Published:Updated:

இந்தியாவை மின்னணுக் குப்பைக்கிடங்காக மாற்றும் சீனா, அமெரிக்கா! என்ன தீர்வு?

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மின்னணுக் கழிவுகள்
மின்னணுக் கழிவுகள் ( Muntaka Chasant/ Wikimedia )

ஆண்டுக்குச் சுமார் 20 லட்சம் டன் மின்னணுக் கழிவுகள் இந்தியாவில் உற்பத்தியாகின்றன. அதில் பாதியளவு மின்னணுக் கழிவுகளை வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் இறக்குமதி செய்கின்றோம்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

ஒரு சின்ன கேள்வியோடு தொடங்குவோம். ஒரு தொலைக்காட்சிப் பெட்டியை வீட்டிற்கு வாங்குகிறோம். அதைச் சில ஆண்டுகளுக்குப் பயன்படுத்திவிட்டு, பயனற்றுப் போன பின்னர் அதைப் போட்டுவிட்டுப் புதிதாக வேறு ஒரு தொலைக்காட்சியை வாங்குகின்றோம். வீட்டிற்கு வந்து ஹாயாக உட்கார்ந்து அதில் கேளிக்கை நிகழ்ச்சிகளைப் பார்க்கத் தொடங்கி விடுகின்றோம். ஆனால், நாம் போட்டுவிட்டு வந்த பழைய தொலைக்காட்சிப் பெட்டி எங்கே செல்லும், என்ன ஆகும் என்று என்றாவது சிந்தித்ததுண்டா?

ஒரு டிரிம்மர் வாங்குகின்றீர்கள். சில மாதங்களுக்குப் பின் அதைக் குப்பையில் போட்டுவிட்டு வேறு புதிய டிரிம்மர் வாங்கிக் கொள்கின்றீர்கள். நீங்கள் குப்பையில் போட்ட பழைய டிரிம்மர் என்ன ஆகும், எங்கே செல்லும் என்று சிந்தித்ததுண்டா?

பழைய கணினிகள்
பழைய கணினிகள்
Pixabay

இப்படி நாம் குப்பையாகப் போடும் மின் சாதனப் பொருள்கள், புதிய பொருள் வாங்குவதற்காகப் போடும் பழைய மின்னணுப் பொருள்கள் போன்றவற்றை மறுசுழற்சி செய்யப் பல நிறுவனங்கள் வாங்குகின்றன. அந்த நிறுவனங்கள் பழைய மின்னணுப் பொருள்களை வாங்கிக்கொண்டு அவற்றை மறுசுழற்சி செய்துகொள்வதாக உறுதியளித்தாலும்கூட உண்மையில் அதைச் செய்வதில்லை. பெரும்பாலும் அப்படி மறுசுழற்சிக்கு என்று வாங்கப்படும் பழைய மின்சாதனப் பொருள்களெல்லாம் மின்னணுக் குப்பைத் தொட்டிகளுக்குத்தான் அனுப்பப்படுகின்றன. இப்போது இந்தியா, பாகிஸ்தான் போன்ற வளரும் நாடுகள் தம்மிடம் உற்பத்தியாகும் மின்னணுக் குப்பைகளோடு சேர்த்து அமெரிக்கா, பிரிட்டன், சீனா போன்ற வளர்ந்த நாடுகளின் மின் கழிவுகளையும் சுமந்துகொண்டுதான் நிற்கின்றன.

இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமாகவுள்ள வளரும் நாடுகளில், நாம் உற்பத்தி செய்கின்ற மின் கழிவுகளே மூச்சுத்திணற வைக்கும் அளவுக்கு அதிகமாக உள்ளன. இந்தியாவில் ஓர் ஆண்டுக்குச் சுமார் 20 லட்சம் டன் மின்னணுக் கழிவுகள் உற்பத்தியாகின்றன. அதில் பாதியளவு மின்னணுக் கழிவுகளை வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் இறக்குமதி செய்கின்றோம். அதோடு கூடுதல் சுமையைத்தான் நாம் இறக்குமதி செய்கின்ற கழிவுகள் நம் தலையில் வைக்கின்றன. இந்த மோசமான ரகசியத்தைப் பலரும் தோண்டத் துணிவதில்லை என்பதே கசப்பான உண்மை.

இந்தப் பழைய மின்சாதனங்களை மறுசுழற்சி செய்து விற்பதன் மூலம் அதற்குரிய டீலர்கள் ஓரளவுக்கு வருமானம் பார்ப்பது உண்மைதான். இருப்பினும் உற்பத்தியாகின்ற 20 லட்சம் டன் கழிவுகளில் அதிகபட்சமாகச் சுமார் 5 லட்சம் கழிவுகள் மட்டுமே மறுசுழற்சி செய்யப்படுகின்றன. மீதமுள்ளவை, கழிவுக் கூடங்களையே சென்றடைகின்றன. அப்படிக் குவித்து வைக்கப்படும் மின்னணுக் கழிவுகள் ஏற்படுத்துகின்ற நச்சுத்தன்மை அப்பகுதியின் சூழலியலில் ஒரு நீங்கா வடுவாகத் தங்கிவிடுகின்றது. அப்படிப்பட்ட மின்னணுக் கழிவுக்கூடங்கள் அமைந்துள்ள பகுதிகளே உலகின் அதிகப் புற்றுநோயாளிகளைச் சுமந்து நிற்கின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்தப் பிரச்னை இன்றோ நேற்றோ தொடங்கியதல்ல. மின்னணுச் சாதனப் பயன்பாடு தொடங்கியபோதே இதுவும் தொடங்கிவிட்டது. இனிவரும் நாள்களிலும் இது படுதீவிரமாக அதிகரிக்கும். மனித சமூகம் கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் உற்பத்தி மீது காட்டிய விவேகத்தையும் வேகத்தையும், உற்பத்தி செய்யப்பட்ட சரக்குகளின் வழியே உருவான கழிவுகளைக் கையாள்வதில் காட்ட மறந்துவிட்டது. நம்முடைய நாகரிக சமூக வளர்ச்சி என்பது, `உற்பத்தி செய், பயன்படுத்து, குப்பையில் போடு, மூக்கைப் பொத்திக்கொண்டு கடந்துபோய்விடு' என்ற வாழ்க்கை முறையையே பழக்கிவிட்டுள்ளது. இது இன்று பூதாகரமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இன்று கோவிட்-19 என்ற தொற்றுநோய் குறித்து உலகம் முழுக்கப் பேசிக் கொண்டிருக்கிறோம். ஆனால், மின்னணுக் கழிவுகள் நீண்டகாலமாக நம் தேசத்துக் குழந்தைகளின் உடல்நலனைக் குலைத்துக்கொண்டிருக்கின்றன. இருதயம் சார்ந்த நோய்கள், பிறவியிலேயே ஏற்படுகின்ற மரபணுக் குறைபாடுகள், சிறு வயதிலேயே புற்றுநோய் போன்ற நோய்களுக்குப் பாதிக்கப்படுவது என்று பல இழப்புகளை நீண்டகாலமாக மின்னணுக் கழிவுகள் ஏற்படுத்திக்கொண்டிருக்கின்றன. அவை குறித்து எவ்வித நடவடிக்கைகளுமே இதுவரை நீண்டகால நிலைத்தன்மையோடு (Long term Sustainability) எடுக்கப்படவில்லை.

5 கோடி டன்
உலகளவில் ஓராண்டுக்குக் குவியும் மின்கழிவுகள்!

உலகளவில் ஆண்டுக்குச் சுமார் 5 கோடி டன் மின் கழிவுகள் உற்பத்தி ஆகின்றன. அவை குவிக்கப்படுகின்ற பகுதிகளின் இயல்புத்தன்மையைக் குலைத்து நச்சுத்தன்மையை அதிகரிக்கின்றன. அது, அந்த நிலத்தில் பிறக்கின்ற எதிர்காலத் தலைமுறைகளின் மரபணுக்களைப் பாதித்து, பல நோய்களுக்கு ஆளாக்குகிறது. உலகளவில் சுமார் 20 கோடி மக்கள் இந்தப் பாதிப்புகளை ஏற்படுத்தவல்ல மின்னணுக் கழிவுகளின் விளைவுகளைச் சந்திக்கின்றனர்.

மின்னணுக் கழிவுகளில் மடிக்கணினி, கணினி போன்றவை தொடர்பான கழிவுகளே 68 சதவிகிதம் பங்கு வகிக்கின்றன. அவைபோக, 12 சதவிகிதம் தொலைத்தொடர்புச் சாதனங்கள், 8 சதவிகிதம் மின்னணு இயந்திரங்கள், 7 சதவிகிதம் மருத்துவ உபகரணங்கள் , 5 சதவிகிதம் வீட்டு உபயோக இயந்திரங்களுடைய பங்கு உள்ளது. இந்திய நகரங்களில் ஒரு நாளைக்கு மட்டுமே சராசரியாகச் சுமார் 10,500 கைப்பேசிகள், 7,500 தொலைக்காட்சிப் பெட்டிகள், 4,500 கணினிகள் அக்குவேறாகப் பிரிக்கப்பட்டு கழிவுக் கூடத்திற்கு அனுப்பப்படுகின்றன. இதில் 2 சதவிகிதத்திற்கும் குறைவான மின் கழிவுகளே மறுசுழற்சிக்கு உள்ளாகின்றன.

இப்படிக் குவித்து வைக்கப்படும் மின் கழிவுகளில் கணினிகள், தொலைக்காட்சிகள், கைப்பேசிகள், குளிர்சாதனப்பெட்டிகள் போன்றவையே பெரும்பாலும் இருக்கின்றன. ஈயம், கேட்மியம், பாதரசம், ஹெக்சாவேலன்ட் குரோமியம், நெகிழி, பேரியம், பெரிலியம் மற்றும் கருப்புக் கரிமம் போன்ற புற்றுநோயை உருவாக்கக்கூடிய கார்சினோஜெனிக் பொருள்கள் என்று பல உலோகங்கள் மின்சாதனக் கழிவுகளில் அடங்கியுள்ளன. இவையனைத்துமே, அந்த நிலத்தின் மண்ணையும் நிலத்தடி நீரையும் கெடுத்து நஞ்சாக்கி விடுகின்றன. உதாரணத்திற்கு, அச்சடிக்கப்பட்ட சர்க்யூட் பலகைகளில் (Printed circuit boards), ஆன்டிமோனி, தங்கம், வெள்ளி, குரோமியம், துத்தநாகம், ஈயம், வெள்ளீயம், தாமிரம் போன்ற உலோகங்கள் இருக்கின்றன. சர்க்யூட் பலகைகளிலிருந்து இந்த உலோகங்களைத் தனித்தனியாகப் பிரித்தெடுப்பது எளிமையான காரியமல்ல. அதற்கு சர்க்யூட் பலகைகளைச் சூடாக்கவேண்டும். அது நச்சுத்தன்மை வாய்ந்த வாயுக்களை வெளியேற்றும். அவற்றின் கழிவுகள் நிலத்தில் கலக்கும்போது நிலத்தை மாசுபடுத்தும். இதை மின் கழிவுகளைக் கையாளும் தொழிலாளர்கள் வெட்டவெளியில் செய்கிறார்கள். அதைக் கையாள்பவர்களின் இது உடலில் கொடிய நோய்களுக்கான வித்துகளை விதைத்துவிடும்.

50,000 டன்
இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக இறக்குமதியாகும் மின் கழிவுகள்

உலகளவில் அமெரிக்காவும் சீனாவும்தான் அதிகளவில் மின்னணுக் கழிவுகளை உற்பத்தி செய்கின்றன. அமெரிக்காவும் சீனாவும் முறையே 69 லட்சம் டன் மற்றும் 61 லட்சம் டன் மின்சாதனக் கழிவுகளை உற்பத்தி செய்கின்றன. மின் கழிவு உற்பத்தியில் முதலிடத்திலுள்ள அமெரிக்கா தன்னுடைய மின்சாதனக் கழிவுகளில் 25 முதல் 50 சதவிகிதம் வரை சீனா, இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்துவிடுகின்றது. சீனா, தன் நாட்டிற்குள் உற்பத்தியாகின்ற மின் கழிவுகளில் சுமார் 30 சதவிகிதம் வரை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கின்றது. இவற்றில் இந்தியாவுக்குள் இறக்குமதியாகின்ற மின்னணுக் கழிவுகளில் 70 சதவிகிதம் அமெரிக்கா மற்றும் சீனாவிலிருந்துதான் வருகின்றன.

இந்தப் பிரச்னை 2015-ம் ஆண்டுக்கு மேல் பெரிதாகவே, இறக்குமதியைக் கட்டுக்குள் கொண்டுவர, 2016-ம் ஆண்டு ஒரு மசோதா முன்வைக்கப்பட்டது. இறக்குமதியைத் தடை செய்வதற்கான, மின்னணுக் கழிவுகள் இறக்குமதியைத் தடை செய்யும் மசோதா 2019-ம் ஆண்டு இயற்றப்பட்டது. இதன்பின்னர் மின்னணுக் கழிவுகள் இந்தியாவுக்குள் வருவதைக் குறைக்கமுடியும் என்று கருதப்பட்டது. ஆனால், சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைகின்ற மின்னணுக் கழிவுகளின் அளவு ஓரளவுக்குக் குறைந்தாலும் முற்றிலுமாக நின்றபாடில்லை. அதற்கு அவர்கள் இந்தியாவின் ஏற்றுமதி-இறக்குதி சட்டத்திலுள்ள ஓட்டைகளைப் பயன்படுத்துகின்றனர்.

டெல்லியில் வெறும் கையில் மின் கழிவைக் கையாளும் தொழிலாளர்கள்
டெல்லியில் வெறும் கையில் மின் கழிவைக் கையாளும் தொழிலாளர்கள்
Thousandways at Wikimedia

இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக மட்டுமே 50,000 டன் மின் கழிவுகள் இறக்குமதியாகின்றன. இதுபோன்ற சட்டவிரோத இறக்குமதிகளுக்கு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கும் வண்ணம் சில ஓட்டைகள் சட்டத்தில் இருக்கின்றன. உதாரணத்திற்கு, நம் நாட்டின் ஏற்றுமதி-இறக்குமதி கொள்கைகளின்படி, 10 ஆண்டுகளுக்கு மிகாத வயதுடைய இரண்டாம் பயனாளிக் கணினிகளை (Second handed computers) இறக்குமதி செய்யலாம். அதோடு, நன்கொடையாகவும் இதுபோன்ற சாதனங்களை இறக்குமதி செய்யலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி அமெரிக்கா, சீனா போன்ற வளர்ந்த நாடுகள் இந்தியாவுக்குள் பொய்யான பதிவேடுகளின் வழியே மின்னணுக் கழிவுகளைக் கொண்டுவந்து கொட்டுகின்றன. இவை மட்டுமன்றி, பயனற்ற இரண்டாம்தர கணினிகளைக் கொண்ட உரிமம் பெறாத ஒரு கன்டெய்னர் கைப்பற்றப்பட்டால், அதற்குரிய அபராதத் தொகையை மட்டும் கட்டி திரும்பப் பெற்றுக் கொள்ளலாம். இதில் சிக்குவதும்கூட அரிதாகவே நடக்கின்றது. பெரும்பாலும் மின்னணுக் கழிவுகளை இறக்குமதி செய்வோர் ஒவ்வொரு முறையும் நிறுவனப் பெயரை மாற்றிக்கொள்வதால் சிக்குவதில்லை.

இந்தியாவுக்குள் இறக்குமதியாகின்ற 42 சதவிகித மின் கழிவுகள் அமெரிக்காவிலிருந்தே வருகின்றன. அதற்கு அடுத்தபடியாக சீனாவிலிருந்து 30 சதவிகிதம் இறக்குமதியாகின்றது. இவற்றுக்கு அடுத்ததாக, 18 சதவிகித இறக்குமதியோடு ஐரோப்பா மூன்றாமிடத்தில் இருக்கின்றது. இவைபோக, தைவான், தென் கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளிடமிருந்து 10 சதவிகித மின்னணுக் கழிவுகள் இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படுகின்றன.

