Published:Updated:

6 மில்லியன் ஹெக்டேர் காட்டை எரித்த ஆஸ்திரேலிய காட்டுத் தீ! 

ஆஸ்திரேலியா
ஆஸ்திரேலியா

தென்னமெரிக்காவில் ஏற்பட்ட நெருப்பு, அமேசானின் மிகவும் நுண்ணிய, உணர்திறன் மிகுந்த சூழலியல் அமைப்புகளைப் பாதித்தன. ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ, சூழலியலில் மட்டுமின்றிக் காட்டுயிர்களுக்கும் மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை உண்டாக்கியுள்ளது.

காட்டுத்தீ குறித்து இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் கேட்டிருந்தால், பெரியளவில் மக்கள் மத்தியில் தெரிந்திருக்காது. 21-ம் நூற்றாண்டு தொடங்கி 20 ஆண்டுகள் கடந்துவிட்டன. அதற்குள் எவ்வளவு மாற்றங்கள்!

காட்டுத்தீயைக் காரணமாக வைத்து ஒரு நாடே புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்குத் தடை விதிக்கும் அளவுக்கு இன்று அது தீவிரப் பிரச்னையாக வந்து நிற்கிறது.

மல்லகூட்டா
மல்லகூட்டா

புத்தாண்டின்போது, ஒருமணி நேரத்துக்கும் மேலான வாணவேடிக்கைகள், நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்திலுள்ள சிட்னியில் செவ்வானத்தை உருவாக்கின. காட்டுத்தீயால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்தில் கொண்டாட்டம் வேண்டாமென்று ஆஸ்திரேலியா அறிவித்திருந்த போதிலும், வாணவேடிக்கைகளோடு கொண்டாட்டத்தில் ஈடுபட்டதற்காக சிட்னி விமர்சனங்களையும் எதிர்கொண்டது.

சிட்னி மற்றும் மெல்பர்ன் நகரங்களுக்கு இடையே அமைந்துள்ள மல்லகூட்டா (Mallacoota) என்ற கடற்கரை நகரத்தில் நான்கு மாதங்களாக எரிந்துகொண்டிருக்கும் காட்டுத்தீயால், வானம் ரத்தச் சிவப்பு நிறத்துக்கு மாறியிருந்தது. காட்டுத்தீ என்றதும் அமேசான் ஞாபகம் வருகிறதா?

ஆம், 2019-ம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய மழைக்காடான அமேசானில் ஏற்பட்ட காட்டுத்தீயையும் அதனால் விளைந்த சேதங்களையும் யாராலும் மறந்திருக்க முடியாது. அந்தக் காட்டுத்தீயில் சேதமடைந்த வனப்பரப்பைவிட இரண்டு மடங்கு அதிகமான நிலப்பரப்பு ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீக்கு இரையாகியுள்ளன. கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கிய இந்த நெருப்பு நான்கு மாதங்களைக் கடந்து இன்னமும் எரிந்துகொண்டிருக்கிறது.

2018-ம் ஆண்டில் ஏற்பட்ட கலிஃபோர்னியா காட்டுத்தீ நமக்கு நன்றாகவே நினைவிருக்கும். அதில் அழிந்த நிலப்பரப்பைவிட ஆறு மடங்கு அதிகமாக இதில் அழிந்துள்ளது. கலிஃபோர்னியாவில் 800,000 ஹெக்டேர் காடு நெருப்புக்கு இரையானது. பிரேசிலில் அமேசான் காட்டுப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ, அங்கு மூன்று மில்லியன் ஹெக்டேர் வனப்பரப்பை அழித்தது. நான்கு மாதங்களைக் கடந்து எரிந்துகொண்டிருக்கும் ஆஸ்திரேலிய காட்டுத்தீ ஆறு மில்லியன் ஹெக்டேர் காட்டு நிலத்தை விழுங்கியும் இன்னமும் பசியாறாமல் எரிந்துகொண்டிருக்கிறது.

கங்காரூ
கங்காரூ
AP

தென் அமெரிக்காவில் ஏற்பட்ட நெருப்பு, அமேசானின் மிகவும் நுண்ணிய, உணர்திறன் மிகுந்த சூழலியல் அமைப்புகளைப் பாதித்தன. ஆஸ்திரேலியாவில் ஏற்பட்ட காட்டுத்தீ, சூழலியலில் மட்டுமன்றி காட்டுயிர்களுக்கும் மிகப்பெரிய அளவில் பாதிப்புகளை உண்டாக்கின.

காட்டுத்தீயால் ஏற்பட்டுள்ள சேதங்களை விவரிக்கும் படங்கள், மனதை ரணமாக்குகின்றன. காடுகளையொட்டி வாழும் மக்களின் வாழ்வியலில் எவ்வளவு பெரிய சேதத்தை இது உருவாக்கிவிட்டது என்பதை அந்த ஒளிப்படங்களே நமக்கு உணர்த்துகின்றன. காட்டுத்தீயால் பாட்லோவ் என்ற நகரத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களைச் சமூக வலைதளத்தில் பதிவேற்றிய ஒருவர்,

``தீயால் அழிந்துவரும் பாட்லோவ் நகரத்தில் நான் பார்த்த காட்சி, என் இதயத்தை நொறுக்கும் விதமாக இருந்தது. அங்கு நடப்பதைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும் இந்தச் சம்பவத்தை உலகம் நிச்சயம் அறிய வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலியா காட்டுத்தீ தொடர்பாகவும் கோலாக்கள் தொடர்பாகவும் வெளியான வீடியோ, புகைப்படங்கள் போன்றவை மொத்த உலகத்தையும் உறையவைத்துள்ளன. அங்கு ஏற்பட்டுள்ள காட்டுத்தீக்கு இரையான மொத்த நிலப்பரப்பின் அளவு, பெல்ஜியத்தின் நிலப்பரப்பைவிட இரண்டு மடங்கு அதிகமாக உள்ளதாகக் கூறுகிறார்கள் சேதங்களைக் கணக்கிட்ட ஆய்வாளர்கள். இது கிட்டத்தட்ட கேரளாவை விடவும் இரண்டு மடங்கு அதிகமான நிலப்பரப்பு என்பதும் குறிப்பிடத்தக்கது. கேரளாவின் மொத்த நிலப்பரப்பு 3.9 மில்லியன் ஹெக்டேர். ஆஸ்திரேலிய காட்டுத்தீக்கு இரையான மொத்த நிலப்பரப்பு 6 மில்லியன் ஹெக்டேர். நியூ சௌத் வேல்ஸ் மாகாணத்தில் மட்டுமே நான்கு மில்லியன் ஹெக்டேர் வனப்பகுதி அழிந்துள்ளது.

ஆஸ்திரேலிய காட்டுத்தீ
ஆஸ்திரேலிய காட்டுத்தீ
AP
கருகிய கங்காருகள், தீயணைக்க பறக்கும் ஹெலிகாப்டர்கள்; நடுங்கவைக்கும் ஆஸ்திரேலிய காட்டுத் தீ! #PhotoAlbum
``ஆயிரக்கணக்கான ஹெக்டேர் காட்டு நிலம் நெருப்புக்கு இரையாவதை நாம் பார்த்திருப்போம். இப்போது, அந்த அளவு மில்லியன்களில் சென்றுகொண்டிருக்கிறது" என்கிறார் காமன்வெல்த் அறிவியல் மற்றும் தொழிற்சாலை ஆராய்ச்சி மையத்தின் ஆய்வாளரும் சர்வதேச கரிமத் திட்டத்தின் (Global Carbon Project) செயல் இயக்குநருமான முனைவர்.பெப் கனடெல் (Dr.Pep Canadel).

இப்போது இழந்த வனப்பரப்பை மீண்டும் மீட்டுருவாக்க நமக்குக் குறைந்தபட்சம் 100 வருடங்கள் தேவைப்படும் என்கிறார் பெப் கனடெல்.

எரிந்த காடுகள், சுற்றுப்பகுதியில் வெப்பநிலையை அதிகரிப்பதோடு, அவை கிரகித்துக்கொண்டிருந்த கரிமத்தையும் வளிமண்டலத்தில் வெளியேற்றிக்கொண்டிருக்கும். இதனால், பூமியின் தட்பவெப்பநிலையிலும் அதன் தாக்கம் இருக்கவே செய்யும்.

நம் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில் அதற்குக் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட நம்மிடமிருக்கும் ஆயுதம்தான் காடுகள்.

இன்னும் எவ்வளவு நிலம் எரிகின்றதோ, அவ்வளவில் இருந்தும் கரிம வாயு வெளியேறும். பூமியின் தட்பவெப்பநிலை உயரும். இவை இன்னும் எவ்வளவு அதிகமாக நடக்கிறதோ அவ்வளவு அதிகமாகப் பாதிப்புகளும் பூமியில் ஏற்படும். இது ஆஸ்திரேலியாவை மட்டுமே பாதிக்கும் என்று இருந்துவிட முடியாது. மொத்தமாகப் பூமியின் மீதே இவை விளைவுகளை உண்டாக்கும். இதுவரை எரிந்த காட்டுத்தீயே சுமார் 350 மில்லியன் மெட்ரிக் டன் கரிம வாயுவை வளிமண்டலத்தில் வெளியேற்றியிருக்கும். இதில் பாதியளவு கரிம வாயுதான் அமேசான் எரிந்தபோது வெளியேறியது.

ஒரு காடு அழிந்தால் அதைச் சார்ந்திருக்கும் நாடும் அழியும். ஆனால், ஆஸ்திரேலியாவில் அழிந்துகொண்டிருக்கும் காடு, அமேசானில் அழிந்த காடு அனைத்தும் மனித இனத்தின் அழிவையே விரைவுபடுத்துகின்றன. அதிலிருந்து நம்மை அழிக்கும் காலநிலை மாற்றத்தை விரைவுபடுத்தும் வல்லமைமிக்கக் கரிம வாயுக்களின் வெளியேற்றம் அதிகமாகின்றது.

காட்டுத்தீ
காட்டுத்தீ

நம் எதிர்காலம் பாதுகாப்பாக இருக்க வேண்டுமெனில் அதற்குக் காலநிலை மாற்றத்தை எதிர்த்துப் போராட நம்மிடமிருக்கும் ஆயுதம்தான் காடுகள். அமேசானையோ, கலிஃபோர்னிய காடுகளையோ, ஆஸ்திரேலியக் காடுகளையோ காப்பாற்றுவதால் நாம் அதை மட்டும் பாதுகாக்கப்போவதில்லை, அதன்மூலம் நமக்கு நிகழவிருக்கும் பேரழிவிலிருந்து நம்மை நாமே காப்பாற்றிக்கொள்ளப் போகிறோம். ஆனால், நடக்கும் நிகழ்வுகள் அதற்கான நேரம் கடந்துவிட்டதோ என்ற ஐயத்தையும் சேர்த்தே ஏற்படுத்துகின்றன.

அடுத்த கட்டுரைக்கு