Published:Updated:

ஸ்டெர்லைட்டை மூடியபிறகு தூத்துக்குடியில் காற்றுமாசு குறைந்திருக்கிறதா- உண்மைநிலை என்ன?

`ஸ்டெர்லைட் ஆலையை மூடியது காற்றுத் தரம் உயர வழி செய்துள்ளது. அந்த ஆலையின் சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையைக் கவனித்தால் அது புரியும்.’

ஸ்டெர்லைட்
ஸ்டெர்லைட்

2018-ம் ஆண்டின் மறக்கமுடியாத மக்கள் போராட்டங்களில் ஒன்று, தூத்துக்குடியில் வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் தாமிர ஆலைக்கு எதிராக நடந்த போராட்டம். அந்த ஆலை செயல்படுவதற்கு எதிராக மக்கள் வெளிப்படுத்திய கடுமையான எதிர்ப்பின் விளைவாகக் கடந்த ஏப்ரல் மாதம் மூடப்பட்டது.

ஆலை மூடப்பட்ட பிறகும் கந்தக வாயுவின் அளவு காற்றில் ஒரே மாதிரிதான் உள்ளது. காற்றுத்தரம் குறித்த அளவீட்டில் பல அம்சங்கள் இருக்கையில், அவை அனைத்தையும் ஒரேயொரு நிறுவனத்தின்மீது சுமத்துவது திசை திருப்புகின்ற செயல்.
ஸ்டெர்லைட் நிர்வாகம்

``தூத்துக்குடி சிப்காட் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஸ்டெர்லைட் ஆலையை மூடியபிறகும், அங்கு காற்றுத் தரம் உயரவில்லை. அப்படியேதான் இருக்கிறதென்று வேதாந்தா நிறுவனம் தகவல் அறியும் உரிமைச் சட்டத் தரவுகளை முன்வைக்கிறது. ஆனால், அது உண்மையில்லை. தூத்துக்குடியில் ஆலை மூடப்பட்ட பிறகு காற்றுத் தரம் உயர்ந்துள்ளது" என்று கூறுகிறது சென்னை சாலிடாரிட்டி குழு என்ற தன்னார்வ நிறுவனம்.

தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தால் இயக்கப்படும் மூன்று காற்றுத்தரக் கண்காணிப்பு மையங்களில் கிடைத்த தரவுகள் ஏப்ரல் 2018-க்குப் பிறகு காற்றின் தரம் அங்கு உயர்ந்துள்ளதைக் காட்டுகிறது. சிப்காட் தொழிற்சாலை மையத்தில், பாதுகாப்பற்ற நிலையில் காற்று இருந்த நாள்களின் எண்ணிக்கை, ஸ்டெர்லைட் மூடப்பட்ட பிறகு பாதியாகக் குறைந்துள்ளதைத் தரவுகள் உணர்த்துகின்றன. ஏப்ரல் 2017 முதல் மார்ச் 2018 வரையிலான ஒரு வருடத்தில் 56 சதவிகித நாள்களில் காற்றுத்தரம் பாதுகாப்பற்ற நிலையிலிருந்தது. ஏப்ரல் 2018 முதல் மார்ச் 2019 வரையிலான காலகட்டத்தில் அந்த விகிதம் 27 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. இரண்டு காலகட்டங்களிலும் ஒப்பிட்டுப் பார்த்தால், பாதுகாப்பான காற்றுத் தரம் நிலவிய நாள்களின் அளவு ஆலை செயல்பட்ட வருடத்தில் ஆண்டுக்கு 43 சதவிகிதமாக இருந்தது. அது மூடிய பிறகு 73 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

காற்றுத் தர கண்காணிப்பு மையம் 1-ல் பதிவான அளவு
காற்றுத் தர கண்காணிப்பு மையம் 1-ல் பதிவான அளவு

ஸ்டெர்லைட் ஆலை இயங்கிக்கொண்டிருந்த காலகட்டத்தில் இருந்த காற்று மாசுபாடு, அது மூடப்பட்ட பிறகு குறைந்துள்ளதாக இந்தத் தரவுகள் காட்டுகின்றன. இதுகுறித்து ஸ்டெர்லைட் தரப்பில் தலைமை கண்டுபிடிப்பு மற்றும் மாற்றத்துக்கான அதிகாரி சுமதியிடம் பேசினோம்.

