Published:Updated:

காடுகளை உருவாக்கும் கார்பன் வரி... சாதித்த கோஸ்டா ரிகா, இந்தியாவால் முடியுமா?

மழைக்காடுகளை நாம் அழிக்கும்போது, காலநிலை அவசரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நம்மிடம் இருக்கும் பலமான ஆயுதத்தைத் தொலைக்கிறோம் என்று அர்த்தம்.

காடழிப்பு, உயிரினங்கள் அழிவு, கடல்மட்ட உயர்வு என்று தொடர்ந்து தீவிரப் பிரச்னைகளைப் புவி வெப்பமயமாதல் உருவாக்கிக்கொண்டிருக்கிறது. தொடர்ந்து பேசிப்பேசி சலிப்பு தட்டிவிட்ட விஷயங்கள்தாம். ஆனால், இயற்கையின் செயல்பாடுகளில் மனித இனம் செய்துள்ள தலையீடுகளால் ஏற்பட்டுக்கொண்டிருக்கும் விளைவுகளுக்கு சலிப்புத் தட்டுவதில்லை. அவை, தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கின்றன.

அப்படியான பாதிப்புகளுக்குக் காரணம் புவி வெப்பமயமாதல். அத்தகைய வெப்பமயமாதலுக்கான காரணங்களில் முக்கியமான ஒன்று, பசுமை இல்ல வாயுக்களை அதிகமாக வெளியிடுவது. அவற்றில், அளவுக்கு அதிகமாக நாம் வெளியிட்டுக்கொண்டிருக்கும் ஒன்றுதான் கரிம வாயு. கரிம வெளியீட்டை கட்டுக்குள் வைக்க, பல ஆண்டுகளாக ஐக்கிய நாடுகள் சபை தீர்மானங்களை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. ஆனால், அரசுகள்தான் அதைப் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை.

மாசுபாடு
மாசுபாடு
Pixabay

இந்நிலையில், கடந்த வாரம் 'நேச்சர்' என்ற ஆய்விதழில் ஒரு கட்டுரை வெளியானது. கொலராடோ பல்கலைக்கழகத்தில் பொருளாதாரப் பேராசிரியராக இருக்கும் எட்வர்டு பார்பியர், கொலம்பியாவின் சுற்றுச்சூழல் அமைச்சராக இருக்கும் ரிகார்டோ லொஸானோ, கோஸ்டா ரிகாவினுடைய சுற்றுச்சூழல் அமைச்சரான கார்லோஸ் ரோட்ரிகஸ் ஆகியோர் இணைந்து இந்த ஆய்வைச் செய்துள்ளனர். இந்த ஆய்வு, புவியின் வெப்பமண்டலப் பகுதிகளிலுள்ள நாடுகள் கரிம வரியைக் (Carbon tax) கட்டாயமாக்க வேண்டுமென்று வலியுறுத்தியது. அதாவது, வெளியிடுகின்ற கரிம வாயுவின் அளவைக் கணக்கெடுத்து அதற்கேற்றவாறு வரி கட்ட வேண்டும். கரிம வரி என்றால் என்ன?

மனித இனம், வெப்பமண்டலக் காடுகளை கடந்த சில ஆண்டுகளில் பெரிய அளவில் அழித்துவிட்டது. 2018-ம் ஆண்டிலிருந்து முன்பு போலவே காடழிப்பு தீவிரமடைந்துள்ளதாக இந்த அறிக்கை குறிப்பிடுகிறது. ஆனால், தென்னமெரிக்காவின் இரண்டு நாடுகள், காடழிப்பைக் கட்டுப்படுத்தியதோடு, முன்னர் அழிந்துவிட்ட காடுகளை மீட்டுருவாக்கின. கோஸ்டா ரிகாவும் கொலம்பியாவும் அதை மட்டும் செய்யவில்லை. அதன்மூலம் மக்களுக்கு வருமானம் கிடைக்கும் வகையிலும் ஏற்பாடுகளைச் செய்தன.

