Published:Updated:

சென்னையில் உயர்ந்த நீர்மட்டத்தைக் காக்க அரசு என்ன செய்ய வேண்டும்?

சென்னை ஒவ்வோர் ஆண்டும் அனுபவித்துக்கொண்டிருக்கும் சூழலியல் சிக்கல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அந்தச் சூழலியல் பாதிப்புகளில் தண்ணீர் தொடர்பான பிரச்னைகளுக்குப் பெரும் பங்குண்டு.

நிலத்தடி நீர்
நிலத்தடி நீர் ( Pixabay )

சென்னையில் 2014-ம் ஆண்டில் குடிநீர்ப் பற்றாக்குறை வழக்கத்தைவிடவும் அதிகம் ஏற்பட்டது. பின்னர் 2015-ல் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக நீர்மட்டத்தின் அளவு சற்று உயர்ந்து காணப்பட்டது. அதன் பின்னர் தொடர்ச்சியாக மூன்று வருடங்களாக சென்னையில் குடிநீர்ப் பற்றாக்குறை மிக மோசமான நிலையில் நிலவி வந்தது. இந்த ஆண்டில் நிலவிய கடும் தண்ணீர்த் தட்டுப்பாட்டால் மக்களின் அன்றாட வாழ்க்கையே பாதிப்புக்குள்ளானது. அரசு சார்பில் ஜோலார்பேட்டையிலிருந்து ரயில்மூலமாகக் குடிநீர் சென்னைக்குக் கொண்டுவரப்பபட்டு விநியோகிக்கப்பட்டது.

மழைநீர் சேகரிப்பு
மழைநீர் சேகரிப்பு

இப்படி, ஒவ்வோர் ஆண்டும் சென்னை மாநகரம் அனுபவித்துக் கொண்டிருக்கும் சூழலியல் சிக்கல்கள் கொஞ்ச நஞ்சமல்ல. அந்தச் சூழலியல் பாதிப்புகளில் தண்ணீர் தொடர்பான பிரச்னைகளுக்குப் பெரும் பங்குண்டு. ஒன்று பெருவெள்ளம் ஏற்பட்டுப் பெருஞ்சேதம் விளைகின்றது. இல்லையேல், சுத்தமாகத் தீர்ந்துபோய் பெரும் வறட்சி ஏற்பட்டுப் பற்றாக்குறையில் வாடுகிறது. இப்படி, எத்தனை பேரழிவுகள் நிகழ்ந்தாலும் இன்னமும் சென்னையின் சூழலியலை மேம்படுத்தவோ மீட்டுருவாக்கவோ உரியவர்கள் தீவிரமாக முயலவில்லை. இத்தனை பாதிப்புகளிலிருந்தும் மீண்டு வந்துவிடும் அளவுக்குச் சென்னை வலிமையாகத்தான் இருக்கிறது. ஆனால், அந்த வலிமையை நாம் அளவுக்கு அதிகமாகவே பரிசோதித்து விட்டோமோ என்ற ஐயமும் எழாமல் இல்லை.

இந்தப் பட்டியலில் கடைசியாக இணைந்த பாதிப்புதான் இந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சி. இந்தப் பற்றாக்குறை எத்தனையோ தாய்மார்களைத் தண்ணீரைத் தேடி ஓட வைத்தது. பல பெண்களை, தங்கள் பணிக்கு விடுப்பு எடுத்துத் தண்ணீர் லாரிக்காகக் காத்திருக்க வைத்தது. ஆனால், அவற்றிற்கு இயற்கையை மட்டும் நாம் குற்றஞ்சாட்ட முடியாது. நாம் விதைத்த வினைகளையே அறுத்துக் கொண்டிருந்தோம். அதற்குச் சரியான உதாரணம், சென்னையின் நிலத்தடி நீர்மட்டம். அளவின்றிப் பயன்படுத்திவிட்டதால், மிகவும் மோசமாகக் குறைந்துவிட்ட நிலத்தடி நீர்மட்ட அளவு, அதிர்ஷ்டவசமாக இப்போது உயரத் தொடங்கியுள்ளது. அதனால், சென்னையின் நீர்ப் பற்றாக்குறை ஒரு தற்காலிக முடிவை எட்டியுள்ளது என்றும் கூறலாம்.

நிலத்தடி நீர்மட்டம் உயர்வு!
ஆலந்தூரில் 13,126 வீடுகளில் 12,244 வீடுகளில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பு வசதி இருந்தது. இங்கு நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு 2.48 மீட்டர்களாக உயர்ந்து காணப்பட்டது.
``ஒரு நாளைக்கு 20 மில்லியன் லிட்டர்!''- நிலத்தடி நீர் மேலாண்மையில் அசத்தும் சென்னை குடிநீர் வாரியம்

ஆம், சென்னையின் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் குடிநீர் சேகரிப்புக் கட்டமைப்பு பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. இந்நிலையில் சென்னை மாநகராட்சியும் சென்னைக் குடிநீர் வாரியமும் இணைந்து சென்னையில் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தவும் குடிநீர் சேகரிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் பல கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டன.

இவற்றின் பலனாகச் சென்னையில் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு கடந்த செப்டம்பர் மாதம் முதல் அக்டோபர் மாதம் வரை 2.5 மீட்டர் அளவு உயர்ந்துள்ளது. சென்னை மாநகராட்சி அளித்த தகவலின்படி 3,00,000 வீடுகளில் மழைநீர் சேமிப்புக்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இதில், 2,17,000 வீடுகளில் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகள் உள்ளன. மேலும், சென்னை மாநகராட்சியின் துரித நடவடிக்கையால் 27,000 வீடுகளில் மழைநீர் சேமிப்பு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் பயன்படுத்தாத வகையில் இருந்த 320 கிணறுகள் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்புகளாக அமைக்கப்பட்டுள்ளன.

நிலத்தடி நீர்மட்டம்
நிலத்தடி நீர்மட்டம்

இவற்றில், அதிகபட்சமாக அம்பத்தூரில் நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு 2.5 மீட்டராக உயர்ந்துள்ளது. அம்பத்தூரில் மொத்தம் 20,238 வீடுகள் மாநகராட்சி அதிகாரிகளால் ஆய்வு செய்யப்பட்டன. அவற்றில் 12,013 வீடுகளில் மழைநீர் கட்டமைப்பு வசதி உள்ளது. ஆலந்தூரில் 13,126 வீடுகளில் 12,244 வீடுகளில் மழைநீர் சேகரிப்புக் கட்டமைப்பு வசதி இருந்தது. இங்கு நிலத்தடி நீர்மட்டத்தின் அளவு 2.48 மீட்டர்களாக உயர்ந்து காணப்பட்டது.

திருவொற்றியூர் மற்றும் மணலி பகுதிகளிலுள்ள வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் மூலம் 50 சதவிகிதத்திற்கும் குறைவான வீடுகளில்தான் மழைநீர் சேகரிப்பு கட்டமைப்பு இருப்பது தெரியவந்தது. இதனால் இந்தப் பகுதிகளில் அக்டோபர் மாத மழைக்குப் பிறகு முறையே 0.65 மீட்டர் மற்றும் 1.02 மீட்டர் மட்டுமே நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது.

`அப்போது அவதிப்பட்டோம்; இப்போது 24 மணி நேரமும் குடிநீர்!'‍- அரசை நம்பாமல் சாதித்த கிராமம் #MyVikatan

சென்னையில் பருவமழை தீவிரமடையக்கூடிய இந்தச் சமயத்தில் மக்கள் தங்கள் வீடுகளில் மழைநீர் சேகரிப்புகான கட்டமைப்புகளைச் சிறப்பான முறையில் செயல்படுத்தியுள்ளனரா என அரசு கண்காணிக்க வேண்டும் என்பது அவசியமான ஒன்று.

அது மட்டுமன்றி, சென்னையின் முக்கிய நீராதாரங்களில் பூண்டி, சோழவரம், வீராணம் போன்ற ஏரிகளும் நிலத்தடி நீருமே முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதுபோக சென்னையின் பல்வேறு பகுதிகளிலுள்ள பல்வேறு நீர்நிலைகளுக்கும் இதில் முக்கியப் பங்குண்டு. அவற்றைச் சரியான முறையில் பராமரித்து, ஒவ்வோர் ஆண்டும் பெய்கின்ற மழைநீரை நிலத்திடம் கொண்டு சேர்க்கவிடாமல் தடுக்கும் தடைகளை உடைத்து, நீரையும் நிலத்தையும் ஒன்று சேர்த்தாலே போதும். சென்னையின் தண்ணீர்ப் பற்றாக்குறை கிட்டத்தட்ட தீர்ந்துவிடும்.

நிலத்தடியில் செல்லமுடியாமல் தேங்கும் நீர்
நிலத்தடியில் செல்லமுடியாமல் தேங்கும் நீர்
Pixabay

நகரங்களின் வளர்ச்சியில், அதற்குள் அமைந்துள்ள நீர்நிலைகளின் பங்கு மிக முக்கியமானது என்பதை அரசுகள் உணரவேண்டும். அவற்றை மக்கள் பங்களிப்போடு பராமரிப்பதற்கான திட்டங்களை முறையாகவும் நேர்மையாகவும் செயல்படுத்தவேண்டும். மழைநீர் சேகரிப்புத் திட்டத்தை அமல்படுத்திய அதே வேகத்தில், நீர்நிலைகள் மீட்டெடுப்புப் பணியையும் முடுக்கிவிட்டுச் செயலாக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்து தமிழக அரசு செயல்பட வேண்டும். அதுவே, சென்னையை நிரந்தரமாக நீர்ப் பற்றாக்குறை இல்லாத நகரமாக மாற்றும்.