Election bannerElection banner
Published:Updated:

நீலகிரி: யானைக்குத் தீவைத்த விவகாரம்... இருவர்மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

யானை
யானை

மசினகுடியில் சட்டவிரோதமாகச் செயல்பட்டுவந்த தனியார் தங்கும் விடுதி வளாகத்தில் உணவு தேடிவந்த காட்டுயானையின் மீது தீப்பந்தத்தை தூக்கியெறிந்து, யானையின் இறப்புக்குக் காரணமாக இருந்த மூவரில் இருவர்மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளி மண்டலப் பகுதியான மசினகுடியில் சட்டவிரோதமாகச் செயல்பட்டுவந்த தனியார் தங்கும் விடுதி வளாகத்துக்குள் இரவு நேரத்தில் உணவு தேடிவந்த ஆண் காட்டுயானையின் மீது எரியும் தீப்பந்தத்தைத் தூக்கியெறிந்து கொளுத்திய வீடியோ வெளியாகி, பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

யானை
யானை

யானையின் இடது காது மற்றும் உடலில் ஏற்பட்ட கடுமையான தீக்காயம் காரணமாக கடந்த ஜனவரி மாதம் 19-ம் தேதி அது பரிதாபமாக உயிரிழந்தது.

காட்டுயானை மீது தீப்பந்தத்தை வீசி, பலத்த காயத்தை ஏற்படுத்தி, அதன் இறப்புக்குக் காரணமான மசினகுடியைச் சேர்ந்த பிரசாத் (36), மாவனல்லா, குரூப் அவுஸ் பகுதியைச் சேர்ந்த மல்லன் என்பவரின் மகன் ரேமண்ட் டீன் (28) ஆகியோரை வீடியோ ஆதாரத்தின் அடிப்படையில் கடந்த ஜனவரி 22-ம் தேதியன்று கைது செய்தனர்.

கைதானவர்கள்
கைதானவர்கள்

இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய மற்றொரு நபரான ரேமண்டின் சசோதரர் ரிக்கி ராயன் (31) கடந்த ஒன்றரை மாதங்களுக்கும் மேலாக தலைமறைவாக இருக்கிறார். தலைமறைவாக இருக்கும் ரிக்கி ராயனின் முன்ஜாமீன் மனுவையும் ஊட்டி நீதிமன்றம் கடந்த மாதம் தள்ளுபடி செய்தது.

இதற்கிடையே இந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு குன்னூர் கிளைச் சிறையிலுள்ள பிரசாந்த், ரேமண்ட் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்ய நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உத்தரவிட்டார்.

சட்டத்துக்குப் புறம்பான தங்கும் விடுதி
சட்டத்துக்குப் புறம்பான தங்கும் விடுதி

இந்த அதிரடி குறித்து முதுமலை புலிகள் காப்பகத்தின் வெளிமண்டல துணை இயக்குநர் ஸ்ரீகாந்த், ``காட்டுயானை மீது தீப்பந்தம் வீசிக் கொன்ற வழக்கில் கைதுசெய்யப்பட்டு, குன்னூர் கிளைச் சிறையிலுள்ள பிரசாந்த், ரேமண்ட் இருவரையும் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க கலெக்டர் உத்தரவிட்டிருக்கிறார். இன்று சிங்கார வனச் சரகர் தலைமையில் வனத்துறையினர் சம்பந்தப்பட்ட இருவரிடமும் உத்தரவை வழங்கி கோவை மத்தியச் சிறையில் அவர்களை ஒப்படைக்கவிருக்கிறார்கள். தலைமறைவாக இருக்கும் ஒருவரைக் கைதுசெய்ய காவல்துறை உதவியை நாடியிருக்கிறோம்" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு