Published:Updated:

`தி கார்டியன்' இதழ் எடுத்துள்ள துணிகரமான முடிவு... குவியும் உலக மக்களின் பாராட்டுகள்

தி கார்டியன்
தி கார்டியன்

உலக அளவில் 180 நாடுகளில் வாசகர்களைக் கொண்டுள்ள கார்டியன் நிறுவனம் தனக்கெனத் தனிக் கருத்துகளைக் கொண்டுள்ள நிறுவனமாகும்.

காலநிலை மாற்றம் குறித்த அச்சம் நம் அனைவருக்குள்ளும் இருக்கிறது. வருங்காலம் வசந்தகாலமாக இருக்க வேண்டும் என்று நாம் எண்ணினால் அதற்கு ஏற்றாற்போல் முயற்சி எடுக்க வேண்டும்தானே. அவ்வாறு ஒரு சிறந்த முயற்சியை எடுத்துள்ளது பிரபல பத்திரிகை நிறுவனமான `தி கார்டியன் (The Guardian)'.

புவி வெப்பமயமாதல்
புவி வெப்பமயமாதல்

1821-ம் ஆண்டு நிறுவப்பட்ட பிரிட்டிஷ் நாளிதழ் `தி கார்டியன் (The Guardian)'. இன்று உலகளவில் தலைசிறந்த பத்திரிகைகளில் ஒன்றாகத் திகழ்கிறது. எந்தவொரு பத்திரிகையும் செழித்து வளர விளம்பரங்கள் பிரதானம் இல்லையா? விளம்பரங்களை வரவேற்கும் பல பத்திரிகைகளுக்கு மத்தியில் கார்டியன் நிறுவனம், புதைபடிம எரிபொருள்களை (Fossil fuel) எடுக்கும் எரிபொருள் நிறுவனங்களிடம் இருந்து வரும் விளம்பரங்களை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என்று அறிவித்திருப்பது மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகைய ஒரு முயற்சியை அமல்படுத்திய முதல் பெரிய பன்னாட்டு பத்திரிகை நிறுவனம் என்ற பெருமை The Guardian நிறுவனத்தைச் சாரும். புதைபடிம எரிபொருள்களை எடுக்கும் எந்த ஒரு நிறுவனத்துக்கும் இந்தத் தடை பொருந்தும். தற்போதைய சவால்களில் பெரிய சவால் புவிவெப்பமயமாதலைக் கையாளுதல்தான். எரிபொருள் எடுக்கும் நிறுவனங்கள் சுற்றுச்சூழல் பாதிப்புக்குப் பெரிய காரணமாக உள்ளன. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முயற்சியே இந்த விளம்பரத் தடை என்று தி கார்டியன் நிறுவனத் தலைவர்கள் கூறுகின்றனர்.

Fossil fuel
Fossil fuel
Pixabay

உலக அளவில் 180 நாடுகளில் வாசகர்களைக் கொண்டுள்ள கார்டியன் நிறுவனம் தனக்கெனத் தனிக் கருத்துகளை கொண்டுள்ள நிறுவனமாகும். பொருளாதாரம், அரசியல் சார்பற்று நடுநிலைமையோடு செயல்பட்டு வரும் இந்நிறுவனம் பெரும் பணக்காரர்கள், பங்குதாரர்களால் ஈர்க்கப்படாத, தடுமாறாத கொள்கையை உடையது. இந்நிறுவனம் எடுத்துள்ள இந்த முடிவைத் தொடர்ந்து, தங்கள் ஆதரவைத் தொடருமாறு வாடிக்கையாளர்களுக்குக் கோரிக்கை விடுத்துள்ளது. வணிக மயமாக்கப்பட்ட இந்த உலகில் சமூக-சூழலியல் அக்கறையோடு செயல்படும் `தி கார்டியன்' நிறுவனத்துக்கு வாழ்த்துகள் குவிகின்றன.

அடுத்த கட்டுரைக்கு