Published:Updated:

காலநிலை மாற்றத்தால் உயிரிழந்தவர்களின் பட்டியலில் இந்தியா முதலிடம்! - அதிர்ச்சி தரும் அறிக்கை

காலநிலை மாற்றம்
காலநிலை மாற்றம்

2018-ம் ஆண்டில் மிக அதிகமான பாதிப்புகளைச் சந்தித்த நாடுகளின் பட்டியலில் 14-ம் இடத்தில் இருந்த இந்தியா, இந்த ஆண்டு ஐந்தாவது இடத்துக்கு வந்துள்ளது.

உலகமயமாக்கல், நவீனமயமாக்கல் மற்றும் வளர்ச்சி ஆகிய பெயர்களால் மனித இனம் ஏற்படுத்துகின்ற சுற்றுச்சூழல் சீர்கேடுகளின் விளைவுகளால் உண்டாகும் பாதிப்புகள் ஒருபுறம் இருக்க, காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் உயிர் இழப்புகளின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்நிலையில் ஸ்பெயினின் தலைநகரான மாட்ரிட் நகரில் நடைபெற்று வரும் COP-25 சந்திப்பில் சுற்றுச்சூழல் வளர்ச்சி தொடர்பான ஜெர்மன் வாட்ச் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள உலகளாவிய காலநிலை இடர்-குறியீடு 2020 (The Global Climate Risk Index 2020) என்ற அறிக்கையின்படி 2018-ம் ஆண்டு காலநிலை மாற்றம் மற்றும் மோசமான வானிலையால் மிகவும் பாதிப்படைந்த நாடுகளின் பட்டியலில் இந்தியா ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது. அதிகப்படியான வெப்பக்காற்று மற்றும் பஞ்சத்தால் ஜப்பான் மற்றும் ஜெர்மனி முதல் மற்றும் மூன்றாவது இடத்திலும் சக்திவாய்ந்த சூறாவளியின் பாதிப்பால் பிலிப்பைன்ஸ் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

வெப்பமயமாதல்
வெப்பமயமாதல்
Pixabay

இது ஒருபுறம் இருக்க, 2018 ஆம் ஆண்டில் காலநிலை மாற்றத்தால் ஏற்பட்ட உயிரிழப்பு எண்ணிக்கையில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. சென்ற ஆண்டு இந்தியாவில் இந்தப் பாதிப்புகளால் 2,081 பேர் உயிரிழந்துள்ளனர். இழப்புகள் மட்டும் சுமார் 37,000 மில்லியன் அமெரிக்க டாலர்கள் எனத் தெரிய வந்துள்ளது. இந்த இழப்புத் தொகை, சுகாதாரத் துறைக்கு அரசு ஒதுக்குகின்ற ஆண்டு பட்ஜெட்டைவிட நான்கு மடங்கு அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

` காலநிலை மாற்றம் குறித்த கல்வி!'- உலகுக்கே முன்னோடி தேசமாகும் இத்தாலி

இது குறித்து ஜெர்மன் வாட்சின் காலநிலை நிதி மற்றும் முதலீட்டின் கொள்கை ஆலோசகர் டேவிட் எக்ஸ்டீன் (David Eckstein), ``சென்ற ஆண்டைவிட இந்தியா இந்தப் பட்டியலில் மிகப் பெரிய சரிவைச் சந்தித்துள்ளது. சென்ற ஆண்டில் ஏற்பட்ட கடுமையான மழைப்பொழிவு, அதனால் வந்த வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளால் ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் உயிரழந்தனர். மேலும், அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உருவான இரண்டு சூறாவளிகளால் 1,000 பேர் இறந்தனர். இதுவே இந்தச் சரிவிற்கான காரணம்" என்றார்.

இயற்கைப் பேரிடர்கள்
இயற்கைப் பேரிடர்கள்
Pixabay

இந்தச் சேதத்தின் விளைவுகளால் ஏற்படும் இழப்புகளைக் குறைப்பது பற்றிப் பேசும் ஜெர்மன் வாட்சின் லௌரா ஷேஃபர் (Laura Schaefer) கூறுகையில், ``பாதிப்புகள் நிகழும்போது அதைச் சமாளிக்கப் போதுமான அளவு நிதி மற்றும் தொழில்நுட்பத் திறன்கள் இல்லாததாலேயே இவ்வளவு சேதங்கள் ஏற்படுகின்றன. காலநிலை உச்சிமாநாடு, பாதிப்படையும் நாடுகளுக்கும் அதில் வாழும் ஏழை மக்களுக்கும் இழப்புகள் மற்றும் சேதங்களைக் கையாள்வதில் உள்ள கூடுதல் நிதிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டும்" என்கிறார்.

அடுத்த கட்டுரைக்கு