Published:Updated:

``பதவி விலகி உண்மையை நிரூபிக்கிறேன்!” - அதிரடிகாட்டிய பிரான்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சர்

க.சுபகுணம்

தன்மீது வைத்த ஊழல் குற்றச்சாட்டு உண்மையில்லை என்பதை நிரூபிக்கப் போராட வேண்டுமென்று, அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த பிரான்ஸ் சுற்றுச்சூழல் அமைச்சர்.

சுற்றுச்சூழல் அமைச்சர்
சுற்றுச்சூழல் அமைச்சர்

பிரான்ஸ் நாட்டின் சுற்றுச்சூழல்துறை அமைச்சர் ஃபிராங்கோய் டி ரூகி (Francois de Rugy) தன் பதவியை நேற்று (16-07-2019) ராஜினாமா செய்தார். கடந்த வாரம் அவர்மீது தனியார் இணைய புலனாய்வுப் பத்திரிகை ஒன்று, ஊழல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தது. தனியார் நிறுவனங்களோடு பல இரவுநேர உணவு விருந்துகளில் கலந்துகொள்வதாகவும் தனக்கான அதிகாரபூர்வ அமைச்சக வசிப்பிடத்தில் பல ஆடம்பரமான மாற்றங்களைச் செய்வதாகவும் அந்தப் புலனாய்வுப் பத்திரிகை குற்றம் சாட்டியது.

ஃபிராங்கோய் டி ரூகி
ஃபிராங்கோய் டி ரூகி

அதைத் தொடர்ந்து, தன் ஃபேஸ்புக் பக்கத்தில் ஃபிராங்கோய் டி ரூகி நேற்று பதிவிட்டதில்தான், தன் பதவியை ராஜினாமா செய்துவிட்டதாகவும் ராஜினாமா கடிதத்தை பிரதம மந்திரி எட்வர்டு பிலிப்பிடம் கொடுத்துவிட்டதாகவும் கூறியுள்ளார். தன்மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த அவர், அந்தக் குற்றச்சாட்டுகளை எதிர்ப்பதில் தன் பணியில் முழுமையாகக் கவனம் செலுத்த முடியவில்லை என்பதே ராஜினாமா செய்வதன் காரணமாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அதோடு, திருடப்பட்ட ஒளிப்படங்கள், வதந்திகள் போன்றவற்றை வைத்துக்கொண்டு மீடியாபார்ட் (Mediapart) என்ற அந்தப் பத்திரிகை, தன்மீது பொய்யாகக் குற்றம் சாட்டியுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். அதன்மீது, ஃபிராங்கோய் டி ரூகி குற்ற வழக்கு பதிவுசெய்துள்ளார்.

ஃபிராங்கோய் டி ரூகி
ஃபிராங்கோய் டி ரூகி
டிவிட்டர்

அவர்மீது குற்றச்சாட்டு வைத்த இணையப் பத்திரிகையின் தோற்றுநர்களில் ஒருவரான எட்வி பிலெனெல் இதுகுறித்துப் பேசியபோது, "நாங்கள் பொது சேவை செய்துகொண்டிருக்கிறோம். மக்களுக்கு உண்மையைச் சொல்வது மட்டுமே எங்கள் வேலை" என்று கூறியுள்ளார்.