Published:Updated:

சுருளி அருவியில் `திடீர் கட்டண உயர்வு’ - சுற்றுலாப் பயணிகள் அதிர்ச்சி!

எம்.கணேஷ்
வீ.சக்தி அருணகிரி

சுற்றுலாத்தலமான சுருளி அருவியில் நுழைவுக் கட்டணத்தை அதிகரித்துள்ளது வனத்துறை!

Suruli Falls
Suruli Falls

தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் அமைந்துள்ள சுருளி அருவியில், வனத்துறை சார்பாக வசூல் செய்யப்படும் கட்டணம், எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென உயர்த்தப்பட்டுள்ளது.

Suruli Falls
Suruli Falls

வார விடுமுறை தினம் என்பதால், நேற்று சுருளி அருவிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகமாக வருகை தந்தனர். இந்த திடீர் கட்டண உயர்வு, சுற்றுலாப்பயணிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

வெறும் 5 ரூபாய் மட்டுமே நுழைவுக் கட்டணமாக வசூல் செய்த வனத்துறை, தற்போது குழந்தைகளுக்கு 20 ரூபாய், பெரியவர்களுக்கு 30 ரூபாய், வெளிநாட்டினர் என்றால் குழந்தைகளுக்கு 200 ரூபாயும், பெரியவர்களுக்கு 300 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. பள்ளி மாணவர்கள் வருகை தரும் பட்சத்தில், அரசுப் பள்ளி மாணவர்கள் என்றால் 5 ரூபாயும், தனியார் பள்ளி மாணவர்கள் என்றால் 20 ரூபாயும் வசூல் செய்யப்படுகிறது. ஸ்டில் கேமராவுக்கு 50 ரூபாயும், வீடியோ கேமராவுக்கு 300 ரூபாயும் வசூலிக்கப்படுகிறது. வெளிநாட்டவர் என்றால், ஸ்டில் கேமராவிற்கு 500 ரூபாயும், வீடியோ கேமராவிற்கு 3 ஆயிரம் ரூபாயும் என கட்டணம் வசூல் செய்யப்படுகிறது.

Fee List in Surulii Falls
Fee List in Surulii Falls

எவ்வித முன்னறிவுப்பும் இன்றி இந்த திடீர் கட்டண உயர்வு குறித்து வனத்துறை அதிகாரி ஒருவரிடம் பேசினோம், “பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளுக்குள் உள்ள சுற்றுலாத்தளங்களின் கட்டணங்களை உயர்த்த மத்திய அரசு முடிவெடுத்துள்ளது. அதன் அடிப்படையில் தான் சுருளி அருவியின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது” என்றார்.

மத்திய அரசின் முடிவாக இருந்தாலும் கூட, முன்னறிவிப்பு இன்றி திடீரென அறிவிப்புப் பலகை வைத்து கட்டண உயர்வை நடைமுறைப்படுத்துவது சரியான செயல் இல்லை என கண்டனம் தெரிவிக்கின்றனர் சுற்றுலாப் பயணிகள்!