Published:Updated:

மனிதர்கள் உண்டாக்கிய இயற்கை அழிவுகள்... நம் நுகர்வுப்பசியின் விளைவுகள்!

ஒராங்குட்டான்
ஒராங்குட்டான் ( Pixabay )

மனிதனின் நுகர்வு, காடுகள் அழிவதற்கும் பல்லுயிரிய வள அழிவுக்கும் காரணமாக உள்ளது. ஒவ்வொரு மனிதனும் தனக்கான நுகர்வை முடிந்த அளவு குறைக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் மனிதர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்த உலகம் மனிதர்களுக்காகப் படைக்கப்பட்டது என்பது போலத்தான் தற்போதைய மனித சமூகம் நடந்துகொண்டிருக்கிறது. பொருளாதாரத்தில் முன்னேற்றம் அடைய வேண்டும் என்ற ஒற்றைக் குறிக்கோளோடு மனிதர்கள் உழைக்கிறார்கள். ஒவ்வொரு நாடும் பொருளாதாரத்தை உயர்த்துவதில் கவனம் செலுத்துகின்றன. பொருளாதாரத்தில் தன்னிறைவு அடைந்த நாடுகள் மற்ற நாடுகளின் மீது ஆதிக்கம் செலுத்த முயல்கிறது. மற்ற உயிர்களைக் குறித்து இவர்களுக்கு எந்த ஒரு கவலையும் இல்லை. காடுகள் இருந்தாலென்ன அழிந்தாலென்ன எனும் மனநிலையில் உள்ள நாம் எப்போது காட்டுயிர்களின் வாழ்வாதாரத்துக்காகப் போராடப் போகிறோம். வீட்டில், நாய்களையும் பூனைகளையும் செல்லப் பிராணிகளாக நம் சந்தோஷத்துக்காக வளர்க்கும் நாம், எப்போது சுயமாக வாழும் காட்டுயிர்கள் மற்றும் பல்லுயிர்ச்சூழல் குறித்துச் சிந்திக்கப் போகிறோம்.

Black Crested Macaque
Black Crested Macaque
Pixabay

நாம் எதற்கு காட்டுயிர்களையும் பல்லுயிரியத் தன்மையையும் காப்பாற்ற வேண்டும் என்று கேட்கிறீர்களா? அதற்கு என்ன தேவை என்று கேட்கிறீர்களா? அதற்கான பதில்‌தான் இந்தக் கட்டுரை.

சமீபத்திய பல்லுயிர் மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான ஓர் ஆய்வின் முடிவு, ஒரு மில்லியன் தாவர மற்றும் விலங்கினங்கள் அழிவின் விளிம்பில் உள்ளன என்று கூறுகிறது. சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகின்றன. காலநிலை மாறுபாட்டில் முதலில் பாதிப்புக்குள்ளாவது விலங்கினங்கள்தான்.

ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் ஒருங்கிணைந்த அளவுக்கு ஏறக்குறைய 180 மில்லியன் ஹெக்டேர் வெப்பமண்டலக் காடுகள் 2001மற்றும் 2017-க்கு இடையில் இழந்ததாக உலகளாவிய வனக் கண்காணிப்பு அறிவித்துள்ளது.

மனிதர்களைத் தவிர்த்து 519 வகையான பாலூட்டி இனங்கள் 97 நாடுகளில் உள்ளன. அமெரிக்கா, மடகாஸ்கர் தெற்கு ஆசியா ஆகிய இடங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. சுருக்கமாக, விலங்கினங்கள் வெப்பமண்டல பல்லுயிர்ப் பெருக்கத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். இவை அழிய நேரிடும்போது சமநிலை பாதிக்கப்படும். இதனால் பல்வேறு விதமான பிரச்னைகளை எதிர்காலத்தில் சந்திக்கப் போகிறோம்.

இன்னும் சில ஆண்டுகளில் இந்த பாமாயில் எண்ணெய்த் தேவையை பூர்த்தி செய்ய கூடுதலாக 7 மில்லியன் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட வேண்டிய நிலை இருக்கிறது.

இயற்கைப் பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியம் சமீபத்தில் ரெட் அலர்ட் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் 60 சதவிகித விலங்குகள் (300 வகை விலங்குகள்) அழியும் நிலையில் உள்ளன என்று குறிப்பிட்டுள்ளது. இதற்குக் காரணமாக காடுகளை அழித்தல், விவசாயம் மற்றும் தொழில் தொடங்குவதற்காக காட்டுப்பகுதிகளை ஆக்கிரமித்தல், ரயில் மற்றும் சாலை வசதிக்காகக் காடுகளை அழித்தல், விலங்குகளின் தோல் மற்றும் மாமிசத்துக்கு அவற்றை வேட்டையாடுதல் போன்றவற்றைக் குறிப்பிடுகிறார்கள். மக்கள் தொகைப் பெருக்கம் மற்றும் மனிதர்களின் அநாவசியத் தேவைகளால் காடுகள் அதிகமாக அழிக்கப்படுகின்றன. வெறுமனே யாரும் காடுகளை அழைப்பதில்லை. அதற்கான தேவை இருக்கிறது. அதற்கான காரணம் நாம்தான். அதிகப்படியான நுகர்வுதான். நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாமாயில் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது.