இந்த நாடுகளால் இதை எப்படி சாத்தியப்படுத்த முடிந்தது?
இந்த இரண்டு நாடுகளிடமுமே இதை சாத்தியப்படுத்தக்கூடிய கரிம வரித் திட்டம் இருந்தது.

பொருளாதார அறிஞர்கள், விஞ்ஞானிகள் என அனைவருமே இந்தக் கரிம வரிவிதிப்பைச் சரியான முடிவாக ஏற்றுக்கொண்டுள்ளனர். அது, பசுமை இல்ல வாயு வெளியீட்டைக் கட்டுப்படுத்துவதில் உதவும் என்று வல்லுநர்கள் கருதுகின்றனர். இந்த வரி விதிப்பால், புதைபடிம எரிபொருள்களின் பயன்பாட்டைக் குறைத்துக்கொள்வதில் கவனம் செல்லும் என்றும் கூறுகின்றனர். வெப்பமண்டல மழைக்காடுகளில் நடக்கும் காடழிப்பால், வளிமண்டலத்தில் அதிகமாகும் பசுமை இல்ல வாயுவைக் கட்டுப்படுத்துவதில் கரிம வரி முக்கியப் பங்கு வகிக்கும் என்று அந்த ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

'மழைக்காடுகளை நாம் அழிக்கும்போது, காலநிலை அவசரத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நம்மிடம் இருக்கும் பலமான ஆயுதத்தைத் தொலைக்கிறோம்' என்று அர்த்தம். சர்வதேச அளவிலான கரிம வெளியீட்டில் ஒவ்வோர் ஆண்டும் ஐந்து சதவிகிதத்தை அமேசான் மழைக்காடுகள் கிரகித்துக் கொள்கின்றன. அமேசான் மழைக்காடுகளின் மொத்த நிலப்பரப்பு 1.5 பில்லியன் ஏக்கர். புவியில் மழைக்காடுகள் மட்டுமே மொத்தம் 5.4 பில்லியன் ஏக்கர்கள் உள்ளன. அவை கிரகிக்கின்ற கரிமத்தின் அளவு, ஒவ்வோர் ஆண்டும் குறைந்துகொண்டே வருகிறது. அதற்குக் காரணம், காடழிப்பினால் இந்தப் பரப்பளவும் குறைந்துகொண்டே வருவதுதான்.

கோஸ்டா ரிகாவிலும் கொலம்பியாவிலும் வசூலிக்கப்படும் கரிம வரியை, அழிந்துகொண்டிருக்கும் மழைக்காடுகளை மீட்டுருவாக்கம் செய்ய பயன்படுத்துகிறார்கள். அதில் ஈடுபடுபவர்களுக்கு, அதன்மூலம் வருமானம் கிடைக்கவும் வழி செய்கிறார்கள்.

மழைக்காடு
மழைக்காடு
Pixabay
இங்கிலாந்து கரிமத்துகள் இமயமலைக்கு வருமா... காலநிலை மாற்ற விபரீதமா?

இந்தக் கரிம வரி, 1997-ம் ஆண்டிலிருந்தே கோஸ்டா ரிகாவின் பெரும்பான்மை நிலப்பகுதியைப் பாதுகாக்கவும் நாட்டின் நான்கில் ஒரு பங்கு பகுதியை மீட்டுருவாக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த வரி மூலமாக, அவர்கள் ஆண்டுக்கு 26.5 மில்லியன் டாலர் வருமானம் பார்க்கின்றனர். அதைத் தங்கள் நிலப்பரப்பிற்குள் அமைந்துள்ள மழைக்காடுகளைப் பாதுகாப்பதில், மீட்டுருவாக்குவதில் ஈடுபடும் விவசாயிகள் மற்றும் நில உரிமையாளர்களுக்கு ஊதியமாகக் கொடுக்கிறார்கள்.

கடந்த மூன்றாண்டுகளில் மட்டுமே, கொலம்பியா இந்தத் திட்டத்தின் வழியாக சுமார் 250 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமாக வருவாய் ஈட்டியுள்ளது. அதில் நான்கில் ஒரு பகுதியை, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளைக் கண்காணிக்கவும் காடழிப்பைக் கட்டுக்குள் கொண்டுவரவும் மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

குறைந்த வருமானத்தில் வாழும் மக்களுக்கே இந்த ஊதியம் பயன்தரும் வகையில், எளிய மக்களுக்கே முதல் உரிமை கொடுத்து இந்தத் திட்டத்தைக் கொண்டுசெல்கிறது, கோஸ்டா ரிகா அரசாங்கம். கரிம வரி திட்டத்தின்மூலம், சூழலியல் சேவையில் ஈடுபட்டு ஊதியம் பெறும் ஐந்தில் இரண்டு பேர், வறுமைக் கோட்டிற்குக் கீழே வாழ்பவர்கள். இது பெரிதும் ஏழை, எளிய மக்களுக்கே அதிகம் பயன்தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், மற்ற நாடுகளில் என்ன மாதிரியான பயன்களை நல்கும் என்று தெரிந்துகொள்ள ஆப்பிரிக்கா, ஆசியா, தென்னமெரிக்காவில் வெப்பமண்டலக் காடுகளைக் கொண்ட ஈக்வடார், இந்தியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், காங்கோ குடியரசு, இந்தோனேசியா உள்ளிட்ட 12 நாடுகளில் அவர்கள் ஆய்வுசெய்தார்கள். அந்தப் பன்னிரண்டு நாடுகளுமே கொலம்பியாவைப் போல, கோஸ்டா ரிகாவைப் போல இந்தக் கொள்கையை அமல்படுத்தினால், அவை ஒவ்வோர் ஆண்டும் 1.8 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டமுடியும் என்று ஆய்வின் முடிவில் தெரியவந்தது. இதையே, இன்னும் கடுமையாகவும் முழுவீச்சிலும் 12 நாடுகளும் அமல்படுத்தினால், அவை சுமார் 13 பில்லியன் டாலருக்கும் மேல் வருவாய் ஈட்டமுடியும். இது, கிட்டத்தட்ட நிகாராகுவாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பிற்குச் சமம்.

CO2
CO2
Pixabay

சூழலியல் பாதுகாப்பு மற்றும் மீட்டுருவாக்கத்தில், இது மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும். காடழிப்பினால் மிகப்பெரிய அச்சுற்றுத்தலை எதிர்கொள்ளும் இந்தோனேசியா போன்ற நாடுகளில், அதன் நிலப்பரப்பை மீண்டும் அதன் இயல்பான சூழலியல் சமநிலையை மீண்டும் கொண்டுவருவதில் இது பயனுள்ளதாக இருக்கும். மெக்சிகோ, மலேசியா போன்ற நாடுகள், இந்த வருவாயின் மூலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளைக் கண்காணிப்பதில் தீவிரமாகக் கவனம் செலுத்தமுடியும். அதோடு, இந்தத் திட்டத்தை அமல்படுத்தும் ஒவ்வொரு நாடுமே புதைபடிம எரிபொருள்களைச் சார்ந்திருக்கும் மக்களின் எண்ணிக்கையைக் குறைக்கவும் அதன்மூலம் கரிம வெளியீட்டின் அளவைக் குறைக்கவும் முடியும்.

கரிம வெளியீட்டையும் அதற்கு உந்துதலாக இருக்கும் காடழிப்பு மற்றும் புதைபடிம எரிபொருள் பயன்பாட்டையும் எதிர்கொள்ள, கிராமப்புற சமூகங்கள் நலம்பெற, கரிம வரிக் கொள்கை சக்திவாய்ந்த ஆயுதமாக இருக்கும் என்று 12 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வு அழுத்தமாகக் கூறுகிறது.

காலநிலை அவசரத்தால் நாம் எதிர்கொள்கின்ற மோசமான அபாயங்களிலிருந்து தப்பிக்க, மனித இனத்திற்கு இருப்பது வெறும் பத்தே ஆண்டுகள்தான். இந்நிலையில், இதனால் பாதிப்புகளைச் சந்திக்கப்போகும் நாடுகளில், இழப்புகளைச் சந்திக்கும் மக்களுக்குத் தேவையான உதவிகளை, அந்த இழப்புகளுக்குக் காரணமான காலநிலை அவசரத்தை வேகப்படுத்திய பெருநிறுவனங்களிடமிருந்து வசூலித்துக் கொடுக்க, 'கரிம வரி' திட்டத்தால் முடியும்.

புவியின் 70 சதவிகித பல்லுயிரிய வளம், வெறும் 17 நாடுகளில்தான் இருக்கிறது. அதில், 13 நாடுகள் வெப்பமண்டலப் பகுதியில் அமைந்துள்ளன. ஆனால் அந்த நாடுகள், சுமார் 18 மில்லியன் ஏக்கர் காடுகளை 2018-ம் ஆண்டில் மட்டுமே இழந்துள்ளன. இப்போதைய கணக்குப்படி, சர்வதேச அளவில் நடக்கும் 30 சதவிகித காடழிப்பு, 7 சதவிகித கரிம வெளியீட்டில் பங்கு வகிக்கிறது.

Industries
Industries
Pixabay

பாதுகாப்பு, மீட்டுருவாக்கம், நில மேலாண்மை போன்ற இயற்கையான நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம்தான், பசுமை இல்ல வாயு வெளியீட்டைத் தவிர்க்கமுடியும். இவற்றைச் செய்தாலே, 37 சதவிகிதம் புவி வெப்பமயமாதலைத் தடுக்கமுடியும். அதன்மூலம், 2030-க்குள் இன்னும் இரண்டு டிகிரி செல்ஷியஸ் புவி வெப்பநிலை அதிகரிப்பதை கட்டுக்குள் கொண்டுவரவும் முடியும். ஆனால், பல்வேறு வெப்பமண்டலக் காடுகளில் இதற்குத் தேவைப்படும் நிதி, பற்றாக்குறையாக உள்ளது. அரசுகளால், பொருளாதார வளர்ச்சிக்கு ஒதுக்கும் நிதியைச் சூழலியல் பாதுகாப்புக்காக ஒதுக்க முடிவதில்லை.

இந்த இடத்தில்தான், கரிம வரி மிக முக்கியப் பங்கு வகிக்கின்றது. ஆப்பிரிக்கா, ஆசியா மற்றும் தென்னமெரிக்க நாடுகளில், நிதி ஒதுக்கீட்டில் ஏற்பட்டுள்ள இந்த இடைவெளியைக் கரிம வரி ஈடுகட்டும். இது, புதைபடிம எரிபொருள் உற்பத்தியில் தொடங்கி, கரிம வெளியீட்டுப் பட்டியலின் கடைமட்டத்தில் உள்ள காடழிப்பு வரை அனைத்திற்கும், அவை வெளியிடுகின்ற கரிம அளவிற்குத் தகுந்தபடி வரி விதிக்க வேண்டும். இது, எண்ணெய், எரிவாயு, நிலக்கரி போன்றவற்றின் பயன்பாட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

கரிம வெளியீடு
கரிம வெளியீடு
Pixabay

1997 முதல், கோஸ்டா ரிகா 3.5 சதவிகிதம் வரி விதித்துக் கொண்டிருக்கிறது. அது தற்போது, ஆண்டொன்றுக்கு 26.5 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டுகிறது. இந்த வருவாயைத் தேசிய காடுகள் நிதியின் மூலம், வனப் பாதுகாப்பு மற்றும் மீட்டுருவாக்கத்திற்கு, வேளாண் காடுகள் திட்டத்திற்குப் பயன்படுத்துகின்றது. 1980-களில், கோஸ்டா ரிகாவின் காடழிப்பு விகிதம் மிகத் தீவிரமாக இருந்தது. கரிம வரித் திட்டம் மூலமாக செய்யப்பட்ட முதலீடுகள், 1986 முதல் 2013-க்குள் நாட்டின் மொத்த வனப்பரப்பை இரண்டு மடங்காக்கியது.

Vikatan

2016-ம் ஆண்டிலிருந்து, கொலம்பியா ஒரு மெட்ரிக் டன் கரிம வெளியீட்டிற்கு 5 டாலர் வரி விதிக்கத் தொடங்கியது. அதன்மூலம், 2017-ம் ஆண்டில், 148 மில்லியன் டாலர் மற்றும் 2018-ம் ஆண்டில் 91 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டியது. இந்த நிதியைப் பயன்படுத்தி, வரவுள்ள திட்டங்கள் இன்னும் நிறைய உள்ளன. கொலம்பியன் அமைதி நிதியின் வழியாக, இந்த வருவாயின் 25 சதவிகிதத்தை கடலோர மணல் அரிப்பு, காடழிப்பைக் குறைத்தல் மற்றும் கட்டுப்படுத்துதல், நீர்நிலைகளைப் பாதுகாத்தல் ஆகியவற்றுக்காக தற்போது பயன்படுத்துகின்றனர். இன்னோர் ஐந்து சதவிகித வருவாயை, பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகளைக் கண்காணிக்கப் பயன்படுத்தப்போகின்றனர். வெப்பமண்டல நாடுகள் அனைத்துமே, இதைப்போல் ஒரு மெட்ரிக் டன் கரிம வெளியீட்டிற்கு ஐந்து டாலர் என்று வரி விதிக்கத் தொடங்கலாம். அதன்மூலம் கிடைக்கும் வருவாயையும் கொலம்பியாவைப் போலவே வனப் பாதுகாப்பு மற்றும் காலநிலை சீரமைப்புக்காகப் பயன்படுத்தலாம். இல்லையேல், ஒரு மெட்ரிக் டன்னுக்கு 15 டாலர் விதித்து, அதில் 70 சதவிகித நிதியை மொத்தமாக அனைத்து இயற்கைப் பாதுகாப்புச் செயல்பாடுகளுக்கும் பயன்படுத்தலாம். அது இன்னும் வேகமான தீர்வுகளையும், ஏழை எளிய மக்களுக்கு அதிகப் பயன்களையும் நல்கும். ஒருவேளை, இந்த 12 நாடுகளும் கொலம்பியாவைப் போலவே கரிம வரி வசூலித்தால்கூட, அவர்களுக்கு ஆண்டுக்கு 1.8 பில்லியன் டாலர் வருவாய் கிடைக்கும். அதை இயற்கையான வாழ்விடங்களைப் பாதுகாப்பதற்குப் பயன்படுத்தலாம்.

காடுகள் பாதுகாப்பு
காடுகள் பாதுகாப்பு
Pixabay

பிரேஸில், காங்கோ குடியரசு, இந்தியா, இந்தோனேசியா போன்ற நாடுகள் இதில் பெரிதும் பயனடையும். தற்போதைய கணக்குப்படி, இந்த நாடுகளில் காடழிப்பும் நிறுவனமயமாக்கலும் மிக அதிகமாக நடந்துகொண்டிருக்கின்றன. ஆகவே, வெப்பமண்டலக் கரிம வரி திட்டம் அவர்களுக்குப் பல பயன்களை நல்கும்.

அரசுகள், மக்களின் வளர்ச்சிக்கு உதவும் வங்கிகள், முதலீட்டாளர்கள், தன்னார்வ நிறுவனங்கள் அனைத்துமே, அந்தந்த நாடுகளில் கரிம வரித் திட்டத்தை அமல்படுத்துவதற்குத் தேவையான நிதியுதவி மற்றும் தொழில்நுட்ப உதவியை வழங்க வேண்டும். அதேநேரம், இதன்மூலம் கிடைக்கின்ற வருவாய், சூழலியல்ரீதியாக சரியாகப் பயன்படுத்தப்படுகிறதா என்பதையும் அவர்கள் கண்காணிக்க வேண்டும். அப்போதுதான், இந்த வரி யாரைச் சென்றடைய வேண்டுமோ அவர்களைச் சென்றடையும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு