Published:Updated:

குளத்தில் குடியிருப்பு; ஏரியில் விவசாயம்; சாட்டையை எடுக்குமா நீதிமன்றம்?!

ஆக்கிரமிப்பு புகார்கள் மீதான நீதிமன்ற, பசுமைத் தீர்ப்பாய உத்தரவுகளை எல்லாம் காலில் போட்டு மிதித்துக்கொண்டிருக்கிறது இந்த அதிகார வர்க்கம். இந்த வழக்கு, நீர்நிலை ஆக்கிரமிப்பு வழக்குகளை பொதுப்பணித்துறையும் வருவாய் துறையும் எப்படி கையாள்கின்றன என்பதற்கு உச்சபட்ச உதாரணம்!

``நீர்நிலைகள் என்பவை, காலகாலமாகக் காப்பாற்றப்பட வேண்டியவை. அவைதான் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கான உண்மையான சொத்து. நீர்நிலை ஆக்கிரமிப்பாளர்களின் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆக்கிரமிப்புக்கு துணைபோகும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்”

- இப்படி பல ஆண்டுகளாகவே நீதிமன்றங்களும் தீர்ப்பாயங்களும் எச்சரிக்கை விடுத்தபடியேதான் உள்ளன. ஆனால், நீதிமன்றங்களும் தீர்ப்பாயங்களும் எத்தனை தடவை சொன்னாலும், `நாங்கதான் இங்க ராஜா. எங்களை யாராலும் அசைக்க முடியாது’ என்கிற இறுமாப்புடன் திரியும் அதிகார வர்க்கம், அரசியல்வாதிகளுடன் கூட்டுசேர்ந்துகொண்டு ஆக்கிரமிப்பு விஷயத்தில் வெறித்தனமாகவே செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

இதன்காரணமாக, ஆக்கிரமிப்பு புகார்கள் மீதான நீதிமன்ற, பசுமைத் தீர்ப்பாய உத்தரவுகளை எல்லாம் காலில் போட்டு மிதித்துக்கொண்டிருக்கிறது இந்த அதிகார வர்க்கம்.

அப்படி மிதிபட்டுக்கொண்டிருக்கும் ஒரு வழக்கு பற்றிதான் இங்கே நாம் பார்க்கப்போகிறோம். இந்த வழக்கு, நீர்நிலை ஆக்கிரமிப்பு வழக்குகளை பொதுப்பணித்துறையும் வருவாய் துறையும் எப்படி கையாள்கின்றன என்பதற்கு உச்சபட்ச உதாரணம்!

கோயில் மற்றும் நிலம்
கோயில் மற்றும் நிலம்

செங்கல்பட்டு மாவட்டம், கிழக்குக் கடற்கரை சாலையில் இருக்கிறது முகையூர் கிராமம். இந்த ஊரின் கோயில் குளம் மற்றும் வாஞ்சி ஏரி ஆகியவை ஆக்கிரமிப்புக்குள்ளாக, அதை 2016-ம் ஆண்டு பசுமைத் தீர்ப்பாயத்துக்குக் கொண்டு சென்றார், அதே கிராமத்தைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன்.

`எங்கள் கிராமத்திலிருக்கும் ஆதிகேசவ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான குளம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதை மீட்டுக் கொடுக்க வேண்டும். வாஞ்சி ஏரியின் நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்துவருகின்றனர். அதையும் தடுத்து, ஏரியைக் காப்பாற்ற வேண்டும்’ என்று சென்னையில் உள்ள தென்மண்டல பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடுத்தார்.

இதை விசாரித்த தீர்ப்பாயம், ``ஆக்கிரமிப்பாளர்கள் என்று கூறப்படுவோரை எதிர்மனுதாரர்களாகச் சேர்க்க வேண்டும்" என்று உத்தரவிட்டது.

அடுத்தடுத்த விசாரணைகளின்போது, ``நீர்நிலைகளை, ஆக்கிரமிப்புகளிலிருந்து பாதுகாக்க வேண்டிய கடமை அரசு நிர்வாகம் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுக்கு இருக்கிறது. நிலத்தடிநீர் மீள்நிரப்பு தடைபடுவது, நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்படுவது, ஆக்கிரமிப்புகள் நடந்திருந்தால் அதை மீட்டெடுத்து நீர்நிலைகளின் இயற்கையான நீரோட்டத்தைப் பாதுகாக்க வேண்டியது ஆகிய பொறுப்புகள் உள்ளூர் பஞ்சாயத்து நிர்வாகிகள் முதல் வருவாய்த்துறை அதிகாரிகள் வரை அனைவருக்குமே உள்ளது. இதை உச்ச நீதிமன்றமும் பல்வேறு சந்தர்ப்பங்களில் உறுதிப்படுத்தியுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குடியிருப்புகள்
ஆக்கிரமிக்கப்பட்டுள்ள குடியிருப்புகள்

எனவே, மாவட்ட ஆட்சியர், பொதுப்பணித் துறையிலுள்ள நீர்வளத்துறையின் மூத்த அதிகாரி மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரி ஆகியோரை உள்ளடக்கிய குழு, இந்த ஆக்கிரமிப்புகள் குறித்து விசாரிக்க அமைக்கப்படும். இக்குழு மூன்று மாதங்களில் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றும் தீர்ப்பாயம் உத்தரவிட்டது.

ஆனால், உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு ஆண்டுக்கணக்கிலானபோதும், ஒரு துரும்பைக்கூட கிள்ளாமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கின்றன பொதுப்பணித்துறையும் வருவாய்துறையும் என்பதுதான் வேதனை!

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

வழக்கைத் தொடுத்த ராதாகிருஷ்ணனிடம் பேசியபோது, ``முதலில் 98 சென்டில் ஆதிகேசவ பெருமாள் கோயில் குளம் இருந்தது. அடுத்தடுத்து குடியேறியவர்களால், அது 20 சென்ட் எனக் குறைந்தது. வழக்கு போட்டதைத் தொடர்ந்து, அங்கு குடியிருப்பவர்களில் பலருக்கும் சொந்தமாக நிலம் இருப்பதை உறுதி செய்த அதிகாரிகள், நிலம் இல்லாத இரண்டு சலவைத் தொழிலாளர் குடும்பங்கள் உட்பட மூன்று குடும்பங்களுக்கு மட்டும் முகையூரிலிருந்து 20 கிலோமீட்டர் தள்ளி ஆட்சிவிளாகம் என்ற கிராமத்தில் நிலம் கொடுப்பதாகக் கூறியுள்ளார்கள்.

ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடுபவர்
ஆக்கிரமிப்புக்கு எதிராகப் போராடுபவர்

குளத்தை மீட்க வேண்டுமென்றுதான் வழக்கையே தொடுத்தோம். அந்தக் குளம் சங்கு வடிவத்தில் இருந்ததால், `சங்கு குளம்’ என்று சொல்வார்கள். ஆக்கிரமிப்பாளர்கள் அந்த இடத்தைக் காலி செய்ய வேண்டுமென்று நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இருப்பினும், ஆக்கிரமிப்புகளை இன்னும் அகற்றாமல் அதிகாரிகள் வாய்தா வாங்கிக்கொண்டிருக்கிறார்கள். இதற்கிடையே, ஆக்கிரமிப்பாளர்கள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்கள்” என்றார்.

ஆக்கிரமிப்பாளர்கள் என்று குறிப்பிடப்படுவர்களில் ஒருவரான சலவைத் தொழிலாளி முனுசாமி, ``என் குடும்பத்தோடு இங்குதான் 64 வருஷமா இருக்கேன். இங்க இருந்தபடிதான் என்னோட நாலு பொண்ணுங்களுக்கும் கல்யாணம் பண்ணிக் கொடுத்தேன். பக்கத்துலதான் என் தம்பி கோவிந்தன் வீடு. எல்லாருமே இங்கதான் இத்தனை வருஷமா வாழுறோம்.

அப்பா காலத்துல இருந்த ஊர்த்தலைவர், எங்களுக்கு இங்க வீடு கட்டி வாழ அனுமதிச்சாரு. எல்லாரும் கூரை வீட்டுலதான் இருந்தோம். இப்பதான் சில வருஷங்களுக்கு முன்ன கல்லு வீடு கட்டி ஓரளவுக்கு வளர்ந்துருக்கோம். இந்த நிலையில, இங்க இருந்து 20 கிலோமீட்டர் தள்ளி மாத்து இடம் கொடுக்குறதா சொல்றாங்க. பிழைப்பு இங்க இருக்குறப்போ, அவ்வளவு தூரத்துல போய் நாங்க என்ன பண்றது” என்றார் பரிதாபமாக.

ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள்
ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள்

மற்றொருவரான கங்காதரன், ``வட்டார வளர்ச்சி அலுவலகத்துல இருந்து காலி பண்ணுங்கனு சம்மன் வந்துருக்கு. எங்களுக்கு வேற வழியும் இல்ல, வேற இடமும் இல்ல. நான் பொறந்ததே இங்கதான். இந்த சிமென்ட் ரோட்டைப் போட்டுக் கொடுத்ததே பஞ்சாயத்துதான்.

ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள்
ஆக்கிரமிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்கள்

எங்களுக்குத் தெரிஞ்சு இங்க குளம் எதுவுமில்ல. இப்போ அந்தக் கோயில் இருக்குற இடமே ஈ.சி.ஆர் சாலை விரிவாக்கத்துல போகப் போகுது. இதுல எங்களையும் இல்லாத குளத்தை இருக்குனு சொல்லி காலிபண்ணிட்டா, வேற எங்க போயும் மறுபடியும் வீடு கட்டி வாழற அளவுக்கு எங்களுக்கு வசதி வாய்ப்பு இல்ல” என்றார்.

கோயில் குள ஆக்கிரமிப்பு, வாஞ்சி ஏரி ஆக்கிரமிப்பு ஆகிய குற்றச்சாட்டுகளை விசாரித்தவர்களில் ஒருவரான பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவரிடம் இதுதொடர்பாகக் கேட்டபோது, தன்னுடைய பெயரை வெளியிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டவர்,

``வாஞ்சி ஏரி, கோயில் குளம் இரண்டும் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது தொடர்பான விசாரணை கமிட்டியில் பொதுப்பணித்துறையும் பங்கு பெற்றிருந்தது. நாங்கள் ஏரி ஆக்கிரமிப்பு குறித்து மட்டுமே விசாரித்து நடவடிக்கை எடுத்தோம். கோயில் குளம் குறித்து விசாரித்த வட்டார வளர்ச்சி அலுவலர், அதை ஆக்கிரமித்து 8 குடும்பங்கள் வாழ்வதாக எங்களிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அவர்களுக்கு மாற்று இடம் ஏற்பாடு செய்து கொடுப்பதாகவும் தெரிவித்தார்.

ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ள வீடுகள்
ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ள வீடுகள்
யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பு விவகாரம்: `நீலகிரி கலெக்டரை டிரான்ஸ்ஃபர் செய்ய உச்ச நீதிமன்றம் அனுமதி!'

ஏரி நிலத்தில் கோடைக்காலங்களில் நாத்து நட்டு வளர்ப்பது பொதுவாக நடப்பதுதான். ஆனால், அந்தக் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ஒருவரே அதை ஆக்கிரமிப்பு என்று வழக்கு தொடுக்கும்போது, அதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியதாகி விடுகிறது” என்று கொஞ்சம்கூட கூச்சமில்லாமல் சொன்னார்.

ஏரியின் மொத்த பரப்பளவைத் துண்டாக்கி, ஏரிக்கு நடுவே கோயிலுக்கு ஒரு சாலை, சுடுகாட்டுக்கு ஒரு சாலை என்று போடப்பட்டுள்ளதையும் கவனித்தோம். அந்தச் சாலைகள் அமைக்கப்பட்டதால், ஏரியின் நீர்பிடிப்புப் பகுதி பிரிக்கப்பட்டு, நீரோட்டம் தடைபட்டுள்ளது.

``உங்கள் விசாரணை அறிக்கையில் அவற்றைப் பற்றி எதுவும் குறிப்பிடவும் இல்லை, நடவடிக்கையும் எடுக்கவில்லையே” என்று கேட்டபோது,

``அதையும்தான் எடுக்க வேண்டும். ஆனால், அகற்றக் கூடாது என்று பொதுமக்கள் இணைந்து கோரிக்கை வைத்து கடிதம் கொடுத்ததால் எடுக்கவில்லை. இன்னும் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை சமர்ப்பிக்கவில்லை. அதைச் சமர்ப்பிக்கும்போது, இதையும் குறிப்பிடுவோம்” என்றார்.

குளத்தை ஆக்கிரமித்து வீடு கட்டியிருப்பது தெளிவாகத் தெரிகிறது. காலகாலமாகக் குடியிருந்து வரும் அந்த ஏழைகளுக்கு மாற்று இடத்தை உள்ளூரிலேயே கொடுக்க வட்டார வளர்ச்சி அலுவலர் நடவடிக்கை எடுக்க வேண்டும். அதன்பிறகு ஆக்கிரமிப்பிலிருந்து குளத்தை மீட்கலாம். அதேபோல, ஆரம்பத்தில் ஏரியில் நாற்றுமட்டும்தான் விடுகிறோம்... கோடைக்காலத்தில்தான் செய்கிறோம் என்று சொல்பவர்கள், பிற்காலத்தில் பீம் பட்டா என்கிற பெயரில் சொந்தம் கொண்டாடி ஏரிகளை ஆக்கிரமிப்பது வரலாறாக இருப்பது நாமறிந்தே. இதையெல்லாம் வேடிக்கை பார்ப்பதற்காக மட்டுமே பொதுப்பணித்துறை என்கிற துறை இங்கே செயல்படுவதும் அந்த வரலாற்றில் முக்கிய அத்தியாயமே!

ஆக்கிரமிப்பு குடியிருப்புகளில் அரசு திட்டங்கள்
ஆக்கிரமிப்பு குடியிருப்புகளில் அரசு திட்டங்கள்
ஆக்கிரமிப்பு விவகாரம்: அதிரடிகாட்டிய மாநகராட்சி ஆணையர்; போர்க்கொடி தூக்கிய திமுக நிர்வாகி!

பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டும் இந்தப் பிரச்னை தொடர்பாக எந்த ஒரு ஆக்கிரமிப்பையும் அகற்றவில்லை பொதுப்பணித்துறை அதிகாரிகள். ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகளைக் காப்பாற்றுவதற்காகவே உருவாக்கப் பட்டிருக்கும் பொதுப்பணித்துறை, நடுவே சாலைகள் போடப்பட்டு ஏரி விழுங்கப்பட்டிருப்பதைக் கண்டும்காணாமல் இருப்பது, நியாயமானதல்ல.

தற்போதயை பெருமழையின் காரணமாக, கிட்டத்தட்ட தமிழகத்தின் பலபாகங்கள் வெள்ளக்காடாகிவிட்டன. இதற்கு நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு என்பது மிகமிக முக்கியமான காரணமாக இருக்கிறது என்பதை நாம் அனைவருமே கண்கூடாகப் பார்த்துக்கொண்டிருக்கிறோம். இத்தகைய சூழலிலாவது ஆக்கிரமிப்புக்குத் துணைபோகும் அதிகாரவர்க்கத்தைக் கடும் நடவடிக்கைக்கு உள்ளாக்க வேண்டியது அவசியம்.

குறிப்பாக, இந்த முகையூர் வழக்கில் சம்பந்தப்பட்ட அனைத்து அதிகாரிகளுக்கும் பசுமைத் தீர்ப்பாயம் மற்றும் உயர் நீதிமன்றம் ஆகியவை சரியான சாட்டையடி கொடுக்க வேண்டும். அப்போதுதான், ஆக்கிரமிப்பாளர்களும் அடங்குவார்கள்... துணைபோகும் அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஒடுங்குவார்கள்!

காத்திருப்போம்... சாட்டையடி சத்தத்தைக் கேட்பதற்கு!

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு