Published:Updated:

``கிராம சபைகளே கூட்டப்படவில்லை!” - மாநிலங்களின் அறிக்கையைச் சாடும் பழங்குடியினப் போராளிகள்

க.சுபகுணம்

இந்திய வன உரிமைச் சட்டம் தொடர்பான பழங்குடியின வெளியேற்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இந்த நிலையில், இன்னமும்கூட உரிமை கோரிய மனுக்கள் முழுமையாகப் பரிசீலிக்கப்படவில்லை.

பழங்குடியின மக்கள்
பழங்குடியின மக்கள்

பழங்குடியின மக்களைக் காடுகளை விட்டு வெளியேற்ற வேண்டுமென்று கோரி தொடரப்பட்ட வழக்கு நாடு முழுவதும் பல அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. இந்த நிலையில், நேற்று இந்திய வன உரிமைச் சட்டத்தின் அடிப்படையில், வன உரிமை மறுக்கப்பட்ட மனுக்களின் நிலை குறித்து உச்சநீதிமன்றத்தில் மாநிலங்கள் அறிக்கை சமர்ப்பிக்கத் தொடங்கின.

இங்கு முரண்பாடு என்னவென்றால், மத்தியப் பிரதேசத்தின் பல மாவட்டங்களில் இன்னமும் கிராம சபைகளே கூட்டப்படவில்லை. ஆகவே, அங்கு மறுபரிசீலனைக்குச் செல்லவேண்டிய 3.6 லட்சம் மனுக்கள் அப்படியே நிலுவையில் இருக்கின்றன. இப்படியிருக்க, மத்தியப் பிரதேச அரசு எப்படி முழுமையான அறிக்கை சமர்ப்பித்திருக்க முடியும்?
பழங்குடியினப் போராளிகள்

இந்த விஷயத்தில் மாநில அரசுகள் மிகவும் மந்தமாகச் செயல்படுவதாகக் குற்றம்சாட்டுகின்றனர். இந்திய வன உரிமைச் சட்டம் யாருக்கும் புதிதாக உரிமைகளை வழங்கவில்லை. ஏற்கெனவே பல்லாண்டு காலமாக இருக்கின்ற உரிமைகளைச் சட்டபூர்வமாக அங்கீகரிக்கின்றது. அதைச் செய்யக்கூட மாநில அரசுகள் நீண்ட காலமாக முன்வராமல் இருக்கின்றன.

Vikatan

புர்ஹான்பூர் மாவட்டத்தில், சுமார் 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. அந்தக் கிராமங்கள் பல்லாண்டு காலமாக இருக்கின்றன. அங்கிருந்து பதிவான 14,260 மனுக்களில் 6,462 மனுக்களை மறுபரிசீலனையின்றி நிராகரித்துள்ளார்கள். அதோடு அந்த மக்களை வெளியேற்றுவதில் வனக்காவலர்கள் ஈடுபடவே, சிவால் என்ற கிராமத்தைச் சேர்ந்த மக்கள்மீது பெல்லெட் குண்டுகளையும் பயன்படுத்தியுள்ளார்கள். வெளியேற்றத்தின்போது நடந்த இந்த வன்முறையால், நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

இந்திய வன உரிமைச் சட்டம்
இந்திய வன உரிமைச் சட்டம்

இதைக் கண்டித்து நேற்று, நேபாநகர் டெஸில் கிராமத்தைச் சேர்ந்த 1000 பேர் காவல் துறை அலுவலகத்துக்கு வெளியே தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். நிலைமை இப்படியிருக்க, இன்று விசாரணைக்கு வரும் இந்திய வன உரிமைச் சட்டம் தொடர்பான வழக்கின் முடிவு எப்படியிருக்குமென்ற எதிர்பார்ப்பில் நாட்டின் அனைத்துப் பழங்குடியின மக்களும் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள்.