Published:Updated:

கொரோனாவுக்கும் காடு அழிப்புக்கும் என்ன தொடர்பு? விளக்கும் பூர்வக்குடி தலைவர்கள்!

காடழிப்பு
காடழிப்பு

கொரோனா வைரஸ் தொற்று பரவியதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அதற்குக் காடழிப்பும் ஒரு முக்கியக் காரணம் என்று கூறுகின்றனர் சர்வதேசப் பழங்குடியினத் தலைவர்கள்.

உலகம் முழுக்கக் கொரோனா பீதி மக்களை நடுங்க வைத்துக்கொண்டிருக்கிறது. இந்த வைரஸ் தொற்று நோயைக் காலநிலை மாற்றத்தின் குழந்தைகளில் ஒன்றாகவும் சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர். இந்தப் பீதிக்குப் பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே காலநிலை மாற்றம் குறித்த எச்சரிக்கைகள் உலகம் முழுக்கப் பல்வேறு ஆராய்ச்சியாளர்களால் முன்வைக்கப்பட்டுக் கொண்டுதானிருந்தது. ஆனால், அவற்றை அரசுகள் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை. அதற்கான விளைவுகளைத்தான் இப்போது அனுபவித்துக்கொண்டிருப்பதாகச் சர்வதேச அளவில் கூறப்படுகிறது.

Representational Image
Representational Image

கொரோனா வைரஸ் தொற்று பரவியதற்குப் பல்வேறு காரணங்கள் கூறப்பட்டாலும் அதற்குக் காடழிப்பும் ஒரு முக்கியக் காரணம் என்று கூறுகின்றனர் சர்வதேசப் பழங்குடியினத் தலைவர்கள். காடழிப்பு புவி வெப்பமயமாதலை மட்டுமன்றி, கொரோனா போன்ற தொற்று நோய்கள் பரவவும் காரணமாக அமைகின்றன என்று அவர்கள் கூறியுள்ளனர்.

நியூயார்க்கில் கூடிய உலகப் பழங்குடியினத் தலைவர்களின் சந்திப்பில், காடழிப்பு, வாழ்விட இழப்பு போன்றவற்றால், காட்டுயிர்கள் மனிதர்கள் மத்தியில் நெருங்கி வரவேண்டிய சூழல் ஏற்படுவதாகவும் அதனால் அவற்றிடமிருந்து பல்வேறு புதிய நோய்கள் பரவுவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கோஸ்டா ரிகாவைச் சேர்ந்த ப்ரீப்ரீ என்ற பழங்குடி இனத்தின் ஒருங்கிணைப்பாளர் லெவி சுக்ரே ரொமீரோ பேசியபோது, ``பழங்குடிகளாகிய நாங்கள் ஆயிரம் ஆண்டுகளாகச் சொல்லிக்கொண்டிருந்த உண்மையை இப்போது கொரோனா வைரஸ் உலகத்திற்கு உரக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறது. பல்லுயிரிய வளத்தையும் இயற்கையையும் பாதுகாக்கவில்லை என்றால், இது மட்டுமன்றி எதிர்காலத்தில் இதைவிட மோசமான பின்விளைவுகளைச் சந்திக்க வேண்டியிருக்கும்" என்று கூறினார்.

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

``ஒரு விலங்கிடமிருந்துதான், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைப் பாதித்த இந்தத் தொற்றுநோய் பரவியுள்ளது. உலகப் பொருளாதாரத்தையே ஊசலாட்டத்திற்கு உள்ளாக்கிய இந்தத் தொற்று பரவக் காரணம், மனித-விலங்கு எதிர்கொள்ளல் அதிகமானதுதான்" என்கிறார் இந்தோனேசியாவைச் சேர்ந்த டயாக் பொம்பாக் பழங்குடியினத்தவரும் ஆர்ச்சிபெலாகோ பழங்குடி மக்கள் கூட்டமைப்பின் துணைத் தலைவருமான மீனா சேத்ரா. மேற்கொண்டு பேசியவர், ``பூர்வகுடிகளின் உரிமைக்கும் பழைமையான மரபு அறிவையும் மதித்து அங்கீகரித்தால், புவியின் சூழலியல் சமநிலையைப் பாதுகாப்பதில் அவர்கள் செயல்பட முடியும். இயற்கையோடு இயைந்து, பல்லுயிரிய வளங்களை, காட்டுயிர்களை, தாவர வளங்களைப் பாதுகாத்து வாழும் எங்கள் வாழ்க்கை முறையை உலக நாடுகள் அங்கீகரிக்க வேண்டும். இதுபோன்ற நோய்த்தொற்றுகள் மேற்கொண்டு தாக்காமல் தற்காத்துக்கொள்ள அத்தகைய வாழ்க்கை முறை பேருதவி புரியும்" என்றும் கூறினார்.

அங்கு கூடிய பூர்வகுடித் தலைவர்கள், காடுகளை அழித்துவிட்டு சோயா, பாமாயில், கால்நடை வளர்ப்பு போன்றவற்றைப் பெரியளவில் செய்கின்ற பன்னாட்டு நிறுவனங்களைக் கடுமையாக விமர்சித்தனர். அவர்களே, மனிதர்களுக்கும் காட்டுயிர்களுக்கும் இடையிலிருந்த அரணை உடைத்து தொடர்பு ஏற்படுத்தியதாகவும் அதனாலேயே இந்தத் தொற்று நோய்கள் பரவி, காலப்போக்கில் அவை சமூகத் தொற்றாகவும் மாறிவிடுகின்றன என்று பூர்வகுடித் தலைவர்கள் குற்றம் சாட்டினார்கள்.

காடழிப்பு
காடழிப்பு

பிரேசிலில் அப்படிப்பட்ட பன்னாட்டு நிறுவனங்களில், கார்கில் என்ற நிறுவனம்தான் அளவுக்கு அதிகமான சேதங்களை எற்படுத்துகின்றது என்று குற்றம் சாட்டினார், பிரேசில் பழங்குடியினக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரும் சட்ட ஆலோசகருமான டினமம் டக்சா.

பன்னாட்டு நிறுவனங்களிடம் நாங்கள் கேட்பதெல்லாம், எங்களுடைய நிலங்களில் ஏன் இந்தத் தீவிர உற்பத்தியைச் செய்யவேண்டும் என்பதுதான். அரசுடனான அவர்களுடைய உடன்படிக்கைகள் அவர்களுக்கு மட்டுமே பயன் தருகின்றன. இருதரப்புமே பயனடையும் வகையில் அவர்கள் எங்களோடு உடன்படிக்கை செய்துகொள்ள வேண்டும். பூர்வகுடி உரிமைகளுக்கு மதிப்பளிக்கவேண்டும். காடழிப்பை ஊக்கப்படுத்துகின்ற எந்தத் தொழிலையும் எங்கள் நாட்டிற்குள் கொண்டுவர மாட்டோம் என்று அந்த நிறுவனங்கள் உத்தரவாதம் கொடுக்க வேண்டும்
டினமம் டக்சா

மனிதரற்ற மற்ற உயிரினங்களிடமிருந்து இத்தகைய தொற்று நோய்கள் மனிதர்களுக்குப் பரவுவது, இது முதல் முறையல்ல. இதற்கு முன்பே, ஹெச்.ஐ.வி, சார்ஸ், மெர்ஸ், ஸிகா போன்றவை பரவியுள்ளன. மொத்தத் தொற்று நோய்களில், 17 சதவிகிதம் இதுபோல் விலங்குகளிடமிருந்துதான் பரவுகின்றன என்று உலக சுகாதார நிறுவனம் கூறுகின்றது. நேச்சர் என்ற ஆய்விதழில் வெளியாகியுள்ள ஆய்வறிக்கை ஒன்றின்படி, 1950-களில் மட்டுமே சுமார் 30 புதிய தொற்று நோய்கள் இதுபோல் பரவியுள்ளன.

காடழிப்பு
காடழிப்பு

உலகளவிலுள்ள வன அளவில் பெரும்பாலானவை பூர்வகுடிகளுடைய பாதுகாப்பின் கீழ்தான் இருக்கின்றன. அவர்களுடைய நில மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதே அந்த வனப்பகுதிகளைப் பாதுகாப்பதற்கான முதல்படி என்பதைச் சமீபத்தில் நடத்தப்பட்ட பல்வேறு ஆய்வுகள் நிரூபித்துள்ளன. இந்தியாவில்கூட வன உரிமைச் சட்டம் குறித்த வழக்கு சர்ச்சையை ஏற்படுத்திய காலகட்டத்தில் நடத்தப்பட்ட பல ஆய்வுகள் அதையே முன்வைத்துள்ளன. 2019-ம் ஆண்டில், ஐக்கிய நாடுகள் அமைப்பின் காலநிலை மாற்றத்திற்கான சர்வதேசக் குழு, பூர்வகுடிகளுடைய நில மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதே காலநிலை அவசரத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் முக்கியமானது என்று கூறியது.

மற்ற பகுதிகளில் நடக்கின்ற காடழிப்பு விகிதத்தோடு பூர்வகுடி நிலங்களில் நடக்கும் காடழிப்பு விகிதத்தை ஒப்பிட்டுப் பார்த்தால், பூர்வகுடி நிலங்களில் மிக மிகக் குறைவாகவே காடழிப்பு நடந்துள்ளதாக உலக இயற்கை வள நிறுவனத்தின் சர்வதேசக் காடுகள் கண்காணிப்புத் திட்டத்தின் மூலம் கிடைத்த தரவுகள் நிரூபிக்கின்றன. அதிலும், அவர்களுக்கான வன உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ள பகுதிகளில் காடழிப்பு விகிதம் ஆச்சர்யப்படத்தக்க விதத்தில் குறைவாக இருக்கின்றது.

கொரோனா
கொரோனா

காடழிப்பு, வாழ்விட இழப்பு காரணமாகப் போதிய உணவின்றி காட்டுயிர்கள், மனித வாழிடங்களுக்குள் நுழைகின்றன. அதனால், காட்டுயிர்-மனித எதிர்கொள்ளல் நடைபெறுகின்றது. காட்டுயிர்களுக்கும் கால்நடைகளுக்கும் நடுவே ஏற்படுகின்ற தொடர்பு, கால்நடைகளோடு தொடர்புள்ள மனிதர்களுக்கும் பரவுகிறது. பின்னர், மனிதர்களிடமிருந்து அடுத்தடுத்துப் பரவி அதுவே, சமூகத் தொற்றாக மாறிவிடுகின்றது. இத்தகைய எதிர்கொள்ளல் சிக்கல்களைத் தடுக்கப் பூர்வகுடிகளின் கட்டுப்பாட்டில் பாதுகாக்கப்படுகின்ற வனப்பகுதிகள் உறுதுணை புரிகின்றன.

வன உரிமைகளை அங்கீகரிப்பது, இதுபோன்ற தொற்று நோய்ப் பரவலை மட்டும் தடுப்பதில்லை. இத்தகைய நோய்களுக்கு மருந்து கண்டுபிடிப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன என்று பூர்வகுடி மாநாட்டில் கூடிய தலைவர்கள் கருத்து தெரிவித்தனர். உலகளவில் பயன்படுத்தப்படுகின்ற மருந்துகளில் 25 சதவிகிதம் காடுகளிலிருந்தே நமக்குக் கிடைத்துள்ளன. அவற்றை இழப்பது எதிர்காலத்தில் நமக்கான மருத்துவ நன்மைகளை நாமே அழிப்பதற்குச் சமம். ஆனால், அவர்களுடைய மரபு அறிவை, நிலங்களை பன்னாட்டு நிறுவனங்கள் உள்ளே புகுந்து எந்த இழப்பீடும் வழங்காமல் அபகரித்துச் சென்றுவிடுகின்றன என்பதே நிதர்சனம்.

பழங்குடிகள்
பழங்குடிகள்
இத்தாலி முதல் இந்தியா வரை.. குறையாத கொரோனா வீரியம்..! -  `இன்று, நேற்று’ ஒப்பீடு

கொரோனா மட்டுமன்றி எதிர்காலத்தில் வரக்கூடிய தொற்றுநோய்ப் பரவலைத் தடுப்பதற்கான மருந்துகள் காடுகளிலிருந்து கிடைக்கலாம். அதைவிட முக்கியமாக, அவை வராமலே தடுக்கவும் நமக்குக் காடுகள் அவசியம் என்ற பாடத்தை இந்தக் கொரோனா பரவல் நமக்குப் புகட்டியுள்ளது.

அடுத்த கட்டுரைக்கு