Published:Updated:

ஆழ்ந்த உறக்கத்தில் எமனாக வந்த விஷவாயு... விசாகப்பட்டினம் ஆலையின் அலட்சியமே காரணமா?

விஷ வாயு தாக்குதலில் மயக்கமடைந்தவர்
விஷ வாயு தாக்குதலில் மயக்கமடைந்தவர் ( AP Photos )

அதிகாலையில் ஏற்பட்ட வாயுக்கசிவிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருந்தபோதே, சாலைக்கு ஓடிவந்த மக்களில் பலரும் விஷ வாயுவை நுகர்ந்ததால் ஆங்காங்கே மயங்கி விழத் தொடங்கினார்கள்.

இந்தக் கொரோனா காலகட்டத்தின் ஊரடங்கும் கொரோனா தொற்று நோயும் ஏற்கெனவே மக்களை மனதளவில் அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. அந்த அச்சுறுத்தலோடுதான் இரவு உறங்கவே செல்கின்றார்கள். என்னதான் அச்சுறுத்தல் இருப்பினும் இரவு எவ்வளவு நேரம் வரை விழித்திருந்தாலும், நள்ளிரவைக் கடந்து ஏதாவதொரு சூழலில் நாம் நிச்சயம் உறங்கித்தான் ஆக வேண்டும். அப்படி உறங்கும்போது, அதிகாலை 2 மணிக்கு மேல்தான் மிகவும் ஆழமான தூக்கத்துக்குள் செல்வோம். அப்படியொரு நிம்மதியான உறக்கத்துக்குள் செல்லும்போது அடுத்தநாள் காலையில் மரணிக்கப்போவது தெரிந்திருந்தால், மரணத்தின் வாசல்வரை சென்று திரும்பும் மோசமான அனுபவத்தைப் பெறப்போகிறோம் என்று தெரிந்திருந்தால் என்ன செய்திருப்போம். ஒருவேளை தெரிந்திருந்தால், அத்தகைய சூழலிருந்து முன்னமே தப்பியிருக்கலாம். ஆம், வாய்ப்புகள் உண்டு நமக்கு முன்னமே தெரிந்திருந்தால் தப்பியிருப்போம்.

விசாகப்பட்டினம்
விசாகப்பட்டினம்

விசாகப்பட்டினத்திலிருந்த ராஜரத்தின வெங்கடாபுரம், வெங்கடாபுரம் கிராமங்களில் அதிகாலை 3 மணிக்கு, தூக்கத்திலேயே சுவாசக் கோளாறு, மூச்சுத் திணறல் போன்ற சிரமங்களால் பாதிக்கப்பட்டு, பதறியடித்து எழுந்தவர்கள் காற்றில் அசாதாரணமாக ஏதோ பிரச்னை ஏற்பட்டிருப்பதை உணர்ந்து அங்கிருந்து தப்பிப் பிழைக்க ஓடினார்கள். அதில், 10 பேர் இதுவரை இறந்தும் விட்டனர். ஒருவேளை இந்தக் கசிவு முதலில் தெரியவந்த ராஜரத்தின வெங்கடாபுரம், அசோக் நகர், பத்மநாபபுரம் போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்களுக்கு முன்னரே தெரிவிக்கப்பட்டிருந்தால் அவர்களும் தப்பித்து, சுற்று வட்டாரத்திலிருந்த மற்ற கிராம மக்களும் தப்பித்திருப்பார்கள். அதற்கு வழி ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனம் அபாயச் சங்கையும் எழுப்பவில்லை, மக்களை எச்சரிக்கவும் இல்லை. அதனால், ஆயிரக்கணக்கான மக்கள் வாயுக்கசிவினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதிகாலையில் ஏற்பட்ட வாயுக்கசிவிலிருந்து மக்களை வெளியேற்றுவதற்கான முயற்சிகள் நடந்துகொண்டிருந்தபோதே, சாலைக்கு ஓடிவந்த மக்களில் பலரும் விஷ வாயுவை நுகர்ந்ததால் ஆங்காங்கே மயங்கி விழத் தொடங்கினார்கள். அப்படி மயங்கி விழுந்து பாதிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மக்கள் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

இதுவரை கிடைத்த தகவல்களின்படி 10 பேர் உயிரிழந்துள்ளார்கள். 5,000 பேர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கெல்லாம் காரணம், அதிகாலையில் எல்.ஜி.பாலிமர்ஸ் என்ற வேதிமத் தொழிற்சாலையில் ஏற்பட்ட கசிவு. இந்தியாவின் கிழக்குக் கடற்கரையில் அமைந்துள்ள விசாகப்பட்டினத்தில்தான் இந்தக் கோர சம்பவம் நிகழ்ந்துள்ளது. சுமார் 5,000 டன்னுடைய இரண்டு டேங்குகளில் ஏற்பட்ட வாயுக் கசிவு, கொரோனா ஊரடங்கு காரணமாகக் கடந்த மார்ச் மாத இறுதியிலிருந்தே கவனிக்கப்படாமல் இருந்துள்ளது.

கடந்த இரண்டு மாதங்களாகக் கவனிக்கப்படாமலே இருந்த இந்தப் பழுது, டேங்கிற்கு உள்ளே ஏற்பட்ட அதீத வெப்பத்தோடு வேதிம வினை புரிந்து வெளியே மோசமான அளவில் கசிந்ததால், இந்த வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது.

மக்கள் அனைவரும் உறங்கிக்கொண்டிருந்த அதிகாலை வேளையில் சுமார் 3 மணியளவில் இந்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. அதன் விளைவாக, மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம் போன்றவை ஏற்படவே மக்கள் நிலை தெரியாமல் வீதிக்கு வரத் தொடங்கினார்கள். அதிகாலை 3.30 மணியளவில் காவல்துறை உதவி ஆய்வாளர் ராணிக்கு வந்த புகாரின் பேரில் காவல்துறையும் மக்களை அங்கிருந்து அப்புறப்படுத்துவதில் தீவிரமாக ஈடுபட்டனர். எல்.ஜி.பாலிமர் ஆலையிலிருந்து வெளியானது ஸ்டைரீன் (Styrene) என்ற வாயு நியூரோ-டாக்ஸின் வகையைச் சேர்ந்தது என்றும் அது மூளையின் நரம்பு மண்டலத்தைப் பாதிக்கக்கூடியது என்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இதுவரை கிடைத்த தகவல்களின்படி, அந்த வாயு ஆலையைச் சுற்றியுள்ள 6 கிலோமீட்டர் விட்டத்திற்குப் பரவியுள்ளதாகத் தெரிகின்றது. வெங்கடாபுரம், ராஜரத்தின வெங்கடாபுரம், கோபால் பட்டினம், வேப்பகுண்ட ஜங்ஷன், சிம்ஹாத்ரி நகர் உட்பட மொத்தம் 15-க்கும் மேற்பட்ட கிராமங்களைச் சேர்ந்த சுமார் 10,000 பேர் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ராஜரத்தின வெங்கடாபுரம் என்ற கிராமம்தான் எல்.ஜி.பாலிமர்ஸ் நிறுவனம் அமைந்துள்ள பகுதி.

அது குறித்துப் பதிவு செய்துள்ள காவல்துறை உதவி ஆய்வாளர் ராணி, "நாங்கள் உடனடியாக அங்கு சென்றடைந்தோம். வாயு காற்றில் கலந்திருப்பதை அப்பட்டமாக உணர முடிந்தது. சில நிமிடங்களுக்கு மேல் யாராலுமே அங்கு நின்றிருக்க முடியாதபடி, காற்றில் கடுமையாகப் பரவியிருந்தது. மக்களை அங்கிருந்து மீட்கும் பணிக்குரிய வேலைகளை உடனடியாக முடுக்கிவிட்டு, 4 மணிக்கெல்லாம் மக்களை வெளியேற்றத் தொடங்கிவிட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.

ஏ.என்.ஐ-க்குப் பேட்டியளித்துள்ள உள்துறை இணை அமைச்சர் ஜி.கிஷான் ரெட்டி, தேசியப் பேரிடர் மீட்புக் குழுவிடம் உடனடியாகத் தேவைப்படுகின்ற மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவித்திருப்பதாகக் கூறியுள்ளார். இன்று காலை 11.30 மணி வரையிலான தகவல்படி 80 சதவிகித மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுவிட்டனர்.

வாயுக்கசிவு ஏற்பட்ட தருணத்தில், மக்களை உடனடியாக வெளியேற்றியாக வேண்டுமென்று எல்.ஜி.பாலிமர்ஸ் நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை.
J.V.சத்யநாராயணமூர்த்தி, ஆந்திர மாநில சி.பி.ஐ துணைச் செயலாளர்
`சாலையில் மயங்கி விழுந்த மக்கள்... அதிகரிக்கும் பலி எண்ணிக்கை’ -ஆந்திராவைப் பதற வைத்த விஷவாயு கசிவு

தென்கொரிய பேட்டரிகளை உற்பத்தி செய்கின்ற இந்த நிறுவனம், ஆண்டுக்கு 219.5 மில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் ஈட்டுகின்றது. அங்கு ஏற்பட்டுள்ள வாயுக்கசிவு குறித்து அந்நிறுவன அதிகாரிகளிடம் பேசியபோது, "வாயுக்கசிவு இப்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுவிட்டது. இந்த வாயுவை நுகர்ந்ததால் ஏற்பட்டுள்ள விளைவுகளைச் சரிசெய்வதற்கான சிகிச்சை முறைகள் குறித்து ஆராய்ந்துகொண்டிருக்கிறோம். சூழ்நிலையை விரைவிலேயே கட்டுக்குள் கொண்டுவந்துவிடுவோம்" என்றனர். அந்த நிறுவனத்தின் நிர்வாக அதிகாரிகளிடம் வெளியானது என்ன விதமான வாயு என்று கேட்டபோது அவர்களிடமிருந்து முறையான பதில் எதுவும் கிடைக்கவில்லை.

கள ஆய்வில் ஈடுபட்டிருந்த ஆந்திர மாநில சி.பி.ஐ துணைச் செயலாளர் J.V.சத்யநாராயணமூர்த்தி, "இப்போது நிலைமை மிகவும் மோசமாகத்தான் இருக்கிறது. எல்.ஜி நிறுவனத்தின் காம்பவுண்டு சுவர்களைச் சுற்றி வாழ்கின்ற நூற்றுக்கணக்கான கிராம மக்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளும் முதியவர்களும்தான் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 5,000 பேர் வாயுக் கசிவு ஏற்பட்டுள்ள பகுதியில் பாதிக்கப்பட்டுள்ளனர். இதற்கு முழுக்க முழுக்க, அந்த நிறுவனத்தின் மெத்தன போக்குதான் காரணம். அதிகாலையில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது.

விஷவாயுவினால் பாதிக்கப்பட்டவர்கள்
விஷவாயுவினால் பாதிக்கப்பட்டவர்கள்

வாயுக்கசிவு ஏற்பட்ட தருணத்தில், மக்களை உடனடியாக வெளியேற்றியாக வேண்டுமென்று எல்.ஜி.பாலிமர்ஸ் நிறுவனம் எந்த நடவடிக்கையும் எடுக்கவே இல்லை. மக்களேதான், மோசமான மூச்சுத் திணறல் பிரச்னைகளுக்கு ஆளாகி, தாமாக அந்தப் பகுதியிலிருந்து வெளியேறத் தொடங்கினார்கள். ஆழமான தூக்கத்தில் இருந்தவர்களை, உயிருக்காக இப்படி ஓட வைத்துவிட்டது இந்த வாயுக்கசிவு. அப்படி வெளியே வந்தவர்களைக் கண்டு விவரத்தைத் தெரிந்துகொண்ட காவல்துறையும் உடனடியாகக் களத்தில் இறங்கினார்கள். நிலைமை மோசமாவதை உணர்ந்து அபாயச் சங்குகளை ஊதியதோடு, ஆம்புலன்ஸையும் வரவழைத்தனர். அருகிலிருந்த பேருந்து நிலையத்திலிருந்து பேருந்துகளை வரவைத்து, அதன்மூலம் மக்களை அங்கிருந்து வெளியேற்றத் தொடங்கினார்கள். காவல்துறை இந்த விஷயத்தில் தீவிரமாகச் செயல்பட்டுள்ளனர். இந்தத் தொழிற்சாலையைக் கட்டுப்படுத்துகின்ற மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இதில் அவ்வளவு உத்வேகத்தோடு செயல்படாமலே இருக்கின்றது" என்று கூறினார்.

