Published:Updated:

`இது, நாம் பற்றவைத்த நெருப்பு!' இதைச் செய்திருந்தால் புவிவெப்பமயமாதலைத் தடுத்திருக்கலாம் பகுதி - 2

தொழிற்புரட்சி
தொழிற்புரட்சி ( Pixabay )

பென்சில்வேனியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கும் முன்னரே, 18-ம் நூற்றாண்டில் கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டபோதே தொழிற்புரட்சி தொடங்கிவிட்டது. நேரம், அதை எப்படி லாபமாக மாற்றலாம் என்ற கேள்விக்கான விடைதான் தொழிற்புரட்சி.

தொழிற்புரட்சி. 1800-களின் மத்தியக் காலத்தில் தொடங்கிய இது, பல்வேறு விதமான முன்னேற்றங்களை அனைத்து நாடுகளுக்குமே கொண்டுவந்தது. 1854-ம் ஆண்டு பென்சில்வேனியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கப்பட்டபோது இதன் சகாப்தம் தொடங்கியதாகச் சொல்லப்படுகிறது. அதன்பிறகு, போக்குவரத்து, தகவல் தொழில்நுட்பம், உணவு உற்பத்தி என்று அனைத்திலுமே அதன் பங்கு அதி தீவிரமானது.

எதிர்கொள்ளப் போகும் விளைவுகளைச் சிந்திக்காமல் நம் முன்னோர்கள் செயலாற்றிவிட்டார்கள். தொழிற்புரட்சியைத் தொடங்கிவைத்த பிரிட்டனின் பிடியில் சிக்கியிருந்த காரணத்தாலேயே இந்தியா உட்படப் பல நாடுகள் வேறு வழியின்றி அந்தச் சுழலில் வம்படியாகச் சிக்க வேண்டியதாயிற்று.

இன்று மனித இனத்துக்கு அழிவு எச்சரிக்கையைக் கொண்டுவந்துள்ள இந்தத் தொழிற்புரட்சி, ஒருவேளை நடக்காமலே இருந்திருந்தால்?

இப்படி இருந்திருந்தால் என்ற அனுமானங்களைச் சுமந்து வரும் கேள்விகள் எப்போதுமே கடினமானவைதான். கடந்த காலத்தில் அந்த அனுமானம் நிகழ்ந்திருந்தால் வரலாறு எப்படித் திசை திரும்பியிருக்கும் என்று யாராலுமே நிச்சயமாகச் சொல்லமுடியாது. ஹிட்லர் என்ற கதாபாத்திரம் வரலாற்றில் தோன்றாமலே இருந்திருந்தால், பிரிட்டன் உலக நாடுகளை ஆக்கிரமிக்காமலே இருந்திருந்தால், அமெரிக்கக் கண்டத்தின் பூர்வகுடிகள் கொன்றழிக்கப்படாமலே இருந்திருந்தால் என்று எத்தனையோ அனுமானங்களை இந்தத் தொழிற்புரட்சியோடு நாம் தொடர்புபடுத்திப் பேசமுடியும்.

ஒருவேளை, ஐரோப்பிய நாடுகளுக்குள் பங்காளிச் சண்டையைப் போல் வாணிபத்தில் முன்னிலை வகிப்பதற்கான சண்டை நிகழாமலே இருந்திருந்தால், அவரவர் தங்கள் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து தன்னிறைவான ஆட்சியை மட்டுமே அளவோடு செய்திருந்தால், ஐரோப்பியர்களின் ஆதிக்க மனப்பான்மை உதிக்காமலே இருந்திருக்கும். தொழிற்புரட்சியும் நடக்காமலே இருந்திருக்கலாம்.

இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால், செல்வம் சேர்க்க வேண்டுமென்ற அவர்களின் பேராசைதான் உற்பத்தியை விரைவுபடுத்த, அதிகரிக்கத் தூண்டியது. அந்தப் பேராசைதான் மற்ற நாடுகளை ஆக்கிரமிக்கத் தூண்டியது. இறுதியில் அதுவே, தொழிற்புரட்சியையும் தோற்றுவித்தது.
நிலக்கரி பயன்பாடு
நிலக்கரி பயன்பாடு
Pixabay
"இது, நாம் பற்ற வைத்த நெருப்பு!" 160 ஆண்டுகளாக புவிவெப்பமயதாலுக்கு மனிதன் செய்தது என்ன? பகுதி -1

பதினெட்டாம் நூற்றாண்டில் கண்டுபிடிக்கப்பட்ட கடிகாரம், மனித வாழ்வை மணிநேரங்களாக, நிமிடங்களாகக் கணக்கெடுக்க வைத்தது. அந்த நேரத்தை எப்படி லாபகரமாகப் பயன்படுத்தலாம் என்று முதலாளிகள் திட்டமிடத் தொடங்கினார்கள். சொல்லப்போனால், பென்சில்வேனியாவில் எண்ணெய் கண்டுபிடிக்கும் முன்னரே, 18-ம் நூற்றாண்டில் கடிகாரம் கண்டுபிடிக்கப்பட்டபோதே தொழிற்புரட்சி தொடங்கிவிட்டது. நேரம், அதை எப்படி லாபமாக மாற்றலாம் என்ற கேள்விக்கான விடைதான் தொழிற்புரட்சி. பின்னர், தேசியத் தொழிற்சாலைகளின் மூலமாகக் கிடைத்த தேசியச் சந்தைகளின்மீதே முழுவதுமாகப் பொருளாதாரம் சார்ந்திருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது. இவற்றோடு மற்ற சில செயல்களின் எதிர்வினைகளும் இணைந்து உற்பத்தியை அதிகரித்தன. உற்பத்தி அதிகரிக்கும்போது அதற்கான நுகர்வோர்களும் அதிகமானார்கள். காலப்போக்கில் நுகர்வோர்களைச் சூழ்ந்த பொருளாதார அமைப்பு உருவானது. இதே முறை, உலகம் முழுவதும் பின்பற்றப்படத் தொடங்கியது.

அதுவரை, சிறு குறு தொழில்களாக, வீட்டுத் தொழில்களாக இருந்த அனைத்தையும் தொழிற்புரட்சி நிறுவனமயமாக்கத் தொடங்கியது. பெரிய பெரிய தொழிற்சாலைகள் பிறந்தன. ஒருவேளை அது நடக்காமல் இருந்திருந்தால், அந்தச் சிறு குறு தொழில்களின் வீழ்ச்சி நடந்திருக்காது. அந்தத் தொழில்களின் வீழ்ச்சிதான் இதன் அதீத வளர்ச்சி.

மாசுபாடு
மாசுபாடு
Pixabay
"அடுத்த ஐந்து ஆண்டுகளில் என்ன ஆகப்போகிறதோ!?" - காலநிலை மாற்றத்தால் அச்சத்தில் ஐ.டி நிறுவனங்கள்

இயந்திரங்கள் அறிமுகமான பிறகுதான் இத்தகைய தீவிர உற்பத்தி முறை தொடங்கியது. இந்த இயந்திரங்கள் கண்டுபிடிக்கப்படவில்லை என்றால், தொழிற்புரட்சியே நடந்திருக்காது என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், உண்மையில் அதீத உற்பத்திதான் இதற்கான தொடக்கம். அதை அதிகப்படுத்த முயன்ற முதலாளிகள் அதற்கான வழியைத் தேடினார்கள். ஆனால், அதற்குப் போதுமான உழைப்பாளிகள் இருக்கவில்லை. இருக்கின்ற உழைப்பாளிகளை வைத்து நினைத்த இலக்கை எட்ட நினைத்ததன் விளைவே இயந்திர உற்பத்தி முறை. உற்பத்தி இலக்கை எட்ட, இவையில்லையென்றால் வேறு ஏதாவது வழியில் இந்தத் தொழிற்புரட்சி நடந்திருக்கும். ஐரோப்பிய நாடுகளிடம் ஆதிக்க மனப்பான்மை தோன்றாமலிருந்திருந்தால், வேறு ஏதாவது சூழல் இதற்குத் தகுந்தவாறு ஏற்பட்டுத் தொழிற்புரட்சியை ஊக்குவித்திருக்கலாம்.

ஆகவே, நிகழ்காலத்தையும் கடந்தகாலத்தையும் பொருத்திப் பார்க்கையில் தொழிற்புரட்சியைக் கட்டுப்படுத்தியிருக்க முடியாது. அது மனித இனத்தின் ஒரு வகையான பரிணாம வளர்ச்சியைப் போன்றது. இயற்கை வரலாற்றிலேயே மிக மிக விரைவாக நடந்துவிட்ட பரிணாம வளர்ச்சி. துரதிர்ஷ்டம் என்னவென்றால், அது நல்லதாக அமையவில்லை.

இந்த வாதங்களின் தொடர்ச்சியாக, தவிர்த்திருக்கவே முடியாத இந்தத் தொழிற்புரட்சி எப்படி நடந்திருந்தால் இன்றைய அழிவைத் தடுத்திருக்க அல்லது தள்ளிப்போட்டிருக்க முடியும் என்ற சிந்தனையும் தோன்றுகிறதல்லவா!

இன்று, மிகவும் தூய்மையான நதியாகச் சொல்லப்படும் லண்டனின் தேம்ஸ் நதி, பத்தொன்பதாம் நூற்றாண்டில் மிகவும் மாசடைந்த நதியாக இருந்தது. லண்டனின் தொழிற்சாலைக் கழிவுகள் நேரடியாக ஆற்றில் கலக்கப்பட்டதால், மோசமான துர்நாற்றத்தைச் சுமந்து உயிரியல் ரீதியாகச் செத்துவிட்ட நதியாகவே தேம்ஸ் மாறிவிட்டிருந்தது. அதன்பிறகு, நதியில் ஆலைக் கழிவுகளைக் கொட்டக்கூடாது என்று கட்டுப்பாடு விதித்து, நதியோரங்களில் சுத்திகரிப்பு நிலையங்களை அமைத்து அதை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டது பிரிட்டன் அரசு. அதன் பிறகு இரண்டாம் உலகப் போர் காலகட்டத்தில் ஜெர்மன் படைகளால் அந்தச் சுத்திகரிப்பு நிலையங்கள் பலவும் அழிக்கப்படவே அந்த முயற்சி பின்னடைவைச் சந்தித்தது. தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவால் இன்று தேம்ஸ் மீண்டும் தன் இயல்பு நிலைக்குத் திரும்பி `தூய்மையான நதி'யென்ற தன் பெயரைப் பெற்றுள்ளது.

தேம்ஸ் நதியின் கதையை நாம் கொஞ்சம் அசைபோட்டுப் பார்த்தால், ஒன்று புரியும். தொழிற்புரட்சி சூழலியல் பேரழிவை உண்டாக்கும் என்பதை இன்றல்ல, அது தொடங்கிய காலத்திலேயே உணர்த்தியுள்ளது. தேம்ஸ் நதிக்குச் செய்ததை, பிரிட்டனின் கட்டுப்பாட்டிலிருந்த அனைத்து நாடுகளிலும் செய்திருக்கலாம். தொழிற்சாலைக் கழிவுகள் ஏற்படுத்துகின்ற மாசுபாடுகளை முடிந்த அளவுக்குக் குறைக்க முயன்றிருக்கலாம். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே மக்களுக்குத் தண்ணீரைச் சுத்திகரித்து வழங்கியுள்ளனர். அதேபோல், வீடு மற்றும் தொழிற்சாலைகளிலிருந்து வெளியான கழிவு நீரைச் சுத்திகரித்து தேம்ஸ் நதிக்கு அனுப்பியுள்ளனர். அப்படியிருக்க, அந்தத் தொழில்நுட்பங்களின் வளர்ச்சியிலும் அப்போதே தீவிர கவனம் செலுத்தியிருந்தால் நாம் இவ்வளவு வேகமாக ஆபத்தின் விளிம்பில் வந்து நிற்கும் சூழல் ஏற்பட்டிருக்காது.

தேம்ஸ் நதியின் மாசுபாடு மற்றும் துர்நாற்றத்தின் விளைவாக ஏற்பட்ட நோய்த்தொற்றுகளுக்குப் பலியான மக்களை நினைவு கூறும் ஓவியம்
தேம்ஸ் நதியின் மாசுபாடு மற்றும் துர்நாற்றத்தின் விளைவாக ஏற்பட்ட நோய்த்தொற்றுகளுக்குப் பலியான மக்களை நினைவு கூறும் ஓவியம்
Punch Magazine, 10 July 1858
எரியும் பிரேசில், உருகும் கிரீன்லாந்து... காலநிலை மாற்றம் கொடுத்திருக்கும் ரெட் அலர்ட்!

தொழிற்புரட்சியைத் தொடங்கிவைத்த ஐரோப்பிய நாடுகளால் பெருநிறுவனங்களை அப்போதே மாசுபாடற்ற உற்பத்திப் பாதைக்குக் கொண்டு வந்திருக்க முடியும். அதைச் செய்திருந்தால், உலகம் முழுவதும் மாசடைந்து அழிந்துபோன நதிகள் காப்பாற்றப்பட்டிருக்கும். அதிதீவிரமாகக் காற்றில் அதிகரித்த கரிம வாயுவின் அளவும் கட்டுக்குள் இருந்திருக்கும்.

அனைவரின் நேரத்தையும் லாபமாக்க நினைத்தவர்கள், லாபத்தை அனைவருக்குமானதாக மாற்ற மறுத்துவிட்டார்கள். அதன்விளைவாக, நகரத் திட்டமிடுதல் லாபத்தைப் பெருக்கும் தொழிற்சாலைகளைச் சுற்றியே அமைந்தது. முறையான திட்டமிடுதலின்றி மக்களுடைய வாழிடப் பற்றாக்குறையும் அதிகமானது. அதிகரித்துக்கொண்டிருந்த மக்கள் தொகைக்குத் தகுந்த கட்டமைப்பை உருவாக்கியிருந்தால், அதைத் தொடர்ந்து அனைத்துத் துறைகளின் வளர்ச்சியும் அனைவருக்கும் பயனளிக்கும் ஆரோக்கியமான முன்னேற்றத்தை அடைந்திருக்கும். தொழிற்புரட்சி அதைச் செய்யத் தவறியது.

மோசமான நிலையிலுள்ள தன் குழந்தைகளைத் தந்தை தேம்ஸ், லண்டன் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் ஓவியம்
மோசமான நிலையிலுள்ள தன் குழந்தைகளைத் தந்தை தேம்ஸ், லண்டன் மக்களுக்கு அறிமுகப்படுத்தும் ஓவியம்
John Leech, 3 July 1858
இயற்கையின் இறுதி ஆயுதம்!  காலநிலை மாற்றம்: ஆபத்தா... வதந்தியா?

தீவிர வளர்ச்சியை மட்டுமே கவனமாகக் கையாண்ட பெருநிறுவன முதலாளிகள், நியூட்டனின் மூன்றாம் விதியை மறந்துவிட்டார்கள். தங்கள் வளர்ச்சி ஏற்படுத்திக் கொண்டிருந்த விளைவுகளுக்குச் செயலாற்ற முடிந்த சமயத்திலேயே எதிர்வினையாற்றாமல் விட்டுவிட்டார்கள். முன்பே சொன்னதுபோல், இந்தத் தொழிற்புரட்சி மனித இனத்தின் இன்னொரு பரிணாம வளர்ச்சிதான். ஆனால், அதை நாம் நல்ல விதமாக அமைத்துக்கொள்ளவில்லை.

அதன் விளைவாக, நாம் பற்ற வைத்த நெருப்பு நம்மையே எரித்துக்கொண்டிருக்கிறது.
அடுத்த கட்டுரைக்கு