Published:Updated:

`ஆபத்தை உணராத சேலம் மாவட்ட நிர்வாகம்!' - குப்பைமேட்டில் அரசு பொருட்காட்சி நடத்த எதிர்ப்பு

வீ கே.ரமேஷ்
VIJAYAKUMAR M

குப்பைமேட்டில் கேஸ் வெளியேறித் தீப்பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது. குப்பையில் குழி பறித்து ராட்டினம் அமைத்து வருகிறார்கள். அந்த ராட்டினம் நிற்க வாய்ப்பில்லை.

பொருட்காட்சி
பொருட்காட்சி ( விஜயகுமார் )

சேலம் மாவட்ட நிர்வாகம் இந்த ஆண்டு அரசு பொருட்காட்சி நடத்துவதற்குச் சேலம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள குப்பை மேட்டைத் தேர்வு செய்திருக்கிறார்கள். வரும் 4-ம் தேதி பொருட்காட்சி திறப்பு விழா என்பதால் அதற்கான தடபுடலான ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஆனால், பொருட்காட்சி குப்பைமேட்டில் நடத்துவதால் எதிர்ப்புகளும் கிளம்பி இருக்கின்றன.

குப்பைமேடு
குப்பைமேடு
விஜயகுமார்

சேலத்தில் ஒவ்வோர் ஆண்டும் ஆடி மாதம் கோட்டை மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு அரசுப் பொருட்காட்சி பழைய பேருந்து நிலையம் எதிரே உள்ள போஸ் மைதானத்தில் நடத்துவது வழக்கம். இந்த ஆண்டும் ஆடிப் பண்டிகையை முன்னிட்டு, வரும் 4-ம் தேதி அரசுப் பொருட்காட்சி நடைபெற இருக்கிறது. பொருட்காட்சியைத் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க இருக்கிறார்.

ஆனால், வழக்கமாக நடைபெறும் போஸ் மைதானத்தில் தற்போது பழைய பேருந்து நிலையம் தற்காலிகமாகச் செயல்பட்டு வருவதால் அங்கு அரசுப் பொருட்காட்சி நடத்த முடியாது. அதனால் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள குப்பைமேட்டில் அரசுப் பொருட்காட்சி நடத்துவதற்காகத் திட்டமிடப்பட்டு குப்பைகளைச் சமப்படுத்தி பொருட்காட்சிகளுக்கான கடைகள், ராட்டினம் அமைக்கும் பணிகள் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இதனால் சேலம் பொதுமக்கள் அச்சம் அடைந்து வருகிறார்கள்.

குப்பைமேடு
குப்பைமேடு
விஜயகுமார்

இதுகுறித்து சேலம் மக்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பியூஸ் மானஸ், ''சேலம் மாவட்ட நிர்வாகம் தவறான செயலை முன்னெடுத்திருக்கிறது. பொருட்காட்சி குப்பைமேட்டில் நடத்துவது தவறு. அதன் ஆபத்தை மாவட்ட நிர்வாகம் உணராமல் செயல்பட்டு வருகிறது. குப்பை மேட்டில் கேஸ் வெளியேறித் தீப் பிடிக்கவும் வாய்ப்பு உள்ளது. குப்பையில் குழி பறித்து ராட்டினம் அமைத்து வருகிறார்கள். அந்த ராட்டினம் நிற்க வாய்ப்பில்லை. திடீரென சாய்ந்துவிடும். இதனால் பெரும் விபத்து ஏற்படவும் வாய்ப்பு உள்ளது.

பொருட்காட்சிக்குக் குழந்தைகளும் பெரியவர்களும் வருவதால் எளிதாக நோய்த்தொற்று வரவும் வாய்ப்பு உள்ளது. ஏற்கெனவே புதிய பேருந்து நிலையம் அருகே மேம்பாலப் பணிகள் நடைபெற்று வருவதால் நெருக்கடியாக இருக்கிறது. பொருட்காட்சி வந்தால் கடினமான போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் மாவட்ட நிர்வாகம் பொறுப்பற்ற நிலையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

பியூஸ்
பியூஸ்
விஜயகுமார்

இதுபற்றி மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டதற்கு, ''பலகட்ட ஆய்வுகள் மேற்கொண்டு அந்த இடத்தைத் தேர்வு செய்திருக்கிறோம். குப்பைமேடு என்று தெரியாத அளவுக்கு மண் கொட்டப்பட்டுள்ளது. சுகாதாரத்துறை நோய்த்தொற்று வராமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறது. கான்கிரீட் தளம் அமைத்தே ராட்டினம் நிற்க வைக்கப்பட்டுள்ளது. அதனால் எந்த ஒரு ஆபத்தும் ஏற்படாமல் இருப்பதற்கான முன் எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறோம்'' என்றார்கள்.