Published:Updated:

நீலகிரி: `5 நாள்களாக உணவு உண்ணவில்லை!’ - வெடிவைத்து வாய் சிதைக்கப்பட்ட காட்டுமாடு உயிரிழந்தது

காட்டுமாடு
காட்டுமாடு

வெடிவைத்து வாய் சிதைக்கப்பட்ட நிலையில், நாக்கு வெளியில் தொங்கியபடி ரத்தம் சொட்டச் சொட்ட அவதிப்பட்டுவந்த காட்டுமாடு ஒன்று, ஒரு வாரமாக தண்ணீரைக்கூட உட்கொள்ள முடியாமல் பரிதவித்து உயிரிழந்தது.

நீலகிரி மாவட்டம், குன்னூர் அருகிலுள்ள வெலிங்டன் ராணுவப் பயிற்சி முகாம், அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் காட்டுப்பன்றி மற்றும் காட்டுமாடுகளை வெடிவைத்து வேட்டாயாடுவது தொடர்கதையாக இருப்பதாக உள்ளூர்ச் செயற்பாட்டாளர்கள் வேதனை தெரிவித்துவருகின்றனர்.

காட்டுமாடு
காட்டுமாடு

கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும் ஆறு காட்டுமாடுகள் வெடிவைத்து, கொல்லப்பட்டிருக்கின்றன. இந்த ஆறு காட்டுமாடுகளுக்கும் வாய் சிதைக்கப்பட்டு, நாக்கு வெளியில் தொங்கியபடி ஒரே மாதிரியான காயம் ஏற்பட்டு அவதிப்பட்டுவந்திருக்கின்றன. மேலும் உணவு, தண்ணீர் என எதையும் உட்கொள்ள முடியாமல் கடுமையான சித்ரவதைக்கு ஆளாக்கப்பட்டு உயிரிழந்திருக்கின்றன.

நீலகிரி: யானையைத் தொடர்ந்து காட்டுமாடு... மூன்றே ஆண்டுகளில் 6 மாடுகளின் வாய் சிதைக்கப்பட்ட கொடூரம்!

ராணுவ முகாம் அருகிலுள்ள பிளாக் பிரிட்ஜ் பகுதியில் வாய் சிதைக்கப்பட்ட நிலையில், படுகாயத்துடன் காட்டுமாடு ஒன்று கடந்த வாரம் உலவிவந்தது. இதை மீட்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுவந்தனர்.

காட்டுமாடு
காட்டுமாடு

இருப்பினும், அந்தக் காட்டுமாடு இருக்குமிடத்தைக் கண்டறிந்து சிகிச்சை அளிக்க முடியவில்லை. இந்தநிலையில், இதே பகுதியிலுள்ள ஓடை அருகில் அந்தக் காட்டுமாடு பரிதாபமாக உயிரிழந்துகிடந்தது. நிகழ்விடத்துக்குச் சென்ற வனத்துறையினர், காட்டுமாட்டின் உடலை மீட்டு, கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் ‌கூறாய்வு செய்தனர்.

இது குறித்து நம்மிடம் பேசிய வனத்துறை அதிகாரிகள், ``இது ஒரு ஆண் காட்டுமாடு. சுமார் 7 வயது இருக்கலாம். இதன் நாக்கு, கீழ்த்தாடை சிதைந்து கடந்த ஐந்து நாள்களுக்கும் மேலாக, உணவு உட்கொள்ள முடியாமல் இறந்தது தெரியவந்தது. உடற்கூறாய்வு முடிவுகள் வந்த பின்னரே உண்மையான காரணம் தெரியவரும். இந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்த ஏற்பாடுகள் செய்துவருகிறோம்" என்றனர்.

காட்டுமாடு
காட்டுமாடு

இது குறித்து உள்ளூர் மக்கள் பேசுகையில், "காட்டுப்பன்றிகளை வெடிவைத்து வேட்டையாடிவருகின்றனர். இதில் அவ்வப்போது காட்டுமாடுகள் சிக்கிக்கொள்கின்றன. இந்த மூன்று ஆண்டுகளில் வெளியில் தெரிந்தது மட்டுமே ஆறு காட்டுமாடுகள். உண்மையில் எத்தனை இறந்திருக்கின்றன என்பது வனத்துறைக்கே வெளிச்சம்" எனப் புலம்புகின்றனர்.

அடுத்த கட்டுரைக்கு