இறக்குமதியைக் கட்டுப்படுத்தினால் மட்டுமே இதைச் சரிசெய்துவிட முடியாது. நாட்டிற்குள் உற்பத்தியாகின்ற கழிவுகளை மறுசுழற்சி செய்யவும் கையாளவும் நாம் அதிகச் சிரத்தையை மேற்கொள்ள வேண்டும். அமெரிக்கா, சீனா போன்ற வளர்ந்த நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் மின்சாதனக் கழிவுகளைக் கட்டுப்படுத்த முயலும் அதேவேளையில், உள்நாட்டுக் கழிவுகளைக் கையாள்வதற்கான முயற்சிகளையும் தீவிரப்படுத்த வேண்டும். இல்லையேல் இங்கு குவிந்துகொண்டிருக்கும் மின் கழிவுகளின் அளவு கூடிக் கொண்டேயிருக்கும். அதனால் விளையும் பாதிப்புகளும் அதிகரித்துக்கொண்டேயிருக்கும்.

நாட்டில் ஆண்டுக்குச் சுமார் 20 லட்சம் டன் மின் கழிவுகள் உருவாகின்றன. அதில், டெல்லி மட்டுமே ஆண்டுக்கு 10,000 மெட்ரிக் டன் கழிவுகளை உற்பத்தி செய்வது குறிப்பிடத்தக்கது. ஆபத்தான மின் கழிவுகளைக் கையாள இந்தியாவின் முக்கிய நகரங்களில் மறுசுழற்சிக் கூடங்கள் இருந்தாலும்கூட அவை முறையாகப் பயன்படுத்தப்படுவதில்லை. மும்பை உட்பட மகாராஷ்டிராவில், மொத்தமாக 32,000 டன் கழிவுகளைக் கையாளக்கூடிய 22 மின்சாதன மறுசுழற்சிக் கூடங்கள் (eWaste Recycling Centres) அமைந்துள்ளன. தலைநகர் டெல்லியில் மட்டுமே மொத்தம் 47,000 டன் கழிவுகளைக் கையாளக்கூடிய 13 மறுசுழற்சிக் கூடங்கள் அமைந்துள்ளன. பெங்களூர் உட்பட கர்நாடகாவில் 50,000 டன் மின்னணுக் கழிவுகளைக் கையாளக்கூடிய 52 கூடங்கள் அமைந்துள்ளன. தமிழகத்தில் சென்னையோடு சேர்த்து, 39,000 டன் கழிவுகளைக் கையாளக்கூடிய 14 கூடங்கள் அமைந்துள்ளன. மேற்குவங்கத்தில் 600 டன் கழிவுகளை மறுசுழற்சி செய்யக்கூடிய ஒரேயொரு கூடம் மட்டுமே அமைந்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் சராசரியாக 5,00,000 தொழிலாளர்கள் மின்னணுக் கழிவு மறுசுழற்சியைச் சார்ந்துள்ளனர். இத்தனை வசதிகள் இருந்தும்கூட, இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும், வெளிநாடுகளிலிருந்து இந்தியாவுக்குள் இறக்குமதி செய்யப்படும் மின்னணுக் கழிவுகளை முழுமையாகக் கையாள முடிவதில்லை.

உலகளவிலான மின்னணுக் கழிவுகள் உற்பத்தியில் அமெரிக்கா, சீனா மற்றும் ஜப்பானுக்கு அடுத்தபடியாக இந்தியா உள்ளது. இந்நிலையில், அமெரிக்கா மற்றும் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கழிவுகளைக் கட்டுப்படுத்தும் அதே கையோடு, உள்நாட்டு மின்னணுக் கழிவு உற்பத்தியையும் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். அதற்கு முதலில், உள்நாட்டில் உற்பத்தியாகின்ற கழிவுகளைக் கணக்கு வைக்கவேண்டும்.

ஆண்டுக்கு மொத்தம் எவ்வளவு கழிவு என்று மொத்தக் கணக்கு மட்டுமே நம்மிடம் உள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் என்னென்ன மாதிரியான கழிவுகள், எவ்வளவு உற்பத்தியாகின்றன என்று கணக்கு வைக்கவேண்டும். அப்போதுதான் அவற்றை மொத்தமாக மறுசுழற்சி செய்ய, மறுசுழற்சி செய்ய முடியாதவற்றை வேறு என்ன செய்யலாமென்று திட்டமிட வாய்ப்புகள் உருவாகும். மின்னணுக் கழிவுகளால் ஏற்படும் சூழலியல் பிரச்னைகளைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சியில் இது முதல்படியாக இருக்கவேண்டும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு