Published:Updated:

``ஓடம்போக்கி ஆறு, கழிவுநீர் கால்வாயா மாறிகிடக்கு..!" - கருணாநிதி சொந்த ஊரில் விவசாயிகள் வேதனை

ஓடம்போக்கி ஆறு

திருவாரூர் நகராட்சி பகுதியில் இருக்கக் கூடிய அனைத்து வணிக நிறுவனங்களின் கழிவுகளும், இந்த ஆற்றில் கலக்கப்பட்டு வருவதால் மக்கள் யாரும் பயன்படுத்தவே முடியாத அளவுக்கு, மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது.

``ஓடம்போக்கி ஆறு, கழிவுநீர் கால்வாயா மாறிகிடக்கு..!" - கருணாநிதி சொந்த ஊரில் விவசாயிகள் வேதனை

திருவாரூர் நகராட்சி பகுதியில் இருக்கக் கூடிய அனைத்து வணிக நிறுவனங்களின் கழிவுகளும், இந்த ஆற்றில் கலக்கப்பட்டு வருவதால் மக்கள் யாரும் பயன்படுத்தவே முடியாத அளவுக்கு, மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது.

Published:Updated:
ஓடம்போக்கி ஆறு

திருவாரூர் மாவட்டத்தில் இருக்கக்கூடிய ஆறுகளில் மிகவும் முக்கியமான ஆறு ஓடம்போக்கியாறு. காவிரி ஆற்றின் கிளையாறாக பிரிந்து, என்கண் என்னும் ஊரிலிருந்து தொடங்கி திருவாரூரின் மையப்பகுதி வழியாக பயணிக்கிறது இந்த ஆறு. இந்த ஆற்றின் மூலம் சுமார் 30,000 ஏக்கர் பரப்பளவு கொண்ட விவசாய நிலங்கள் பாசன வசதிபெற்று வந்தன. திருவாரூர் மாவட்டத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளுக்கு மிக முக்கியமான நீராதாரமாக விளங்கி வந்தது. மேலும், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி நீச்சல் பழகியது இந்த ஓடம்போக்கி ஆற்றில்தான்.

ஓடம்போக்கி ஆறு
ஓடம்போக்கி ஆறு

இந்த ஆறு தற்போது, பயன்படுத்தவே முடியாத அளவுக்கு, சாக்கடை கால்வாயாக மாறி உள்ளதாக விவசாயிகள் கண்ணீர் வடிக்கின்றனர். திருவாரூர் நகராட்சி பகுதியில் இருக்கக் கூடிய அனைத்து வணிக நிறுவனங்களின் கழிவுகளும், இந்த ஆற்றில் கலக்கப்பட்டு வருவதால் மக்கள் யாரும் பயன்படுத்தவே முடியாத அளவுக்கு, மிகவும் மோசமான நிலையில் இருந்து வருகிறது. நகராட்சியின் பாதாளச் சாக்கடை கழிவுகள் அனைத்தும் இந்த பாசன ஆற்றில் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. இதனால், ஆற்றின் கரையோரம் வசிக்கக்கூடிய மக்களுக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகள் கலந்து ஆற்று நீர் பாழானதால் தற்போது விவசாயமே செய்ய முடியாத நிலை உருவாகி இருப்பதாக வருத்தம் தெரிவிக்கிறார்கள் அந்தப் பகுதி விவசாயிகள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இது குறித்து நம்மிடம் பேசிய அந்தப் பகுதி விவசாயிகள், ``நாங்க எல்லாரும், பல வருசமா இந்த ஆத்துல வர்ற தண்ணிய நம்பிதான் விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கோம். வெள்ளக்காரன் காலத்துல, நாகப்பட்டினம் துறைமுகத்திலிருந்து பொருள்களை எடுத்துகிட்டு வணிகர்கள் எல்லாம் இந்த ஆத்துல, ஓடத்துல போனதுனால இந்த ஆற்றுக்கு ஓடம்போக்கி ஆறுனே பேரு வந்துச்சு. திருவாரூரில் பிறந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கும் இந்த ஆற்றுக்கும் ஒரு நெருங்கிய தொடர்பு இருக்கு, கலைஞர் தன்னுடைய இளமை காலத்துல, நீதி கட்சியில இருந்தப்போ சின்ன சின்ன அரசியல் கூட்டங்கள இந்த ஆற்றங்கரையிலதான் நடத்துனாரு. கலைஞருக்கு அரசியல்ல அடித்தளம் அமைச்சி கொடுத்ததே இந்த ஆற்றங்கரையோரம் நடந்த அரசியல் கூட்டங்கள்தான்னு சொல்லலாம்!" என்றார்கள்.

 கருணாநிதி
கருணாநிதி

கழுவுநீர் கால்வாயாக மாறிய சோகம்:

மேலும், ``இந்த அளவுக்கு சிறப்பு வாய்ந்த ஓடம்போக்கி ஆறு, இப்போ கழிவுநீர் கால்வாயா மாறி போய்ட்டு. திருவாரூர் நகராட்சியில இருக்குற பெரிய, பெரிய வணிக நிறுவனங்களோட எல்லா கழிவுகளும் இந்த ஆத்துல வந்துதான் கலக்குது. அதனால மக்கள் யாருமே பயன்படுத்த முடியாத அளவுக்கு இந்த ஆறு மாறி போய்ட்டு. திருவாரூர் மாவட்டத்துல கிட்டத்தட்ட 30,000 ஏக்கர் அளவுள்ள விவசாய நிலத்துக்கு நீர் ஆதாரமா இருக்குறதே இந்த ஆறுதான். கிட்டத்தட்ட ஒரு லட்சத்துக்கும் மேல விவசாயிகள் இந்த ஆற்று நீரை நம்பிதான் விவசாயம் பண்ணிக்கிட்டு இருக்கோம்.

ஓடம்போக்கி
ஓடம்போக்கி

ஆனா, இப்போ இந்த ஆறு சாக்கடைக் கழிவால் மாசுபட்டு போனதுனால, விவசாயம் பண்ண நல்லதண்ணி கிடைக்காம பல விவசாயிகள், விவசாயத்தையே விட்டுட்டுடே போற மாதிரியான சூழல் உருவாகியிருக்கு. `இது விவசாயிகளுக்கான அரசாங்கம்'னு சொல்லுற முதல்வர் ஸ்டாலின், அவங்களோட சொந்த மாவட்டதிலேயே இப்படி ஒரு அவல நிலைய விவசாயிகளாகிய நாங்க, பல வருசமா அனுபவச்சிட்டு வர்றோம்! எத்தனையோ தடவை நாங்க நகராட்சி அதிகாரிகள் கிட்ட புகார் பண்ணிட்டோம். ஆனா, அவங்க யாருமே இதுவரைக்கும் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கல. உடனடியா முதல்வர் இந்த பிரச்னையில தனி கவனம் செலுத்தி, மாசுபட்டு போன இந்த ஓடம்போக்கி ஆற்றை சரி செஞ்சு கொடுக்கணும்!" என்கிறார்கள் ஆதங்கமாக.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

நடவடிக்கை இல்லையென்றால் போராட்டம்:

தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்டத் தலைவர் தம்புசாமியிடம் பேசியபோது, ``ஓடம்போக்கி ஆற்றிலிருந்து பிரியக் கூடிய அத்துணை பாசன வாய்க்கால்களும் குப்பைக் கழிவுகளால் அடைப்பட்டு கிடக்குது. இதனால திருவாரூர் மாவட்டத்துல சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்காங்க. இதுக்கெல்லாம் முழுக் காரணம் நகராட்சிப் பகுதியில இயங்கக் கூடிய வணிக நிறுவனங்கள்தான். அந்த கடைகளோட கழிவுகள் எல்லாம் இந்த ஆத்துல வந்துதான் கலக்குது. இதனால, விவசாயிகள்தான் அதிகமாக பாதிக்கப்படுறாங்க.

விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட தலைவர் தம்புசாமி
விவசாயிகள் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட தலைவர் தம்புசாமி

மேலும், பல விவசாயிகள் பயிர் செய்ய நல்ல தண்ணி கூட கிடைக்கமா ரொம்ப கஷ்டபடுறாங்க. இந்த பிரச்னை சம்பந்தமா பலமுறை திருவாரூர் நகராட்சி அதிகாரிகள் கிட்ட புகார் பண்ணியும் இது வரைக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் இல்ல. உடனடியா அரசு இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வ ஏற்படுத்தி கொடுக்கணும். அப்படி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கலானா, திருவாரூர் விவசாயிகள் எல்லாரையும் ஒண்ணு திரட்டி மிக பெரிய அளவுல முற்றுகை போராட்டத்த நகராட்சி அலுவலகம் முன்னாடி நடத்துவோம்!" என்றார்

திருவாரூர்
திருவாரூர்

இது தொடர்பாக நகராட்சி ஆணையர் பிரபாகரனிடம் நேரில் சென்று கேட்டபோது, ஓடம்போக்கி ஆற்றை தூய்மைப் படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், கழிவுகளை ஆற்றில் கலக்கும் வணிக நிறுவனங்களின் மீது தக்க நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

``தமிழக அரசு எப்போதும் விவசாயிகளுக்கு துணை நிற்கும்" என்று முதல்வர் ஸ்டாலின் சட்டமன்றத்தில் அடிக்கடி பேசி வரும் நிலையில், அவரது சொந்த மாவட்டத்திலேயே இப்படி ஒரு பிரச்னையை விவசாயிகள் எதிர்கொண்டு வருகிறார்கள்.

அவர்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்குமா திமுக அரசு..?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism