Published:Updated:

இழுவை வலைகளுக்கான தடையை நீக்கிய இந்தோனேசியா... மீன்வளம் அழியும் ஆபத்து!

Seine Nets
Seine Nets ( Gillfoto/ Wikimedia Commons )

இழுவை வலைகளைப் பயன்படுத்துவதால், இந்தோனேசியாவின் மீன்வளம் அழியும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலும் அந்த வலைகளைப் பயன்படுத்தி பல மீனவர்கள் மீன் பிடிக்கிறார்கள். அதுகுறித்த அலசல் கட்டுரை இது.

இந்தோனேசியாதான் உலகிலேயே இரண்டாவது மிகப்பெரிய மீன் சந்தையாகும். இந்த நிலையில், இந்தோனேசியாவில் சீன் மீன்பிடி (seine) வலைகளையும் இழுவை மீன்பிடி வலைகளையும் பயன்படுத்த (trawl nets) விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது. கடந்த 2015-ம் ஆண்டு அப்போதைய கடல் மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் சுசி புட்ஜியாஸ்டுடி இந்தவகை வலைகளைப் பயன்படுத்தி மீன் பிடிப்பதைத் தடை செய்தார்.

மீன் வளம்
மீன் வளம்
Wikimedia Commons

இதற்கு முக்கியக் காரணம் சீன் மற்றும் இழுவை மீன்பிடி வலைகள் கடலில் உள்ள மீன்களை அதிளவில் பிடிக்க உதவியது. மேலும், இதனால் கடல் வளமும் பெரிதும் பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சுசியின் இந்த முடிவைக் கடல் ஆய்வாளர்கள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பெரிதும் பாராட்டினர். ஆனால், இதற்கு ஜாவாவில் உள்ள பான்டூரா பகுதி மீனவர்களிடையே கடும் எதிர்ப்பலை எழுந்தது. இவர்கள் மிகப்பெரிய அளவில் இந்த வலைகளில் முதலீடு செய்திருந்தனர். இதனால் சுசி, இந்தப் பகுதி மீனவர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்தார். மேலும், அவர்களை பிப்ரவரி 2020-க்குள் மாற்று மீன்பிடி வலைகளுக்கு மாற அவகாசம் வழங்கினார்.

இப்போது இந்தத் தடை முழுவதுமாக தளர்த்தப்பட்டுள்ளதால் மீனவர்கள் இனி எப்போதும்போல சீன் வலைகளையும் ட்ரால் வலைகளையும் பயன்படுத்தலாம். தற்போதைய மீன்வளத் துறை அமைச்சர் எதி ப்ராபோவே பொறுப்பேற்ற உடனேயே இந்த வலைகளுக்கான தடையை நீக்குவதில் மும்முரமாக இருந்தார். மீன் பிடிப்பு குறைந்துள்ளதால் நாட்டின் பொருளாதாரம் பாதிப்படைந்துள்ளது என்பதே இவரின் ஒரே கருத்தாக இருந்தது.

இதுகுறித்து மீன்வளத்துறையின் இயக்குநர் ட்ராயன் யுனாந்தா கூறுகையில், "இதைப் பயன்படுத்தும்போது தேசிய தரநிலையும் சுற்றுச்சூழல் தரமும் பின்பற்றப்படும். மேலும், இதன் பயன்பாட்டை ஒதுக்கீடு முறையிலும் ஒழுங்குமுறைகளைக் கடைப்பிடிப்பதன் மூலமும் கட்டுப்படுத்துவோம்" என்றார்.

சீன் வலைகள் மூலம் பிடிக்கப்பட்டதில் 50 சதவிகிதம் இதர தேவையற்ற உயிரினங்களும் பிடிக்கப்பட்டுள்ளன.
போகோர் விவசாயக் கழகம் (Bogor Institute of technology) 2010-ல் நடத்திய ஆய்வின் முடிவு

அரசின் இந்த முடிவுக்கு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் கடும் அதிருப்தி ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் மீன்பிடித் துறையை வளர்ப்பதில் நாடு மீண்டும் பின்தங்கிச் செல்கிறது என்று அவர்கள் விமர்சித்து வருகின்றனர். சீன் மற்றும் ட்ரால் வலைகளைக் கொண்டு அதிக அளவிலான மீன்களை ஒரே நேரத்தில் பிடிக்க முடியும். புதிதாகப் பிறக்கும் மீன் குஞ்சுகள் தாய் மீன்களுக்குக் கீழேயேதான் நீந்திச் செல்லும். மீன்கள் கூட்டமாகச் செல்லும் பாதைகளை வலை போட்டுத் தடுத்து மொத்தக் கூட்டத்தையும் கூண்டோடு பிடிக்க இந்த வலைகள் பயன்படுத்தப்படுகின்றன. அப்படி மீன் பிடிக்கும்போது, தாய் மீன்களுக்குக் கீழே நீந்திச் செல்லும் மீன் குஞ்சுகளும் சேர்ந்தே வலையில் சிக்குகின்றன.

வலைக்குள் கூட்டமாக நெருக்கியடித்துக் கொண்டு சிக்கியிருக்கும் மீன்களுக்கு நடுவே சிக்கும் சின்னஞ்சிறு குஞ்சுகள் நெரிசலில் இறந்துவிடுகின்றன. மொத்தமாக வலை நிரம்பிய பிறகுதான் இந்த வலையை மேலே இழுப்பதால், அவற்றை மீண்டும் நீரில் போட்டு உயிர் பிழைக்க வைப்பதற்கான அவகாசம் கிடைப்பதில்லை. வலையை மேலே இழுத்த பிறகு, இறந்துபோன மீன் குஞ்சுகளைத் தூக்கிக் கடலில் வீசிவிட்டு வந்துவிடுகின்றனர். இதனால், மீண்டும் இனப்பெருக்கத்தில் ஈடுபட வளர்ந்த மீன்கள் இல்லாமல் போவதோடு, அடுத்த சந்ததியும் அழிந்துவிடுகிறது.

இப்படியாக, இந்த வலைகளில் மீன் குஞ்சுகளைப் போன்ற பொருளாதார ரீதியாகத் தேவையில்லாத உயிரினங்களும் வலையில் சிக்கி உயிரிழந்து விடுகின்றன. போகோர் விவசாயக் கழகம் (Bogor Institute of technology) 2010-ல் நடத்திய ஆய்வுப்படி சீன் வலைகள் மூலம் பிடிக்கப்பட்டதில் 50 சதவிகிதம் இதர தேவையற்ற உயிரினங்களும் பிடிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறது. இத்தகைய வலைகள் 2015-ல் தடை செய்யப்பட்ட பிறகு மீன்வளத்துறையால் நடத்தப்பட்ட ஆய்வில் கான்ட்ராங்க் போட் ஓட்டுநர்கள் தங்களது மீன்பிடித் தொழிலை குறைத்துக் கொண்டனர் எனத் தெரிய வந்தது. இந்தோனோசியாவில் சீன் வலை மீன்பிடிப்பை `கான்ட்ராங்க்’ என்றும் கூறுவர். மீன்பிடிப்பு கணிசமாக குறைந்த காரணத்தால் அந்நாட்டுப் பண மதிப்பில் 10.44 ட்ரில்லியன் வருவாய் இழப்பு ஏற்பட்டதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மீன் வளத் துறை/ இந்தோனேசியா
மீன் வளத் துறை/ இந்தோனேசியா
Jom Wikimedia Commons

கான்ட்ராங்க் படகு விவகாரம் இந்தோனோசியாவில் அரசியலாகவே பார்க்கப்படுகிறது. இதைப் பயன்படுத்தும் பான்டூரா மீனவர்கள்தான் இந்தோனோசியாவின் வாக்கு வங்கியில் முக்கியமானவர்கள். இந்த மீனவர்கள் மற்றும் அதன் ஆதரவாளர்கள் சீன் மீன்வலைகள் அவ்வளவு ஆபத்தானவை இல்லை என்றே தெரிவிக்கின்றனர். இவற்றை கடலோரப் பாறைகளுக்கு அப்பால்தான் மீன்பிடிக்கப் பயன்படுத்துகிறோம் என்கின்றனர். ஆனால், அதிக மீன்களைப் பிடிக்க வேண்டும் என்ற காரணத்தால் இவை கீழ் இழுவையாகவும் பயன்படுத்தப்படுகிறது என்கிற குற்றச்சாட்டு உள்ளது. அதிக அளவில் மீன்பிடிப் படகுகளை வைத்திருந்த நிறுவனங்கள் இந்த மாதிரியான செயல்களில் ஈடுபட்டதாக விமர்சனம் எழுந்துள்ளது. இவர்கள் சிறிய அளவிலான மீனவர்களை விடக் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் அதிக மீன்களையே பிடித்து வந்தனர். இதனால் அவர்களின் வாழ்வாதாரமும் பறிக்கப்பட்டது. தற்போது மீண்டும் இந்த வலைகளைப் பயன்படுத்த அனுமதிப்பதால் சிறிய மீனவர்கள் அதிகம் பாதிக்கப்படுவர்.

இந்த நிலை பற்றி கோயெலேட்சன் ஆஃப் பிஷரிஸ் ஜஸ்டிஸ் அமைப்பின் (கியாரா) பொதுச்செயலாளர் சுசன் ஹிராவதி கூறுகையில், "இந்த நடவடிக்கைதான் ஐயுயு மீன்பிடிப்பின் (illegal, unreported, unregulated) தொடக்கம் ஆகும். மேலும், இந்தோனேசியாவின் கடல் மற்றும் மீன் வளத்தையும் பாதிப்பது ஆகும். இதனால் சிறு குறு மீனவர்கள் கடலில் தங்களுடைய மீன்களின் பங்கினை இழக்கக்கூடும். மீன்வளத்துறை அமைச்சகம் பராம்பர்ய மற்றும் சிறு குறு மீனவர்களுக்கு உதவவில்லை என்றால் அப்படிப்பட்ட அமைச்சகம் இருப்பதே வீண்தான்" என்றார்.

Trawl nets
Trawl nets
Alex Proimos/ Wikimedia Commons

சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் துறை சார்ந்த வல்லுநர்கள் வலைகளுக்கான தடையை நீக்காமல் மாற்று வழிகளை ஊக்குவிக்குமாறே அறிவுறுத்தி வருகின்றனர். இதோடு சிறு மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர். இதை அரசியலாக்க வேண்டாம் என்றும் தெரிவித்தனர்.

இதுபற்றிப் பேசிய டிஸ்ட்ரக்டிவ் ஃபிஸிங்க் வாட்ச் என்ற தன்னார்வல அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மொகமத் அப்தி சுஹுஃபான், "இந்த நிறுவனங்கள் அனைத்தும் அரசியல் மற்றும் அரசு நிறுவனங்களுடன் நெருங்கிய தொடர்பில் உள்ளன. இதனால் கடல் மற்றும் மீன்வளத்துறை அமைச்சகமும் இவர்கள் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இவர்கள்தான் தடை நீக்கத்தில் ஆதாயம் பெறுபவர்களாகவும் உள்ளனர். இந்த தடைத் நீக்கத்தைப் பற்றி எங்கள் அமைப்புடன் அரசாங்கம் விவாதிக்கக்கூட இல்லை. மீன்வளத்துறை அமைச்சகம் எடுத்த முரண்பட்ட முடிவுகளில் இதுவும் ஒன்றாகும்" என்றார்.

தமிழகத்தில் மொத்தம் 13 கடலோர மாவட்டங்கள் உள்ளன. இவற்றில் `இரட்டை மடி’ என்றழைக்கப்படும் ட்ராலிங்க் மீன்பிடி வலைகளுக்கும் தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டுள்ளது. சீன் மீன்வலைகளும் பல்வேறு கடல் வாழ் உயிரினங்களை அழிப்பதால் அவற்றுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகம் மட்டுமன்றி இந்தியாவின் பல மாநிலங்களில் இந்தவகை வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடிக்கும் சம்பவங்கள் அவ்வப்போது தமிழகக் கடல் பரப்பில் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன என்பது துரதிர்ஷ்டவசமானது.

ட்ரால் படகுகள்
ட்ரால் படகுகள்
Jean-Pierre Bazard Jpbazard/ Wikimedia Commons
லாக்டௌன் நேரத்தில் அதிகரிக்கும் விலங்குகள் வேட்டை... சமூக வலைதளத்தில் பதிவேற்றும் அவலம்!

மனிதன் அதிகளவில் மீன்களைப் பிடிக்க வேண்டும் என்ற பேராசையினால் எதிர்கால மீன்வளத்தையும் சேர்த்து அழித்து வருகிறான். இதோடு பிற கடல் உயிரினங்களும் இத்தகைய வலைகளில் சிக்கி உயிரிழந்து விடுகின்றன. இயற்கையின் வளத்தை சுயநலத்திற்காகச் சுரண்ட நினைத்தால் எதிர்காலத்தில் வளத்தையே இழக்கக் கூடும். நம்மைப் போன்றே அடுத்த தலைமுறையின் பயன்பாட்டுக்கும் இயற்கையின் வளங்களை விட்டுச் செல்ல வேண்டியது நமது அனைவரின் கடமையாகும்.

அடுத்த கட்டுரைக்கு