Published:Updated:

``குப்பையிலிருந்து மின்சாரம் எடுக்கப்போறோம்!" இந்தோனேஷியாவின் திட்டம் சரிதானா?

குப்பைகள்
குப்பைகள் ( Pixabay )

12 நகரங்கள் கழிவு எரிசக்தியில் இயங்கும் மின்சார நிலையங்களை அமைக்க முன் வந்தன. அதில், ஜகார்டா, சுரபயா, பெகாசி மற்றும் சோலோ மட்டும்தான் இந்த ஆண்டுக்குள் செய்து முடிப்பதாக உறுதியளித்துள்ளன.

இன்றைய தாராளவாதப் பொருளாதாரச் சந்தை உலகில் நுகர்வோர்கள் வாங்கவும் பயன்படுத்தவும் சந்தைகளில் பொருள்களுக்குப் பஞ்சமில்லை. வாங்குகிறோம், பயன்படுத்துகிறோம், குப்பையில் போட்டுவிட்டு மீண்டும் அடுத்த பொருளை நுகர்வதற்குச் சென்றுவிடுகிறோம். இப்படி வாங்கிக் கொண்டேயிருந்தால், எதிர்காலத்தில் நம் குப்பைகளுக்குள் நாமே மூழ்கிவிடுவோம். அத்தகைய நிலை ஏற்படுவதற்கு நீண்ட காலம் இல்லையென்பதை உணர்த்துகிறது இந்தோனேஷியாவின் இப்போதைய நிலை. அதைச் சரிசெய்ய அவர்கள் குப்பையிலிருந்து மின்சாரம் எடுக்கப் போகிறார்களாம்.

இந்தோனேசியா
இந்தோனேசியா
Pixabay

அதிகமான பிளாஸ்டிக் கழிவுகளை கடலில் கலக்கும் நாடுகளில் முதல் இடத்தில் இருப்பது உலகிலேயே பெரிய நாடான சீனா. அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருப்பது இந்தோனேஷியாதான். அதேசமயம், வளர்ந்த நாடுகளிடமிருந்து இறக்குமதி ஆகும் கழிவுகளை வாங்க மறுக்கும் ஒருசில ஆசிய நாடுகளில் இந்தோனேஷியாவும் ஒன்று. சரக்குகளை உற்பத்தி செய்துகொண்டேயிருக்கும் 'வளர்ந்த' நாடுகளுக்கே அதன் விளைவாக உருவாகும் கழிவுகளை என்ன செய்வதெனத் தெரியவில்லை. அந்தச் சிக்கலை அவர்கள் ஏன் அனுபவிக்க வேண்டும்... அவற்றை அனுபவிக்கத் தானே வளரும் நாடுகளும் ஏழை நாடுகளும் இருக்கின்றன. அங்கு அனுப்பி வைப்போம் என்று அவை பல ஆண்டுகளாகக் குப்பைகளை மூன்றாம் உலக நாடுகளுக்கு அனுப்பிக்கொண்டிருக்கின்றன. அப்படி இறக்குமதி செய்யப்பட்ட குப்பைகளும் தங்கள் நாட்டில் உற்பத்தியான குப்பைகளும் சேர்ந்து இன்று இந்தோனேஷியாவை மூச்சுத் திணற வைத்துள்ளது.

இந்தப் பிரச்னையை உடனடியாகச் சரிசெய்தே ஆகவேண்டும். இல்லையேல், மிகப்பெரிய விளைவுகளை அந்த நாடு சந்திக்கும். இதுகுறித்து ஆலோசிக்கக் கடந்த 16-ம் தேதி அதிபர் ஜோகோ விடோடோ தன் மந்திரி சபையைக் கூட்டினார். இத்தனை நாள்களாக இதில் சரியான நடவடிக்கை எடுக்காமலிருந்த மந்திரி சபையைக் கடுமையாகச் சாடினார். கூட்டத்தின் முடிவில் குப்பைகளை எரித்துச் சாம்பலாக்குவதற்கான சாம்பலாக்கிகளைக் கட்டமைப்பதில் இருந்த குறைபாடுகளைக் களையத் திட்டமிடப்பட்டது. அதேசமயம், குப்பைகள எரித்து அதன்மூலம் மின்சார உற்பத்தி நிலையங்களில் எரிசக்தியாகப் பயன்படுத்தவும் திட்டமிடப்பட்டது. ஆரம்பக்கட்டமாக, ஜாவா தீவில் அமைந்திருக்கும் நான்கு நகரங்களுக்கு மின்சாரம் விநியோகிக்கும் நிலையத்தில் இதைக் கொண்டுவரவும் திட்டமிட்டனர்.

