Published:Updated:

விடிய விடிய நடந்த போராட்டம்; தீயில் கருகிய 50 ஏக்கர் காடு! - காட்டுத் தீயில் சிக்கிய கடம்பூர் மலை

கடம்பூர் மலையில் ஏற்பட்ட காட்டுத் தீ
கடம்பூர் மலையில் ஏற்பட்ட காட்டுத் தீ

கொரோனாவால் தமிழகமே அமைதியாக இருக்கும் சூழலில், சத்தியமங்கலம் வனப்பகுதியில் பல ஏக்கர் வன நிலங்கள் தீக்கிரையாகியிருக்கின்றன.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் தாலுகாவில் இருக்கிறது கடம்பூர் மலை. இந்தப் பகுதியிலிருந்து சுமார் 15 கி.மீ தூரத்தில் மலை உச்சியில் கம்பத்தராயன் கிரி என்னும் பகுதி இருக்கிறது. இங்குள்ள பெருமாள் கோயிலுக்கு புரட்டாசி மாதத்தில் ஏராளமான பழங்குடியினர் மற்றும் பொதுமக்கள் வந்து செல்வது வழக்கம். இந்த வனப்பகுதி நேற்று முன்தினம் (ஏப்ரல் 15-ம் தேதி) மாலை பயங்கரமாகத் தீப்பற்றி எரிந்திருக்கிறது. மலை உச்சியில் கொழுந்துவிட்டெறிந்த இந்தக் காட்டுத் தீ, மலைப்பகுதியையொட்டி சுமார் 15 கி.மீ தூரம் வரை உள்ள கிராமங்களுக்குத் தெளிவாகத் தெரிந்திருக்கிறது. கடம்பூர் மலைப்பகுதியில் ஏதோ ஒரு பெரிய அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கிறது எனச் சுற்றுவட்டாரத்திலுள்ள பொதுமக்கள் பதறிப்போயிருக்கின்றனர்.

மறுநாள் காலை 9 மணிக்குத் தீயை முற்றிலுமாக அணைப்பதற்குள் பல ஏக்கர் வன நிலங்கள் முற்றிலுமாக எரிந்து தீக்கிரையாகியிருக்கின்றன.
காட்டுத் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர்
காட்டுத் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர்

இதற்கிடையே வனத்துறையைச் சேர்ந்த சுமார் 30 பேர், உதவிக்கு பழங்குடியினர் சிலரை அழைத்துக்கொண்டு காட்டுத் தீ ஏற்பட்டிருக்கும் பகுதிக்குச் சென்றிருக்கின்றனர். மாலை 7 மணிக்கு காட்டுத் தீயை அணைக்க ஆரம்பித்த பணிகள் விடிய விடிய நடந்திருக்கின்றன. தண்ணீரைக் கொண்டு தீயை அணைப்பதற்காக சாத்தியங்கள் அங்கு இல்லாததால், பசுமையான இலை, தழைகளை ஒடித்து அந்தத் தீயை அணைக்க போராடியிருக்கின்றனர். மேலும், தீப்பற்றிய இடங்களைச் சுற்றி சிறிய அகழிகள் போன்றவற்றை ஏற்படுத்தி, மற்ற இடங்களுக்குத் தீ பரவுவதை தடுத்திருக்கின்றனர். மறுநாள் காலை 9 மணிக்குத் தீயை முற்றிலுமாக அணைப்பதற்குள் பல ஏக்கர் வன நிலங்கள் முற்றிலுமாக எரிந்து தீக்கிரையாகியிருக்கின்றன.

தீ விபத்து ஏற்படக் காரணம் என்ன என வனத்துறையைச் சேர்ந்த சிலரிடம் பேசினோம். ``சத்தியமங்கலம் வனப்பகுதியில் பல இடங்கள் தண்ணீரின்றி காய்ந்து கிடக்கின்றன. கோடைக் காலங்களில் இதுபோன்ற காட்டுத் தீ சம்பவங்கள் ஏற்படுவது இயல்புதான். ஆனால், இந்த தீ விபத்து இயற்கையானதாகத் தெரியவில்லை. காட்டினுள் ஆடு, மாடு மேய்க்கச் சென்ற நபர்களால் இது ஏற்பட்டிருக்கலாம். நேற்று மதியம் சுமார் 2 மணிக்கே இந்தச் சம்பவம் நடந்திருக்கிறது. ஆனால், மாலைதான் இது வனத்துறை அதிகாரிகளுக்குத் தெரியவந்தது. சுமார் 10 கி.மீ அளவில் இந்தப் பாதிப்பு இருக்கிறது. எத்தனை ஏக்கர் என்பதெல்லாம் அதிகாரிகள் சொல்லும் கணக்குதான்” என்றனர்.

காட்டுத் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர்
காட்டுத் தீயை அணைக்கும் பணியில் வனத்துறையினர்

இதுகுறித்து சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலர் அருண்லாலிடம் பேசினோம். ``மனிதர்களாலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. சுமார் 20 ஹெக்டேர் வன நிலங்கள் (ஏறக்குறைய 50 ஏக்கர்) இந்தத் தீ விபத்தில் எரிந்து போயிருக்கின்றன. மலை உச்சி என்பதால் மனிதர்கள் யாருக்கும் எந்தப் பாதிப்புமில்லை. விலங்குகளின் நடமாட்டமும் அந்தப் பகுதியில் அதிகம் இல்லாததால் எந்த சேதமும் இல்லை. வெறுமனே சீமார் புல் போன்றவை எரிந்து போயிருக்கின்றன” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு