Published:Updated:

காலநிலை மாற்றம்: பூமியைக் காப்பாற்ற இனி இதுதான் ஒரே வழி!

புவி வெப்பமயமாதல்
புவி வெப்பமயமாதல் ( Pixabay )

70 சதவிகித கரிம உமிழ்வுகளை 2050-ம் ஆண்டுக்குள் கட்டுப்படுத்துவதில், அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளுக்கு புதிய சட்டங்களுக்கு முக்கியப் பங்கு இருக்கும் என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

பாரிஸ் உடன்படிக்கை முதல் பன்னாட்டு காலநிலை ஆய்வாளர்கள் வரை, கரிம வெளியீட்டை 2050-ம் ஆண்டுக்குள் முற்றிலுமாகக் குறைக்க வேண்டும் என்பதே அனைவரின் இலக்காக உள்ளது. இருப்பினும், இன்று வரை இது சாத்தியமா என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. அந்தக் கேள்விக்கு, `முடியும்' என்ற பதிலைத் தருகிறது சமீபத்தில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு. ஆனால், அதற்கு பூமியில் பல பெரியளவிலான மாற்றங்கள் செய்ய வேண்டியிருக்கும் என்று இந்த ஆய்வு கூறுகிறது.

சர்வதேச ஆற்றல் அமைப்பு (International Energy Agency,IEA) வெளியிட்டுள்ள `2050-க்குள் நிகர பூஜ்ஜியம்: உலக ஆற்றல் துறைக்கான ஒரு திட்டமிடல்' என்ற இந்த ஆய்வறிக்கைப்படி, அரசுகள் தற்போது நிர்ணயித்துள்ள காலநிலை இலக்குகள், நம் தேவைக்கும் குறைவாகவே இருப்பதாகக் குறிப்பிடுகிறது.

கரிம வெளியீடு
கரிம வெளியீடு
Pixabay

நிபுணர்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ள 1.5 டிகிரி செல்ஷியஸ் அளவுக்குள்ளாகக் கட்டுப்படுத்த, நாம் மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகளின் மூலம், கரிம வெளியீட்டைக் குறைக்கும் முயற்சிகள் ஒருபுறம் நடந்துகொண்டிருக்கின்றன. ஆனால், அதேவேளையில் இன்னொரு புறம் குறைக்கப்படும் கரிம வெளியீட்டுக்கு நிகரான வெளியீடு மீண்டும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கிறது. இதனால், அதீத வெப்ப அலை, வறட்சி, வெள்ளம் போன்ற விளைவுகள் இந்த நூற்றாண்டின் இறுதியில் இப்போது இருப்பதைவிட, பல மடங்கு தீவிரம் அடையலாம் என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இப்போதே இந்தக் காரணங்களால், உணவு உற்பத்தி, வாழ்வாதாரம், பல்லுயிரிய வளம் ஆகியவற்றில் உலகளவில் ஏற்படும் தாக்கங்களைக் காண முடிகிறது.

இந்நிலையில், இதைக் கட்டுப்படுத்த கரிமச் சமநிலையைக் கொண்டுவருவது எப்படி? இந்த அறிக்கை கூறும் வழி என்ன?

அதற்கு, உலக அளவில் பொருளாதாரத்தில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கும் ஆற்றல் துறையை முற்றிலுமாக மாற்றி அமைக்க வேண்டும் என்று இந்த அறிக்கை வலியுறுத்துகிறது. மேலும் தொடர்ச்சியாக இலக்குகளை நிர்ணயித்துக் கொண்டிருப்பதற்கும் அதைச் செயலாக்குவதற்கும் இடையிலான இடைவெளி அதிகம். அதைக் குறைக்க வேண்டும். இதற்கென சில தனித்துவமான, அதேநேரம் கடுமையான இலக்குகளை இந்த ஆய்வறிக்கை அறிவுறுத்துகிறது.

2021-ம் ஆண்டிலிருந்து புதிதாக எந்த அனல் மின் நிலையத் திட்டத்துக்கும் அனுமதி அளிக்கக் கூடாது. மேலும், புதிதாக எண்ணெய் மற்றும் இதர எரிவாயு உற்பத்தி வயல்களுக்கு (Oil and gas fields) எதற்கும் புதிதாக அனுமதி அளிக்கக் கூடாது மற்றும் புதிய நிலக்கரி சுரங்கத் திட்டங்களுக்கோ, ஏற்கெனவே செயல்படும் சுரங்கங்களை விரிவுபடுத்தும் திட்டங்களுக்கோ அனுமதி வழங்கக் கூடாது.

காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம்
Pixabay

2025-ம் ஆண்டுக்குள் புதைபடிம எரிபொருள் பயன்படுத்தும் பாய்லர்களின் விற்பனை நிறுத்தப்பட வேண்டும். 2030-ம் ஆண்டுக்குள் உலகளாவிய கார் விற்பனைகளில் 60 சதவிகிதம் மின்சார கார்களாக இருக்க வேண்டும். புதிதாகக் கட்டப்படும் அனைத்துக் கட்டுமானங்களும் பூஜ்ஜிய கரிம வெளியீட்டில் நடைபெற வேண்டும். சூரிய ஆற்றல் மற்றும் காற்றாலை மின்சார உற்பத்தி அளவு 1020 ஜிகாவாட் ஆக இருக்க வேண்டும். நிலக்கரி பயன்பாடு என்பது முற்றிலுமாகத் தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்.

2035-ம் ஆண்டிலிருந்து உற்பத்தி செய்யப்படும் உபகரணங்கள் மற்றும் குளிரூட்டும் இயந்திரங்கள் அனைத்துமே முதன்மையான தரத்தோடு குறைந்த கரிம வெளியீட்டைச் செய்வனவாக இருக்க வேண்டும். மேலும், 50 சதவிகித கனரக வாகனங்கள் மின்சாரத்தில் இயங்குவனவாக இருக்க வேண்டும். உள் எரிப்பு இன்ஜினில் (Internal Combustion Engine) இயங்கும் கார்கள் விற்பனையிலேயே இருக்கக் கூடாது.

2040-ம் ஆண்டிலிருந்து 50 சதவிகித கட்டடங்கள் பூஜ்ஜிய வெளியீட்டுக்குத் தயாராக, மறு கட்டுமானம் செய்யப்பட்டிருக்க வேண்டும். விமான சேவைகள் உட்பட வான் வழிப் போக்குவரத்து வாகனங்களில் பயன்படும் 50 சதவிகித எரிபொருள் குறைந்த கரிம வெளியீட்டைக் கொண்டவையாக இருக்க வேண்டும். 2040-ம் ஆண்டுக்குள் எண்ணெய் மற்றும் நிலக்கரியைத் தடையின்றிப் பயன்படுத்தும் மின் உற்பத்தி நிலையங்கள் முற்றிலுமாகத் தடை செய்யப்பட்டிருக்க வேண்டும். 2050-ம் ஆண்டுக்குள் 85 சதவிகிதத்துக்கும் அதிகமான கட்டுமானங்கள் பூஜ்ஜிய கரிம வெளியீட்டுக்குத் தயாராக இருக்க வேண்டும். தொழிற்சாலை உற்பத்திகளில் 90 சதவிகித குறைந்த கரிம உமிழ்வைக் கொண்டதாக இருக்க வேண்டும். உலகளவிலான மின்சார உற்பத்தியில் 70 சதவிகித சூரிய ஆற்றல் மற்றும் காற்றாலை மூலம் உற்பத்தி செய்யப்பட வேண்டும்.

Climate Change
Climate Change
Pixabay

இந்த இலக்குகளை அடைவதன் மூலம் 2035-ம் ஆண்டுக்குள் நம்மால் ஓராண்டுக்கு 4 ஜிகா டன் கரிம வாயு வளிமண்டலத்தில் கலப்பதைத் தவிர்க்க முடியும். அதுவே, 2050-ம் ஆண்டின்போது, ஓராண்டுக்கு 7.6 ஜிகா டன் கரிம வாயுவைக் கிரகித்துக்கொள்ள முடியும். இதுவரையிலான கணக்குப்படி, 2050-ம் ஆண்டுக்குள், ஓராண்டுக்கு 10 ஜிகா டன் கரிம வாயு வெளியிடப்படுவதைக் குறைத்தால் காலநிலை மாற்றத்தைக் கட்டுக்குள் கொண்டு வர முடியும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், 7.6 ஜிகா டன் என்பது குறிப்பிடத்தக்க முன்னேற்றமாகவே இருக்கும்.

இதன்மூலம், பொருளாதாரம், பொதுமக்களுடைய பாதுகாப்பு ஆகியவற்றில் நிரந்தரமான மாற்றங்களைக் கொண்டு வர முடியும் என்று `2050-க்குள் நிகர பூஜ்ஜியம்' ஆய்வறிக்கை உறுதியாகக் கூறுகிறது.

மேலும், இந்த இலக்குகள் அனைத்தையுமே நிச்சயம் எவ்வித சமரசமும் இன்றி அடைய வேண்டும். இதில் ஏதாவது ஒரு சிலவற்றில் சமரசம் செய்துகொண்டாலும் கூட, நாம் எதிர்பார்க்கும் மாற்றத்தை அடைவது சாத்தியமற்றதாகிவிடும் என்றும் எச்சரிக்கிறார்கள். மேலும், இந்த அறிக்கையின்படி, நிகர பூஜ்ஜிய வெளியீட்டை அடைய வேண்டுமெனில், நிலக்கரி, எரிவாயு, எண்ணெய் ஆகியவற்றைப் பெருமளவில் குறைக்க வேண்டும். அதற்காகவே, 2021-ம் ஆண்டிலிருந்து புதிதாக எந்த அனல் மின் நிலையத்துக்கும் கண்டிப்பாக அனுமதி வழங்கக் கூடாது என்று கூறுகிறது. மேலும், 2050-ம் ஆண்டுக்குள் மொத்த மின்சார உற்பத்தியில் 90 சதவிகித புதுப்பிக்கத்தக்க ஆற்றலின் மூலம் கிடைப்பதாக இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக, 70 சதவிகிதம் மின்சாரம் சூரிய ஆற்றல் மற்றும் காற்றாலையின் மூலம் கிடைப்பதாக இருக்க வேண்டும்.

Climate Protest
Climate Protest
Pixabay

இந்த இலக்குகளை அடைவதற்கு நிச்சயம் பணம் நிறைய தேவைப்படும். மின்சாரம், கட்டுமானம் ஆகிய துறைகளில் மிகப்பெரியளவிலான முதலீடு தேவைப்படும். அடுத்த பத்தாண்டுகளில், மின்சார உற்பத்தி துறையில் அதிகளவிலான முதலீடு அவசியமாகிறது. மின்சார உற்பத்தி துறையில் அடுத்த பத்தாண்டுகளில் ஆண்டுக்கு 1.6 ட்ரில்லியன் என்ற கணக்கில் 2030-ம் ஆண்டுக்குள் முதலீட்டை அதிகரிக்க வேண்டும். மேலும், ஆண்டுக்கு 1.3 ட்ரில்லியன் என்ற கணக்கில் இருக்கும் புதைபடிம எரிபொருள் உற்பத்தித் துறையின் முதலீட்டை வெகுவாகக் குறைக்க வேண்டும்.

இவற்றோடு சேர்த்து மக்களுக்கும், இதுவரை அவர்கள் பார்க்காத புதிய வாழ்வியலை இந்த இலக்குகள் கொண்டுவரும். இதற்கு தற்போது நிகழும் கோவிட்-19 பெருந்தொற்றுப் பரவலும் ஒரு காரணம் என்று சில ஆய்வுகள் கூறுகின்றன. கோவிட்-19 தொற்றுப் பரவல் தொடங்கியபோது இருந்ததைவிட, மக்களிடையே இதுபோன்ற பேரிடர்களுக்குக் காரணமே மனித நடவடிக்கைகளால் நடக்கும் சுற்றுச்சூழல் சீர்கேடுகள்தான் என்ற விழிப்புணர்வு அதிகரித்துள்ளது.

இப்போதே மக்களுடைய வாழ்வியல் முறையிலும் சில மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன. இதன் தாக்கம் காலநிலை மாற்றத்துக்கு எதிரான செயல்பாடுகளிலும் நல்ல விளைவைக் கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. தனியார் நிறுவனங்கள் மற்றும் மக்களின் நடவடிக்கையில் மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்றாலும், அதற்கு அரசின் திட்டங்கள் மற்றும் கொள்கைகளில் மாற்றங்கள் நிகழ வேண்டும். கூடுதலாகச் சில சட்டங்களும் இதற்கென இயற்றப்பட வேண்டும்.

Climate change
Climate change
Pixabay

70 சதவிகித கரிம உமிழ்வுகளை 2050-ம் ஆண்டுக்குள் கட்டுப்படுத்துவதில், அரசாங்கத்தின் கொள்கை முடிவுகளுக்கு புதிய சட்டங்களுக்கு முக்கியப் பங்கு இருக்கும் என்று இந்த ஆய்வறிக்கை கூறுகிறது.

சர்வதேச ஆற்றல் அமைப்பு (International Energy Agency, IEA) வெளியிட்டுள்ள `2050-க்குள் நிகர பூஜ்ஜியம்: உலக ஆற்றல் துறைக்கான ஒரு திட்டமிடல்' என்ற இந்த ஆய்வறிக்கை வலியுறுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்தால், 2050-ம் ஆண்டுக்குள் புவியில் மனித நடவடிக்கைகளால் நிகழும் கரிம வெளியீட்டைக் கணிசமாகக் குறைத்துவிட முடியும் என்று கூறப்படுகிறது. உலகப் பொருளாதார மன்றம், உலக சுகாதார நிறுவனம், ஐக்கிய நாடுகள் அமைப்பு ஆகிய சர்வதேச அமைப்புகளும் உலக நாடுகளும் இதில் முழுக் கவனம் செலுத்தி, இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும்.

அடுத்த கட்டுரைக்கு