Published:Updated:

பூமியில் சிறுகோள் மோதியதால் உருவான இந்திய ஏரி... உலகின் ராம்சர் பட்டியலில் இடம்பிடிப்பு!

lonar lake
lonar lake ( Aaditya thackeray/ Twitter )

மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லோனார் ஏரி சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த ராம்சர் (ramsar) பகுதி என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தின் புல்தானா மாவட்டத்தில் உள்ள அவுரங்காபாத்திலிருந்து நான்கு மணிநேர பயண தூரத்தில் அமைந்துள்ளது, லோனார் ஏரி. இந்த ஏரியை 1823-ம் ஆண்டில் சி.ஜே.இ அலெக்சாண்டர் என்ற பிரிட்டிஷ் அதிகாரி அடையாளம் கண்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏரி சுமார் 50,000 ஆண்டுகளுக்கு முன்பு பூமியின் மீது சிறுகோள் மோதும்போது உருவானது என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். லோனார் ஏரி சுமார் 500 அடி ஆழம் கொண்ட இது முழுமையாக முழு வட்டவடிவத்தில் இந்த ஏரி காட்சியளிக்கிறது.

lonar lake
lonar lake
Aaditya thackeray/ Twitter

இது மொத்தமாக இந்த 113 ஹெக்டேர் அளவு கொண்டது. இது லோனார் பள்ளம் எனவும் அழைக்கப்படுகிறது. இந்த ஏரிக்குப் புர்னா மற்றும் பென்கங்கா என்ற இரண்டு சிறிய ஓடைகளிலிருந்து தண்ணீர் வருகிறது. இந்தப் பாறைகளில் இருக்கும் ரசாயனங்களின் காரணமாக ஏரியில் இருக்கும் பெரும்பகுதி நீர் உப்புத்தன்மை கொண்டதாக இருக்கிறது.

விஞ்ஞானிகள் இந்த ஏரி நீரை ஆய்வு செய்யும்போது, ​​அதிக அழுத்தம், உயர் வெப்பநிலையின்போது உருவாகும் மாஸ்கெலைனைட் போன்ற அசாதாரண தாதுக்களைக் கண்டுபிடித்தனர்.

கடந்த ஜூன் மாதம் லோனார் ஏரி பச்சை நிறத்திலிருந்து இளஞ்சிவப்பு நிறமாக மாறியது. சாதாரண நாள்களில் லோனார் ஏரியின் நீர் பச்சை நிறத்தில் இருக்கும் என்பதால் விஞ்ஞானிகளைச் சற்று குழப்பமடையச் செய்தது. இறுதியில் ஏரியில் நீர் குறைந்தது மற்றும் பாசிகளின் தன்மை காரணமாகவே இளஞ்சிவப்பு நிறமாக நீர் மாறியது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த ஏரிதான் இப்போது ராம்சர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது.

lonar lake
lonar lake
Aaditya thackeray/ Twitter

1971-ம் ஆண்டு இரான் நாட்டில் உள்ள ராம்சர் பகுதியில் உலகின் முதல் சதுப்புநில பாதுகாப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் சர்வதேச முக்கியத்துவம் வாய்ந்த 'ராம்சர் மாநாடு' என்ற அமைப்பும் உருவாக்கப்பட்டது. இந்த அமைப்பு பல்வேறு நாடுகளில் உள்ள உலக முக்கியத்துவம் வாய்ந்த சதுப்புநில பகுதிகளை 'ராம்சர் பகுதி' என அறிவிக்கும். ராம்சர் பகுதி என்று அறிவிக்கப்பட்ட இடங்களைப் பாதுகாக்கவும் பராமரிக்கவும் சர்வதேச நிதி உதவி வழங்கப்படும்.

இந்தவகையில் இந்தியாவில் இதுவரை 40 சதுப்புநில பகுதிகள் ராம்சர் பகுதிகள் என முன்னரே அறிவிக்கப்பட்டுள்ளன. மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள நந்தூர் மட்மேஷ்வர் பகுதியைத் தொடர்ந்து 41-வது பகுதியாக மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள லோனார் ஏரியும், ராம்சர் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

லோனார் ஏரி
லோனார் ஏரி
Aaditya thackeray/ Twitter

இந்தத் தகவலை மகாராஷ்டிரா மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஆதித்ய தாக்கரே தனது ட்விட்டர் பக்கத்தில் "லோனார் ஏரி ராம்சர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சியடையச் செய்கிறது. 2004-ம் ஆண்டு முதன்முறையாக இந்த ஏரியைப் பார்த்தேன். தற்போது இந்த ஏரி உலக பல்லுயிர், புவியியல் மற்றும் சுற்றுலாவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக விளங்குகிறது" எனப் பதிவிட்டுள்ளார். இதற்கு முன்னரே இந்த ஏரி 1979-ம் ஆண்டில் 'தனித்துவமான புவியியல் தளம்' என அறிவிக்கப்பட்டு 'தேசிய பாரம்பர்ய நினைவுச் சின்னம்' என்ற அந்தஸ்தைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.

அடுத்த கட்டுரைக்கு