Published:Updated:

மலைக்காய்கறி விவசாயம் என்ற பெயரில் சிதைக்கப்படும் மலைகள்! நீலகிரி அதிர்ச்சி

சிதைக்கப்படும் மலைத்தொடர்கள்
சிதைக்கப்படும் மலைத்தொடர்கள்

மத்திய அரசின் பாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காட்டேரி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் உள்ள தனியார் பட்டா நிலத்தில், விவசாயம் என்ற பெயரில் விதிகளை மீறி ஒரு மலையையே சிதைத்து வருகின்றனர்.

மலை மாவட்டமான நீலகிரி பல்லுயிர்ச் சூழல் மண்டலத்தின் மிக முக்கிய பகுதியாக உள்ளது. இங்குள்ள மலைத்தொடர்களில் அதிகளவு உருவாக்கப்பட்ட குடியேற்றங்கள் மற்றும் பணப்பயிர்களுக்காகப் பெருமளவு புல்வெளிகளும் சோலை மர மழைக் காடுகளும் மாற்றப்பட்டன.

சிதைக்கப்படும் மலைத்தொடர்கள்
சிதைக்கப்படும் மலைத்தொடர்கள்

மலைச்சரிவு பகுதிகளில் வளர்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பயன்பாட்டிற்குக் கொண்டுவரப்பட்டதால் நிலச்சரிவு அபாயம் மிகுந்த பகுதியாக மாறியது. பெருமலைக் காலங்களில் ஏற்படும் நிலச்சரிவால் அதிகளவு உயிர்ச் சேதமும் பொருள் சேதமும் ஏற்படுகிறது.

சூழலியல் மற்றும் இங்கு வாழும் மக்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. தற்போதைய மாவட்ட ஆட்சியராக உள்ள இன்னசென்ட் திவ்யாவும் பல கட்டுப்பாடுகளை விதித்தார்.

சிதைக்கப்படும் மலைத்தொடர்கள்
சிதைக்கப்படும் மலைத்தொடர்கள்

ஆழ்துளைக் கிணறு அமைக்கத் தடை, பாறைகளை உடைக்கத் தடை, பொக்லைன் இயந்திரங்களைப் பயன்படுத்தத் தடை, நிலச்சரிவு அபாயம் உள்ள பகுதிகளில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளத் தடை எனப் பல தடைகள் கொண்டுவரப்பட்டன. ஆனால், இந்தத் தடைகளை மீறி சிலர் சட்டவிரோத செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் சார்பில் தடுப்பு நடவடிக்ககைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது, கொரோனா தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் பணியில் அதிகாரிகள் தீவிரம்காட்டி வரும் நிலையில் சூழலியலுக்கு எதிரான செயல்கள் நீலகிரியில் அதிகரித்துள்ளன.

சிதைக்கப்படும் மலைத்தொடர்கள்
சிதைக்கப்படும் மலைத்தொடர்கள்

கேத்தி பள்ளத்தாக்கில் மத்திய அரசின் பாதுகாப்புத்துறை கட்டுப்பாட்டில் உள்ள காட்டேரி அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியை யொட்டி உள்ள தனியார் பட்டா நிலத்தில் விவசாயம் என்ற பெயரில் விதிகளை மீறி ஒரு மலையையே சிதைத்து வருவதாக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய சுற்றுச்சூழல் ஆர்வலர் மனோகரன், ``காட்டேரி அணையின் மிக அருகில் உள்ள ஒரு மலையை மலைக்காய்கறி விவசாயம் என்ற பெயரில், தடை செய்யப்பட்ட இயந்திரங்களைக் கொண்டு சிதைத்து வருகின்றனர். 80 சதவிகிதத்துக்கும் மேலான சரிவில் மண்ணரிப்பு ஏற்படும் வகையில் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமுடக்கத்தை சாதகமாக்கி ஊட்டி, குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இயற்கை அழிப்புச் செயல்கள் அதிகரித்துள்ளன. மலைக்காய்கறி விவசாயம் என்ற பெயரில் நில அமைப்பை மாற்றி, சூழலியலுக்கு பாதிப்பை ஏற்படுத்துபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்" என ஆதங்கத்துடன் தெரிவிக்கிறார்.

மனோகரன்
மனோகரன்

நிலச்சரிவு அபாயம் குறித்து ஊட்டியில் உள்ள இந்திய மண் மற்றும் நீர் பாதுகாப்பு நிறுவனம் தலைவர், ஆய்வாளர் கண்ணன், ``16 சதவிகிதத்துக்கு அதிகமான சரிவு என்றால் படிமட்ட முறையில் விவசாயம் மேற்கொள்ள வேண்டும். 33 சதவிகிதத்துக்கு மேல் சரிவு என்றால் நிரந்தர தோட்டப்பயிர்களான தேயிலை, காப்பி போன்றவற்றைப் பயிர் செய்ய வேண்டும். இதை மீறி சரிவுப் பகுதிகளில் மலைக்காய்கறி விவசாயம் மேற்கொண்டால் ஒரு ஹெக்டர் பரப்பளவில் ஆண்டுக்கு 40 டன் மண்ணரிப்பு ஏற்பட்டு கடுமையான மேல் மண் இழப்பு ஏற்படும்" என்றார்.

கேத்தி பள்ளத்தாக்கில் அதிகரிக்கும் இயற்கை விரோதச் செயல்கள் குறித்து குன்னூர் வட்டாட்சியரிடம் பேசினோம். அவர் கேத்தி வருவாய் அலுவலர் பாபுவை நம்மிடம் பேசச் செய்தார். நம்மிடம் பேசிய அவர், ``இது விவசாய நிலமாக உள்ளது. என்னுடைய அனுபவத்தில் இது ஒன்றும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தாது. இதுபோன்ற வாகனங்களைப் பயன்படுத்த கலெக்டர் வாய்மொழி உத்தரவு வழங்கியுள்ளார். இது எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது" என்றார் அவர்களுக்கு ஆதரவாக.

சிதைக்கப்படும் மலைத்தொடர்கள்
சிதைக்கப்படும் மலைத்தொடர்கள்

சிறிய ரக பொக்லைன் இயந்திரம் வைத்திருக்கும் ஒருவரிடம் பேசினோம். ``நாங்க மட்டும் இப்படிச் செய்யல. பலரும் இங்க இருக்க அதிகாரிகளுக்கு மாசம் தவறாம பணத்தைக் கொடுத்துக்கிட்டு மலையைக் குடையிறாங்க" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு