Published:Updated:

தென் சென்னை எப்போதும் வெள்ளத்தில் மிதப்பதற்கு காரணம் இதுதானா?

பெருங்குடி குப்பைக் கிடங்கை முழுமையாக அகற்றினால் மழைநீர் எந்தப் பிரச்னையும் இன்றி வெளியேறிவிடும். ஆனால், தற்போதைக்கு குப்பைக் கிடங்கை அகற்ற வழியில்லையென்றாலும், குப்பைக் கிடங்கு வழியாகத் தண்ணீரை வெளியேற்ற அங்கே கால்வாய்கள் (டிரன்ச்) எடுக்க வேண்டும்.

வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை என்று பாகுபாடு இல்லாமல் மழை மொத்த சென்னையையும் புரட்டிப் போட்டிருக்கிறது. குறிப்பாக, தென் சென்னை பகுதிகளான வேளச்சேரி, தரமணி, கீழ்க்கட்டளை, ஆதம்பாக்கம், பள்ளிக்கரணை பகுதியில் இன்னும் முழுமையாக வெள்ளம் வடிந்துவிடவில்லை. ஒவ்வொரு பருவ மழையின்போதும் வேளச்சேரி, மடிப்பாக்கம், ஆதம்பாக்கம் பகுதிகள் பாதிக்கப்படுவது வழக்கமாகிவிட்டது. இவ்வளவுக்கும் வேளச்சேரி ஏரியிலிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு மழைநீர் வடிந்து செல்லும் கால்வாய்கள்கூட கட்டப்பட்டிருக்கின்றன. இதற்குப் பிறகும் மழைநீர் வடியவில்லை.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம்
பள்ளிக்கரணை சதுப்பு நிலம்
சிங்காரச் சென்னை... மழை பெய்தால் தீவு... என்னதான் தீர்வு?

இதற்குக் காரணம் என்னவென்று நீர்நிலை ஆய்வாளரும் கேர் எர்த் அமைப்பைச் சேர்ந்தவருமான ஜெயஶ்ரீ வெங்கடேசனிடம் பேசியபோது, ``2005-ம் ஆண்டு பெய்த பெருமழையிலிருந்தே சென்னையைச் சுற்றியுள்ள நீர்நிலைகளை ஆய்வு செய்து வருகிறோம். தென் சென்னை பகுதியின் முக்கிய நீர்வடிகாலாக இருந்து வருகிறது ஒக்கியம் மடுவு. ஆனால், இதன் மூலமாக மழைநீரை வெளியேற்ற வேண்டுமென்றால் அதற்குத் தடையாக பெருங்குடி குப்பைக் கிடங்கு இருந்து வருகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் ஒருபகுதியை ஆக்கிரமித்து குப்பைக் கிடங்கு உருவாக்கப்பட்டது மாபெரும் வரலாற்றுப் பிழை. இதை முழுமையாக இங்கிருந்து அகற்ற வேண்டும் என்பது சூழல் ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கை. டைடல் பார்க், தரமணி, ஐ.ஐ.டி வளாகத்திலிருந்து வெளியேறும் மழைநீர் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை ஒருபக்கம் வந்தடைகிறது.

அதேபோல வேளச்சேரி ஏரி, ஆதம்பாக்கம் ஏரி, பரங்கிமலையிலிருந்து வரும் மழைநீர் இன்னொரு பக்கம் சதுப்புநிலத்தை வந்தடைகிறது. பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை வந்தடையும் இந்த இரு பக்க மழைநீரும் மெதுவாகத்தான் ஒக்கியம் மடுவுக்குச் செல்கிறது. இதற்குத் தடையாக இருப்பது 200 ஏக்கர் பரப்பளவில் உள்ள பெருங்குடி குப்பைக் கிடங்கு. பெருங்குடி குப்பைக் கிடங்கு முழுமையாக அகற்றினால் மழைநீர் எந்தப் பிரச்னையும் இன்றி வெளியேறிவிடும். ஆனால், தற்போதைக்கு குப்பைக் கிடங்கை அகற்ற வழியில்லையின்றாலும், குப்பைக் கிடங்கு வழியாகத் தண்ணீரை வெளியேற்ற அங்கே கால்வாய்கள் (டிரன்ச்) எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துவிடுகிறோம். கால்வாய்கள் எடுத்தால் எளிதாக ஒக்கியம் மடுவுக்கு மழைநீர் சென்று சேர்ந்துவிடும். அங்கிருந்து பக்கிங்காம் கால்வாய் வழியாகக் கடலில் சென்று கலந்துவிடும். இதைச் சரி செய்யாமல் வேளச்சேரி, தரமணி பகுதிகளில் எவ்வளவு பெரிய மழைநீர் வடிகால் பாதைகள் அமைத்தாலும் பலனில்லை.

பச்சை நிறத்தில் பள்ளிக்கிரணை சதுப்பு நிலம், பழுப்பு நிறத்தில் பெருங்குடி குப்பைக் கிடங்கு
பச்சை நிறத்தில் பள்ளிக்கிரணை சதுப்பு நிலம், பழுப்பு நிறத்தில் பெருங்குடி குப்பைக் கிடங்கு
``சென்னை தத்தளிக்காமல் இருக்க அரசு இதைச் செய்தாக வேண்டும்!" - நீர்நிலை ஆய்வாளர்

இது சம்பந்தமாக 2005, 2015 போன்ற பெருமழை காலங்களில் அரசுக்கு கோரிக்கை விடுத்தாயிற்று பலன் ஒன்றும் இல்லை. ஒக்கியம் மடுவு வழியாகக் கீழ்க்கட்டளை ஏரி, நாராயணபுரம் ஏரி, வேளச்சேரி ஏரி, ஆதம்பாக்கம் ஏரி, மடிப்பாக்கம் ஏரி, மூவரசம்பட்டு ஏரி என்று சுமார் 54 ஏரிகளின் உபரிநீர் இதன் வழியாக வெளியேறுகிறது. ஆனால், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்திலிருந்து மழைநீர் வேகமாக ஒக்கியம் மடுவுக்கு செல்வதற்கு வழியில்லை. இதனால்தான் வேளச்சேரி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கிறது. மழைநீர் கொண்டு செல்லும் பாதையை நாம் ஓரளவுக்குத்தான் சரிசெய்ய முடியும். ஆனால், அதைக்கூட இன்னும் நாம் செய்யாமல் இருக்கிறோம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இன்னொன்று பள்ளிக்கரணை, பெருங்குடி பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. இந்தப் பகுதியில் குப்பைக் கிடங்கு இருப்பது ஆபத்தானது என்று குடியிருப்புவாசிகள் பலமுறை புகார் செய்துவிட்டனர். அதேபோன்று பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் வந்துசெல்லும் பறவைகளும் குப்பைக் கிடங்கால் பாதிக்கப்படுகின்றன என்பதையும் சூழல் ஆர்வலர்கள் பலமுறை முறையிட்டுவிட்டனர். நடவடிக்கைதான் எடுத்த பாடில்லை. பெருங்குடி குப்பைக் கிடங்கு வழியாக கால்வாய் எடுக்கும்போது (டிரன்ச்) வடக்கு மேற்காகவும், தெற்குக் கிழக்காகவும் எடுக்க வேண்டும். சுமார் 10-லிருந்து 12 கால்வாய்கள் எடுக்க வேண்டி வரும்.

ஜெயஶ்ரீ வெங்கடேசன்
ஜெயஶ்ரீ வெங்கடேசன்

தற்போது குப்பைக் கிடங்கு சென்னை மாநகராட்சியிடம் இருக்கிறது. இதை வனத்துறையிடம் ஒப்படைக்க வேண்டும்.

அப்போதுதான் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு விடிவுகாலம் பிறக்கும். பறவைகள் தங்கும் ஒரு சதுப்பு நிலையத்தையொட்டி ஒரு குப்பை கிடங்கு இருப்பது ஒரு நாகரிகமான சமூகத்துக்கு அழகில்லை” என்றார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு