Published:Updated:

காடுகளை வகைப்பிரிப்பதில் அமைச்சகத்தின் புதிய முடிவு - யாருக்கு லாபம்?

காடுகள்
காடுகள்

2010-ல் காடுகளில் செல்லக்கூடிய, செல்லக்கூடாத பகுதிகள் என்று காடுகள் பிரிக்கப்பட்டன. அதை இன்னும் எளிமைப்படுத்தும் விதத்தில் இப்போதைய இந்த வகைப்பாட்டியல் அமைந்துள்ளது.

இப்போதைய நிலவரப்படி, இந்தியாவிலுள்ள காடுகள் அனைத்துமே சட்டத்தின்கீழ் பாதுகாக்கப்படுகின்றன. அவற்றுக்குள் எந்தவிதமான வளர்ச்சித் திட்டத்தையுமே கொண்டுவர முடியாது. இந்த நிலை, கூடிய விரைவிலேயே மாறப் போகிறது. இந்தியக் காடுகளில், செல்லக்கூடிய மற்றும் செல்லக்கூடாத காடுகள் என்று தரம் பிரிக்கவுள்ளது, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம். இதுகுறித்து ஏற்கெனவே அனைத்து அமைச்சகங்களுக்கும் அறிவிப்பாணை அனுப்பப்பட்டுவிட்டது.

மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகம்
மத்தியச் சுற்றுச்சூழல் அமைச்சகம்

அதற்குரிய புதிய காடுகள் வகைப்படுத்தலில், உயர்தர, நடுத்தர மற்றும் குறைந்த பாதுகாப்புப் பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன. ``காடுகளில் மனிதர்கள் செல்லக்கூடாத வனப்பகுதிகளாக எதுவுமே இருக்கக்கூடாது. யுரேனியம் மற்றும் நிலக்கரிச் சுரங்கங்கள் பலவும் காட்டிற்குள் அமைந்துள்ளன. இத்தகைய சுரங்க வேலைகளுக்குக் கட்டுப்படுத்தப்பட்ட அனுமதிகளை வழங்கலாம். முன்மொழியப்படும் வளர்ச்சித் திட்டங்களுக்கு, உயர்தரப் பாதுகாப்புப் பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்" என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

இந்தியக் காட்டியல் ஆராய்ச்சி மற்றும் கல்விக்கான மன்றத்திடம் சுற்றுச்சூழல் அமைச்சகம் செயற்கைக்கோள் ஒளிப்படங்களின் வழியே உயர்தர, நடுத்தர மற்றும் குறைந்த பாதுகாப்புப் பகுதிகளை வகைப்படுத்துமாறு கூறியுள்ளது. "அவர்கள் அதை முடித்தவுடன் அடர்த்தியான பல்லுயிர்ச்சூழல் மிகுந்த காடுகள் உயர்தரப் பாதுகாப்புப் பகுதிகளாக வகைப்படுத்தப்படும். அங்கு எந்தவிதமான திட்டங்களையும் அனுமதிக்கமாட்டோம். காட்டிற்கு வெளியே நடக்கும் நடவடிக்கைகள் அங்கு நடக்காமல் தடுக்கப்படும். ஆனால், முற்றிலும் அரண் அமைத்து வைக்கமுடியாது. அமல்படுத்த முடியாத விதிமுறைகளை வகுத்துவிட்டோம். அதை, அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில், பயனர்களுக்கு ஏற்ற வகையில் மாற்றியாக வேண்டும்" என்று காடுகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து சுற்றுச்சூழல் அமைச்சகம் கூறியுள்ளது.

மேற்குத்தொடர்ச்சி மலை
மேற்குத்தொடர்ச்சி மலை

2014-ம் ஆண்டில் சுற்றுச்சூழல் அமைச்சகம், நாட்டின் பசுமைச் சட்டங்களை மறுபரிசீலனை செய்ய ஓர் உயர்மட்டக் குழுவை அமைத்தது. அந்தக் குழு, பல்லுயிரிய வளம் மிக்கக் காடுகளில் எந்தவிதமான கட்டுமான வேலையாக இருந்தாலும் சரி, சுரங்க வேலையாக இருந்தாலும் சரி, அனைத்திற்கும் தடை விதிக்கவேண்டும் என்று கூறியது. அதற்கும் முன்பே, 2010-ல் காடுகளில் செல்லக்கூடிய, செல்லக்கூடாத பகுதிகள் என்று பிரிக்கப்பட்டன. அதை இன்னும் எளிமைப்படுத்தும் விதத்தில் இப்போதைய இந்த வகைப்பாட்டியல் அமைந்துள்ளது.

இது காடுகளை வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் தனியார் நலனுக்காகவும் திறந்துவிடும் என்று சூழலியல் ஆர்வலர்கள் விமர்சித்து வருகின்றனர். இப்படியே போனால், விரைவில் 'இங்கு காடுகள் விற்கப்படும்' என்று விளம்பரப்படுத்தி இந்தியக் காடுகளைத் தனியார்களுக்கே கொடுத்துவிட்டு இருந்துவிட வேண்டியதுதான்.

அடுத்த கட்டுரைக்கு