இன்றைய சூழலில் பாமாயில் எண்ணெய்க்கு அதிகமான தேவை இருக்கிறது. பதப்படுத்தப்பட்ட உணவுகள், அழகுசாதனப் பொருள்கள் மற்றும் பல தொழில்துறை பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது. இது உயிரி எரிபொருள்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. பாமாயில், அத்தியாவசியப் பொருள்களில் ஒன்றாக உள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் இந்த பாமாயில் எண்ணெய்த் தேவையைப் பூர்த்தி செய்யக் கூடுதலாக 7 மில்லியன் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட வேண்டிய நிலை இருக்கிறது. பாமாயில் உற்பத்தியின் விரிவாக்கம் காரணமாக இந்தோனேசியாவின் வனப்பகுதியில் வாழும் விலங்குகள் அழிவின் விளிம்பில் உள்ளன. அங்கு வாழும் ஒராங்குட்டான் இனம் (போர்னியன் ஒராங்குட்டான், சுமத்ரான் ஒராங்குட்டான் மற்றும் தபனுலி ஒராங்குட்டான்) முற்றிலுமாக அழிந்து போவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன. தற்போதைய சூழலில் வாகனங்களும் அத்தியாவசியமாக மாறிவிட்டன.

பாமாயில் வேட்டை
பாமாயில் எண்ணெய்த் தேவையை பூர்த்தி செய்ய கூடுதலாக 7 மில்லியன் ஹெக்டேர் காடுகள் அழிக்கப்பட வேண்டிய நிலை இருக்கிறது.
Lutung
Lutung
Pixabay

ஒவ்வொரு நாளும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. எல்லாவிதமான வாகனங்களிலும் ரப்பர் டயர்கள் உபயோகப்படுத்தப்படுகிறது. தற்போது உலகளாவிய ரப்பரின் நுகர்வுகளில் 70% டயர்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. சீனாவின் யுன்னான் மற்றும் ஹைனான் மாகாணங்களில் ரப்பர் தோட்டங்களின் விரிவாக்கத்தின் காரணமாக உள்ளூர் ஹைனன் கிப்பன் (30-க்கும் குறைவான இனங்கள் வனப்பகுதியில் மீதமுள்ளது), ஸ்கைவால்கர் கிப்பன் (காடுகளில் மீதமுள்ள 200 க்கும் குறைவான இனங்கள்) போன்றவை அழிவின் விளிம்பில் உள்ளன. 2024 க்குள் உலகளாவிய ரப்பர் தேவையை பூர்த்தி செய்யக் கூடுதலாக 8 மில்லியன் ஹெக்டேர் ரப்பர் தோட்டங்கள் தேவைப்படுகின்றன. விரைவில் இதற்கான மாற்றுப் பொருளைக் கண்டுபிடிக்க வேண்டும். இல்லையெனில் நாம் அதற்காகக் காடுகளைப் பலி கொடுக்க நேரிடும்.

2050-ம் ஆண்டின் கணக்குப்படி, ஆப்பிரிக்காவில் பாமாயில் மற்றும் இயற்கை ரப்பருக்கான உலகளாவிய தேவையைப் பூர்த்தி செய்ய 400 மில்லியன் ஹெக்டேர் தேவைப்படும்‌ என்று கணிக்கப்பட்டது. இது 40-க்கும் மேற்பட்ட விலங்கினங்களின் (சிம்பன்சிகள் மற்றும் கொரில்லாக்கள் உட்பட) அழிவுகளுக்கு வழிவகுக்கும்.

அதீத நுகர்வு
அதீத நுகர்வு
Pixabay
இயற்கை சீற்றத்தினால் இந்தியாவில் ஏற்பட்ட உயிரிழப்புகள் எவ்வளவு தெரியுமா? #VikatanInfographics

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவுக்கான உலகளாவிய தேவை 2035-ம் ஆண்டில் 30% முதல் 53% வரை வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அமேசான், மலேசியா மற்றும் போர்னியோ போன்ற விலங்குகள் நிறைந்த பகுதிகளைக் கடுமையாகச் சேதப்படுத்தும். மேற்கு பிரேசிலிய அமேசான் மற்றும் கொலம்பியா, ஈக்வடார், பெரு மற்றும் பொலிவியாவின் வனப்பகுதிகளில் எண்ணெய் மற்றும் எரிவாயு கட்டமைப்புகள் ஏற்கெனவே 1 மில்லியன் சதுர கிலோமீட்டர் பரப்பளவில் உள்ளன. இது இன்னும் விரிவடைந்தால் விளிம்பு நிலை உயிரினங்கள் முற்றிலுமாக அழிந்து போக வாய்ப்புள்ளது.

தாதுக்கள் (டான்டலம்) மற்றும் ரத்தினக் கற்கள் (வைரங்கள்) ஆகியவற்றுக்கான உலகளாவிய தேவையும் விரிவடைந்து, விலங்குகளின் வாழ்விடங்களின் அழிவை ஏற்படுத்துகின்றன. இன்னும் சில சந்தர்ப்பங்களில், உள்நாட்டு மோதல்களும் அந்த அழிவில் பங்கு வகிக்கின்றன. இதன் விளைவாக ஏற்பட்ட அரசியல் உறுதியற்ற தன்மையால், பழங்குடியினங்களும் காடுகளில் வாழும் விலங்குகளும் அழிக்கப்படுகின்றன.

கொரில்லா
கொரில்லா
Pixabay

மனிதனின் நுகர்வு, காடுகள் அழிவதற்கும் பல்லுயிரிய வள அழிவுக்கும் காரணமாக உள்ளது. ஒவ்வொரு மனிதனும் தனக்கான நுகர்வை முடிந்த அளவு குறைக்க வேண்டும். நம் நுகர்வில் அக்கறை செலுத்தவில்லை என்றால், எதிர்காலத்தில் அதுபோலத்தான் எந்த ஒரு பிற உயிரினமும் இல்லாமல் மனிதர்கள் மட்டுமே வாழ நேரிடும்.

அடுத்த கட்டுரைக்கு