Published:Updated:

ஓராண்டில் மட்டும் 227 பேர்; கொல்லப்படும் சூழலியல் போராளிகள்; குளோபல் விட்னஸ் அறிக்கை சொல்வது என்ன?

தங்கள் நிலங்களையும் வளங்களையும் பாதுகாக்கப் போராடும் சமூக-சூழலியல் போராளிகளின் பாதுகாப்பு குறித்து அதிகம் காலநிலை உடன்படிக்கையில் பேசப்படுவதில்லை. இனி பேசப்பட வேண்டும்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

``நீங்கள் எவ்வளவு யுக்திகளை வேண்டுமானாலும் கையாண்டு போராட்டங்களையும் போராளிகளையும் ஒடுக்கலாம். ஒவ்வோர் அடக்குமுறைக்குப் பின்னரும் அதைவிட வலிமையான மக்கள் போராட்டத்தின் எழுச்சி ஏற்படவே செய்யும். நிலமும் நீரும் காற்றும் மக்களின் அடிப்படைத் தேவைகள். நீங்கள் அதைப் பறிக்க முயல்கிறீர்கள். அது மக்களைப் போராளியாகத்தான் மாற்றும். எத்தனை போராட்டங்களை ஒடுக்கினாலும்..."

பழவேற்காடு மீனவர்கள்
பழவேற்காடு மீனவர்கள்

- பழவேற்காடு மீனவர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்கப்போகும் அதானி துறைமுகம் விரிவாக்கத் திட்டம் குறித்து, அப்பகுதி மீனவர்களிடையே பேசிக் கொண்டிருந்த போது, ஒரு முதிய, பல்லாண்டுக்கால அனுபவம் மிகுந்த மீனவர் ஒருவர் கூறிய சொற்கள் இன்றும் நினைவில் இருக்கிறது. தற்போது வெளியாகியுள்ள குளோபல் விட்னஸ் அமைப்பினுடைய அறிக்கை, அவருடைய சொற்களை மீண்டும் நினைவுபடுத்தியது.

உலக அளவில், 2012-ம் ஆண்டு முதல் ஒவ்வோர் ஆண்டும் சுற்றுச்சூழல் சார்ந்த போராட்டங்களில் ஈடுபட்ட சூழலியல் ஆர்வலர்கள் கொல்லப்படுவதைப் பதிவு செய்து, குளோபல் விட்னஸ் என்ற அமைப்பு அறிக்கையாக வெளியிடுகிறது. அதன்படி, 2020-ம் ஆண்டு உலக அளவில் கொல்லப்பட்ட சூழலியல் போராளிகள் குறித்த அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கைப்படி, கடந்த ஆண்டில் தங்கள் நிலத்தை, நிலத்தின் மீதான உரிமைகளைப் பாதுகாக்கப் போராடிய 227 சுற்றுச்சூழல் போராளிகள் கொல்லப் பட்டுள்ளார்கள்.

காலநிலை நெருக்கடி தீவிரமடைந்துகொண்டிருக்கிறது. பூமியின் பல்வேறு பகுதிகளில் காட்டுத்தீ மிகப்பெரிய சேதங்களை உண்டாக்கிக்கொண்டிருக்கிறது. வறட்சியில் வேளாண் நிலங்கள் வாடுகின்றன. வெள்ளம், ஆயிரக்கணக்கான மக்களைக் காவு வாங்கிக்கொண்டிருக்கிறது. இவை போதாதென, அரசு திட்டங்களுக்காக, அரசின் உதவியோடு மக்களின் நிலங்களை, வளங்களைக் கொள்ளையடிக்கத் துடிக்கும் தனியார்களுக்காக என்று தங்கள் நிலங்களைத் தாரை வார்க்க விருப்பமின்றி, தம் மக்களின் நில உரிமையைப் பாதுகாக்க, வாழ்வாதாரத்தைப் பாதுகாக்க ஆயிரக்கணக்கான ஆர்வலர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

குளோபல் விட்னஸ் அறிக்கை
குளோபல் விட்னஸ் அறிக்கை
விவசாயிகளின் நிலங்கள் எப்படியெல்லாம் பறிக்கப்படுகின்றன? ஓசூர் உணர்த்தும் கள யதார்த்தம்!

அப்படிப் போராடுபவர்களில் ஒரு வாரத்துக்கு குறைந்தபட்சம் 4 பேர் என்ற விகிதத்தில் கடந்த ஆண்டு கொல்லப்பட்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. அதோடு, உலக அளவில் பல்வேறு வளரும் நாடுகளில் பத்திரிகையாளர்கள் மீது நடத்தப்படும் அடக்குமுறைகள், ஜனநாயக சுதந்திரத்தின் மீதான ஒடுக்குமுறை ஆகியவற்றால் இன்னும் பல படுகொலைகள் வெளிச்சத்துக்கு வராமலே சென்றுகொண்டிருப்பதாகவும் குறிப்பிடுகிறது இந்த ஆய்வறிக்கை.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மேலும், `நிலம் மற்றும் வளங்களைச் சுரண்டும் கார்ப்பரேட் நிறுவனங்களும் தொழிற்சாலைகளுமே இந்தப் படுகொலைகளில் பெரும்பகுதிக்குக் காரணமாக இருக்கின்றன. மரம் வெட்டுதல், நீர்மின் அணைகள், சுரங்கம், பெருநிறுவன விவசாயம் ஆகியவற்றை எதிர்த்தமைக்காக சுமார் 30 சதவிகித போராளிகள் கொல்லப்பட்டுள்ளார்கள். பிரேசில், நிகாராகுவா, பெரு, பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளில் மரம் வெட்டுதல் மற்றும் பெருநிறுவன விவசாயத்துக்காக என்றே 23 பேர் கொல்லப்பட்டுள்ளார்கள்.

ஆஸ்கார் எய்ராட் ஆடம்ஸ், குமியாய் பூர்வகுடியினத் தலைவர்
ஆஸ்கார் எய்ராட் ஆடம்ஸ், குமியாய் பூர்வகுடியினத் தலைவர்
Northwest National Indigenous Congress
காலநிலை மாற்றத்தைச் சமாளிக்க சிறுதானிய விவசாயம்; ஒடிசா பழங்குடிகளின் வியக்க வைக்கும் சாதனை!

அதில், பாஹா கலிஃபோர்னியாவை தண்ணீர் பற்றாக்குறை நிறைந்த பகுதியாக மாற்றிக்கொண்டிருந்த நீரைச் சுரண்டும் தொழிற்சாலைகளை எதிர்த்தமைக்காகக் கொல்லப்பட்ட, குமியாய் பூர்வகுடியினத் தலைவரும் போராளியுமான ஆஸ்கார் எய்ராட் ஆடம்ஸ் என்பவரும் அடக்கம். தங்கள் பூர்வீக நிலத்தின் வளங்களைச் சுரண்டிய நிறுவனங்களை எதிர்த்துப் போராடியதால் 2020-ம் ஆண்டில் கொல்லப்பட்ட பல பூர்வகுடி மக்களில் அவரும் ஒருவர்" என்று இதுகுறித்து குளோபல் விட்னஸ் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது.

குளோபல் விட்னஸ் அமைப்பின் மூத்த பிரசாரகர் க்ரிஸ் மேடன் இதுகுறித்துப் பேசியபோது, ``நம் நிலத்தைப் பாதுகாக்கப் போராடுவோருக்கு எதிரான இதுபோன்ற வன்முறைகள் முடிவுக்கு வந்துவிட்டன என்று ஒருநாள் அறிக்கை வெளியிட வேண்டும் என்றுதான் கனவு காண்கிறோம். ஆனால், அதற்கு இத்தகைய போராளிகளைப் பாதுகாப்பதில் அரசு தீவிரமாக ஈடுபட வேண்டும். பெருநிறுவனங்கள், லாபத்தைவிட பூமிக்கும் மக்களுக்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும். இவையிரண்டும் நடக்காதவரை, காலநிலை நெருக்கடியோ இதுபோன்ற படுகொலைகளோ குறையப்போவதில்லை. நிலத்துக்காக, அதிலுள்ள வளத்துக்காகப் போராடும் மக்கள் எவ்வளவு அழுத்தங்களையும் அபாயங்களையும் எதிர்கொள்கிறார்கள் என்பதற்கு இந்த ஆண்டின் ஆய்வறிக்கை மற்றுமோர் அடையாளமாகவே நிற்கிறது. இவையனைத்தும் நிறுத்தப்பட வேண்டும்" என்று கூறியுள்ளார்.

க்ரிஸ் மேடன், மூத்த பிரசாரகர், குளோபல் விட்னஸ்
க்ரிஸ் மேடன், மூத்த பிரசாரகர், குளோபல் விட்னஸ்

ஒவ்வோர் ஆண்டும் அதிகமான சூழலியல் போராளிகள் படுகொலை செய்யப்படும் நாடாக கொலம்பியா இருந்து வருகிறது. 2020-ம் ஆண்டும் 65 கொலைகளோடு கொலம்பியாதான் முதலிடத்தில் இருக்கிறது. அப்படி கொலை செய்யப் பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் பூர்வகுடியைச் சேர்ந்தவர்கள். பாதிக்கும் மேற்பட்டவர்கள் சிறு குறு விவசாயிகள். பாட்னாவைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பங்கஜ் குமார் என்பவர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைப் பயன்படுத்தி அவருடைய பகுதியில் நடந்த பல மணல் கொள்ளை தொடர்பான உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்தார். அவர், கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பாட்னாவிலுள்ள சோன் நதிக்கரையில் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் மணல் கொள்ளையர்களைக் காட்டிக் கொடுத்ததற்காக, ஊராட்சித் தலைவியின் மகன் பொன்னிவளவன், மணல் கொள்ளையர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அதே ஆண்டின் ஜூலை மாதத்தில், ஆவடியிலுள்ள கொசவம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ஊராட்சித் தலைவர் மணல் கொள்ளையைத் தட்டிக் கேட்டதற்காகக் கொலை செய்யப்பட்டார்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம், காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்ரவேல் மோசஸ் என்ற பத்திரிகையாளர் சட்டவிரோதமாகக் கஞ்சா விற்பனையாளர்கள் குறித்தும் அவர்கள் புறம்போக்கு நிலத்தில் செய்திருந்த சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் குறித்தும் எழுதியதற்காகக் கொலை செய்யப்பட்டார். உத்தரப் பிரதேசத்திலுள்ள உன்னாவ் மாவட்டத்தைச் சேர்ந்த ஷுபம் மணி திரிபாதி என்ற 25 வயதான பத்திரிகையாளரும் மணல் கொள்ளை சம்பவங்களைச் செய்தியாக்கியதற்காகக் கொல்லப்பட்டார். அவர் கொலை செய்யப்படுவதற்குச் சில நாள்களுக்கு முன்புதான், பெரிய மணல் கொள்ளை கும்பலின் சட்டவிரோத கட்டுமானங்களை அவர் சமர்ப்பித்த அறிக்கையின் வாயிலாக அகற்ற வைத்தார்.

இஸ்ரவேல் மோசஸ், பத்திரிகையாளர்
இஸ்ரவேல் மோசஸ், பத்திரிகையாளர்

இவர்களைப் போலவே ஒடிசாவைச் சேர்ந்த ரஞ்சன் குமார் தாஸ் கொலை செய்யப்பட்டார். அவருடைய மரணத்தில் பா.ஜ.க பிரமுகர் அதானு சப்யசாச்சி நாயக் என்பவருக்கும் பங்கு இருப்பதாகக் குற்றம் சாட்டி, ஒடிசா ஜன சூச்சனா அதிகார் அபியான் சமூக அமைப்பைச் சேர்ந்த ஆர்வலர்கள் குரல் எழுப்பியதோடு போராட்டங்களையும் முன்னெடுத்தது குறிப்பிடத்தக்கது. இப்படி இன்னமும் பல சமூக-சூழலியல் போராளிகள், கொலை மிரட்டல்களையும் வன்முறைகளையும் எதிர்கொண்டு வருகிறார்கள். இன்னும் பலர் கொலை செய்யவும் படுகிறார்கள். அத்தகைய பல கொலைகள் வெளியுலகுக்குத் தெரிய வராமலேயே புதைக்கப்பட்டுவிடுகின்றன.

இந்தத் தாக்குதல் நிற்கப்போவதில்லை, சொல்லப்போனால் வரும் நாள்களில் இன்னும் அதிகமாகலாம். அரசுகள் சமூக-சூழலியல் சார்ந்து இயங்கும் ஆர்வலர்களின் பாதுகாப்பு மீது தீவிர அக்கறை செலுத்தாத வரை, இந்த வன்முறைகள் அடங்கப்போவதில்லை. உண்மையில், பல இடங்களில் அரசே இந்த வன்முறைகளுக்குத் துணை நிற்கின்றன என்ற குற்றச்சாட்டுகளும் எழவே செய்கின்றன.

அடுத்தடுத்து காலநிலை மாற்றம் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகள் உருவாகிக்கொண்டே இருக்கின்றன. அவற்றில், தங்கள் நிலங்களையும் வளங்களையும் பாதுகாக்கப் போராடும் சமூக-சூழலியல் போராளிகளின் பாதுகாப்பு குறித்து அதிகம் பேசப்படுவதில்லை. இனி பேசப்பட வேண்டும். ஒவ்வொரு நாட்டிலும் இதுபோன்ற வன்முறைகளைத் தடுப்பதற்கான கொள்கை முடிவுகள் கொண்டுவரப்பட வேண்டும். மக்கள் உரிமைக்காகப் போராடுவோரைக் குற்றவாளிகளாக்குவது நிறுத்தப்பட வேண்டும்.

கடலோர மீனவர்களின் வாழ்வியல் தொடர்பான கூட்டம் ஒன்றில் இளம் பட்டதாரிப் பெண் ஒருவர், ``பல ஆண்டுகளாக எவ்வளவோ போராட்டங்களை முன்னெடுக்கிறீர்கள். எந்த வகையில் சென்றாலும், அதற்குத் தடை போடுகிறார்கள். எதிர்ப்புகளை முடக்குகிறார்கள். கொள்கை முடிவுகளின் வழியே கொள்ளையடிக்கிறார்கள். என்ன செய்தாலும், பிரச்னை இருந்து கொண்டேயிருக்கிறது. இதற்கு முடிவே இல்லையா?" என்றொரு கேள்வியைக் கேட்டார்.

சூழலியல் போராளிகள்
சூழலியல் போராளிகள்
IPCC ரிப்போர்ட்: `காலநிலை மாற்றம்' டு `காலநிலை ஆபத்து'- விஞ்ஞானிகளின் இறுதி எச்சரிக்கை சொல்வது என்ன?

இந்தக் கேள்வி பல ஆண்டுகளாகவே கேட்கப்படுகிறது. தனியார்களின் நலனையே பொருளாதார நலனாகக் கொண்டு செயல்படுவது தொடரும் வரை, இந்தப் போராட்டங்களும் தொடர்ந்துகொண்டேயிருக்கும். இதில் நாம் செல்ல வேண்டிய பாதை நெடுந்தூரம் உள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதுமே இந்தப் போர் நடந்துகொண்டிருக்கிறது. அவர்கள் லாப நோக்கோடு தாக்குவதை நிறுத்தவில்லை. இவர்களும் நிலங்களையும் வளங்களையும் காக்கப் போராடுவதை நிறுத்தப் போவதில்லை.

மண்ணைக் காக்க, வளத்தைக் காக்க, மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க, தம் நிலத்தையும் வளத்தையும் சுரண்டத் துடிக்கும் பெருமுதலாளிகளின் லாபவெறியை, அரசாங்க அடக்குமுறைகளை எதிர்த்துப் போராடுகிறார்கள். இந்தப் படையின்மீது எத்தனை தாக்குதல்களைத் தொடுத்தாலும் மக்களின் வாழ்வுரிமைகளை மீட்டெடுக்கும் வரை ஓயாது. ஏனெனில், இது லாபத்துக்கான போராட்டமல்ல, உரிமைகளுக்கான போராட்டம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு