Published:Updated:

ஊழிக்காலம் - 15 | கான்ஸ்பிரசி தியரிகளால் தாமதமாகும் காலநிலைத் தீர்வு... எப்படிச் சரி செய்வது?

கான்ஸ்பிரசி தியரிகளும் காலநிலைத் தீர்வும்...

காலநிலை மாற்றத்தைப் பற்றி எழுதப்படும் எல்லா கட்டுரைகளிலும் அதீத பதற்ற உணர்வையும் பயத்தையும் உண்டாக்கும் தகவல்கள் இருக்கின்றன என்பது பொதுவான குற்றச்சாட்டு. ஆனால்...

ஊழிக்காலம் - 15 | கான்ஸ்பிரசி தியரிகளால் தாமதமாகும் காலநிலைத் தீர்வு... எப்படிச் சரி செய்வது?

காலநிலை மாற்றத்தைப் பற்றி எழுதப்படும் எல்லா கட்டுரைகளிலும் அதீத பதற்ற உணர்வையும் பயத்தையும் உண்டாக்கும் தகவல்கள் இருக்கின்றன என்பது பொதுவான குற்றச்சாட்டு. ஆனால்...

Published:Updated:
கான்ஸ்பிரசி தியரிகளும் காலநிலைத் தீர்வும்...
காலநிலை மாற்றத்தைப் பற்றி விவாதிப்பதிலும் அதற்கான தீர்வுகளை முன்னெடுப்பதிலும் முக்கியத் தடையாக இருப்பது காலநிலை மறுப்பு (Climate denial). சுருக்கமாக சொல்லப்போனால், காலநிலை மாற்றம் என்ற ஒரு விஷயமே இல்லை என்று மறுக்கிற மனப்பான்மை இது. "காலநிலை மாற்றமே இல்லை என்றபோது அதற்கான தீர்வுகளை ஏன் முன்னெடுக்கவேண்டும்?" என்று மறுப்பாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

காலநிலை மறுப்பாளர்கள் படிப்படியாக இந்த மறுப்பை முன்வைக்கிறார்கள் என்கிறார் அறிவியலாளர் மைக்கேல் மான். நாம் அவர்களிடம் விவாதிக்க விவாதிக்க, தங்கள் வாதங்களை அவர்கள் அடுத்தடுத்த நிலைக்கு எடுத்துச் செல்வார்கள். மைக்கேல் மான், மறுப்பாளர்களின் வாதங்களில் ஆறு படிகள் உள்ளன என்கிறார்:

  1. கரியமிலவாயு காற்றில் அதிகரிக்கவில்லை.

  2. ஒருவேளை அது அதிகரித்திருக்கிறது என்றாலும், அதனால் காலநிலையில் மாற்றம் வராது.

  3. ஒருவேளை மாற்றம் வந்து புவி வெப்பமடைந்தாலும், அது இயற்கையாக நிகழ்வதுதான்.

  4. ஒருவேளை இயற்கைக் காரணிகளை மட்டும் வைத்துக்கொண்டு காலநிலை மாற்றத்தை முழுவதுமாக விவரிக்க முடியாவிட்டாலும், மனிதனால் ஏற்பட்ட மாற்றம் என்பது குறைவுதான்.

  5. ஒருவேளை மனிதனால்தான் மாற்றம் வருகிறது என்றாலும், அந்த மாற்றம் எதிர்காலத்தில் நன்மையே தரும்.

  6. ஒருவேளை மாற்றம் நமக்கு ஆபத்தைத் தந்தாலும், மனித இனத்தின் அபூர்வ அறிவுத்திறனால் தன்னைத் தகவமைத்துக்கொள்ள முடியும்.

காலநிலை மாற்றத்தை மறுக்கும் பிரசாரம்
காலநிலை மாற்றத்தை மறுக்கும் பிரசாரம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காலநிலை மறுப்புக்குப் பல அரசியல், உளவியல் காரணங்கள் உண்டு. புதைபடிவ எரிபொருள்களையே அடிப்படையாகக் கொண்டு வணிகம் செய்யும் எண்ணெய் நிறுவனங்களின் லாபி இதில் முக்கியமானது. உலகின் டாப் 5 எண்ணெய் நிறுவனங்கள், காலநிலை மறுப்பு தொடர்பான ஆராய்ச்சிகள், பிரசாரங்களுக்கு மட்டுமே வருடத்துக்கு 200 மில்லியன் டாலர் செலவழிக்கின்றன. சமூக வலைத்தளங்கள் இதில் ஒரு முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகின்றன. இயந்திரங்களால் நடத்தப்படும் சமூகவலைத்தளக் கணக்குகளின்மூலம் இதுபோன்ற மறுப்பு பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. களத்தில் நின்று போராடும் காலநிலை செயற்பாட்டாளர்கள் மீது வெறுப்பை உமிழ்வதும்கூட இதன் நீட்சியே.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பொதுவாகவே மக்களுக்கு அறிவியல் மேல் நம்பிக்கை குறைந்து வருகிறது. அதை சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ளும் அரசியல் அமைப்புகளும் எண்ணெய் நிறுவனங்களும், காலநிலை அறிவியலாளர்களின் சில கணிப்புகளை சுட்டிக்காட்டி, "கவனித்தீர்களா, எதிர்காலத்தில் இப்படி இருக்கலாம்/இருக்கக்கூடும் என்று ஒரு யூகமாகத்தான் சொல்கிறார்கள், ஆகவே அவர்களுக்கே அவர்களது அறிவியலில் நம்பிக்கையில்லை" என்று மக்களிடம் பிரசாரம் செய்கின்றன. காலநிலை மாற்றம் சார்ந்த அறிவியலின் சிக்கலான தன்மையை சரியாகப் புரிந்துகொண்டால் இந்தக் குற்றச்சாட்டில் அடிப்படை இல்லை என்பது தெரிந்துவிடும்.

சமீபகாலமாக அதிகரித்துவரும் போலி அறிவியல் கருத்தாக்கங்கள், போலிச் செய்திகள் மற்றும் கான்ஸ்பிரஸி தியரி மனப்பான்மையும் காலநிலை மறுப்புக்குக் காரணிகள். "இவங்க இப்படித்தான் பீதியைக் கிளப்புவாங்க" என்கிற கிண்டலுடன் காலநிலை மாற்றத்தையும் பலர் எளிதில் எடுத்துக்கொள்கிறார்கள். உலகம் அழிந்துவிடும் என்கிற 2012 புரளியைப் போலல்லாமல், இது அறிவியல் அடிப்படையில் முன்வைக்கப்படும் கணிப்பு என்பதைப் பல அறிவியலாளர்கள் எழுதியும் பேசியும் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சி செய்து வருகிறார்கள்.

காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம்

காலநிலை மாற்றத்தைப் பற்றி எழுதப்படும் எல்லா கட்டுரைகளிலும் அதீத பதற்ற உணர்வையும் பயத்தையும் உண்டாக்கும் தகவல்கள் இருக்கின்றன என்பது பொதுவான குற்றச்சாட்டு. இது alarmism என்று அழைக்கப்படுகிறது. ஆனால், கட்டுரையாளர்களோ, "கூடிய வரையில் நாங்கள் பதற்றத்தைக் குறைத்துதான் எழுதுகிறோம். எவ்வளவு மென்மையான மொழியில் எழுதினாலும் பயம் வந்துவிடுகிறது" என்கிறார்கள். உண்மையில் காலநிலையின் நிலவரம் அத்தனை மோசமாகத்தான் இருக்கிறது என்றே நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எந்த ஒரு தகவல் வரும்போதும், "இந்தத் தகவலே ஒரு கான்ஸ்பிரஸி தியரியாக இருக்குமோ" என்கிற ஒரு கேள்வி எழத் தொடங்கியுள்ளது. பொதுவான விழிப்புணர்வுக்கு இது நல்லதோ இல்லையோ, காலநிலை மாற்றத்தைப் பொறுத்தவரை இந்த மனப்பான்மையால் பாதிப்புகளே அதிகம். காலநிலை மாற்றத்தைக் கண்முன்னால் நிரூபிக்க முடியாது. எதிர்காலத்தையும் கடந்தகாலத்தையும் கணித மாதிரிகள் மூலமாக இணைக்கும் சிக்கலான அறிவியல் அது. அது சரியாக மக்களிடம் கொண்டு செல்லப்படாததால், காலநிலை மாற்றமும் கான்ஸ்பிரஸி தியரிகளுக்கான இடத்தில் வைத்துப் பூட்டப்படுகிறது.

காலநிலை மாற்றத்தைப் பற்றிய மனிதர்களின் பயமும் அதன் பிரம்மாண்டமுமே காலநிலை மறுப்புக்கும் காரணம் என்றால் நம்ப முடிகிறதா? காலநிலை மாற்றம் முன்வைக்கும் எதிர்காலம் மிக மோசமானதாக இருக்கிறது. ஆகவே மனித மனம் அதைப் புறக்கணித்துவிட்டு தன் பயத்தை மறைத்துக்கொள்கிறது. நம் ஆழ்மன பயங்களை உள்ளுக்குள்ளேயே பூட்டிக்கொள்வோமே அதைப் போன்ற உளவியல் செயல்பாடு இது. இது மென் மறுப்பு (soft denial) என்று அழைக்கப்படுகிறது.

காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம்

காலநிலை மாற்றம் என்பது பற்றியெரியும் வீட்டுக்கூரையைப் போல. வீட்டுக் கூரை எரியவேயில்லை என்றோ, வீட்டுக் கூரை எரிவதாக சொல்லப்படும் தகவலே ஒரு சர்வதேச சதி/புரளி என்றோ நம்பி நாம் கோஷங்கள் எழுப்பலாம். ஆனால் எரியும் நெருப்பு நம்பிக்கைகள் சார்ந்தது அல்ல. நாமாகக் குறுக்கிடும்வரை கூரை தொடர்ந்து எரிந்துகொண்டேதான் இருக்கும். காலநிலை மாற்றத்துக்கான தீர்வுகளையும் அதே அவசரத்துடன் நாம் செயல்படுத்தியாகவேண்டும்.

எண்ணெய் நிறுவனங்களின் லாபியை நம்மால் ஒன்றும் செய்ய முடியாது. ஆனால் நம் உளவியல் சிக்கல்களை நாம் அணுகிப் பார்க்கலாம். இது காலநிலைப் பதற்றம் (Climate Anxiety) என்று அழைக்கப்படுகிறது. காலுக்கடியில் பூமி நழுவுவதைப் போன்ற உணர்வு இது. காலநிலை மாற்றம் சார்ந்து ஆராய்ச்சி செய்கிற அனைவருக்குமே இந்தப் பதற்றம் இருக்கிறது.
காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம்

ஏன், இதோ இந்தக் கட்டுரையை எழுதிக்கொண்டிருக்கும் நானும் அதே அளவு பதற்றத்துடன்தான் காலநிலை மாற்றத்தை எதிர்கொள்கிறேன். நம் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது என்று தெரியும்போது வரும் இயல்பான உணர்வு இது. ஆனால் இதிலிருந்து ஓடி ஒளிந்துவிட முடியாது. "கவலை என்பது அசைந்தாடும் நாற்காலியைப் போல, ஆடிக்கொண்டே இருக்கலாமே தவிர, அதன் மீது அமர்ந்து எங்கும் பயணிக்க முடியாது" என்பார்கள். பதற்றமும் அப்படிப்பட்டதுதான். காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் வைப்பதற்கான தீர்வுகள், செயல்பாடுகளின் மூலம்தான் பதற்றத்தைத் தணித்துக்கொள்ள முடியும்.

காலநிலை செயல்பாட்டாளர்களைப் பொறுத்தவரை, பதின்பருவத்தினரின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. பிரமாண்டமான அரசுகளையே உலுக்கும் சிறு குரல்கள் அவர்களுடையது. அவர்கள் யார்? எது அவர்களைக் களத்துக்கு அழைத்து வருகிறது?

அடுத்த கட்டுரையில் பேசலாம்.

- Warming Up...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism