Published:Updated:

உலக சுற்றுச்சூழல் தினத்தன்று நாம் ஏற்கவேண்டிய உறுதிமொழி என்ன?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
உலக சுற்றுச்சூழல் தினம்
உலக சுற்றுச்சூழல் தினம் ( Pixabay )

சுற்றுச்சூழல் சீராவதன்மூலம் இப்போது இயற்கைக்கு சிறிது நேரம் கிடைத்துள்ளது. இந்த நேரம், இதுவரையிலான உயிரின அழிவின் வேகத்தை வேகத்தடை போட்டுக் கொஞ்சம் குறைத்துள்ளது, அவ்வளவுதான்.

கோவிட் 19 வைரஸ், உலக அளவில் பெருஞ்சேதங்களை விளைவித்துக்கொண்டிருக்கிறது. உலகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதன் காரணமாக, வாகனங்களின் எண்ணிக்கை குறைந்து காற்றின் தரம் அதிகரித்துள்ளது. நைட்ரஜன் டை ஆக்சைடின் அளவு பூமியின் பல்வேறு பகுதிகளில் குறைந்துள்ளது. உதாரணத்திற்கு, அதிக அளவில் வெளியேற்றிக் கொண்டிருந்த அமெரிக்காவில் 30 சதவிகிதமும் ஐக்கிய அரபு அமீரகத்தில் 60 சதவிகிதமும் குறைந்துள்ளது. சர்வதேச அளவிலான பசுமை இல்ல வாயு வெளியீடு 8 சதவிகிதம் குறைந்துள்ளது. பசுமை இல்ல வாயு வெளியீட்டு அளவில் கடந்த 70 ஆண்டுகளில் காணாத மிகபெரிய வீழ்ச்சி இது.

இயற்கைக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய பொக்கிஷம் இந்த ஊரடங்குக் காலம். அது, தன்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள வாய்ப்பு கிடைத்தது. 46-வது உலக சுற்றுச்சூழல் தினமான இன்றுதான், முதன்முறையாக இயற்கையும்கூட ஓரளவுக்கு நிம்மதியாக இந்த நாளைக் கொண்டாடுகின்றது.

நம் பூமியின் அலாரம் செயலிழந்துகொண்டிருக்கிறது. இது நாம் விழித்துக்கொண்டு செயலில் இறங்கவேண்டிய நேரம்.
லியனார்டோ டிகாப்ரியோ

அதேநேரம், காட்டுயிர்கள் குறித்த பல்வேறு செய்திகளும் ஒருபுறம் வந்துகொண்டிருக்கின்றன. ஹாங்காங்கிலுள்ள விலங்குகள் காட்சி சாலையில், கடந்த 13 ஆண்டுகளில் முதன்முறையாக இரண்டு பாண்டா கரடிகள் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டுள்ளன. மனிதர்களைப் போலவே, இனப்பெருக்கத்தை கூச்சத்தோடு மேற்கொள்ளும் மனோபாவம் விலங்குகளுக்கும் உண்டு. காட்டுயிர் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துகிறேன் பேர்வழி என்று நாம் நம்முடைய பொழுதுபோக்கிற்காக விலங்குகளை அடைத்துவைத்து வேடிக்கைபார்த்து ரசிப்பதால், விலங்குகள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றன. அதனால், அடைப்பிடத்திலுள்ள விலங்குகள் இனப்பெருக்கத்தில் ஈடுபடுவது பெரிதும் குறைந்துவிட்டது. இந்நிலையில், 13 ஆண்டுகள் கழித்து மனிதர்களுடைய வரத்து இல்லாத இந்தச் சூழலில் இனப்பெருக்கத்தில் ஈடுபட்டுள்ள பாண்டா கரடிகள் உணர்த்துவது ஒன்று மட்டும்தான். இத்தனை நாள்களாக மனிதர்கள் வேடிக்கைபார்த்தது அவற்றுடைய இயல்பு வாழ்க்கையைப் பெரிதும் பாதித்துள்ளது. தற்போது யாருடைய தொந்தரவும் இல்லாததால், இயல்பு நிலைக்கு அவை திரும்பியுள்ளன. அதேபோலத்தான் ஒடிசா கடற்கரையில் ஒரே வாரத்தில் 4,07,914 பங்குனி ஆமை (Olive Ridley Sea turtle) முட்டைகள் குவிந்துள்ளன. லட்சக்கணக்கான பங்குனி ஆமைகள் கடற்கரையில் எந்தவித தொந்தரவும் இன்றி நிம்மதியாகத் தம் சந்ததிகள் பிறந்து வருவதற்காக முட்டைகளை மணலுக்குள் புதைத்துவிட்டுச் சென்றுள்ளன.

ஆனால் உலக நாடுகள், தங்கள் பொருளாதார நடவடிக்கைகளை முடுக்கிவிடத் தொடங்கும்போது, முன்பைவிட வேகமாக செயலாற்றத் தொடங்குவார்கள். அந்தச் சூழலில், இயற்கை இவ்வளவு நாள்களாக ஆசுவாசப்படுத்திக்கொண்டதெல்லாம் வீணாகிவிடும். ஆகவே, கோவிட் காலகட்டத்திற்குப் பிறகான சுற்றுச்சூழல் பாதுகாப்பு எப்படியிருக்க வேண்டுமென்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும். இந்த இடைப்பட்ட காலகட்டம் நமக்கு ஒன்றை உணர்த்தியுள்ளது. சுற்றுச்சூழலின் தரத்தை மேம்படுத்துவது சாத்தியமான காரியம் மட்டுமல்ல, அதைக் குறைந்த கால அளவிலேயே சாத்தியப்படுத்த இயலும் என்பதை நிரூபித்துள்ளது.

இயற்கை
இயற்கை
Pixabay

இயற்கையின் இந்த மீள்வருகையைத் தக்கவைக்க நாம் என்ன செய்ய வேண்டும்? இயற்கை, உண்மையாகவே தன்னைச் சரிசெய்து கொண்டிருக்கிறதா? அதற்குரிய வலுவான ஆதாரங்கள் கிடைத்துள்ளனவா... அல்லது நாம்தான், இருண்ட மேகங்களுக்கு நடுவே வெளிச்சம் தென்பட்டுவிடாதா என்ற ஏக்கத்தில் அப்படி நினைக்கின்றோமா?

முகமது பின் சயத் உயிரினங்கள் பாதுகாப்பு நிதியம் (Mohamed bin Zayed Species Conservation Fund) என்ற அமைப்பு, ஒரு சிறிய கணக்கெடுப்பை நடத்தியது. அவர்களிடம் நிதியுதவி பெற்று, காட்டுயிர் ஆய்வில் ஈடுபட்டிருக்கும் 80 நாடுகளைச் சேர்ந்த 300 ஆய்வுக் குழுக்கள் இந்த கணக்கெடுப்பை நடத்தின. அதில், காட்டுயிர் பாதுகாப்பு முன்னேற்றம் அடைந்துள்ளது தெரியவந்தது. சிறிய காட்டுப்பூனையிலிருந்து, எறும்புத்தின்னி கடத்தல் குறித்த குற்ற விசாரணை வரை பல்வேறு முன்னேற்றங்களைச் சந்தித்துள்ளன. பல பகுதிகளில் அழிந்துவிட்டதாக நினைக்கப்பட்ட உயிரினங்கள் மீண்டும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதிய வகையான உயிரினங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

"ஆண்டுக்கு 10,000 வகை உயிரினங்கள் என்ற விகிதத்தில் நாம் உலகின் பல்லுயிரிய வளத்தை இழந்துகொண்டிருக்கிறோம் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர். இது, இதுவரை இருந்த வேகத்தைவிட 1,000 மடங்கு அதிகம். அந்த வேகத்தை இந்த லாக்டௌன் சற்றே குறைத்துள்ளது" என்கிறார், முகமது பின் சயத் உயிரினங்கள் பாதுகாப்பு நிதியத்தின் நிர்வாக இயக்குநர், ரஸான் அல் முபாரக்.

காட்டுயிர் பாதுகாப்பு
காட்டுயிர் பாதுகாப்பு

உண்மைதான். இயற்கைக்கு சிறிது நேரம் கிடைத்துள்ளது. இந்த நேரம், இதுவரையிலான உயிரின அழிவின் வேகத்தை வேகத்தடை போட்டு கொஞ்சம் குறைத்துள்ளது, அவ்வளவுதான். ஆனால் இந்த நிலையிலும்கூட, காட்டுயிர்களுக்கு எதிரான, சுற்றுச்சூழலுக்கு எதிரான குற்றங்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதையும் ஒருபுறம் மறுக்க இயலாது. இவ்வளவு நன்மைகள் நடந்திருந்தாலும்கூட, மற்றொருபுறம் அமேசான் காட்டின் பெரும்பகுதியைப் பெருநிறுவனங்களுக்குத் திறந்துவிட பொல்சனாரோ அரசு முடிவெடுக்கத்தான் செய்கின்றது. மேற்குத்தொடர்ச்சி மலையின் பெருமளவு பகுதியை அழித்து, ரயில்வே பாதை அமைக்க இந்திய வனவிலங்கு வாரியம் அனுமதியளிக்கத்தான் செய்கிறது. அருணாசலப் பிரதேசத்தின் டிபாங் பள்ளத்தாக்கினுடைய பல்லுயிரிய வளத்தை அழித்து நீர்மின் திட்டம் கொண்டுவர இந்திய அரசும் அம்மாநில அரசும் முயலத்தான் செய்கின்றன. கொரோனாவுக்கு முந்தைய காலமாக இருந்தாலும் சரி, கொரோனா காலமாக இருந்தாலும் சரி, கொரோனாவுக்குப் பிந்தைய காலமாக இருந்தாலும் சரி, சுற்றுச்சூழல்மீது அரசுகளும் தனியார் நிறுவனங்களும் செய்யும் வன்புணர்வு என்னவோ ஒன்றுதான்.

நீர்மின் திட்டத்துக்காக டிபாங் பள்ளத்தாக்கை அழிக்கும் அரசு... இந்தியாவெங்கும் வலுக்கும் எதிர்ப்பு!

இந்திய அரசாங்கம் தொடர்ந்து சுற்றுச்சூழலை அழித்து, பொருளாதார வளர்ச்சியை மேற்கொள்வதிலேயே கவனம் செலுத்துகின்றது. இது, மேன்மேலும் விபரீதமான விளைவுகளைத்தான் கொண்டுவரும். இப்போது அனுமதிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அமல்படுத்தப்படும்போது, மணலைக் குடைந்து வருமானம் பார்ப்பார்கள். அந்த வருமானம் கூடவே பாவத்தின் பரிசையும் சுமந்தபடியேதான் வரும். வருமானம் அரசுக்கும் முதலாளிக்கும் செல்லும்போது, பாவம் என்னவோ ஏழை மற்றும் எளிய மக்களைச் சீரழித்துவிடும். இந்திய வனவிலங்கு வாரியம் மற்றும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முக்கியப் பணி, நாட்டின் சூழலியலையும் காட்டுயிர் வளத்தையும் காடுகளையும் பாதுகாப்பதுதான். ஆனால், காட்டு நிலங்களை ஏதோ ரியல் எஸ்டேட் தொழில் நடத்துவதைப் போல் கையாள்வது மேன்மேலும் சூழலியல் சமநிலையைச் சீர்குலைத்து, பேரிடர்களை அதிகரித்துக்கொண்டேதான் இருக்கும்.

கொரோனா
கொரோனா
யானைகளையும் பன்றிகளையும் காவு வாங்கும் பன்றிக்காய்... எப்படி நடக்கிறது, எப்படி தவிர்ப்பது?

கொரோனா காலகட்டத்தில் மேம்பட்ட சுற்றுச்சூழல் இதே நிலையில் இல்லையென்றாலும், முன்பிருந்த அளவுக்கு மோசமாக இருக்கக் கூடாதெனில் அதற்குரிய திட்டமிடுதலை இப்போதிருந்தே அரசு தொடங்க வேண்டும். பசுமைப் பொருளாதாரத்தின்மீது கவனம் செலுத்த வேண்டும். ஸ்மார்ட் சிட்டி, ஸ்மார்ட் வில்லேஜஸ் போன்ற திட்டங்களைவிட தற்போது மிகவும் முக்கியமானது பசுமைக் கிராமங்கள். இந்தியாவில் பசுமைக் கிராமங்கள் இருப்பதுபோலவே, நாம் பசுமை நகரங்களையும் கட்டமைக்க வேண்டும்.

அனைத்து நகரங்களும் சூழலியலுக்குத் தகுந்தவாறு கட்டமைக்கப்பட்டால், அது ஓரளவுக்கு நகர்ப்புறச் சேதங்களைத் தவிர்க்க வழிவகுக்கும். அதேநேரம், காடுகள் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பில் பழங்குடியின மக்களின் பங்கை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும். பழங்குடியினப் பொருளாதாரத்திற்குரிய பலன்கள் அவர்களை நேரடியாகச் சென்றடைவதோடு, அவர்களுடைய கைவினைப் பொருள்களுக்கு தேசிய மற்றும் சர்வதேச சந்தையை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

இத்தகைய முயற்சிகள், சுற்றுச்சூழல் பாதுகாப்பைக் கோவிட் காலகட்டத்திற்குப் பின்னரும் நீட்சியடையச் செய்வதோடு, அதற்கு அடிநாதமாக விளங்கக்கூடிய பழங்குடிகளையும் பொருளாதாரரீதியாக உயர்த்திவிடும்.

சூழலியல் சமநிலை
சூழலியல் சமநிலை

இந்த மிகநீண்ட சமூக இடைவெளிக் காலம் நமக்குப் பலவற்றைக் கற்றுக்கொடுத்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் நம்முடைய கவனம் இல்லையென்றால் எவ்வளவு இழப்புகளைச் சந்திப்போமென்ற அனுபவப் பாடமும் அதில் அடக்கம்.

ஆம், இயற்கை இந்த இடைப்பட்ட காலத்தில் தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டது. அந்த ஆசுவாசம், இனிவரும் காலங்களில் மேன்மேலும் சேதங்களைச் சந்திக்கும்போது அதைத் தாங்கிக்கொள்வதற்கானதா அல்லது மேம்படும் சுற்றுச்சூழலின் முன்னேற்றத்திற்கானதா என்பது கொரோனாவுக்குப் பிந்தைய காலகட்டத்தில் நாம் எப்படி நடந்துகொள்ளப்போகிறோம் என்பதைப் பொறுத்தே அமையும். அதற்கான விதையை உலக சுற்றுச்சூழல் தினமான இன்றே அனைவருடைய மனத்திலும் விதைப்போம். கோவிட் 19-க்குப் பிந்தைய சுற்றுச்சூழல் பாதுகாப்புத் திட்டங்களில் கவனம் செலுத்துமாறு அரசுக்கு அழுத்தம் கொடுப்போம். பாதுகாப்பு நடவடிக்கைகளைவிட முக்கியமானது விழிப்புணர்வு நடவடிக்கை. அதைப் பள்ளியில் தொடங்கி சட்டசபை வரை மேற்கொள்ள உறுதி ஏற்போம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு