கோவை வால்பாறை அருகே உள்ள எஸ்டேட் பகுதியில், கடந்தாண்டு செப்டம்பர் மாதம் காயங்களுடன் ஓர் ஆண் புலிக்குட்டி உலாவிக் கொண்டிருந்தது. அதன் உடலில் ஆங்காங்கே முள்ளம் பன்றியின் முள்கள் ஏறி காயத்தை ஏற்படுத்தியிருந்தன. வலியுடன் காட்டுக்கு செல்ல முடியாமல் தவித்துக் கொண்டிருந்த அந்த புலி குறித்து வனத்துறைக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.

Also Read

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அந்தக் குட்டியை மீட்டு வனத்துறையினர் கூண்டில் வைத்து சிகிச்சையுடன் பராமரித்து வந்தனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் முதல்முறையாக வனப்பகுதியிலேயே பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டு புலிக்கு பயிற்சி அளிக்க உள்ளனர்.
சிறிய வயதிலேயே தாயை பிரிந்ததால், அந்த புலிக்கு காடு, வேட்டை போன்றவற்றில் பலம் குறைந்திருக்கும். இதனால் அதற்கு சிகிச்சை அளித்து, வேட்டை திறனை மேம்படுத்தி மீண்டும் வனப்பகுதிக்குள் விட உள்ளதாக வனத்துறை தெரிவித்திருந்தனர்.

இதற்காக மானாம்பள்ளி வனச்சரகம், மந்திரி மட்டம் என்ற வனப்பகுதியில் 10,000 சதுர அடியில் பாதுகாப்பு அரண் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தண்ணீர், உணவு போன்ற வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. நேற்று முதல்முறையாக அந்த பாதுகாப்பு அரணில் புலி விடப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
இதுகுறித்து வனத்துறை கூறுகையில், “இந்த புலிக்குட்டியை பிடிக்கும்போது அதற்கு 5 மாதங்கள் இருக்கும். அப்போதிருந்த நிலையைப் பார்த்து, புலி உயிர் பிழைப்பதே சந்தேகம் என்று நினைத்தோம். தாயுடன் இருக்கும்போது, வேட்டை உள்ளிட்ட பயிற்சி இயல்பிலேயே கிடைத்துவிடும்.

இதற்கு அந்த வாய்ப்பு இல்லாததால் காட்டில் சென்று வாழ்வது கடினம். பாதுகாப்பு அரண் அமைத்து பயிற்சி வழங்கி வருகிறோம். கடந்த 8 மாதங்களாக அதற்கு சிக்கன், பீஃப் போன்ற உணவுகள் கொடுக்கப்பட்டன. இப்போது அதற்கு சுமார் 14 மாதங்கள் ஆகின்றன.
118 கிலோவில் ஆரோக்கியமாக உள்ளது. பாதுகாப்பு அரணில் முயல், காட்டுப்பன்றிகளை விட்டு வேட்டை பயிற்சி கொடுத்திருக்கிறோம். பாதுகாப்பு அரணில் அதற்கு அனைத்து வசதிகளும் உள்ளது. இதை 24 மணி நேரமும் சி.சி.டி.வி கேமரா மூலம் கண்காணிப்போம்.

தொடர்ந்து புலிக்கு பயிற்சியளித்து வனத்தில் விட முடிவு செய்தோம். முழுக்க முழுக்க அறிவியல் பூர்வமாக இந்த தொழில்நுட்பத்தைக் கடைப்பிடிக்க உள்ளோம். இதில் கிடைக்கும் வெற்றியை பொறுத்து, மற்ற இடங்களிலும் இதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம்” என்றனர்.