Published:Updated:

ஆளுநர் அறிவித்த `சுற்றுச்சூழல் விருது’... அரசியலா, அக்கறையா?

ஆளுநர் ரவி

``ஆளுநர் ஒரு நல்ல எண்ணத்தில் இதை முன்னெடுத்திருக்கிறார். தமிழக அரசுக்குப் போட்டியாகவோ, தனி அதிகாரத்துக்காகவோ முன்னெடுக்கவில்லை” என்று ஆளுநர் மாளிகையைத் தொடர்பு கொண்டபோது தெரிவித்தனர்.

ஆளுநர் அறிவித்த `சுற்றுச்சூழல் விருது’... அரசியலா, அக்கறையா?

``ஆளுநர் ஒரு நல்ல எண்ணத்தில் இதை முன்னெடுத்திருக்கிறார். தமிழக அரசுக்குப் போட்டியாகவோ, தனி அதிகாரத்துக்காகவோ முன்னெடுக்கவில்லை” என்று ஆளுநர் மாளிகையைத் தொடர்பு கொண்டபோது தெரிவித்தனர்.

Published:Updated:
ஆளுநர் ரவி

`சமூக சேவை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றில் அர்ப்பணிப்புடன் பங்காற்றும் நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழக ஆளுநர் சார்பில் இனி ஆண்டுதோறும் விருதுகள் வழங்கப்படும்’ என்கிற அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டிருப்பது, சர்ச்சைகளையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கெனவே இந்தத் தலைப்புகளில் தமிழக அரசு சார்பில் ஏகப்பட்ட விருதுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஆளுநர் தனியாக இதே தலைப்புகளுக்காக விருதுகளை வழங்குவதாக அறிவித்திருப்பதுதான் சர்ச்சைக்கும் குழப்பத்துக்கும் காரணம்.

கிண்டி ஆளுநர் மாளிகை
கிண்டி ஆளுநர் மாளிகை

`சமூக சேவை மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகிய துறைகளில் அர்ப்பணிப்புடன் சேவையாற்றுபவர்களை அங்கீகரிப்பதற்காகவும், இத்துறைகளில் மற்றவர்களை ஊக்குவிக்கவும் இனி ஆண்டுதோறும் விருதுகள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தேசத்தில் நேர்மறையான எண்ணங்களை கட்டியெழுப்ப முடியும்.

இத்துறையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய சேவையை ஆற்றியவர்களிடமிருந்து பரிந்துரைகள் வரவேற்கப்படுகின்றன. உயர் நீதிமன்ற அல்லது உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளை தலைவராகக் கொண்ட, துறை சார்ந்த வல்லுநர்கள் உள்ளடக்கிய இரண்டு தேர்வு குழுக்கள் மூலம் விருதுகளுக்கு தேர்வு செய்யப்படுபவார்கள். 26 ஜனவரி, 2023-ல் தமிழக ஆளுநர் அவர்களால் விருது, சான்றிதழ் மற்றும் 10 லட்ச ரூபாய் ரொக்கம் வழங்கப்படும்’ என ஆளுநர் மாளிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைப் பற்றி பேசிய `பூவுலகின் நண்பர்கள்’ அமைப்பை சார்ந்த பொறியாளர் சுந்தர்ராஜன், ``இந்த மாதிரியான விருதுகள் வழங்குவது மற்றும் விருது பெறுபவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு ஓர் கட்டமைப்பு இருக்க வேண்டும். இந்த மாதிரி விருதுகள் வழங்குவதற்காகவே மாநில அரசு மற்றும் மத்திய அரசில் பல வழிமுறைகளும் விதிமுறைகளும் உள்ளன. இந்நிலையில், இப்படி எந்த வழிமுறைகளும் இல்லாத ஆளுநர் மாளிகை இது போன்ற விருதுகள் வழங்குவது கேலிக்கூத்தானது.

சுந்தர்ராஜன்
சுந்தர்ராஜன்

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசை நிர்வகிக்கும் முதலமைச்சர் மூலம்தான் இதுபோன்ற விருதுகளை வழங்க முடியும். ஆளுநர் பதவி என்பது அரசுக்கு ஆலோசனை சொல்வதும், அரசின் கோப்புகளுக்கு அனுமதி வழங்குவது மட்டும்தான். சுற்றுச்சூழல் சாம்பியன்ஷிப் விருது, சமூக சேவகர் விருது போன்று பல விருதுகளை ஏற்கெனவே தமிழக அரசு வழங்கி வருகிறது. இந்த ஆண்டுக்கான விருதுகள் கொடுக்கப்பட்டு சில மாதங்கள்தான் ஆகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழக அரசுக்குப் போட்டியாக ஆளுநர் மாளிகையும் விருதுகள் வழங்குவது, தம்மை முதலமைச்சர் என்று ஆளுநர் நினைத்துக்கொண்டு செயல்படுவதாகத்தான் தோன்றுகிறது” என்று சொன்னார்.

சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் நித்தியானந்த் ஜெயராமனிடம் பேசியபோது, ``சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக போராடுபவர்களை நகர்ப்புற நக்சல்கள், வளர்ச்சிக்கு எதிரானவர்கள் என்று முத்திரை குத்தி போராடுபவர்களைக் கைது செய்வது, அவர்களை மிரட்டுவது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது ஒன்றிய அரசு. அதன் ரப்பர் ஸ்டாம்பாகச் செயல்படும் ஆளுநர் மட்டும் எப்படி சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபவர்களைக் கௌரவிப்பார் என்று தெரியவில்லை.

நித்தியானந்த் ஜெயராமன்
நித்தியானந்த் ஜெயராமன்

அரசுகளிடம் இருக்கும் சட்டங்களைக் கொண்டே சுற்றுச்சூழலை பாதுகாக்க முடியவில்லை. இந்த நிலையில் விருதுகள் எல்லாம் எதற்கு? இந்த விருதுகளையெல்லாம் விட்டுவிட்டு அரசுகளிடம் இருக்கும் சட்டங்களைக்கொண்டு சுற்றுச்சூழலை காப்பாற்றுவதற்கு ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்கட்டும். சுற்றுச்சூழலுக்காகப் போராடுபவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கட்டும்” என்று காட்டமாகச் சொன்னார்.

இதுதொடர்பாக மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சி.வீ.மெய்யநாதனிடம் கேட்டதற்கு, ``சுற்றுச்சூழல் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளவர்களை ஊக்குவிக்கும் அனைத்து விஷயங்களையும் வரவேற்கிறோம். சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிப்பவர் யாராக இருந்தாலும் வரவேற்போம்” என்று சொன்னார்.

`தமிழக அரசின் தலைவர் ஆளுநர். ஏற்கெனவே இதற்காகத் தமிழக அரசின் சார்பில் விருதுகள் வழங்கப்படுகின்றன. அப்படியிருக்க, ஆளுநர் ஏன் தனியாக விருதுகள் வழங்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனரே?’ என்று கேட்டபோது,

``அது வந்து... அது வந்து...” என்று மழுப்பலாகச் சொல்லி முடித்துக்கொண்டார் அமைச்சர்.

சுற்றுச்சூழல்
சுற்றுச்சூழல்

ஆளுநரின் தரப்பை அறிவதற்காக, ஆளுநர் மாளிகையை தொடர்புகொண்டபோது, நம்மிடம் பேசிய ஓர் அதிகாரி, ``ஆளுநர் ஒரு நல்ல எண்ணத்தில் இதை முன்னெடுத்திருக்கிறார். தமிழக அரசுக்குப் போட்டியாகவோ, தனி அதிகாரத்துக்காகவோ முன்னெடுக்கவில்லை. ஏற்கெனவே தமிழக அரசு இதுபோன்ற விருதுகள் கொடுத்திருந்தாலும், மாநில அளவில் ஆளுநர் வழங்கும் இந்த சுற்றுச்சூழல், சமூக சேவகர் விருதுகள் கவனம்பெறும். சுற்றுச்சூழலில் சேவையாற்ற விரும்புவோருக்கு இது ஊக்கமாகவும் அமையும்“ என்று சொன்னார்.