இது மின்சார உற்பத்தி குறித்த பிரச்னையல்ல. கழிவுப் பிரச்னையைச் சரி செய்வதே பிரதானமானது. அதற்கு மின்சார உற்பத்தியைப் பாலமாகப் பயன்படுத்திக் கொள்வோம்.
ஜோகோ விடோடோ, இந்தோனேசிய அதிபர்

12 நகரங்கள் கழிவு எரிசக்தியில் இயங்கும் மின்சார நிலையங்களை அமைக்க முன் வந்தன. அதில், ஜகார்டா, சுரபயா, பெகாசி மற்றும் சோலோ மட்டும்தான் இந்த ஆண்டுக்குள் செய்து முடிப்பதாக உறுதியளித்துள்ளன.

இதில் வேறொரு பிரச்னையும் இருக்கிறது. ஜாவா-பாலி மின்சாரத் திட்டத்தின் கீழ் ஏற்கெனவே இருக்கும் உற்பத்தி மற்றும் விநியோக அமைப்பு, இப்போதே தேவைக்கும் விநியோகித்துக் கொண்டிருக்கின்றன. இப்படியிருக்க, இதை இன்னும் அதிகப்படுத்துவதால் மின்சார உற்பத்தி மிதமிஞ்சிப் போகும். அது இந்தோனேசியப் பொருளாதாரத்தில் விளைவுகளை உண்டாக்கும்.

ஆற்றல் துறை 2022-ம் ஆண்டுக்குள் இதேபோல் 12 நிலையங்களை அமைக்கத் திட்டமிட்டுள்ளன. அதில்,

நாளொன்றுக்கு 16,000 டன் குப்பைகளை எரித்து 234 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.

அதேசமயம், குப்பைகளை இப்படி எரிப்பதன் மூலம் மின்சார உற்பத்தி செய்வது சூழலுக்கு ஆரோக்கியமானதல்ல என்று அந்நாட்டுச் சூழலியலாளர்கள் விமர்சிக்கிறார்கள். டை ஆக்சின், மெர்க்குரி, நச்சுத் தன்மை வாய்ந்த பல நுண்ணிய துகள்களை இது வெளிப்படுத்தும் என்றும் அது மக்களின் உடல்நலனில் காற்றின் தரத்தில் பாதிப்புகளை உருவாக்கும் என்று அவர்கள் விமர்சிக்கின்றனர்.

குப்பைகளை எரிப்பதன் மூலம் மின்சார உற்பத்தி செய்யும் நிலையங்களை அமைப்பதன் மூலம் மேன்மேலும் வெளிநாட்டு முதலீடுகளை, பெருமுதலாளிகளை ஈர்ப்பதை மட்டும்தான் செய்யமுடியும்.
நூர் ஹிதாயதி, இந்தோனேசிய சுற்றுச்சூழல் மன்றத்தின் நிர்வாக இயக்குநர்
சாம்பலாக்கி நிலையம்
சாம்பலாக்கி நிலையம்
Ed Hawco/Flickr

இவர்கள் சொல்வது ஒருபுறமிருக்கட்டும். எதார்த்தமாகச் சிந்தித்துப் பார்ப்போம். நம் குடியிருப்புகளுக்கு அருகே எங்கேனும் குப்பைகளை ஒன்றாகக் குவித்து எரித்தால், எவ்வளவு கரும்புகை மேலேறும் என்பதை நாமே கண்கூடாகப் பார்த்திருப்போம். சில கிலோக்கள் குப்பையை எரிக்கும்போதே அவ்வளவு நச்சுத்தன்மை வாய்ந்த புகை காற்றில் கலக்கிறது என்றால், ஒரு நிலையத்திலிருந்து மட்டுமே நாளொன்றுக்கு 16,000 டன்களை எரித்தால் எவ்வளவு பாதிப்புகள் ஏற்படும். அதேபோல் 12 நிலையங்களை 2022-க்குள் அமைப்பதுதான் திட்டம்.

கிரீன்பீஸ் என்ற சர்வதேச சுற்றுச்சூழல் அமைப்பு 2001-ம் ஆண்டு இதுமாதிரியான கழிவு எரிசக்தி நிலையங்களிலிருந்து உருவாகும் பிரச்னைகள் பற்றி ஓர் ஆய்வு செய்தது. இங்கிலாந்து, ஸ்பெயின், ஜப்பான் போன்ற நாடுகளில் இந்த நிலையங்கள் இருந்த பகுதிகளில் வாழ்ந்த மக்களுடைய உடலில் டை ஆக்சின் அதிகமாக இருந்தது தெரிய வந்தது. அது அதிகமாக இருப்பதால் கேன்சர், நோய் எதிர்ப்புத் திறன் குறைபாடு போன்றவை ஏற்படுகின்றன. அதேசமயம், காற்றில் அதிகமாகியிருந்த மெர்க்குரி அளவு அங்கு வாழும் மக்களுக்கு நரம்பு மண்டலங்களைப் பாதிப்பதோடு, குழந்தைகளின் மூளை வளர்ச்சியிலும் தாக்கம் ஏற்படுத்தும் என்று அந்த ஆய்வு மூலம் தெரியவந்தது.

கழிவுகள்
கழிவுகள்
Pixabay

"சாம்பலாக்கிகளைப் பயன்படுத்துவதால் சூழலுக்கும் ஆரோக்கியத்திற்கும் எந்தப் பயனும் விளைந்துவிடாது. அது கழிவுகளை அப்புறப்படுத்தும் அவ்வளவே. அதோடு இந்தோனேசிய கழிவு மேலாண்மைச் சட்டத்தின்படி, கழிவுகளை எரிசக்தியாகப் பயன்படுத்த முடியாது." - ஃபஜ்ரி ஃபாதில்லா (Fajri Fadhillah), கழிவு மேலாண்மை ஆய்வாளர், இந்தோனேசியா.

இந்தத் திட்டங்களுக்காக அடுத்து வரக்கூடிய ஆண்டுகளில் சுமார் ஒரு பில்லியன் டாலர் செலவு செய்யப்போகிறது. இப்போது கடலில் கொட்டப்படும் குப்பையில் 70 சதவிகிதம் பிளாஸ்டிக் கழிவுகள்தான். அவற்றை, எரிப்பதன் மூலம் இந்தத் திட்டம் பல பக்க விளைவுகளைக் கையோடு கொண்டு வருமென்று அந்நாட்டுச் சூழலியல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர்.

இதிலிருக்கும் மிகப்பெரிய மர்மம் என்னவென்றால், எரிக்கப்படும் குப்பைகள் எங்கே செல்கின்றன? அவை எரிக்கப்படுவதால் பிரச்னை தீர்ந்துவிடுமா! அவை மீண்டும் வாயுவாகக் காற்றிலும் நீரிலும் தானே கலக்கின்றன.
அஹ்மத் அஷோவ், இந்தோனேசிய கிரீன்பீஸ் அமைப்பின் முன்னாள் உறுப்பினர்

இதற்காகச் செய்யப்படும் சூழலியல் தாக்க மதிப்பீடுகளும் முறையாக நடப்பதில்லை என்று சூழலியலாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். டை ஆக்சின்களைக் கட்டுப்படுத்த இதுவரை எந்தவிதமான தொழில்நுட்பங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை. அதி நவீனச் சாம்பலாக்கிகளும் கூட அதிகமான டை ஆக்சின் வெளியேற்றம் செய்வதைப் பல ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. ஆனால், சூழலியல் தாக்க மதிப்பீட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தோடு இணைந்து குறைந்தபட்ச வெளியேற்ற அளவுகள் கடைபிடிக்கப்படும் என்று ஜகார்டாவில் முதல் சாம்பலாக்கி அமைப்பதற்கான சூழலியல் தாக்க மதிப்பீட்டில் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கெனவே, உலகின் மோசமான காற்று மாசுபாட்டுப் பிரச்னையுள்ள நகரங்கள் பட்டியலில் ஜகார்டா இடம் பெற்றுள்ளது. இனி இதுவும் வந்தால் நிலைமை மேலும் மோசமாகுமே ஒழிய சரியாகாது. உலகளவில், பிளாஸ்டிக் கழிவுகள்தான் 1.8 பில்லியன் மெட்ரிக் டன் அளவுக்கு கரிம வாயு வெளியேற்றம் செய்துள்ளன என்கிறது 2019-ம் ஆண்டு கலிபோர்னிய பல்கலைக்கழகம் வெளியிட்ட ஓர் ஆய்வறிக்கை. இந்தோனேசியா எரிக்கப்போகும் கழிவுகளில் 70 சதவிகிதம் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளன. இந்நிலையில், அவர்களால் எப்படி பாரீஸ் ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டது போல் கரிம வாயு வெளியேற்றத்தைக் குறைக்க முடியும்?

மாசுபாடு
மாசுபாடு
Pixabay

குப்பைகளை எரிப்பதைவிட, இந்தோனேசிய அரசு முதலில் செய்யவேண்டியது உற்பத்தியாகும் குப்பைகளைக் குறைப்பதுதான் என்கின்றனர் சூழலியல் ஆர்வலர்கள். அதன்பிறகு அவற்றை மறுசுழற்சி செய்யவும் மக்கும் குப்பைகளை நிலங்களுக்கு உரமாக்கவும் திட்டங்கள் தீட்டப்படவேண்டும். குப்பைகளை எரிப்பது எப்போதுமே தீர்வாகாது என்று அவர்கள் இந்தத் திட்டத்தைக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

குப்பைகள். உலகில் மனித இனத்தைத் தவிர வேறெந்த உயிரினமும் கேள்விப்பட்டிராத ஒரு சொல் இருக்கிறதென்றால் அது இதுவாகத்தானிருக்கும். இந்தச் சொல் இன்னும் எத்தனை பிரச்னைகளைக் கொண்டுவரப் போகிறதோ!

Vikatan
அடுத்த கட்டுரைக்கு