நீலகிரி: `பருவமழையை பேரிடராக்கும் அந்நிய மரங்கள்!’ - விழித்துக்கொள்ளுமா மாவட்ட நிர்வாகம்?
விறகு தேவைக்காகவும், அழகுத் தாவரவமாகவும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட சூழலியலுக்கு பயனற்ற அந்நிய களை மரங்களே இன்றைக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
ஊட்டி அருகில் உள்ள சோலூர் பகுதியைச் சேர்ந்த 50 வயதான ரவி என்பவர் தனது தோட்டத்தைப் பார்க்க வெளியில் சென்றபோது மரம் முறிந்து விழுந்ததில் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
இதேபோல் ஊட்டி ஆர்.சி காலனி பகுதியைச் சேர்ந்த 40 வயதான சாதிக் அலி என்பவர் விறகு சேகரிக்க சென்றபோது அருகில் இருந்த மரம் விழுந்ததில் காயமடைந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
அதே நாளில் மரம் விழுந்ததில் மேலும் இருவர் காயமடைந்தனர். இது மட்டுமல்லாது மேய்ச்சலில் ஈடுபட்டிருந்த தோடர் வளர்ப்பு எருமைகள் மீது மரம் விழுந்ததில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தன. இந்த நிலையில் தான் ஊட்டி அரசு மருத்துவமனையில் இரவு நேரத்தில் ராட்சத யூகலிப்டஸ் மரம் வேரோடு சாய்ந்து அதிர்ச்சையை ஏற்படுத்தியது. இரவு நேரம் என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
நீலகிரியில் கடந்த 5 நாள்களில் சாலையின் குறுக்கேயும், மின் கம்பங்கள் மீதும், குடியிருப்புகள் மீதும் 500க்கும் அதிகமான மரங்கள் விழுந்துள்ளன. இவற்றில் 95 சதவிகிதம் யூகாலிப்டஸ் பைன் உள்ளிட்ட அந்நிய மரங்களே.
இந்த பெருமழை மட்டுமல்ல, ஒவ்வொரு பருவமழையும் அசாதாரணமாக மாற்றி பேரிடரை ஏற்படுத்துவதில் இந்த மரங்களே முக்கிய பங்கு வகிக்கின்றன.
அந்நிய களை மரங்களால் தொடரும் சோகங்கள் குறித்து நம்மிடம் பேசிய ஊட்டி ஜனார்த்தனன், ``நீலகிரியில் கடந்த 10 ஆண்டுகளின் மழை பாதிப்புகளை ஆய்வு செய்தால் இந்த அந்நிய மரங்களால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதை காண முடியும்.
வனத்துறையின் தவறான கொள்கையால் சூழலுக்கு பயனற்ற பாதிப்பை ஏற்படுத்தும், இந்த வகை மரங்களை பரவலாக நடவு செய்தனர்.
அதிலும் குறிப்பாக சாலையோரங்கள், அரசு அலுவலகங்கள், குடியிருப்புகள் போன்ற இடங்களில் இந்த வகை மரங்கள் மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளன. மேலும் பல யூகலிப்டஸ் மரங்கள் வயது முதிர்வின் காரணமாக பலவீனமாக உள்ளன. இவையும் மழைக் காலங்களில் எளிதில் விழுகின்றன. எனவே, இனியும் தயக்கம் காட்டாமல் மக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ள இடங்களிலுள்ள இந்த வகை மரங்களை அகற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.
மரங்கள் குறித்து நம்மிடம் பேசிய ஊட்டி மாணிக்கம், ``விறகு தேவைக்காகவும், அழகுத் தாவரவமாகவும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து, இங்கு அறிமுகப்படுத்தப்பட்ட சூழலியலுக்கு பயனற்ற அந்நிய களை மரங்களே இன்றைக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளன.
இந்த வகை மரங்கள் மட்டுமே அதிகளவு பெயர்ந்து விழுகின்றன. மரங்கள் விழுவதால் மின் தடை ஏற்படுகிறது. மின் தடையால் குடிநீர் வழங்கல் தடைபடுகிறது. சாலை போக்குவரத்து பாதிப்பும் ஏற்படுகிறது. அடிப்படையில் இந்த மரங்கள் மூலமாகவே இத்தனை துயரும் வந்து சேர்கிறது. எனவே இவற்றை அகற்றிவிட்டு அந்த இடங்களில் மண்ணுக்கு உரித்தான சோலை மரங்களை நடவு செய்து பராமரிக்க வேண்டும்" என்றார்.

இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் கேட்டபோது, ``மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ள மரங்களை அகற்றும் நடவடிக்கையை துவக்கிவிட்டோம். ஆய்வு செய்து தொடர்ந்து நடவடிக்கை எடுக்கப்படும்," என்றனர்.