``காற்று மாசுபாடு மிகவும் விசாலமானது. அது அதிகமாக, பல காரணிகள் உள்ளன. அதில் ஸ்டெர்லைட் மீது வைக்கப்பட்ட குற்றச்சாட்டு, கந்தக டை ஆக்சைடு வாயு வெளியீடு அதிகமாக இருக்கிறது என்பதே. காற்று மாசுபாடு என்பதிலுள்ள பல காரணிகளில் கந்தக வாயுவின் அளவு ஒரு பகுதிதான். அது, ஆலை செயல்பாட்டிலிருந்தபோதும் சரி, மூடப்பட்ட பிறகும் சரி ஒரே அளவில்தானிருக்கிறது. அதை அமிலமாக மாற்றுவதால், அதிக வெளியீடு இருக்கவில்லை. அதனால், ஆலை மூடப்பட்ட பிறகும் கந்தக வாயுவின் அளவு காற்றில் ஒரே மாதிரிதான் உள்ளது. காற்றுத்தரம் குறித்த அளவீட்டில் பல அம்சங்கள் இருக்கையில், அவை அனைத்தையும் ஒரேயொரு நிறுவனத்தின்மீது சுமத்துவது திசை திருப்புகின்ற செயல்.

காற்றுத் தர கண்காணிப்பு மையம் 2-ல் பதிவான அளவு
காற்றுத் தர கண்காணிப்பு மையம் 2-ல் பதிவான அளவு

காற்றுத்தரம் முன்னர் செயல்பாட்டிலிருந்தபோது இருந்த அளவைவிட, மூடிய பிறகு உயர்ந்துள்ளது என்பதற்கும் ஸ்டெர்லைட் ஆலையைத் தவிர பல காரணிகள் உள்ளன. தூத்துக்குடியில் அனல்மின் நிலையங்கள் நிறைய உள்ளன. அதில் பலவும் அவற்றின் உற்பத்தி அளவைக் குறைத்துள்ளன. சில யூனிட்டுகளை மூடியுள்ளன. அதிலும் ஸ்டெர்லைட் அமைந்திருந்த சிப்காட் பகுதியைப் பொறுத்தவரை, கந்தக டை ஆக்சைட் மற்றும் நைட்ரிக் ஆக்சைட் போன்றவற்றின் அளவு காற்றில் எப்போதுமே ஒரே அளவில்தான் இருந்துள்ளது" என்றார்.

தூத்துக்குடி வட்டாரத்தில் செயல்பட்ட அனல்மின் நிலையங்கள் உற்பத்தியைக் குறைத்ததும் மூடப்பட்டதுதான் காற்றில் மாசுபாடு அளவு குறைந்ததற்குக் காரணம் என்று சொல்கிறது ஸ்டெர்லைட் தரப்பு. தூத்துக்குடியிலுள்ள கோஸ்டல் எனெர்ஜென் என்ற அனல்மின் நிலையம் சிப்காட்டிலிருந்து 21 கி.மீ தூரத்திலிருக்கிறது. இந்த் பாரத் என்ற அனல்மின் நிலையம் சிப்காட்டிலிருந்து 19 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. அரசு நடத்தும் தூத்துக்குடி அனல்மின் நிலையம் அங்கிருந்து 13 கி.மீ தொலைவில் உள்ளது. இப்படி, சிப்காட் பகுதியிலிருந்து குறிப்பிட்ட தொலைவுக்கு அப்பால் அமைந்துள்ள அனல்மின் நிலையங்கள் காற்றுத் தரத்தில் மிகச் சிறிய அளவு தாக்கம் ஏற்படுத்தலாம். ஆனால், பெரிய வித்தியாசத்தைக் கொண்டுவரும் என்று சொல்லமுடியாது. சிப்காட்டில் ஸ்டெர்லைட் வேதாந்தா நிறுவனத்தின் அனல்மின் நிலையம் அமைந்துள்ளது. ஒருவேளை அது மூடப்பட்டது காற்றுத் தரத்தில் தாக்கம் ஏற்படுத்தியிருக்கலாம்.

காற்றுத் தர கண்காணிப்பு மையம் 2-ல் பதிவான அளவு
காற்றுத் தர கண்காணிப்பு மையம் 2-ல் பதிவான அளவு

காற்றுத் தரம் உயர்ந்துள்ளதாகத் தகவல் வெளியிட்ட சென்னை சாலிடாரிட்டி குழுவின் ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்த் ஜெயராமனிடம் இதுகுறித்துப் பேசியபோது, ``கந்தக டை ஆக்சைடு மட்டும்தான் ஸ்டெர்லைட் வெளியிடுகிறது என்று குறிப்பான குற்றச்சாட்டாக யாரும் முன்வைக்கவில்லை. இவ்வளவு பெரிய தொழிற்சாலையில் கந்தகம் மட்டும் வராது. நீதிமன்ற வழக்கில்கூட, கந்தகத்தோடு சேர்ந்து நுண்துகள்கள், ஆர்சனிக், நைட்ரஸ் ஆக்சைட் என்று பல காரணிகள் வெளியாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூடியது காற்றுத் தரம் உயர வழி செய்துள்ளது. அந்த ஆலையின் சூழலியல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையைக் கவனித்தால் அது புரியும். தினமும் 3,235 இரண்டு மற்றும் மூன்று சக்கர வாகனங்கள், 1,214 கார்கள் மற்றும் 2,066 கனரக வாகனங்கள் உட்பட 6,515 வாகனங்கள் அங்கு வந்து போகின்றன. மோசமான சாலைகள், முறையான பசுமை வளையம் அமைக்காதது போன்றவை சாலைத் தூசுகள் மற்றும் வாகனப் புகை போன்றவற்றால் காற்று மாசுபாடு அதிகமாக மேலும் வழிவகுத்தன. கூடுதலாக, தினசரி 5,000 டன் தாமிரக் கலவை, 94 டன் உலை எண்ணெய் (Furnace Oil) , 3 டன் டீசல், 40 டன் எரிக்கும் கரி (Coking Coal) போன்றவை ஆலையில் கையாளப்பட்டன. இவையனைத்திலிருந்து பல மாசுபாட்டுக் காரணிகள் விதிகளுக்குப் புறம்பாக வடிவமைக்கப்பட்ட புகைப்போக்கிகள் வழியாக வெளியேறின.

ஸ்டெர்லைட் ஆலை
ஸ்டெர்லைட் ஆலை

இவையனைத்துமே நுண்துகள்கள், கந்தக வாயுக்கள் மற்றும் பல்வேறு கன உலோகத் துகள்கள் மற்றும் ஃப்ளூரைடுகள் வெளியாகக் காரணமாக இருந்தன. `கந்தக டை ஆக்சைடு அளவு மாறாமலிருக்கிறது, நுண்துகள்களுக்கும் ஆலைக்கும் சம்பந்தமில்லை' என்பது தவறு. கந்தக டை ஆக்சைடு வாயுதான், PM2.5 அளவுடைய நுண்துகள் அதிகரிக்க முக்கியக் காரணியாக உள்ளது. அந்த வாயு நீண்ட நேரம் காற்றில் கலந்திருக்கையில், அதில் குறிப்பிட்ட அளவு நுண்துகளாக உருமாறிவிடும். அது மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கும்" என்று கூறினார்.

தூத்துக்குடி மக்கள் காற்று மாசுபாட்டினால் பல பிரச்னைகளைச் சந்தித்துவிட்டார்கள். இப்போது காற்றுத்தரம் ஓரளவுக்கு உயர்ந்துள்ளது, அவர்களுக்குச் சற்றே நம்பிக்கையைக் கொடுக்கின்றது. அரசாங்கமும் நீதிமன்றமும் அந்த நம்பிக்கையைக் காப்பாற்ற வேண்டும்.

சிறப்புப் பொருளாதார அந்தஸ்தை இழக்கும் ஸ்டெர்லைட் ஆலை - மத்திய அமைச்சகம் தகவல்!