எல்.ஜி பாலிமர்ஸ் நிறுவனத்திலிருந்து அரை கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள வெங்கடாபுரத்தைச் சேர்ந்தவர் சத்யா ஆஞ்சநேயா. அவருடன் பேசியபோது, "கசிவு இப்போது கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். கொரோனா லாக்டௌன் காரணமாக, டேங்கில் சேதம் ஏற்பட்டு வாயு கசிந்து கொண்டிருந்ததைக் கடந்த 45 நாள்களாக யாரும் கவனிக்கவில்லை என்று கூறுகிறார்கள். மருத்துவமனையில் எங்கள் கிராமத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதுபோலவே, சுற்றியுள்ள பத்மநாபபுரம், அசோக் நகர், பி.சி. காலனி போன்ற பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பலரும் வாயுவை நுகர்ந்ததால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

எல்.ஜி.பாலிமர்ஸ்
எல்.ஜி.பாலிமர்ஸ்

ஆந்திர மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியமும் இந்த நிறுவனத்திற்கு 50 சதவிகித வேலையாட்களோடு செயல்பட நேற்று அனுமதி கொடுத்துள்ளது. அதனால், பணிகளைத் தொடங்கும் முன்னர் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள நேற்று ஆலை திறக்கப்பட்டுள்ளது. அந்தப் பராமரிப்புப் பணிகள் நடந்துகொண்டிருந்த நேரத்தில்தான் இந்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. அதிகாலை நேரம் என்பதால் எங்கள் யாருக்குமே இதன் வீரியம் தெரிய வருவதற்குள் பாதிக்கப்படத் தொடங்கிவிட்டோம். யாருமே எங்களுக்கு இதுகுறித்து எச்சரிக்கை மணி எழுப்பவில்லை. மக்கள் அதிகாலையில் உறக்கத்திலிருந்தபோது இந்தக் கசிவு ஏற்பட்டதால், சுதாரித்துக்கொள்ளவே தாமதாகிவிட்டது" என்று கூறினார்.

இந்த வாயுக்கசிவினால் இதுவரை இறந்துள்ளவர்களின் எண்ணிக்கை அதிகாரபூர்வமாக 10 பேர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்த வாயுக்கசிவு குறித்து நமக்குக் கிடைத்துள்ள தகவல்களின்படி சுமார் 50-க்கும் மேற்பட்டோர் மரணித்திருப்பதாகவும் 200-க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சையில் இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

வாயுக்கசிவினால் மயக்கமடைந்தவர்கள்
வாயுக்கசிவினால் மயக்கமடைந்தவர்கள்
`இந்திராவின் மருமகளே வருக!' கருணாநிதி ஏன் சொன்னார்? #OnThisDay

அரசு சரியான தரவுகளை வெளியே சொல்லவில்லை என்று விவரம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, வெளியான வாயுவின் தாக்கத்தைக் காற்றிலிருந்து மட்டுப்படுத்திவிட்டதாகவும் விசாகப்பட்டினம் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. நிலவரத்தைப் பார்வையிட அங்கு நேரில் சென்ற முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி கிங் ஜார்ஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள வாயுக்கசிவால் பாதிக்கப்பட்ட 800 பேரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

கொரோனா லாக்டௌன் நேரத்தில் ஏற்பட்டுள்ள இந்த விபத்து, விசாகப்பட்டினம் மாவட்ட மக்களைப் பேரச்சத்தை விதைத்து, மிகவும் அச்சுறுத்தியுள்ளது. 1,717 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, அதில் 36 பேர் மரணமடைந்திருக்கும் நிலையில் தற்போது ஏற்பட்டிருக்கும் இந்தப் பேரிடர் ஆந்திர மக்களை மனதளவில் வாட்டிக்கொண்டிருக்கிறது.

அடுத்த கட்டுரைக்கு