Published:Updated:

``சொல்லிக் கொடுத்து பேசச் சொன்னார்கள்!'' - எட்டு வழிச்சாலைக்காக நிலம் கொடுத்த விவசாயி தகவல்

எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம், சென்னை நிருபர்கள் சங்கத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தது. இதில், தமிழக அரசு தரப்பினால் நிர்பந்தம் செய்யப்பட்டு, எட்டு வழிச்சாலைக்கு நிலம் தருவதாக மனு அளிக்க வைக்கப்பட்ட விவசாயியை அழைத்து வரத் திட்டமிட்டிருந்தது.

எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம்
எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம்

ஜூலை 22, 2019. சேலத்தில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்திக்க விவசாயிகள் வந்திருப்பதாகத் தொடங்குகிறது அந்த தனியார் செய்தித் தொலைக்காட்சியின் காணொலி. `அன்று' என்ற தலைப்பிலான அந்தக் காணொலி, சேலம் - சென்னை 8 வழி பசுமைச் சாலையை எதிர்த்து விவசாயிகள் போராடுவதையொட்டி, சில விவசாயிகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்து, சாலைப் பணிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாகக் கூறியது. அந்தக் காணொலியில் விவசாயி ஒருவர் நேர்காணல் செய்யப்படுகிறார்.

"ஆத்தூர் - சேலம் நெடுஞ்சாலைக்கும் எங்கள் நிலங்களை அளித்துள்ளோம். தற்போது பசுமை வழிச்சாலைக்கும் எங்கள் நிலத்தைக் கொடுக்க முன்வந்துள்ளோம். அரசு எங்களுக்கு இழப்பீட்டை அதிகரித்து தர வேண்டும் எனவும், எங்கள் வாழ்வாதாரத்துக்காக எங்கள் குழந்தைகளுக்கு அரசு வேலை அளிக்க வேண்டும் எனவும் முதல்வரிடம் மனு கொடுத்திருக்கிறோம். அவரும் `செய்கிறேன்!' என ஏற்றுக்கொண்டிருக்கிறார்" என்று கூறுகிறார் அந்த விவசாயி. பின்னணியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிரித்தபடியே, விவசாயிகளிடம் மனு பெற்றுக் கொண்டிருக்கிறார்.

``சொல்லிக் கொடுத்ததை, திக்காமல், திணறாமல், சொல்லிக் கொடுக்காததுபோல பேசச் சொன்னார்கள்!"
முருகேசன், விவசாயி

செப்டம்பர் 17, 2019. முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்ததாகப் பேட்டியளித்த விவசாயி மற்றொருவரிடம் பேசிக் கொண்டிருக்கிறார். `இன்று' என்று எழுதப்பட்டிருக்கும் இந்தக் காணொலியில், "தாசில்தார், கலெக்டர் ஆகியோரை எட்டு வழிச்சாலை தொடர்பாக சந்திக்கச் சென்றோம். முதல்வரைப் பார்க்க அழைத்துச் சென்று, செய்தித் தொலைக்காட்சிகளில் அப்படிப் பேச வைத்தார்கள்" என்கிறார்.

அந்தக் காணொலி
அந்தக் காணொலி
Vikatan

காணொலியில் உள்ள மற்றொருவர், "அவர்கள் சொல்லித் தந்ததுபோல பேசச் சொன்னார்களா?" என்று கேட்க, அந்த விவசாயி "சொல்லிக் கொடுத்ததை, திக்காமல், திணறாமல், சொல்லிக் கொடுக்காதது போல பேசச் சொன்னார்கள்" என்கிறார். அதே காணொலியில், மற்றொரு விவசாயி பேசுகிறார். அவரும் எடப்பாடி பழனிசாமியைச் சந்தித்த விவசாயிகளில் ஒருவர். "விவசாயிகள் யாரும் நிலத்தைக் கொடுக்க விரும்பவில்லை. ஆளுங்கட்சிக்காரர்கள் அவர்களது நிலங்களை அளிக்க முடிவுசெய்துவிட்டு, எங்களையும் அழைத்துச் சென்றுவிட்டார்கள். எங்கள் இடத்தின் சர்வே நம்பரை, அவர்களே எழுதிவிட்டு, பெயரையும் மாற்றிவிட்டு மோசடியாக மனு கொடுத்தார்கள்" என்கிறார்.

சில நாள்களுக்கு முன், சமூக வலைதளங்களில் பரவிவந்த காணொலி ஒன்றில் இருப்பவைதாம் இங்கு குறிப்பிடப்பட்டிருக்கின்றன. கடந்த 13-ம் தேதி அன்று, சென்னை நிருபர்கள் சங்கத்தில் பத்திரிகையாளர் சந்திப்பை ஏற்பாடு செய்திருந்த எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கம், மேற்கூறப்பட்ட காணொலியில் இருந்த விவசாயியைப் பத்திரிகையாளர்களிடம் பேசுவதற்காக அழைத்து வருவதாகத் திட்டமிட்டிருந்தது.

அருள் ஆறுமுகம்
அருள் ஆறுமுகம்
Vikatan

"எட்டு வழிச்சாலை தொடர்பாக விவசாயிகளைச் சந்திக்கச் சென்றபோது, முருகேசன் என்ற விவசாயி அழுதுகொண்டிருந்தார். சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மக்கள் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவுக்கு வந்திருந்தபோது, தன்னை அழைத்துச் சென்று எட்டு வழிச்சாலைக்கு ஆதரவாகப் பேச வைத்ததாகக் கூறி அழுதார். அவரைப் பத்திரிகையாளர்களிடம் பேச முடியுமா எனக் கேட்ட போது, தனியாக வருவதற்குப் பயப்படுவதாகக் கூறினார். அவருக்குத் தைரியம் சொல்லி, அவருக்குத் தெரிந்தவர்கள் யாரையேனும் அழைத்து வர முடியுமா எனக் கேட்டோம். சேலத்தில் தி.மு.க பிரமுகராகவும், முன்னாள் கவுன்சிலராகவும் இருந்த விஜயகுமார் என்பவரை அழைத்துவருவதாகக் கூறினார். சென்னை வருவதற்காகத் திட்டமிட்ட பிறகு, விஜயகுமாரை தமிழக காவல்துறையின் உளவுப்பிரிவு கடத்திச் சென்றது. அவரின் மனைவி புகார் அளித்தும் அதை ஏற்கவில்லை. உளவுப்பிரிவு காவலர்களால் விஜயகுமார் கைது செய்யப்பட்டதை அவரது குடும்பத்தினர் வீடியோ எடுத்ததால், மிரட்டல் விடுக்கப்பட்டு இரவு 11 மணிக்கு விடுவிக்கப்பட்டார்" என்கிறார் எட்டு வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அருள் ஆறுமுகம்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தொடர்ந்து சேலம் விவசாயிகள் தங்கள் நிலத்தை எட்டு வழிச்சாலைக்காக அளிக்க முன்வருவதாகப் பேசியதைக் குறிப்பிட்டு, "99 சதவிகித விவசாயிகள் நிலம் கையகப்படுத்தலுக்கு எதிராகவே உள்ளனர். 70 விவசாயிகள் தன்னைச் சந்தித்ததாக முதல்வர் கூறுகிறார். அந்த 70 பேரிடம் பேசி, ஆவணங்கள் சேகரித்து, வெளியிடுவதாக இருந்தோம். காவல்துறையின் தீவிர கண்காணிப்பால், எங்களால் அதைச் செய்ய முடியவில்லை" என்றார் அருள் ஆறுமுகம்.

அருள் ஆறுமுகம்
அருள் ஆறுமுகம்
Vikatan

மேலும் பேசிய அருள் ஆறுமுகம், "சென்னை - சேலம் இரண்டு வழிச்சாலை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படவில்லை. மேலும், 3 சாலைகள் சென்னையையும், சேலத்தையும் இணைக்கின்றன. 8 வழிச்சாலை போடப்பட்டால், தூரம் குறையும் என்கிறார் முதல்வர். அதற்கான ஆதாரமும் இல்லை. இந்தத் திட்டம் வேடியப்பன் மலை, கஞ்சமலை உள்ளிட்ட மலைகளில் உள்ள கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதற்காகவே போடப்பட்டுள்ளது. இதற்காக நிலத்தை அளிக்குமாறு சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்ட விவசாயிகளை தமிழக அரசு நிர்பந்திக்கிறது" என்று கூறினார்.