Published:Updated:

ஊட்டி கிளப்பின் 34 ஹெக்டேர் நிலம் பறிமுதல்! - ரூ.50 கோடி பாக்கியால் அதிரடி காட்டிய வனத்துறை

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பழைமை வாய்ந்த ஜிம்கானா கிளப் கைவசம் உள்ள நிலத்திலிருந்து 34.6 ஹெக்டேர் நிலத்தை மீண்டும் வனத்துறை கையகப்படுத்தியது.

Golf club
Golf club ( Arun.K )

வனப்பகுதிகள் நிறைந்த நீலகிரி மாவட்டத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கு முன் வரை வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காடுகள் அரசுத் துறைகள் மற்றும் தனியார் அமைப்புகள் 50 ஆண்டுகள் முதல் 99 ஆண்டுகள் என பல ஆண்டுகள் குத்தகைக்கு எடுத்துக்கொண்டனர். இதற்கு குறித்த அளவு தொகையே செலுத்தியும் வருகின்றனர். பெரும்பாலான அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள் இந்த வரியைக்கூட முறையாக செலுத்துவதில்லை.

Golf club
Golf club

இதேபோன்று வன நிலத்தைக் குத்தகைக்கு எடுத்த தனியார் அமைப்புகளில் ஒன்றுதான் ஜிம்கானா கிளப். ஊட்டி பிங்கர்போஸ்ட் பகுதியில் உள்ள இந்த ஜிம்கானா கிளப் மிகவும் பழைமையானது. கடந்த 1896-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் தொடங்கப்பட்டது. துவக்கத்தில் வேட்டையாடுபவர்கள் கூடும் அமைப்பாக இருந்தது. பின், கோல்ஃப் கிளப்பாக மாற்றப்பட்டு, கோல்ஃப் விளையாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகிறது.

வனத்துறை துணையுடன் மரம் கடத்தல்?! - லாரியைச் சிறைப்பிடித்த தனுஷ்கோடி கிராம மக்கள்

இதன் கட்டுப்பாட்டில் 78 ஹெக்டர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் பெரும்பாலான பகுதிகளில் புல் மைதானங்கள் மற்றும் கால்ப் போட்டிகள் நடத்தப்படும் பகுதிகளாக உள்ளது. மற்றொரு பகுதி அடர்ந்த வனப்பகுதிகளைக் கொண்டுள்ளது. இந்த நிலையில், பல ஆண்டுகளாக அரசுக்கு குத்தகை பாக்கி செலுத்தப்படாமல் இருந்துள்ளது. குத்தகை பாக்கி ரூ.50 கோடிக்கு மேல் இருந்துள்ளது. இதேபோல் வருவாய்த்துறைக்கும் ரூ.15 கோடி வரி செலுத்த வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

Golf club
Golf club

இந்நிலையில், நீதிமன்ற உத்தரவின் பேரில் இந்தக் கிளப்பின் கட்டுப்பாட்டில் உள்ள 34.6 ஹெக்டர் நிலத்தை கையகப்படுத்த வனத்துறையினர் முடிவு செய்தனர்.

நீலகிரி வனக்கோட்ட வன அலுவலர் குருசுவாமி தபேலா, உதவி வனப்பாதுகாவலர் சரவணன் தலைமையில் வனத்துறை அதிகாரிகள் பிங்கர்போஸ்ட் அருகேயுள்ள வென்லாக் டவுன் பகுதியில் ஜிம்கானா கிளப் கட்டுப்பாட்டில் இருந்த 34 ஹெக்டர் நிலத்தைக் கையப்படுத்தினர். இந்த நிலத்தைச் சுற்றிலும் வேலி அமைத்து, வனத்துறைக்குச் சொந்தமான இடம் என அறிவிப்பு பலகைகளை வைத்தனர். 100 ஆண்டுகளாக தனியார் வசம் இருந்த நிலத்தை வனத்துறையினர் மீண்டும் கையகப்படுத்தியது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது.

Golf club
Golf club

இது குறித்து வனத்துறை அதிகாரிகள், ``வனத்துறை மூலம் ஜிம்கானா கிளப்புக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலத்துக்கு ரூ.50 கோடிக்குமேல் குத்தகை பாக்கி வைத்துள்ளதால் நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் 78 ஹெக்டர் நிலத்தில் தற்போது 34.6 ஹெக்டர் நிலம் வனத்துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது'' என்றனர்.