Published:Updated:

`அதானி துறைமுக திட்டத்தை ரத்து செய்யுங்கள்!'- ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள்

காட்டுப்பள்ளி அதானி துறைமுகம்

காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கும் பழவேற்காடு ஏரிக்கும் இடையே 8 கி.மீ தூரமே உள்ளது. இந்தத் துறைமுக விரிவாக்கத் திட்டம் முன்னெடுக்கப்பட்டால், பழவேற்காடு ஏரி முழுவதும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

`அதானி துறைமுக திட்டத்தை ரத்து செய்யுங்கள்!'- ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரிகள்

காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கும் பழவேற்காடு ஏரிக்கும் இடையே 8 கி.மீ தூரமே உள்ளது. இந்தத் துறைமுக விரிவாக்கத் திட்டம் முன்னெடுக்கப்பட்டால், பழவேற்காடு ஏரி முழுவதும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர்.

Published:Updated:
காட்டுப்பள்ளி அதானி துறைமுகம்

சென்னைக்கு அருகேயுள்ள காட்டுப்பள்ளியில் அமைந்துள்ள அதானி துறைமுகத்தை விரிவாக்கம் செய்வதற்கான திட்டம் 2019-ம் ஆண்டு முன்மொழியப்பட்டது.

அந்தத் திட்டத்தின்படி, இப்போதிருக்கும் காட்டுப்பள்ளி துறைமுகத்தின் பரப்பளவு 330 ஏக்கர்; அது 6,200 ஏக்கருக்கு விரிவாக்கம் செய்யப்படும். அதில் கிட்டத்தட்ட 2,000 ஏக்கர் கரைக்கடலில் ஆக்கிரமிக்கப்படும். காட்டுப்பள்ளிகுப்பம் பகுதியின் கரைக்கடல் முழுவதும், ஆழமற்ற சேற்று நிலங்களைக் கொண்டது. இங்குதான் நண்டுகள், இறால்கள், சில மீன் வகைகள், சிறு சிறு ஆமை வகைகள் அனைத்தும் கிடைக்கின்றன. அந்த இடத்தை மணல்கொட்டி முற்றிலும் நிலமாக்கிவிடுவது இந்தத் திட்டத்தின் ஓர் அங்கமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதானி துறைமுகம்
அதானி துறைமுகம்

கருங்காளி சேறு, ஆலமரம் சேறு, லாக்கு சேறு, களாஞ்சி சேறு, கோட சேறு போன்ற கரைக்கடல் சேற்றுப் பகுதிகள் மணல் கொட்டப்பட்டு நிலமாக மாற்றப்படும். அதன்பிறகு, அங்கு பல்வேறு துறைமுகப் பணிகளுக்கான கட்டுமானங்கள் நடைபெறும். இதற்கு நடுவே கடலின் ஒரு பகுதியை ஆழப்படுத்தி, கப்பல் வந்து நிற்பதற்கான வசதிகள் செய்யப்படும். சுனாமி போன்ற பேரலைகளின்போது இதுபோன்ற கரைக்கடல் சேற்றுப் பகுதிகள்தான் அங்கு அதிகம் சேதம் ஏற்படாமல் தடுப்பதில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இப்படி, அந்தப் பகுதியின் இயல்பை முற்றிலுமாக அழித்து இயற்கையான நில அமைப்பையே மாற்றுவதைச் சூழலியல் பேரழிவு என்றுதான் சொல்ல வேண்டும் என்று பழவேற்காடு, காட்டுப்பள்ளி பகுதி மக்களும் சூழலியல் ஆர்வலர்களும் கடுமையாக எதிர்க்கிறார்கள்.

மேலும், ``ஒரு நில அமைப்பையே செயற்கையாக மாற்றியமைத்தால் என்ன நடக்கும் என்பதற்கான சாட்சியங்களாக நம்முன் ஏற்கெனவே இரண்டு துறைமுகங்கள் நிற்கின்றன. அவற்றின் விளைவால், வடசென்னை கடலோரம் பல ஆண்டுகளாகக் கடல் அரிப்பில் சிக்கி, பெரியளவு நிலப்பகுதிகளை இழந்துள்ளது. அந்தச் சேதங்களையே நம்மால் இன்னும் சரிசெய்ய முடியாமலிருக்க மூன்றாவதாக இருக்கும் இந்தத் துறைமுகத்தையும் விரிவாக்குகிறேன் என்ற போர்வையில் மேன்மேலும் அழிவுகளை உண்டாக்குவது அறிவுடைமையல்ல" என்றும் சூழலியல் ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.

பழவேற்காடு
பழவேற்காடு

இந்நிலையில், இந்தத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டுமென்று அரசாங்கத்தின் முக்கியப் பதவிகளில் இருந்த பல ஓய்வுபெற்ற அதிகாரிகள், முதல்வர் மு.க.ஸ்டாலின், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தமிழ்நாட்டின் தலைமைச் செயலர் வெ.இறையன்பு மற்றும் தமிழ்நாடு கடல் சார் வாரியத்தின் துணைத் தலைவர் கே.பாஸ்கரன் ஆகியோருக்கு கடிதம் எழுதியுள்ளார்கள்.

அந்தக் கடிதத்தில், ``அதானி துறைமுக நிர்வாகம் 4,000 கோடி ரூபாய் முதலீட்டில், காட்டுப்பள்ளியில் ஒரு திட்டத்தை முன்மொழிந்துள்ளது. இது கொண்டுவரக்கூடிய விளைவுகளைப் பற்றித் தமிழ்நாடு அரசு தெரிந்துகொள்ள வேண்டும்.

2018-ம் ஆண்டு செப்டம்பர் 28-ம் தேதியன்று, தமிழ்நாடு கடல்சார் வாரியத்துக்கு அதானி தரப்பிலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்தில், `எங்கள் தரப்பிலிருந்து குறிப்பிடத்தக்க நிதியை துறைமுக வளர்ச்சி மற்றும் அந்தப் பகுதியில் மற்ற தொழிற்சாலைகள் வளர்ச்சிக்காகச் செலுத்துகிறோம். இத்தகைய பெரிய திட்டம் குறுகிய காலத்தில் முடிவது அல்ல' என்று கூறியவர்கள், ஆகையால் இப்போது 30 ஆண்டுக்கால உரிமத்தை வைத்துக்கொண்டு முதலீட்டாளர்களிடமோ வங்கிகளிடமோ தேவையான நிதியைப் பெற முடியாது. நிதிசார் நம்பகத்தன்மையை மாநிலத்தின் வளர்ச்சியில் பங்கு வகிக்கக்கூடிய இந்தத் திட்டத்தில் உறுதி செய்ய, இதற்கான உரிமத்தை 99 ஆண்டுகளுக்கு நீடித்துத் தர வேண்டியது அவசியம் என்றும் அதானி தரப்பு கேட்டிருந்தது.

அதானி
அதானி

இது மாநிலத்துக்கு நல்ல விளைவுகளைக் கொடுக்காது. 2017-ம் ஆண்டு வெளியான சிஏஜி அறிக்கை, பொது மற்றும் தனியார் கூட்டாண்மை திட்டத்துக்கான சலுகைக் காலத்தை 30 ஆண்டுகளில் இருந்து 40 ஆண்டுகளாக நீட்டிப்பதற்கு எதிராகவும் அதன்மூலம் அதானிக்குக் கிடைக்கும் தேவையற்ற ஆதாயம் மற்றும் மாநில கருவூலத்துக்கு ஏற்படும் இழப்பையும் எடுத்துரைத்தது.

2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டதுபோல், அதானியின் இந்தத் திட்டம் 99 ஆண்டுக்கால உரிமத்தோடு மட்டுமே சாத்தியமாகும் என்று கூறும்போது, அதே திட்டத்தை இப்போதுள்ள 30 ஆண்டுக்கால உரிமத்தோடு முன்னெடுக்க அனுமதிப்பது, தமிழ்நாடு அரசுக்குப் பல இழப்புகளைக் கொண்டுவரும். இதற்கான உரிமக் காலத்தை நீட்டிப்பதற்கும் வாய்ப்புகள் இல்லை. ஏனெனில், அப்படிச் செய்யும்போதும் அரசுக்குப் பெரும் வருவாய் இழப்பை அது ஏற்படுத்தும்.

அதோடு, இந்தத் திட்டத்துக்கு, கடல் அரிப்பு, வாழ்வாதார இழப்பு, மாசுபாடு போன்ற அச்சுறுத்தல்களின் அடிப்படையில் உள்ளூர் சமூகங்களின் எதிர்ப்பு வலுவாக இருக்கிறது. மேலும், இந்தத் திட்ட முன்மொழிதலின்படி சென்னையில் வெள்ள அபாயம், கடல்நீர் உட்புகுந்து நிலத்தடி நீரை பயன்படுத்த முடியாததாக மாற்றுவது போன்ற அபாயங்கள் இருப்பதால் சென்னை மக்களும் எதிர்க்கிறார்கள். இந்த அச்சுறுத்தல்களே போதுமானது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்.பி.அம்புரோஸ், எம்.ஜி.தேவசகாயம், ஈ.ஏ.எஸ்.சர்மா, கமல் ஜஸ்வால், மீனா குப்தா, கோபாலன் பாலகோபால், சுந்தர் புர்ரா, ஜோய் ஓம்மென் போன்ற ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் மற்றும் கே.பி.ஃபேபியன், மது பந்தாரி போன்ற ஓய்வுபெற்ற ஐ.எஃப்.எஸ் அதிகாரிகள் இந்தக் கடிதத்தை அனுப்பியுள்ளார்கள். இந்த அதிகாரிகள், இந்திய அரசின் முதன்மைச் செயலர்களாக, மாநில அரசின் தலைமைச் செயலர்களாக, வெளியுறவுத் தூதர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பழவேற்காடு ஏரி
பழவேற்காடு ஏரி

காட்டுப்பள்ளி துறைமுகத்துக்கும் பழவேற்காடு ஏரிக்கும் இடையே 8 கி.மீ தூரமே உள்ளது. இந்தத் துறைமுக விரிவாக்கத் திட்டம் முன்னெடுக்கப்பட்டால், பழவேற்காடு ஏரி முழுவதும் பாதிப்புக்கு உள்ளாகும் என்று வல்லுநர்கள் எச்சரிக்கின்றனர். மேலும், ``ஏற்கெனவே இந்தத் துறைமுகங்களால் நாங்கள் பல இழப்புகளைச் சந்தித்து வருகிறோம். இதற்கு மேலும் விரிவாக்கினால், ஏரியின் மீன் வளம் முற்றிலும் அழிந்து எங்கள் வாழ்வாதாரமே கேள்விக்குறியாகும்" என்று பழவேற்காடு மீனவர்கள் அஞ்சுகின்றனர்.

இதற்காகக் கையகப்படுத்த திட்டமிட்டிருக்கும் இடங்கள் சேற்றுத் திட்டுகளைக் கொண்ட சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள். அங்குதான், இறால், நண்டு, நவர மீன், கெழங்கான், கானாங்கெளுத்தி போன்றவை அதிகமாகக் கிடைக்கும். ஏரிகளின் முகத்துவாரப் பகுதிகளில்தான் இறால் வகைகள் உட்பட பல மீன் வகைகளும் இனப்பெருக்கம் செய்கின்றன.