Published:Updated:

`பாறு கழுகுகளை வீழ்த்தும் புளுநிக்சின் வலி நிவாரணி!' - தடைவிதித்த கால்நடைத் துறை

சூழலியலில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் பாறு கழுகுகளின் அழிவு, மனித குலத்துக்கும் பேராபத்தாக முடியும் எனச் சூழலியல் ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

பாறு கழுகு
பாறு கழுகு

இந்தியக் காடுகள் முழுக்க விரவிக் கிடந்த பாறு கழுகுகள் உலகின் பன்னெடுங்காலமாக காட்டுக்கும் காட்டு விலங்கினங்களுக்கும் மனித குலத்துக்கும் பேருதவியாக இருந்துவந்தன. காடுகளின் நோய்க் காப்பாளன் அல்லது இயற்கைத் தூய்மையாளன் என்று அழைக்கப்படும் (பிணந்தின்னி) பாறு கழுகுகள் உலகில் தோன்றிய பழைமையான பறவையினங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. தென்னிந்தியக் காடுகளில் வெண் முதுகு, கருங்கழுத்து, செந்தலை, மஞ்சள் முகம் ஆகிய நான்குவகை பாறு கழுகுகள் உள்ளன.

பாறு கழுகு
பாறு கழுகு

சிங்கம், புலி, சிறுத்தை உள்ளிட்ட ஊண் உண்ணிகள் வேட்டையாடி உண்டுவிட்டுச்செல்லும் இரையை உண்டு வாழும் இந்தப் பாறு கழுகுகள், காட்டுயிர்களுக்கு ஏற்படும் கொள்ளை நோய்களைத் தடுப்பதில் பெரிய பங்கு வகிக்கின்றன.

நாகரிக வளர்ச்சியால் ஏற்பட்ட பல்வேறு காரணங்களால் இந்தப் பாறு கழுகுகள் பெரும் அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டன. கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நேரடியாகவும் மறைமுகமாகவும் இடர்பாடுகளைச் சந்தித்து வந்த பாறு கழுகுகளின் எண்ணிக்கை மிக மிக சொற்பமான அளவில் உள்ளன.

சூழலியலில் மிக முக்கியப் பங்கு வகிக்கும் பாறு கழுகுகளின் அழிவு, மனித குலத்துக்கும் பேராபத்தாக முடியும் எனச் சூழலியல் ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

கடந்த 50 ஆண்டுகளில் ஆசிய, ஆப்பிரிக்கக் கண்டங்களில் நூற்றுக்கணக்கான பாறு கழுகுகள் ஒரே சமயத்தில் கூட்டம் கூட்டமாகச் செத்து மடிந்தன. இதற்கான காரணங்களைத் தொடர்ந்து தேடிக் கண்டறிந்து ஆய்வு செய்தபோது கால்நடைகளுக்குப் பயன்படுத்தப்படும் வலி நிவாரணியே காரணம் என அறிந்து அதிர்ந்து போயினர். நோய்வாய்ப்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை அளிக்க இந்த மருந்தை ஊசி மூலம் செலுத்துகின்றனர்.

காடுகள்
காடுகள்

இறக்கும் அந்த மாட்டினை கழுகுகள் உண்கின்றன. இதைத் தொடர்ந்து கடந்த 2006-ம் ஆண்டு டைக்லோஃபெனாக் மருந்தினைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டது. இருந்தும் மாற்றுப் பெயரில் மருந்துகள் கால்நடைகளுக்குச் செலுத்தப்பட்டு வந்தன.

`புலிகளுக்கும் பாறு கழுகுகளுக்கும் பெரும் ஆபத்து!'- அச்சத்தை விதைக்கும் வனத்துறையின் சூழல் சுற்றுலா

பல்வேறு தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தும் கழுகுகளின் எண்ணிக்கையில் பெரிய அளவு மாற்றம் ஏதும் ஏற்படவில்லை. தொடர்ந்து குறைந்து வரும் பாறு கழுகுகளின் எண்ணிக்கையை அதிகரிக்கப் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அறிக்கை
அறிக்கை

இந்த நிலையில் தற்போது கால்நடைகளுக்கு வலி நிவாரணியாகப் பயன்படுத்தப்பட்டுவரும் புளுநிக்சின் எனப்படும் மருந்து நீலகிரி, கோவை, ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களில் பயன்படுத்த தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை கால்நடை பராமரிப்புத் துறை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து கால்நடை மருத்துவர் ஒருவர் கூறுகையில் ``டைக்லோஃபினாக் தடைக்குப் பிறகு மருத்துவர்கள் யாரும் கால்நடைகளுக்கு இந்த மருந்தினைச் செலுத்துவதில்லை. தற்போது புளுநிக்சின் வலி நிவாரணி மாடுகளுக்கு மடிவீக்கம் பேன்ற சிகிச்சைகளுக்கு ஊசி மூலம் செலுத்தப்படுகிறது. இந்த மருந்தும் அழிந்து வரும் பாறு கழுகுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துகிறதென கண்டறிந்துள்ளனர்‌. இதனால் மருத்துவர்கள் யாரும் பயன்படுத்துவது இல்லை" என்றார்.

Vulture
Vulture

ஃபுளுனிக்ஸின் தடை குறித்து பாறு கழுகுப் பாதுகாப்பு ஆர்வலர்கள் பேசுகையில், ``தமிழகத்தில் பாறு கழுகுகளின் கடைசிப் புகலிடமாக நீலகிரி, கோவை, ஈரோடு ஆகிய வனப்பகுதிகளே உள்ளன. கால்நடைகளுக்குச் செலுத்தப்படும் ஃபுளுனிக்ஸின் மருந்து, அதை உண்ணும் பாறு கழுகுகளுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதைக் கண்டறிந்து இந்த மூன்று மாவட்டங்களில் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் தடைவிதிக்க வேண்டும்" என்கின்றனர் வேதனையான குரலில்.