Published:Updated:

`இந்த ஆண்டுக்குள் எட்டு வழிச் சாலை பணிகள் துவக்கம்!' - பட்ஜெட் அறிவிப்பும் மக்களின் எதிர்ப்பும்

சேலம் - சென்னை சாலை
சேலம் - சென்னை சாலை

மத்திய பட்ஜெட் 2021 மூலம் சேலம் எட்டு வழிச் சாலை விவகாரத்தில் மீண்டும் பரபரப்பைப் பற்ற வைத்திருக்கிறது, மத்திய அரசு.

2018-ம் ஆண்டு சென்னை - சேலம் இடையே எட்டு வழிச் சாலை திட்டத்துக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஆகிய ஐந்து மாவட்டங்கள் வழியாகச் சாலை அமைக்க மத்திய அரசு 10,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. இதற்காகச் சுமார் 1,900 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்படும் என்று அறிவித்த தமிழக அரசு, முதல்கட்டப் பணிகளையும் தொடங்கியது. பல இடங்களில் விவசாயிகளின் நிலங்களில் எல்லைக்கற்கள் நடப்பட்டன. இதனால், அப்பகுதி விவசாயிகளும் பொதுமக்களும் போராட்டத்தில் இறங்கினர்.

எட்டு வழிச் சாலை பணிகள்
எட்டு வழிச் சாலை பணிகள்
மெட்ரோ விரிவாக்கம், தொழில் வழித்தடம்... மத்திய பட்ஜெட் 2021-ல் தமிழகத்துக்கு என்னென்ன திட்டங்கள்?

இதைத் தொடர்ந்து, இத்திட்டத்துக்குத் தடை விதிக்கக் கோரியும், திட்டத்தை ரத்து செய்யக்கோரியும் ஐந்து மாவட்ட விவசாயிகள், பா.ம.க இளைஞரணித் தலைவர் அன்புமணி, பூவுலகின் நண்பர்கள் அமைப்பினர் உள்பட பலரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். உயர் நீதிமன்றம் வழங்கிய அந்தத் தீர்ப்பில், ``தேசிய நெடுஞ்சாலைச் சட்டம் 1956-ன்படி தமிழக அரசு பிறப்பித்த நிலத்தைக் கையகப்படுத்துவதற்கான அரசாணை ரத்து செய்யப்படுகிறது. எட்டு வழிச் சாலைக்காகக் கையகப்படுத்திய நிலங்களை, எட்டு வாரங்களில் மீண்டும் உரிமையாளர்களின் பெயரிலேயே பதிவு செய்ய வேண்டும். வருவாய் ஆவணங்களில் செய்யப்பட்ட மாற்றங்களை, எட்டு வாரங்களில் பழைய நிலைக்குக் கொண்டு வர வேண்டும். இந்தத் திட்டத்துக்காக எடுக்கப்பட்ட அனைத்து நடவடிக்கைகளும் ரத்து செய்யப்பட வேண்டும்" என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும், மத்திய சுற்றுச்சூழல் அனுமதி பெற்ற பிறகே, எட்டு வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்ற வேண்டும்" என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மத்திய அரசின் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. விவசாயிகள், பாதிக்கப்பட்ட நில உரிமையாளர்கள் உள்ளிட்டோர் சார்பில் கேவியட் மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்கு தொடர்பாக உச்ச நீதிமன்றம் கடந்த வருடம் டிசம்பர் மாதம் 8-ம் தேதி வழங்கிய தீர்ப்பில், ``சென்னை - சேலம் எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தச் சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை தொடரும். எட்டு வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தத் தமிழக அரசு பிறப்பித்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. எட்டு வழிச்சாலை திட்டத்துக்குத் தடை இல்லை. மீண்டும் நிலம் கையகப்படுத்த மத்திய அரசு புதிய அரசாணையை வெளியிட வேண்டும். குறிப்பிட்ட அந்தந்தத் துறைகளில் அனுமதி பெற்று முறையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி எட்டு வழிச்சாலை திட்டத்தைப் புதிதாகத் தொடங்கிக் கொள்ளலாம். நெடுஞ்சாலை அமைப்பது தொடர்பாகச் சுற்றுச்சூழல் துறையிடம் முறையான அனுமதி பெற வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்
மத்திய பட்ஜெட்
`வழக்கு; ஆலோசனைக் கூட்டம்!' - மீண்டும்  சூடுபிடிக்கும் 8 வழி பசுமைச் சாலை விவகாரம்

இந்நிலையில் இன்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாரமன் வெளியிட்டுள்ள பட்ஜெட் அறிக்கையில், ``சென்னை - சேலம் எட்டு வழிச் சாலை திட்டம் இந்த ஆண்டில் டெண்டர் விடப்பட்டு பணிகள் ஆரம்பிக்கப்படும்" என்று அறிவித்திருக்கிறார்.

இந்தத் தீர்ப்புபற்றிச் சேலம் எட்டு வழிச்சாலை திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர், சந்திரகுமார் பேசும்போது, ``கடந்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் தடை கிடைத்ததாக நம்பினோம். ஆனால், இப்போது இந்த அறிவிப்பு இப்பகுதி மக்களைக் கலக்கமடையச் செய்திருக்கிறது. இனி வரும் காலங்களில் எட்டு வழிச் சாலையைத் தொடங்குவதாக மத்திய அரசு அறிவித்திருப்பதற்கு எட்டு வழிச் சாலை எதிர்ப்புக் குழுவின் சார்பாகக் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம். இப்போது மக்கள் தெளிவாக இருக்கிறார்கள். அதனால் இனி எட்டு வழிச் சாலை திட்டத்தை இங்குத் தொடங்குவது முடியாத செயல். மீறிச் செயல்படுத்த நினைத்தால் அரசுக்கு மிகுந்த சிக்கலை உண்டாக்கும். இங்கு சாலை அமைப்பது சாமானிய மக்களுக்காக கிடையாது என்பதை முன்பிருந்தே சொல்லி வருகிறோம். எட்டு வழிச் சாலை தொழிலதிபர்களுக்கானது, கனரக வாகனங்களுக்கானது.

சந்திரகுமார்
சந்திரகுமார்

எட்டு வழிச் சாலை திட்டத்தை அறிவித்திருக்கும் அரசு ஒருமுறை இப்பகுதியை வந்து பார்க்கட்டும். இப்போது எங்குப் பார்த்தாலும், மஞ்சள், வாழை, தென்னை எனக் காஞ்சிபுரம் முதல் சேலம் வரைக்கும் பசுமையாக நிற்கிறது. இதையெல்லாம் அழிப்பது பல விவசாயிகளை அழிப்பதற்குச் சமம். விவசாய நிலங்கள் தவிர, மலைகளைக் குடைந்து சாலை அமைப்பது வேறு இருக்கிறது. இவ்வளவு சீர்கேடுகளைச் செய்துவிட்டு இந்தச் சாலையை யாருக்காக அமைக்கிறார்கள் எனத் தெரியவில்லை. விவசாய பூமியான தமிழ்நாட்டை அழிக்கத் துடிக்கும் மத்திய அரசுக்கு அ.தி.மு.க அரசு துணைபோகாமல் இருக்க வேண்டும். மீண்டும் சொல்கிறேன், எட்டு வழிச் சாலை அமைப்பது இங்கு எப்போதும் நடக்காத ஒன்று" என்றார்.

சேலம் எட்டு வழிச் சாலை விவகாரத்தில் மீண்டும் பரபரப்பைப் பற்ற வைத்திருக்கிறது, மத்திய அரசு.

அடுத்த கட்டுரைக்கு