Published:Updated:

டெல்லி காற்று மாசு... ஜிலேபி சாப்பிட்ட கௌதம் கம்பீர்... வெடித்த சர்ச்சை!

டெல்லி காற்று மாசு பிரச்னை, மக்களின் இயல்பு வாழ்க்கையைக் கடுமையாகப் பாதித்துள்ளது. அதுபற்றிய ஆலோசனைக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்துகொள்ளவில்லை. டெல்லி எம்.பி கௌதம் கம்பீர் இந்தூரில் நண்பர்களுடன் ஜிலேபி சாப்பிட்டுக் கொண்டிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கௌதம் கம்பீர்
கௌதம் கம்பீர் ( Twitter )

தீவிர காற்று மாசு பிரச்னையால் அவதியுற்று வருகிறது இந்தியாவின் தலைநகரம். டெல்லியின் காற்று மாசு அளவுகள் அங்கு வாழும் மக்களின் இயல்புநிலையைப் பாதிக்கும் அளவு உயர்ந்து வருகின்றன. கடந்த நான்கு நாள்களில், தீவிரமடைந்த மாசு அளவுகளால், டெல்லியில் பள்ளிக் குழந்தைகளுக்கு சனிக்கிழமை வரை விடுமுறை அளித்துள்ளது மாநில அரசு.

ஆலோசனைக் கூட்டம்
ஆலோசனைக் கூட்டம்
Twitter
`எமர்ஜென்சியை விட மோசம்'- காற்று மாசு விவகாரத்தில் டெல்லி அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம்!

டெல்லியின் காற்று மாசு அளவுகோல்களை விமர்சித்த உச்ச நீதிமன்றம், டெல்லியின் அரசு அதிகாரிகள் அனைவரையும் பொறுப்பாக்கியது. காற்று மாசு அளவுகளைக் குறைப்பதற்கு மத்திய அரசு, மாநில அரசு, தலைமைச் செயலாளர் முதல் கிராம அதிகாரி வரை பொறுப்பு என்று அறிவித்தது உச்ச நீதிமன்றம். இதையடுத்து, நாடாளுமன்ற உயர்மட்டக் குழு உருவாக்கப்பட்டு, ஆலோசனைக் கூட்டம் திட்டமிடப்பட்டிருந்தது. 21 மக்களவை உறுப்பினர்கள், 8 மாநிலங்களவை உறுப்பினர்கள், டெல்லி மாநிலத்தின் அரசுப் பிரதிநிதிகள், டெல்லி மாநகரத்தின் தலைமை உறுப்பினர் முதலானோர் பங்கேற்பதாக இருந்த கூட்டம் நவம்பர் 15 அன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில், டெல்லி மாநகர அதிகாரிகள், மத்திய சுற்றுச்சூழல் துறை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாருமே கலந்துகொள்ளவில்லை. நாடாளுமன்ற உறுப்பினர்கள் நால்வர் மட்டுமே இந்தக் கூட்டத்தில் பங்கேற்றிருக்கின்றனர். பி.ஜே.பி-யைச் சேர்ந்த ஜகதாம்பிகா பால், சி.ஆர்.பாட்டீல், ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியைச் சேர்ந்த ஹஸ்னைன் மசூதி, ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த சஞ்சய் சிங் ஆகியோர் மட்டுமே கலந்துகொண்டனர். நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் யாரும் பங்கேற்காததால், காற்று மாசு பற்றிய கூட்டம் நடைபெறவில்லை. 

டெல்லி காற்று மாசுபாட்டால் ஹெல்த் இன்ஷூரன்ஸ் பிரீமியம் அதிகரிக்குமா?
டெல்லி மாநிலத்தின் ஒரே பிரதிநிதியாக கிழக்கு டெல்லி நாடாளுமன்றத் தொகுதி எம்.பி-யும் முன்னாள் கிரிக்கெட் வீரருமான கௌதம் கம்பீர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை.

டெல்லி காற்று மாசுப் பிரச்னையை விவாதிப்பதற்கான கூட்டத்தில் கலந்துகொள்ளாத கம்பீர், இந்தூரில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் வர்ணனையாளராக கலந்துகொண்டுள்ளார். இந்தூரில் கம்பீர், வி.வி.எஸ். லக்‌ஷ்மண் ஆகியோர் ஒரு கடையில் ஜிலேபி, போஹா ஆகிய உணவுகளை மகிழ்வோடு உண்ணும் படத்தை ட்விட்டரில் லக்‌ஷ்மண் பதிவிட, சர்ச்சை வெடித்தது.

கௌதம் கம்பீர் நண்பர்களுடன்
கௌதம் கம்பீர் நண்பர்களுடன்
Twitter

"டெல்லி திணறிக்கொண்டிருக்கிறது. கௌதம் கம்பீர் இந்தூரில் கொண்டாட்டமாக இருக்கிறார். டெல்லி எம்.பி-யான அவர், காற்று மாசு தொடர்பான கூட்டங்களில் பங்கேற்க வேண்டும்" என விமர்சனம் வைத்தது ஆம் ஆத்மி கட்சி. அந்தக் கட்சியின் தலைவர் அதிஷி மர்லேனா கம்பீருக்கு கடந்த வாரமே ஆலோசனைக் கூட்டம் பற்றி தகவல் சொல்லப்பட்டதாகவும் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் அவரால் வர முடியாததற்கு வருந்துவதாகவும் பகடி செய்துள்ளார்.

ட்விட்டரில் கௌதம் கம்பீர் மீது கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டு, #ShameOnGautamGambhir என்ற ஹாஷ்டாக், அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது.
#ShameOnGautamGambhir
#ShameOnGautamGambhir
Twitter

ஏற்கெனவே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் டெல்லி காற்று மாசு பிரச்னை பற்றி கூட்டப்பட்ட 3 ஆலோசனைக் கூட்டங்களை ஒத்திவைத்ததாக, டெல்லி துணை முதல்வர் மணிஷ் சிசோடியா குற்றம் சாட்டினார். டெல்லியின் சாலை விதிகளான ஒற்றைப்படை - இரட்டைப்படை எண்கள் விதியை மீறிய பி.ஜே.பி அமைச்சர் விஜய் கோயல் மீது 4,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்தச் சூழலில், கிழக்கு டெல்லி தொகுதி எம்.பி மீதே விமர்சனங்கள் எழுந்துள்ளன.

"எனது பணி பேசும்!"
கௌதம் கம்பீர்

பி.ஜே.பி தரப்பில், ஆம் ஆத்மி கட்சியின் விமர்சனங்கள் டெல்லி மாநில சட்டசபைத் தேர்தலை மனதில்கொண்டு முன்வைக்கப்படுவதாகக் கூறப்பட்டுள்ளது. கௌதம் கம்பீர் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொள்ளாமல், ஜிலேபி சாப்பிட்டுக்கொண்டிருந்த படம் வைரலான நிலையில், அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், தினமும் தனது தொகுதி மக்களுக்காக பணியாற்றுவதாகவும் காற்று மாசு அளவைக் குறைப்பதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் `எனது பணி பேசும்!' என்றும் விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ளார்.

கௌதம் கம்பீர் நண்பர்களுடன்
கௌதம் கம்பீர் நண்பர்களுடன்
Twitter
Vikatan

டெல்லியின் குடிமக்கள் சுவாசிக்க சுத்தமான காற்று இல்லாமல், ஒவ்வொரு நாளும் அவதியுற்று வருகையில், ஆட்சியாளர்கள் மக்களின் துன்பத்தை சரிசெய்ய உடன் நின்றிருக்க வேண்டும்; விளையாட்டுப் போட்டிகளைவிட மனித உயிர்களே முக்கியம்!