்டன.

இதனால், சென்னையின் தண்ணீர்த் தட்டுப்பாட்டைப் போக்க வீராணம் ஏரியிலிருந்தது சென்னைக்கு ராட்சத குழாய் மூலம் நீர் கொண்டுவரப்படுகிறது. கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் வாயிலாக மீஞ்சூர் மற்றும் நெம்மேலியில் அமைந்துள்ள கடல் நீர் சுத்திகரிப்பு நிலையங்களிலிருந்து குடிநீர் கிடைக்கிறது. சிக்கராயபுரம் உட்பட 22 குவாரிகளிலிருந்து தண்ணீர் எடுக்கப்பட்டு, அதைச் சுத்திகரித்தும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் ஜோலார் பேட்டையிலிருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டுவரப்படுகிறது. சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள 316 விவசாயக் கிணறுகளில் இருந்தும் தண்ணீர் எடுக்கப்பட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னையின் தண்ணீர்த் தட்டுப்பாட்டைப் போக்க, அரசு இந்தளவுக்கு நடவடிக்கை எடுத்தபோதிலும் தண்ணீர் கிடைக்காமல் மக்கள் தவிப்பது ஏன் என்று விகடன் சார்பில் கள ஆய்வு மேற்கொண்டோம். 424 சதுர கி.மீ.பரப்பளவு கொண்ட பெருநகர சென்னை மாநகராட்சியில் 200 வார்டுகள், 15 மண்டலங்கள் இருக்கின்றன. சென்னை முழுவதும் தண்ணீர்த் தட்டுப்பாடு அதிகமாகக் காணப்பட்டாலும், வள்ளுவர் கோட்டம், தேனாம்பேட்டை, ராயப்பேட்டை, ஆழ்வார்பேட்டை, நுங்கம்பாக்கம், ஆயிரம்விளக்கு, மைலாப்பூர், திருவல்லிக்கேணி, சாந்தோம், சேப்பாக்கம், ராஜா அண்ணாமலை புரம் ஆகிய பகுதிகள் அடங்கிய ஒன்பதாவது மண்டலம்தான் மிக அதிகளவு தண்ணீர்த் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளது

ஒன்பதாவது மண்டல நீர் நிரப்பும் நிலையம்
ஒன்பதாவது மண்டல நீர் நிரப்பும் நிலையம்

இந்த மண்டலத்தில் மட்டும் பல்வேறு அளவுகளைக் கொண்ட நூற்றுக்கும் அதிகமான டேங்கர் லாரிகள், நாள் ஒன்றுக்கு 1,000 முதல் 1,100 நடைகளுக்கு மேல் தண்ணீர் விநியோகம் செய்து வருகின்றன. இதில், இணையத்தில் பதிவு செய்து பணம் கட்டி தண்ணீர் வாங்குபவர்களுக்கு சுமார் 300 - 400 நடைகள் அனுப்பப்படுகின்றன. மேலும், இணையத்தில் பதிவு செய்து தண்ணீருக்காகக் காத்திருப்போர் எண்ணிக்கை 8,000-க்கும் அதிகம் என்ற தகவலும் நமக்குக் கிடைத்துள்ளது.

இவ்வளவு லாரிகள், இதை நடை தண்ணீரை விநியோகம் செய்கிறதே இன்னமும் ஏன் தண்ணீர்த் தட்டுப்பாடு கொஞ்சமும் குறையவில்லை என்று களப்பணியைத் தீவிரப்படுத்தினோம். அப்போது நமக்குக் கிடைத்த செய்தி நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஸ்டார் ஹோட்டல்களுக்கு, மெட்ரோ தண்ணீரை விநியோகம் செய்யும் தனியார் லாரி
ஸ்டார் ஹோட்டல்களுக்கு, மெட்ரோ தண்ணீரை விநியோகம் செய்யும் தனியார் லாரி

அதிகாலையிலிருந்து அரசு ஒப்பந்த லாரிகள் பரபரப்பாய்க் காட்சியளிக்கும் இந்த ஒன்பதாவது மண்டலம், இரவு பத்து மணிக்கு மேல் வேறோர் அவதாரம் எடுக்கிறது. தனியார் லாரிகள் தாராளமாக உள்ளே நுழைகின்றன. லாரிகளில் தண்ணீரை நிரப்பும் அந்த லாரிகள், ஸ்டார் ஹோட்டல்களுக்கும், வணிக வளாகங்களுக்கும், ஷாப்பிங் மால்களுக்கும், பெரிய பெரிய குடியிருப்புகளுக்கும் அந்தத் தண்ணீரை விநியோகம் செய்கின்றன.

இதை நிரூபிக்க விகடன் ஸ்டிங் ஆபரேஷன் குழுவினர் ஒன்பதாவது மண்டல நீர் நிரப்பும் நிலையத்திலிருந்து அந்த லாரி பயணம் செய்யும் திசையெங்கும் உடன் சென்று ஸ்டார் ஹோட்டல்கள், வணிக வளாகங்கள், ஷாப்பிங் மால்கள் மற்றும் பெரிய அடுக்குமாடி குடியிருப்புகளுக்குத் தண்ணீரை முறைகேடாக விநியோகம் செய்வதை வீடியோவாக பதிவு செய்துள்ளனர். அதுவும் ஒருமுறை மட்டுமல்ல; ஒரே இடத்துக்கு ஒரே நாளில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை, அந்த மண்டலத்திலிருந்து லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டிருக்கிறது.

மெட்ரோ லாரிகளில் மீதமுள்ள  நீரை பிடிப்பவர்கள்
மெட்ரோ லாரிகளில் மீதமுள்ள நீரை பிடிப்பவர்கள்

அதோடு, இரவு நேரங்களில் நிறுத்தப்பட்டிருக்கும் மெட்ரோ லாரிகளில் மீதமுள்ள நீரை குடம், குடமாகப் பிடித்து அதை ஒரு குடம் ஐந்து ரூபாய்க்கு விற்கும் கூட்டமும் உண்டு. நிறுத்தப்பட்டுள்ள லாரி தண்ணீரிலேயே குளித்து, துணி துவைக்கும் கூட்டமும் உண்டு.

இப்படி தண்ணீர் தாராளமாகத் தனியாருக்கு விற்கப்படுகிறதே, என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பதில் வாங்கப் பலமுறை பலவழிகளில் முயற்சி செய்தோம். ஆனால், மௌனம் மட்டுமே நமக்குப் பதிலாகக் கிடைத்தது. கடைசியில் அதிகாரிகளுடன் பேசியதை ரகசிய கேமரா மூலம் படமாக்கினோம். அதில் அவர் கொடுத்த பதில் 'அடடே அப்படியா' என்று நம்மை வியப்பில் ஆழ்த்தும். இரவில் எந்தத் தனியார் நிறுவனங்களுக்கும் இங்கிருந்து தண்ணீர் செல்வது இல்லை என்றும். குடியிருப்புகளுக்கும் பல்க் கஸ்டமர்களுக்கும் மட்டுமே நீர் செல்கிறது என்றும் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஒன்பதாவது மண்டல நீர் நிரப்பும் நிலைய அதிகாரி
ஒன்பதாவது மண்டல நீர் நிரப்பும் நிலைய அதிகாரி

'தண்ணீர் தனியாருக்குச் செல்கிறது' என்று நாம் எடுத்த காணொலியைப் போட்டு காண்பித்து பதில் கேட்டோம். "இல்லங்க இது வேற ஏதாவது லாரியா இருக்கும்" என்று என்னென்னவோ பதில் சொல்லி மழுப்பினார். "உங்களுக்கு இன்னும் ஏதாச்சும் விவரம் வேணும்னா, எங்க மேலதிகாரியைக் கேட்டுக்கோங்க, நாங்க இதைப் பத்தி பேசக்கூடாது" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பினார்.

'மடியில் கனமில்லை என்றால், வழியில் பயமெதற்கு...? இந்த நிலைய அதிகாரியே பதில் சொல்லத் தயங்குவது ஏன், இவருக்கே தெரியாமல்தான் இரவில் லாரிகள் தண்ணீர் பிடித்துச் செல்கின்றனவா என்ன..?' பகல் நேரங்களில் ஒரு லாரி தண்ணீர் பிடித்துச் செல்ல, நீர் நிலையம் உள்ளே நுழைந்ததும், பதிவு செய்து டோக்கன் போட்டுவிட்டு, நீர் நிரப்பிக் கொண்டு வெளியே செல்கையில் அந்த டோக்கனைக் கொடுத்துவிட்டுத்தான் செல்லவேண்டும். ஆனால், இதுபோன்ற எந்த நிகழ்வுமே இரவில் நடப்பதாகத் தெரியவில்லை..?

ஒன்பதாவது மண்டல நீர் நிரப்பும் நிலையத்தில் நீர் நிரப்பும் தனியார் லாரி
ஒன்பதாவது மண்டல நீர் நிரப்பும் நிலையத்தில் நீர் நிரப்பும் தனியார் லாரி

காலி குடங்களுடன், தண்ணீர் லாரி வரும் என்ற கனவுடன் இரவில்கூட கண்விழித்துக் காத்திருப்போர் பலர் இருக்க, அவர்களுக்குச் செல்லவேண்டிய தண்ணீர், தனியாருக்குச் சென்று கொண்டிருக்கின்றது என்றால் இந்த அரசு யாருக்கானது..? ஆயிரக்கணக்கான லாரிகள் சென்னை முழுவதும் தண்ணீர் கொண்டு செல்கின்றன. ஆனால், அந்தத் தண்ணீர் யாருக்குச் செல்கிறது? சாமான்யர்களுக்குத்தான் செல்கிறதா, இல்லை அரசுக்கும், அதிகாரிகளுக்கும் வேண்டியவர்களுக்கும், பணம் படைத்தவர்களுக்கும்தான் செல்கிறதா?

சென்னையில், தண்ணீர் இல்லாமல் எத்தனையோ சிறிய உணவகங்கள், விடுதிகள், மேன்ஷன்கள் மூடப்பட்டு விட்டன. ஏன் எத்தனையோ வீடுகள் காலி செய்யப்பட்டுள்ளன. ஆனால், இதுநாள்வரை தண்ணீர் இல்லாமல் எந்த ஸ்டார் ஹோட்டல்களோ, ஷாப்பிங் மால்களோ மூடியதாக நமக்குத் தகவல் இல்லை. பணம் படைத்தவர்கள் தனியாரிடம் இருந்துகூட தண்ணீர் வாங்கிக்கொள்ள முடியும். ஆனால், சாமான்ய மக்கள் தண்ணீர் கிடைக்காவிட்டால் என்ன செய்ய முடியும்?

ஸ்டார் ஹோட்டல்களுக்கு, மெட்ரோ தண்ணீரை விநியோகம் செய்யும் தனியார் லாரி
ஸ்டார் ஹோட்டல்களுக்கு, மெட்ரோ தண்ணீரை விநியோகம் செய்யும் தனியார் லாரி

லாரிகள் மூலமாகத் தண்ணீர் விநியோகிப்பதில் எந்தத் தவறும் நடைபெறவில்லை, எல்லாம் விதிமுறைகளின்படியே நடைபெறுகிறது என்று அரசுத் தரப்பு பதில் சொல்லத் தயாரானால். அவர்களின் பதிலையும் பதிவிட நாங்கள் தயாராக உள்ளோம்...

அடுத்த கட்டுரைக்கு