Published:Updated:

ஒலி மாசுபாடு பட்டியலில் சென்னை முதலிடம்... காத்திருக்கும் விபரீதமான விளைவுகள்!

ஒலி மாசுபாடு
ஒலி மாசுபாடு ( Pixabay )

நகரங்களுக்குள் ஒலியைக் குறைப்பதோ ஒலி மாசுபாடு முற்றிலுமாகச் சரி செய்வதோ இன்றைய சூழலில் சாத்தியமற்றதாகத் தோன்றலாம். ஆனால், மும்பை போக்குவரத்துக் காவலர்களின் இந்த முயற்சி, ஓர் ஒளியை உருவாக்கியுள்ளது.

சாலையில் சிவப்பு விளக்கு எரிந்தால் வாகனங்களை நிறுத்த வேண்டுமென்பதுதான் சர்வதேச அடையாளமாக இருந்துவருகிறது. ஆனால், இந்தியாவில் அப்படியில்லை. சிவப்பு விளக்கு எரிந்தாலே, இடைவிடாமல் ஹார்ன் அடிக்க வேண்டும் என்பதுதான் நம் பொதுப்புத்தியில் பதிந்துள்ளது. இதைக் கட்டுப்படுத்த நினைத்த மும்பை போலீஸ்,``அதிகமாக ஹார்ன் அடித்தால், அதிகமாகக் காத்திருங்கள்" என்ற முயற்சியை மேற்கொண்டுள்ளது. சிக்னலில் காத்திருக்கப் பொறுமையின்றி தொடர்ந்து ஹார்ன் அடித்துக்கொண்டேயிருந்தால், அதற்கேற்றவாறு சிக்னலில் அதிகநேரம் காத்திருக்க வேண்டிவரும்.

பெருநகரங்கள்
பெருநகரங்கள்

இந்த ஹார்ன் விஷயம் சாதாரண விஷயம்தானே என்று தோன்றலாம். ஆனால், இது பெரிய சிக்கல்களை அதன் பின்னணியில் கொண்டுள்ளது. இவை, நகரத்திற்குள் ஒலி மாசுபாட்டுப் பிரச்னையை அதிகப்படுத்துகின்றன. இது ஒரு முக்கியமான, ஆபத்தான பிரச்னையும்கூட.

இதன் தீவிரத்தைப் புரிந்துகொள்ள சில தரவுகளைப் பார்க்க வேண்டும். மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், நாட்டின் பெருநகரங்களில் பொருத்தப்பட்டுள்ள ஒலி அளவு கண்காணிப்பு மையங்கள் மூலமாக, ஒலி அளவுகளைப் பதிவு செய்கின்றது. கடந்த 2018-ம் ஆண்டின் தரவுகள், இந்தியாவிலுள்ள 6 பெருநகரங்களில் சென்னைதான் அதிக ஒலி மாசுபாடுள்ள நகரம் என்று கூறுகின்றது. சென்னைக்குள் இருக்கின்ற 10 கண்காணிப்பு மையங்களில், பகல் பொழுதில் சராசரியாக 67.8 டெசிபெல் பதிவாகியுள்ளன. டெல்லியில், சராசரியாக 61 டெசிபெல் பதிவாகியுள்ளது. மிகவும் நெருக்கடியான, போக்குவரத்து நெரிசல் மிகுந்த பெருநகரமாகக் கருதப்படுகிறது டெல்லி. அதைவிடவே சென்னையில் ஒலி மாசுபாடு அதிகமாக இருக்கின்றது. ஒலியின் அளவை கணக்கிடுவதற்காகப் பயன்படுவதுதான், டெசிபெல் என்ற அளவீடு.

மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரிய விதிகளின்படி, நகரங்களின் குடியிருப்புப் பகுதிகளில் ஒலி அளவு, பகல் பொழுதில் 55 டெசிபெலையும் இரவில் 45 டெசிபெலையும் தாண்டக்கூடாது. இந்தக் கணக்கின்படி பார்த்தால், டெல்லி, சென்னை மட்டுமின்றி கிட்டத்தட்ட இந்தியாவிலுள்ள அனைத்து நகரங்களுமே ஒலி மாசுபாடு விதிமுறைகளை மீறுகின்றன. 6 பெருநகரங்களில், குடியிருப்புப் பகுதிகளில் பொருத்தப்பட்டுள்ள 13 கண்காணிப்பு மையங்கள் பதிவு செய்துள்ள தரவுகளின்படி, 2018-ம் ஆண்டின் ஒவ்வொரு நாளுமே இந்தப் பிரச்னை இருப்பதாகக் கூறுகின்றது டெல்லியைச் சேர்ந்த 'லைவ் மின்ட்' என்ற ஆங்கில நாளிதழ். ஹைதராபாத்திலுள்ள பாரடைஸ் ஜங்ஷன்தான், 79 டெசிபெலோடு இந்தியாவின் மிக அதிகமாக ஒலி மாசுபாடுள்ள பகுதியாக அறியப்படுகின்றது.

Representational image
Representational image

ஒலி மாசுபாடு, மோசமான பாதிப்புகளை உருவாக்கும் என்று கூறுகின்றது உலக சுகாதார நிறுவனம். தொடர்ந்து, அளவுக்கு அதிகமான ஒலியை கேட்டுக்கொண்டேயிருக்கையில், காது கேட்கும் திறனில் குழந்தைகளுக்குக் குறைபாடு ஏற்படும். தெற்கு ஆசியப் பகுதி, ஏற்கெனவே காது கேளாத குழந்தைகள் மற்றும் பெரியவர்களை அதிகமாகக் கொண்டுள்ளது. 2011-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனம் மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள், அதீத ஒலி இதய நோய்களை, மன அழுத்தத்தை அதிகரிக்கும் என்றும் குழந்தைகளின் அறிவு வளர்ச்சியை மட்டுப்படுத்தும் என்றும் நிரூபித்துள்ளது.

மக்களின் உடல்நலத்தையும் தாண்டி, ஒலி மாசுபாடு பொருளாதாரத்தையே பாதிக்கும் என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. இரவு நேரத்தில் ஏற்படும் அதிக ஒலி, தூக்கத்தைக் கெடுக்கின்றது. அமைதியான உறக்கம் இல்லாததால், உழைப்பவர்களுடைய திறன் குறைவதாகவும், அது உற்பத்தியைப் பாதிப்பதாகவும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. கென்யாவில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வின் முடிவுகள், ஒலி மாசுபாட்டில் 10 டெசிபெல் அதிகரித்தால், உற்பத்தியில் 5 சதவிகிதம் குறைவதாக நிரூபித்துள்ளது.

டெல்லி
டெல்லி

நகரங்களுக்குள் ஒலியைக் குறைப்பதோ முற்றிலுமாக ஒலி மாசுபாட்டைச் சரிசெய்வதோ இன்றைய சூழலில் சாத்தியமற்றதாகத் தோன்றலாம். ஆனால், மும்பை போக்குவரத்துக் காவலர்களின் இந்த முயற்சி ஓர் ஒளியை உருவாக்கியுள்ளது. இதைக் கட்டுப்படுத்துவதற்கான முதல் படியாக, இதை அனைத்து நகரங்களுமே முன்னெடுக்க வேண்டும். இந்த முன்னெடுப்பு, அனைத்து மக்களிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தும். இதற்கு அடுத்தகட்டமாக, அவசியமில்லாத சூழ்நிலைகளில், போக்குவரத்து சிக்னல்களில் பொறுமையாக நிற்கமுடியாமல் ஹாரன் அடிப்பவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும். ஒலி மாசுபாடு நீண்டகாலப் பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை மக்களுக்குப் புரிய வைப்பதில் இத்தகைய முயற்சிகளே கைகொடுக்கும்.

கற்பனை செய்து பாருங்கள், ஒருவர் உங்களிடம் தொடர்ந்து சத்தமாகவே பேசிக்கொண்டிருக்கிறார். அவர் உங்களை வெறுப்பேற்ற வேண்டுமென்றோ, கோபப்படுத்த வேண்டுமென்றோ நினைத்து அப்படிப் பேசுவதில்லை. அவர்களுடைய பேச்சே அப்படித்தான். அது உங்களுக்கும் தெரியும். இருப்பினும் ஓரளவுக்கு மேல் உங்களால் அதைப் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை. ஒரு கட்டத்திற்கு மேல் எரிச்சலடைகிறோம், அந்த நபரிடம் நம் கோப முகத்தையே காட்டத் தொடங்குகிறோம்; விலகியிருக்கவே முயல்கிறோம். அதற்குக் காரணம், அவர்களிடம் ஏற்படும் வெறுப்பல்ல. அதீத ஒலியைக் கேட்டுக் கேட்டு ,அதைத் தாங்கிக்கொள்ள முடியாத மூளை, உங்களுக்கு எச்சரிக்கை விடுகிறது. உங்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துகிறது.

சென்னை
சென்னை
Unsplash

அதேபோலத்தான், உங்கள் ஹாரனும். நீங்கள் அழுத்தினாலும் சரி, மற்றவர் அழுத்தினாலும் சரி, பாதிப்பு என்னவோ உங்களைச் சுற்றியுள்ளவர்களோடு சேர்த்து உங்களுக்கும்தான். ஏனென்றால், உங்களுக்கும் காதுகள் உள்ளன. அவை மூளையோடு தொடர்பில் உள்ளன. மூளை மொத்த உடலோடும் தொடர்பில் உள்ளது. பெருநகரங்களில் இப்போது சென்னைதான் ஒலி மாசுபாட்டில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், அனைவருக்கும் இந்த உண்மையைப் புரியவைக்க, சென்னை போக்குவரத்துக் காவல் துறையும் இதுபோன்ற முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். மக்களுக்கு ஒலி மாசுபாட்டின் ஆபத்தைப் புரிய வைக்க வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு